January 6, 2011

காந்தி, தேவர், ஜெயமோகன், மார்க்ஸ் மற்றும் பலர்

பள்ளிக்குச் சென்று படிக்கவேண்டிய வயதில், நடைபாதையில் பாலிதீன் கவர் விரித்து, வியாபாரம் செய்துகொண்டிருந்தான் இந்தச் சிறுவன். எதை எடுத்தாலும் பத்து, பாருங்க சார், வாங்க மேடம் என்று அழைததுக்கொண்டிருந்தான். உள்ளூரில் இருந்து மட்டுமின்றி, பக்கத்து ஊர்களில் இருந்தும் சிலர் புத்தக மூட்டைகளுடன் வந்திருந்தனர். 'தெரிஞ்சவங்க வீட்டுல தங்கிக்கிறேன். பத்து நாளு இஙகேதான் கடை போடுவேன். காசு தேறினதும் ஊருக்குப் போயிடுவேன்.'

பள்ளி மாணவர்கள் நாவல்களையே அதிகம் தேடுகிறார்கள். ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், சிட்னி ஷெல்டன் வகையரா டிடெக்டிக் த்ரில்லர்கள். சிலர் குறிப்பாக, பெயர் கேட்டு தேடினார்கள். 'Do you have Twilight series?' 'தேடிப்பாரும்மா.' ட்வைலைட் என்பது ஹாரி பாட்டருக்கு இணையாக விற்கப்படும் புத்தகங்கள் என்று அறிந்துகொண்டேன். இதில் வரும் கதாநாயகி அல்லது நாயகன் அல்லது இருவரும் டிராகுலாவாம். காதலையும் ரத்தத்தையும் உறிஞ்சி உயிர் வாழ்பவர்கள். திரைப்படமாகவும் ட்வைலைட் வந்திருக்கிறதாம். பள்ளிப் புத்தகங்களில் இடம்பெறும் நாவலாசிரியர்களை நிர்த்தாட்சண்யமாக உதறித்தள்ளுகிறார்கள். ஹாரி பாட்டர் தடிமன் கொண்ட சார்லஸ் டிக்கன்ஸின் பிக்விக் பேப்பர்ஸை, அப்படியே தூக்கியடித்துவிட்டு, ஜெஃப்ரி ஆர்ச்சர் தேடிக்கொண்டிருந்தார்கள். வரலாறு, அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை, 'சப்ஜெக்ட் புக்ஸ்' என்று அழைக்கிறார்கள். என்றால், இது தேறாது, வேறு கடை பார்க்கலாம் என்று பொருள்.

கிழக்கு பதிப்பகத்தில் நேற்று நம்பர் 1 புத்தகம், ராஜராஜ சோழன். ச.ந. கண்ணன் எழுதியது. இந்தப் புத்தகம் ராஜராஜனை, ஒரு தலைசிறந்த மன்னனாக எடுத்துக் காட்டுகிறது. அருகில் உள்ள கிளியோபாட்ராவுக்கு (முகில் எழுதியது) நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த இரு புத்தகங்கள் குறித்த என் விமரிசனத்தை பின்னர் இங்கே எழுத முயற்சி செய்கிறேன். தங்க எழுத்துகளால் மின்னும் ஜெயமோகனின் உலோகம், டாப் செல்லர் வரிசையில் இடம் பெற்றுள்ளது ஆச்சரியம். Do you have Twilight மாணவர்கள்தான் இந்தப் புத்தகத்தின் பிரதான டார்கெட் என்பது புரிந்தது.

நேற்று நான் குறிப்பிட்ட Book World Library அரங்கில் மேலும் பல நல்ல புத்தகங்களைக் கண்டெடுத்தேன். அவர்களுடைய சென்னை முகவரியை வாங்கி வைத்துக்கொண்டேன். நிதானமாக ஒரு நாள், சென்று பார்க்கவேண்டும். புத்தகத் தயாரிப்பில் அடுத்த கட்டத்துக்கு எப்படிச் செல்லவேண்டும் என்பதற்கும் ஏன் செல்லவேண்டும் என்பதற்குமான விடை இங்கே காணக்கிடைக்கும். முதல் உலகப் போர் முடிவடைந்த 1919ம் ஆண்டு பாரீஸில் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது ஒரு புத்தகம். உலகை மாற்றிய சில முக்கியச் சம்பவங்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்கிறது ஒரு புத்தகம் (படம்). மிலிட்டரி சோஷியாலஜி பற்றி ஒரு கனமான புத்தகம். லண்டனின் வரலாறு என்றொரு தலையணை புத்தகம். அமெரிக்க வரலாறும், உலக வரலாறும், பிரபஞ்சத்தின் வரலாறும், கார்ட்டூனில் விவரிக்கப்பட்டுள்ளது சுவாரஸ்யம். மாணவர்கள் இந்த நூல்களை வாசித்தால், ட்வைலைட்டையும், ஜேம்ஸ் ஹாட்லி சேஸையும் உலோகங்களையும் தங்கங்களையும் நாட மாட்டார்கள்.

கீழைக்காற்று அரங்கில் தோழர் துரை சண்முகத்தைச் சந்தித்தேன். தினம் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். முடிந்தால், மற்ற பதிப்பாளர்களிடமும் உரையாடவேண்டும்.

கேள்வி : கீழைக்காற்று என்றாலே கம்யூனிசப் புத்தகங்கள் என்று பொதுவாக அறியப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் மற்ற பதிப்பகத்தில் இருந்தும் புத்தகங்கள் வாங்கி விற்பனை செய்கிறீர்கள். எப்படி ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

துரை சண்முகம் : முதலில், கம்யூனிசப் புத்தகங்கள் மட்டுமே இங்கே கிடைக்கும் என்பது உண்மையல்ல. பயனுள்ள பல்வேறு துறை சார்ந்த நூல்களைத் தேர்வு செய்து இங்கே விற்பனை செய்து வருகிறோம். எங்கள் கருததுகளோடு ஒன்றிசைந்து வரும் நூல்களை ஆர்வத்துடன் வாங்கிக்கொள்கிறோம். மாற்று கருத்து கொண்டவர்களின் நூல்களும்க உள்ளன. ஒவ்வொரு துறை பற்றிய புரிதலும் நமக்குத் தேவைப்படுகிறது அல்லவா? பல நூறு கருத்துகளைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். அதே சமயம், மதத்தையும் மூடநம்பிக்கையையும் வளர்த்தெடுக்கும் நூல்களையும், சமூகத்தைக் கெடுக்கும் எண்ணங்கள் கொண்ட நூல்களையும் தவிர்த்துவிடுவேன்.

நியூ செஞ்சுரியில், சோவியத் புத்தகங்கள் உயிர் வாழ்வது மகிழ்ச்சியளிக்கிறது. இடஒதுக்கீடு போல், முன்பக்கம் ஒரு பரந்த மேஜை போட்டு மார்க்சிய நூல் வரிசைகளைக் காட்சிப்படுத்துகிறார்கள். நண்பர் ஆவுடையப்பனிடம் பேசினேன். நியூ செஞ்சுரி வெளியிட்டு வரும் உங்கள் நூலகம் புத்தகப் பிரதிகள் சிலவற்றை அளித்தார். வரும் மாதங்களில் இதழின் விற்பனையை அதிகரிக்கப் போவதாகச் சொன்னார். இலங்கைக்கு சென்று வந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நியூ செஞ்சுரிக்கு நீங்கள் எழுதுவீர்களா என்று கேட்டார். இந்த ஆண்டு முயற்சி செய்கிறேன் என்று சொல்லி விடைபெற்றேன். சோவியத் புத்தகங்களை முன்போல் இவர்கள் ஆர்வத்துடன் விற்பதில்லை என்றொரு குற்றச்சாடடு இவர்கள் மீது உள்ளது. கையிருப்பில் உள்ள புத்தகங்களை விற்பதற்குப் பதில், புது எடிஷன்கள் உருவாக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நண்பர்கள் சிலர் தெரிவித்தார்கள். இது குறித்து ஆவுடையப்பனிடம் பேசிப் பார்க்கிறேன்.

மேலும் சில படங்கள், குறிப்புகள்.

மாவோ, மால்கம் எக்ஸ், ட்ராட்ஸ்கி மற்றும் பலர்.

பண்டித அயோத்திதாசர், அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், தொல். திருமாவளவன் ஆகியோரின் எழுத்துகள் இங்கே.


இலக்கியம், வரலாறு, அறிவியல், மதம் என்று ஒரு மாபெரும் உலகம். ஆம், அதே ஆங்கிலக் கடை.


தேசப்பற்று இங்கே கிடைக்கும்.


காந்தியைக் காட்டிலும் அமபேத்கருக்கு இன்று மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் என்பது தெரியுமா?


சமரசங்கள் இன்றி தொழில் இல்லை என்று யார் சொன்னது?

ஆசிரியர் செ. இளங்கோவனுடன் மாணவர் முகில்.

இவன் ஒரு வரலாறு.


இங்கே ட்வைலைட் இல்லை. யாரும் தேடவேண்டாம்.


தேவர் நல்லவர் என்கிறார் நூலாசிரியர் பாலு சத்யா.



அரங்கம் காத்திருக்கிறது!


5 comments:

முத்துக்குமார் said...

தோழர் நேற்று நீங்கள் குறிப்பிட்டிருந்த Book World Library அரங்குக்கு சென்று சில நல்ல நூல்களை வாங்கி வந்தேன், மனம் நிறைவாக இருந்தது. அவை குறைந்த விலையில் குண்டு புத்தகங்கள் என்பதால் புத்தகப் பையும் நிறைவாக இருந்தது. :)

தங்களுடைய ஆற்றுபடுத்தலுக்கு நன்றி!!

தோழமையுடன்
முத்துக்குமார்

Anonymous said...

நல்ல நடை. நல்ல புகைப்படங்கள். இன்று நான் கண்காட்சிக்கு வருகிறேன். ராஜன்

ஒரு வாசகன் said...

"இவன் வரலாறு" எழுதியது யாருங்க? எந்தப் பதிப்பகம்?

Sendeepan said...

முதுகுளத்தூர் கலவரம் புத்தகம் ஆசிரியர் தினகரனின் கதியைப்பார்தோ என்னவோ பாலுசத்யா தேவர் நல்லவர் என்கிறார். எப்படியோ சாதியை விடாமல் பிடித்து எழுதும் ஆசிரியர்களுக்கு வரலாற்றில் இடம் உண்டு........
-தம்பி

மருதன் said...

இவன் ஒரு வரலாறு, ஏகம் பதிப்பகத்தில் கிடைக்கிறது