February 22, 2011

இந்தியாவில் புரட்சி நடக்காது!

பக்கத்தில்தான் இருக்கிறது இந்தியா. ஒரு போன் அடித்து மன்மோகன் சிங்கிடம் கேட்டிருந்தால் அவர் வழிகாட்டியிருப்பார். தேவையில்லாமல், ராணுவத்தை மக்கள் மீது செலுத்தி, ட்விட்டரையும் ஃபேஸ்புக்கையும் தடுத்து, போராட்டத்தை ஒடுக்கி, கண்ணீர் புகை வீசி, கடைசியில் ஊரைவிட்டும் பதவியை விட்டும் ஓடியிருக்கிறார்கள் துனிசிய, எகிப்திய தலைவர்கள். இதெல்லாம் தேவையா? இப்படியா ஒரு பிரச்னையை எதிர்கொள்வது? இதுவா வழி?

துனிசியா செய்த அதே தவறை எகிப்து செய்திருக்கிறது. துனிசியாவும் எகிப்தும் செய்த அதே தவறை பக்ரேன், யேமன், அல்ஜீரியா, ஜோர்டன், குவைத், ஓமன், சவுதி, லிபியா ஆகிய நாடுகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

நான்கு பேர் தெரு முனையில் கூடி பேசினார்கள் என்று செய்தி வந்தாலே கலங்கிவிடுகிறார்கள் மேற்கு ஆசிய ஆட்சியாளர்கள். துணிச்சலில்லை, அனுபவமில்லை. பயம். மன்மோகன் சிங்கின் இந்த உறுதிமொழியைப் பார்த்தீர்களா? எத்தனை கம்பீரமான முழுக்கம் பாருங்கள்! 'எகிப்திலும் மேற்கு ஆசியாவிலும் நடந்ததைப் போன்ற சம்பவங்கள் இந்தியாவில் நிச்சயம் நடைபெறாது. காரணம், இந்தியாவில் ஜனநாயகம் முறைப்படி தழைத்துக்கொண்டிருக்கிறது'.

ஜனநாயகம். அணுஆயுதத்தைக் காட்டிலும் வலிமையான ஓர் ஆயுதம் இது. அணுஆயுத உறப்த்தியைக் காட்டிலும் ஜனநாயக உற்பத்தி சவாலானது. செலவு பிடிக்கக்கூடியது. ஆபத்தானது. ஆனால், அது கொடுக்கும் கம்பீரமும் துணிச்சலும் பெருமிதமும் புளகாங்கிதமும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ஆயிரம் ஓட்டைகளும் ஒடிசல்களும் இருந்தாலும், ஆயிரம் குறைபாடுகளும் வருத்தங்களும் இருந்தாலும், இந்தியா இன்றுவரை பிளவுபடாமல் ஒரு தேசமாக உயிர்த்திருப்பதற்குக் காரணம் ஜனநாயகம். என்கிறார், இந்திய ஜனநாயகத்தின் பிராண்ட் அம்பாஸிடர் மற்றும் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா. இன்னொரு துனிசியாவாக, இன்னொரு எகிப்தாக இந்தியா மாறாது என்று உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் தலைவர் பெருமிதத்துடன் முழங்கியதற்குக் காரணம் ஜனநாயகம்.

கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகால ஆட்சி அனுபவம் கொண்ட துனிசிய பென் அலிக்கும், முப்பதாண்டு அனுபவம் பெற்ற எகிப்திய முபாரக்குக்கும் ஜனநாயகத்தின் முக்கியத்துவம் இறுதிவரை தெரியாமல் போய்விட்டது. ஜனநாயகமே தெரியாதவர்களுக்கு, ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் தெரியாமல் போனதில் வியப்பேதுமில்லை.

ஆனால், இப்போது புரிந்திருக்கும். துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் மட்டும் வைத்து ஒரு மக்கள் கூட்டத்தை அடக்கிவைக்கமுடியாது. அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் வலியையும் விரக்தியையும் குண்டுகளால் அமைதிப்படுத்தமுடியாது. நியூட்டனின் மூன்றாவது விதி இதனை எதிர்க்கிறது. என்பதால், காட்டுச்செடி போல் பூமியைப் பிளந்துகொண்டு எதிர்ப்பு வெடிக்கிறது. மீண்டும் பீரங்கி. மீண்டும் நியூட்டன். தவிர்க்கவியலாதபடி புரட்சி வெடிக்கிறது.

பென் அலிக்கும் முபாரக்குக்கும் மன்மோகன் சிங் சொல்லும் செய்தி ஒன்றுதான். நியூட்டனின் மூன்றாவது விதியை எதிர்க்க ஜனநாயகத்தால் மட்டுமே முடியும். துப்பாக்கியால் சாதிக்க முடியாததை ஜனநாயகம் சாதித்துக்காட்டும். ஜனநாயகத்தைக் காட்டிலும் வலிமையான ஓர் ஆயுதம் இன்றைய தேதி வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

மற்றபடி, துனிசியாவுக்கும் எகிப்துக்கும் இந்தியாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவர்களைக் காட்டிலும் இங்கே பிரச்னைகள் அதிகம். இங்கே இல்லாத வேலையில்லா திண்டாட்டமா? இங்கே இல்லாத பணவீக்கமா? இங்கே இல்லாத அதிருப்தியா? விரக்தியும் ஏமாற்றமும் கோபமும் வேதனையும் அச்சமும் இங்கே இந்தியர்களிடம் இல்லையா?

உலகிலேயே ராணுவம் அதிகம் குவிக்கப்பட்டிருக்கும் பகுதி, காஷ்மீர். அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட இராக்கைக் காட்டிலும் இங்கே அதிக ராணுவத்தினர் குவிந்திருக்கிறார்கள். ஆப்கனிஸ்தானைக் காட்டிலும், பாகிஸ்தானைக் காட்டிலும் ஆபத்தான பிரதேசம் காஷ்மீர். பாகிஸ்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு ஆகும் செலவைவிட காஷ்மீரிடம் இருந்து காஷ்மீரைக் காக்க இந்தியா அதிகம் செலவு செய்கிறது. போர்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட, காஷ்மீரிலும் வடகிழக்கிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில், இந்தியாவிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்றும் வேடிக்கையான, வேதனையான, மோசமான ஒரு பணியில் இந்தியா ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

ஒரு வகையில், இந்தியாவிலும் ராணுவ ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், முபாரக்குகளையும் பென் அலிகளையும்விட திறமை வாய்ந்த தலைவர்கள் இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். இங்கே ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் தடை செய்யப்படுவதில்லை. காரணம் இங்கே, ஜனநாயகம் தழைத்துக்கொண்டிருக்கிறது. எனவே, இங்கே எதிர்ப்புகள் வலுபெறுவதில்லை. வலுபெற்றாலும், உயிர் பிழைப்பதில்லை.

காஷ்மீரிலும் வடகிழக்கிலும் உருவாகாத தஹிரிர் சதுக்கங்களா? முபாரக் வெளியில் போ என்பதைக் காட்டிலும் வலுவாக ஒலிக்கவில்லையா, இந்தியாவை வெளியேறு என்னும் முழக்கம்? சிறு கல் வீசியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லையா இந்திய ராணுவம்? அழிக்க வந்தவர்களால் அல்ல, பாதுகாக்க வந்தவர்களால்தான் இங்கே அதிகம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கண்டல்ல, இந்தியப் பாதுகாப்புப் படையினரைக் கண்டே காஷ்மீரிகள் நடுநடுங்குகிறார்கள்.

பென் அலியும் முபாரக்கும் வெட்கித் தலைகுனியவேண்டும். சர்வாதிகாரம் என்று பெயர் வைத்தும் அவ்ர்களால் சாதிக்கமுடியாததை இங்கே ஜனநாயகம் சாதித்துக்காட்டியிருக்கிறது. ராணுவத்தின் உதவியுடன்.

இப்படியும் சொல்லலாம். ஜனநாயகத்தின் ஆதரவு மட்டும் இல்லாவிட்டால் இங்கே ராணுவம் தழைத்திருக்காது. ராணுவத்தின் எண்ணற்ற படுகொலைகளையும், பாலியல் பலாத்காரங்களையும், படுகொலைகளையும் ஜனநாயகம்தான் மறைத்தும் மன்னித்தும் வந்திருக்கிறது. மன்மோகன் சிங் குறிப்பிட்டபடி இங்கே ஜனநாயகம் தழைத்திருப்பதற்குக் காரணம் ராணுவம்.

ராணுவத்தை விலக்கிவிட்டால், காஷ்மீர் இந்தியாவின் கொண்டையாக இருக்காது. ராணுவத்தை விலக்கிவிட்டால் வடகிழக்கு மாநிலங்கள் வரிசையாகச் சிதற ஆரம்பிக்கும். ராணுவத்தை விலக்கிவிட்டால், பசுமை வேட்டையாடப்படும் பிரதேசங்களை இந்தியா இழக்கவேண்டியிருக்கும். ராணுவம் இல்லாவிட்டால், டாடாவும் அம்பானியும் பிர்லாவும் வேதாந்தாவும் விழ ஆரம்பிப்பார்கள். இந்தியா, ஒரே இந்தியாவாக நீடிப்பதற்குக் காரணம் ராணுவம். இந்த ராணுவத்தின் கோர முகம் வெளி தெரியாமல் இருப்பதற்குக் காரணம் ஜனநாயகம் என்னும் முகமூடி.

குஜராத்தில் நரேந்திர மோடி இனவொழிப்பைத் தொடங்கிவைத்தபோது இந்த முகமூடியைத்தான் அணிந்திருந்தார். இரண்டாயிரம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டபோது, நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது, ஒரு லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் குஜராத்தைவிட்டு இடம்பெயர்ந்தபோது, மோடி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் முகமூடி அணிந்திருந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும், 1984ல் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் இந்தியா அணிந்திருந்த அதே முகமூடி. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, பிரிட்டனிடம் இருந்து பறித்துக்கொண்ட (அல்லது அவர்களே அன்பளித்த) முகமூடி. துனிசியாவிலும் எகிப்திலும் ராணுவம், முகமூடி அணியவில்லை. என்பதால் நிஜமுகத்தை மறைக்கமுடியவில்லை. அதுதான் பிரச்னை.

ஜனநாயகத்தை அறிமுகம் செய்வதைக் காட்டிலும் சவாலான செயல், ஜனநாயகம் தழைத்துவிட்டது என்று மக்களை நம்ப வைப்பது. சந்தேகத்துக்கிடமின்றி இந்தியா இதில் வெற்றி பெற்றிருக்கிறது. உலகின் மாபெரும் ஜனநாயக நாடு என்னும் பெருமித உணர்வை மக்களுக்கு இந்தியா அளித்திருக்கிறது. அடுத்தவேளை உணவு இல்லாதவர்கள்கூட பொக்ரானில் அணுகுண்டு பரிசோதிக்கப்பட்டபோது, ஆர்ப்பரித்து மகிழ்ந்தார்கள். பத்து பெர்செண்ட் வளர்ந்துவிட்டோம் என்று புள்ளிவிவரம் வந்தபோது, வாய் பிளந்தார்கள்.

ஜனநாயகம் இன்னமும் உயிர்த்திருக்கிறது என்பதை அவ்வப்போது நிரூபிப்பதற்காக சில சடங்குகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பாராளுமன்றம். தேர்தல். நீதிமன்றம். தகவல் அறியும் உரிமைச் சட்டம். இன்னபிற.

இந்தியா அணுகுண்டை உபயோகிப்பதில்லை. ஜனநாயகத்தை மட்டுமே உபயோகிக்கிறது. ஜனநாயகத்தை மட்டுமே அது நம்பியிருக்கிறது. ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றால் மட்டுமே குண்டு. இந்த துணிச்சலில்தான் தனிமனித சுதந்தரமும் ஃபேஸ்புக், ட்விட்டர் சுதந்தரமும் இங்கே அளிக்கப்பட்டிருக்கிறது. அல்ஜசீராக்களுக்கு இங்கே வேலையில்லை. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இந்தியாவின் ஊடகத்துறை இயங்கிக்கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் நிழலாக, ஊதுகுழலாக இயங்கும் துறை.

உபயோகித்தவர்களுக்கே அதன் அருமை தெரியும். இந்தியா தயாராக இருக்கிறது. கற்றுக்கொள்ள அரபுலகம் தயாரா?

தன் உறுதிமொழியை மன்மோகன் சிங் இப்படி நிறைவு செய்கிறார். 'எல்லா நாடுகளிலும் ஜனநாயகம் மலர்வதை நான் வரவேற்கிறேன். '

ஜெய் ஹிந்த்!

20 comments:

YOGA.S said...

இந்தப் பதிவு இலங்கைக்கும் பொருந்தும்!ஊர்ப் பெயர்களை மாற்றி விட்டால் போதுமானது!

ahamed5zal said...

Really nice article..

Anonymous said...

jai hind வாழ்க ஜனனாயகம்

siva said...

nidharsaman...

நளினி சங்கர் said...

ஜனநாயகமே நம் முதல் எதிரி என்பதை அப்பட்டமாக முன்வைக்கும் பதிவு. தங்கள் எழுத்து மிக அருமை.

உண்மைத்தமிழன் said...

நல்ல பதிவு.. நன்றி மருதன்..!

Anonymous said...

Very good piece of work. Are you influenced by Arundhati Roy?

Sridhar Gopal said...

தலைப்பு பார்த்து முதலில் திகைத்துவிட்டேன். அருமை! மன்மோகன் சிங் பேட்டி டிவியில் பார்த்த போது எனக்கு இது தோன்றவில்லை. நல்ல நடையில் ஜனநாயகத்தின் தோலை உரித்து விட்டீர்கள்.

Anonymous said...

My dear Comrade, when will China topple? Why are you keeping silent on that? What about cuba?

Anonymous said...

Absolutely nonsensical writing. In english, Arundati Roy used to write such idiotic stuff. Now, we have one companion in tamil also. You guys are fit to live only in Mao China and Stalin Russia. Jai Communism!

Anonymous said...

//ஜனநாயகம் இன்னமும் உயிர்த்திருக்கிறது என்பதை அவ்வப்போது நிரூபிப்பதற்காக சில சடங்குகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பாராளுமன்றம். தேர்தல். நீதிமன்றம். தகவல் அறியும் உரிமைச் சட்டம். இன்னபிற.//

போலி ஜனநாயகத்தின் யோக்கிதை திரைகிழிக்கும் கட்டுரை
மிக அருமை...

Unknown said...

போலி ஜனநாயகத்தின் யோக்கிதை திரைகிழிக்கும் கட்டுரை
மிக அருமை...

Anisha Yunus said...

As usual, nice writing marudhan sir. //இங்கே ஜனநாயகம் தழைத்திருப்பதற்குக் காரணம் ராணுவம். // indeed...indeed. Not only that, but the self centered approach of every individual, be it a minister or a common man, has made the necessities of a community to go ignored / neglected. That is another mighty resource which has made and will make the fake democracy stay for a long time.

good write-up, thank you for sharing. :)

Anonymous said...

Well said sir Why cant u go to kashmir and help out... Its easy to argue from ur seat.... Why cant u go and find a muslim state where all religions are living together in peace... Why u didnt mention about all those muslim terrorism happening in India in this post if u r truely worried abt india... All u wanted is to talk and support terrorism in the name of religion... Just try once if u have guts to go into any muslim nation and shout christianity or hinduism is best as u guys are doing here.....

கனகராஜூ பெருமாள் said...

இந்தியாவில் வேலைக்காகவோ, பணவீக்கத்திற்காகவோ புரட்சி வெடிக்காது. கிரிக்கெட் போட்டிகளைத் தடை செய்தால், மதுக்கடைகளை மூடினால், தொலைக்காட்சிகளில் ஆட்டம் பாட்டத்தை நிறுத்தினால் புரட்சி வெடிக்கும் வாய்ப்பு உண்டு. இல்லையென்றால் புரட்சி பற்றி பேசுபவர்களை மக்களே கல்லால் அடித்து விடுவார்கள். அர்த்தமும் கோபமும் நிறைந்த பதிவு உங்களுடையது.

Unknown said...

புரட்சி நடக்காது, வறட்சி இருக்குமா ?

Anonymous said...

இந்தியாவில் ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகளும் ஊழல் கட்சிகளாகத் தான் இருக்கிறார்கள். இந்திய மக்கள் சினிமா, கிரிக்கெட் பைத்தியமாக இருக்கிறார்கள். அதிலிருந்து தெளிந்த உடன்,இங்கும் புரட்சி வந்தே தான் தீரும். ஆனால் கம்யூனிஸ் புரட்சியாக இருக்காது.

suganthi said...

indru putatchi vedikkaathu marudhan. ippadye thodarnthal ulaka alavil nadakkum periya puratchi inthiyaavil thaan nadakkum

srikrishnan said...

உங்கள் கட்டு​ரை தர்மா​வேசத்தின் ​ரெளத்திர நடனம். வாழ்த்துக்கள். ​தொடருங்கள்

mohankumar said...

கட்டுரை மிக அருமை