July 3, 2011

காலனியாதிக்கம் நல்லதா? : தாமஸ் பெய்ன்


காமன்சென்ஸ் பிரசுரத்தின் மூலம் தாமஸ் பெய்ன் சாதிக்க விரும்பிய விஷயங்கள் மூன்று. முதலாவதாக, பரம்பரை ஆட்சி உரிமை மற்றும் முடியாட்சி பற்றிய மாயைககளை உடைத்து அவை தீங்கானவை என்பதை அமெரிக்கர்களுக்குப் புரியவைப்பது. இரண்டாவதாக, பிரிட்டன் அமெரிக்காவை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி ஆணித்தரமாக புரியவைப்பது. மூன்றாவதாக, அடிமைத்தளைகளை உடைத்தெறிய அமெரிக்கர்களை அணிதிரட்டுவது.

பிரச்னை என்னவென்றால், ஒரு காலனி நாடாக அமெரிக்கா இருப்பதை பல அமெரிக்கர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், பிரிட்டனை அவர்கள் தங்கள் தாய்நாடாகக் கருதி வந்தனர். பிரிட்டனின் சில அடக்குமுறைச் சட்டங்களை அவர்கள் எதிர்த்தாலும், பிரிட்டனின் மேலாதிக்கம் குறித்து முணுமுணுத்தாலும், பிரிட்டனின் காலனியாதிக்கத்தை அவர்களால் கேள்விக்கு உட்படுத்தமுடியவில்லை. பிரிட்டன் இல்லாவிட்டால் அமெரிக்கா இல்லை என்னும் உறுதியான நம்பிக்கையே அதற்குக் காரணம்.

எனவே, முதல் வேலையாக பிரிட்டன் குறித்த புனித பிம்பங்களை உடைக்க ஆரம்பித்தார் பெய்ன். பிரிட்டனின் முடியாட்சி தீமையானது, இயற்கைக்கு் முரணானது என்பதை உணர்த்த கீழ்காணும் கதையை விவரித்தார்.

'இஸ்ரேல் மக்களை மிடியானியர் வாட்டி வதைத்து வந்ததனால் கிடியான் என்பவன் சிறு படையுடன் சென்று அவர்களைத் தாக்கினான். ஆண்டவன் அருளால் அவனுக்கு வெற்றியும் கிட்டியது. இந்த வெற்றியினால் பேரானந்தம் கொண்ட யூதர்கள் அது கிடியானின் வீரத்தினால் கிடைத்தது என்று நம்பி அவனை மன்னனாக்க விரும்பினர். ‘எங்களை நீங்களும், உங்கள் மகனும், மகனுக்கு மகனும் ஆண்டு வாருங்கள்’ என்று கேட்டுக்கொண்டனர். அவன் மட்டுமல்ல, அவனது வமிச பரம்பரையை ஆளவேண்டும் என்று கேட்டுக்கொள்வது அவனது ஆசையைத் தூண்டுவதாகயிருந்தது. ஆனால் அகத்தூய்மை வாய்ந்த கிடியான், ‘நான் உங்களை ஆளமாட்டேன். என் மகனும் ஆட்சிசெய்யமாட்டான். ஆனால் ஆண்டவன் உங்கள் மீது அரசு செலுத்துவார்’ என்றான்.'

மக்களை ஆளும் உரிமை மன்னர்களுக்கு இல்லை. அவர்கள் வாரிசுகளுக்கும் இல்லை. ஆண்டவனுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கிறது. 'முடியாட்சி தீமை போதாதென்று பரம்பரை வாரிசு முறையும் சேர்ந்துகொண்டது. முடியாட்சி நம்மை அவமதித்துத் தாழ்மைப்படுத்துகிறது. பரம்பரை வாரிசு முறை நமது பிந்திய சந்ததிகளை அவமதித்து தண்டிக்கிறது.'


'உங்களை எங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறோம் என்று கூறலாமேயொழிய உங்கள் குழந்தைகளுகம் அவர்களுடைய குழந்தைகளும் என்றென்றும் எங்களை ஆள்வார்களாக என அவர்கள் கூறுவார்களானால் தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே தீங்கிழைத்தவர்களாவார்கள். இந்த அறிவற்ற, அநீதியான, இயற்கைக்கு மாறான உடன்பாட்டினால் அடுத்துவரும் ஆட்சியில் மக்கள் ஓர் அயோக்கியன் அல்லது முட்டாளின் ஆளுகைக்கு உட்பட நேரிடும்.'

பிரிட்டனில் நடப்பது இதுததான்.'முதல் வில்லியம் பலவந்தமாக ஆட்சியைப் பிடித்தான்... இவன் ஒரு பிரெஞ்சுக்காரன். ஆயுதம் தாங்கிய கெள்ளைக்கூட்டத்தினர் உதவி கொண்டு அந்நாட்டு மக்களின் சம்மதமின்றி அரசுரிமை பெற்றவன். இப்படி அரசுரிமை பெற்றவன் வடிகட்டிய அயோக்கியன். இவனிடம் தெய்வாம்சம் எதுவுமில்லை.'

அடுத்து, பிரிட்டனுட்ன் இணைந்திருப்பதுதான் அமெரிக்காவுக்கு நன்மை பயக்கும் என்று சொல்பவர்களின் வாதங்களை தாமஸ் பெய்ன் எதிர்கொண்டார்.

'பிரிட்டனுடன் சேர்ந்திருந்ததனால் அமெரிக்கா தழைத்தோங்கியிருக்கிறது. எதிர்காலத்தில் இனிய வாழ்க்கை நடத்த அந்தத் தொடர்பு நீடிக்கவேண்டும் என்று சிலர் கூறுகின்றதை நான் கேட்டிருக்கிறேன். மேலும் இந்த இனிய விளைவு என்றென்றும் அவ்வாறே இருக்கும் எனவும் அவர்கள் சாதிக்கின்றனர். இதைவிட அபத்தமான வாதம் இருக்க முடியாது. இதைவிட, பாலினால் வளர்ந்ததனால் அதற்கு மாமிச உணவு அளிக்கலாகாது என்றும் நமது முதல் இருபது வருட வாழ்க்கையே அடுத்த இருபது ஆண்டு வாழ்க்கைக்கு முன்மாதிரியாயிருக்க வேண்டுமெனவும் சாதிக்கலாம். ஆனால் இந்த வாதம் உண்மைக்குப் புறம்பானது.

'அமெரிக்காவில் எந்த ஐரோப்பிய நாடும் கால் வைக்காமலிருந்தால் இப்பொழுது போலவே செழிப்பாயிருக்கும் என்பது மட்டுமல்ல, இன்னும் மிகுதியான வளம் பெற்றிருக்கும் என்று பறைசாற்ற நான் தயாராயிருக்கிறேன். பிரிட்டன் எந்த வர்த்தகத்தினால் பொருள் குவித்திருக்கிறதோ அந்த வர்த்தகப் பொருள்கள் மக்கள் வாழ்க்கைக்கு ஜீவாதாரமானவை. ஐரோப்பிய நாட்டினர் உண்பதைக் கைவிடாதிருக்கும் வரையில் அந்தப் பொருள்களுக்கு அந்நாடுகளில் கிராக்கி இருந்து கொண்டுதானிருக்கும்.

'பிரிட்டன் நம்மைப் பாதுகாத்து வந்திருக்கிறதே என்று சிலர் கூறுகின்றனர். நம்மை பிரிட்டன் ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது என்பது உண்மை. இந்தக் கண்டத்தை நமது செலவிலும், அதன் செலவிலும் அது பாதுகாத்து வந்திருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம். வியாபார பெருக்கத்துக்காகவும் ஆதிக்கம் செலுத்தவும் நமது நாட்டைப் பாதுகாத்தது போல் அது துருக்கியையும் பாதுகாத்திருக்கும்.'

பிரிட்டனின் காலனியாக இந்தியா இல்லாமல் போயிருந்தால், இந்த அளவுக்கு முன்னேற்றங்களை நாம் சந்தித்திருக்கமுடியாது என்று இன்றளவும் பலர் அங்கலாய்ப்பதை நாம் கேள்பிப்பட்டிருக்கிறோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் மனித வள வளர்ச்சியும் கல்வியும் தொழில்நுட்பமும் போக்குவரத்தும் வளர்ச்சியடைந்திருப்பதற்குக் காரணம் பிரிட்டன்தான் என்று பலர் தீவிரமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். தாமஸ் பெய்னின் காமன்சென்ஸ் அவர்களது குழப்பங்களைத் தீர்க்க வல்லது.

தாமஸ் பெய்னின் நூலை இன்னும் கொஞ்சம் அலசலாம்.

முந்தைய கட்டுரை

No comments: