January 21, 2012

தோழர் அம்பேத்கரும் துப்பாக்கிச் சூடும் - 1

கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடியதே தெரியாதபடி இருக்கையோடு பிணைத்துக் கட்டிப்போட்டுவிட்டது ஆனந்த் பட்வர்தனின் ஜெய் பீம் காம்ரேட். ஜூலை 1997ல் மும்பையில் உள்ள ராமாபாய் அம்பேத்கர் நகரில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடுதான் மையம் என்றாலும் அதைத் தாண்டி பல விரிவான அரசியல், சமூகப் பார்வைகளை இந்தப் படம் முன்வைக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே, செப்டெம்பர் 2011 பரமக்குடிக்கும் ஜூலை 1997 ராமாபாய்க்கும் உள்ள ஒற்றுமைகள் முகத்தில் அறைகின்றன.

ராமாபாய் அம்பேத்கர் காலனியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஆதிக்கச் சாதியினர் செருப்பு மாலை அணிவித்ததை எதிர்க்கும் வகையில் தலித் மக்கள் சாலையில் கூடி நின்று போராடினர். இம்மானுவேல் சேகரன் வீர வணக்க விழாவில் கலந்துகொள்வதைத் தடுக்கும் முறையில் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பரமக்குடியில் தலித் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

அம்பேத்கரின் புகழும் செல்வாக்கும் தலித் மக்களிடையே வளர்ந்து வருவதைக் குலைக்கும் வகையில் ராமாபாய் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள அம்பேத்கர் உருவச்சிலை அவமதிக்கப்பட்டது. வீர வணக்க விழா வாயிலாக இம்மானுவேல் சேகரனின் புகழும் செல்வாக்கும் வருவதைத் தடுக்கும் நோக்கில், அவ்விழாவில் பங்கேற்க வந்த ஜான் பாண்டியன் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்த இரு சம்பங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தலித் சமூகத்தினர். எனவே அவர்கள் சாலைக்கு வந்தனர். போராடத் துணிந்தனர். தமக்கு எதிராகச் செயல்படும் ஆதிக்கச் சாதியினரையும் அவர்களைக் கட்டுப்படுத்த தவறும் அல்லது அவர்களுக்குத் துணைபோகும் காவல் துறையினரையும் அவர்கள் எதிர்த்தனர்.

ஆனால் இந்த இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களைத்தான் காவல்துறை குறி வைத்து தாக்கியது. ராமாபாய் அம்பேத்கர் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். பரமக்குடியில் 7 பேர்.

கலவரத்தை அடக்கவே துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று இரு இடங்களிலும் காவல்துறை வாதிட்டது. பரமக்குடியில் ஒரு வஜ்ரா வாகனம் கொளுத்தப்பட்டது. ராமாபாய் அம்பேத்கர் நகரில் ஒரு டேங்கர் லாரி கொளுத்தப்பட்டது.

வஜ்ரா வாகனத்தைக் கொளுத்தியது நாங்களல்ல என்றனர் பரமக்குடிவாசிகள். 'டேங்கர் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் என்னிடம் கைநாட்டு வாங்கிக்கொண்டு போனார்கள்!' என்று பேட்டி கொடுத்தார் ஒரு மும்பை தலித் பெண். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் சடலங்கள் காணப்படும் இடத்துக்கும் டேங்கர் லாரி எரிந்த இடத்துக்கும் தொடர்பே இல்லை என்பது வீடியோ ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டது. பலனில்லை.

வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால், தலித் மக்கள் தரப்பு ஆதாரங்களும் வாதங்களும் நியாயங்களும் நீதி மன்றங்களைத் திருப்திபடுத்தவில்லை. ராமாபாய் அம்பேத்கர் நகர் துப்பாக்கிச் சூட்டை முன்னின்று நடத்திய M.Y. காதம் என்னும் சப் இன்ஸ்பெக்டருக்கு 12 ஆண்டு விசாரணைக்குப் பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு, ஆயிரம் ரூபாய் அபராதம். எல்லாம் முடிந்தபின், சிறைச்சாலைக்கு அல்ல மருத்துவமனைக்குதான் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.  பரமக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை இன்னும் முறைப்படி தொடங்கவேயில்லை.

0

'இந்த ரிசர்வேஷன் சிஸ்டத்தை மாத்தணும் சார். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அவங்களுக்கு சலுகைகளைக் கொடுத்துக்கிட்டே இருக்கிறது!' என்று குறைபட்டுக்கொள்கிறார் ஒரு படித்த இளைஞர்.

'என் தாத்தாவின் தாத்தா அவர்களுடைய (தலித் சமூகத்தினர்) தாத்தாவின் தாத்தாவுக்குச் செய்த கொடுமைகளுக்கு நான் ஏன் விலை கொடுக்கவேண்டும்? Come on man, this is abusurd!' என்று தோள்களைக் குலுக்கிக்கொள்கிறார் ஒரு நவீனப் பெண்.

'பரசுராமர் ஒரு ideal priest-warrior. அவருடைய ஜீன்ஸ் சித்பவன் பிராமணர்களாகிய எங்களிடம் பரவியிருக்கிறது. எங்கள் உயிரைக் கொடுத்தாவது நாங்கள் ரிசர்வேஷனை எதிர்ப்போம்!' என்று காமிராவுக்கு முன்னால் முஷ்டியை உயர்த்துகிறார்கள் சில பார்ப்பனர்கள்.

'உயர் சாதியினரின் மலத்தைவிட கீழ்ச்சாதிக்காரனின் மலம் அதிக நாற்றத்தைத் தரும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?' ஆம் என்று பதிலளிக்கிறார் ஒருவர்.

ஜெய் பீம் காம்ரேட் இவர்களைப் பற்றிய படமும்கூட.

0

ராமாபாய் அம்பேத்கர் நகர் துப்பாக்கிச் சூட்டைப் பொறுத்துக்கொள்ள இயலாத இடதுசாரி கவிஞர் விலாஸ் கோக்ரே தற்கொலை செய்துகொள்கிறார். படம் நெடுகிலும் அவருடைய கவிதைகளும் பாடல்களும் பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இப்படம் அவரைப் பற்றியதும்கூட.

0

இசைப் பாடகர்களையும் நடிகர்களையும் கொண்ட கபீர் காலா மஞ்ச் (Kabir Kala Manch - KKM) என்னும் தலித் அமைப்பு அம்பேத்கரையும் அம்பேத்கர் வழிப் போராட்டத்தையும் வீதியோர மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. வன்முறையை அல்ல, மூளையைப் பயன்படுத்தியே நாம் போராட வேண்டும் என்று இவர்கள் பாடியபடி செல்கிறார்கள். இசையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் இந்தக் குழுவினரை, நக்ஸலைட்டுகள் என்று முத்திரை குத்தி வேட்டையாடி வருகிறது காவல்துறை. சிலர் கைது செய்யப்பட்டனர். பலர் மறைவிடத்தில் உள்ளனர். இந்தப் படம் அவர்களைப் பற்றியது. அவர்களுடைய இசை வழிப் போராட்டம் பற்றியது.

0

'துப்பாக்கிச் சூடு நடந்தபோது யார் ஆட்சியில் இருந்தார்கள்?'  காங்கிரஸா? சிவ சேனா-பிஜேபியா? சிலருக்குச் சரியாக நினைவில்லை. 'யார் வந்தா என்னங்க? எங்க வாழ்க்கை மாறப்போறதில்லை!' என்று புன்னகை செய்கிறார்கள். எந்த கட்சி கொன்றதோ அதே கட்சிக்கு ஓட்டு போடுகிறார்கள். விரல் நுனியில் உள்ள கரு மையை உயர்த்திப் பிடித்து காட்டுகிறார்கள். 

இந்தப் படம் அப்பாவி தலித் மக்களைப் பற்றியது. அரசியல் தந்திரங்களால் பலியானவர்களின், மூளை மழுங்கடிக்கப்பட்டவர்களின் சோகத்தைப் பற்றியது.

0

இந்தப் படம் முரண்பாடுகளைப் பற்றியது.

அம்பேத்கர் சிலைக்கு நரேந்திர மோடி மாலையிடுகிறார்.

சிவ சேனாவை அரவணைத்துக்கொள்கிறது ரிபப்ளிக்கன் கட்சி.

அம்பேத்கர் முன்மொழிந்த தாமரைச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்கிறார் ஒரு காவிக் கட்சிக்காரர்.

தலித்-இந்துத்துவ ஒற்றுமை குறித்து சிலர் சீரியஸாக விவாதிக்கிறார்கள்.

0

எது முதலில் ஒழிக்கப்படவேண்டும்? வர்க்கமா, சாதியா? யார் நமக்குத் தேவைப்படுகிறார்கள்? மார்க்ஸும் எங்கெல்ஸுமா, பெரியாரும் அம்பேத்கருமா?

திரையிடல் முடிந்தபிறகு, ஆனந்த் பட்வர்த்தன் உரையாடினார். 'காந்தியும் அம்பேத்கரும் எதிரெதிரானவர்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கிடையே சில பொதுவான அம்சங்கள் உள்ளன. இருவரையும் ஒரே சமயத்தில் உள்வாங்கிக்கொள்வது சாத்தியம் என்றுதான் நினைக்கிறேன்!'

இந்தப் படம் விவாதங்களைப் பற்றியது.

0

ஜெய் பீம் காம்ரேட் படத்தை முறைப்படி அறிமுகப்படுத்துவதன் மூலம் சில முக்கிய விவாதங்களை எழுப்பமுடியும் என்பதால், இப்படம் முன்வைக்கும் சில பார்வைகளைப் பற்றி அடுத்தடுத்து எழுதவிருக்கிறேன். 

No comments: