January 26, 2012

தோழர் அம்பேத்கரும் துப்பாக்கிச் சூடும் - 2

மகாராஷ்டிராவில் நடைபெறும் அம்பேத்கர் நினைவு நாள் விழாவுக்கு சுற்றுப்புறங்களில் இருந்து கும்பல் கும்பலாக வரும் தலித் மக்கள் கூட்டம் அங்குள்ள நடுத்தர, உயர் வர்க்கத்தினருக்கு அச்சத்தையும் அறுவருப்பையும் ஊட்டுகிறது. 'அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்களிடம் இருந்து எப்போதும் துர்நாற்றம் அடித்துக்கொண்டிருக்கிறது. நம் சுற்றுப்புறத்தையே pollute செய்கிறார்கள். ஒவ்வொருமுறையும் இப்படி கூட்டம் கூட்டமாக இங்கே வருவதை நிறுத்தவேண்டும். தானே போன்ற புறநகர் பகுதிகளுக்கு அவர்களை அனுப்பிவைத்துவிடலாம்.'

'அவர்க்ள் அசுத்தமானவர்கள் என்கிறீர்கள். ஆனால் அவர்கள்தானே உங்கள் குப்பைகளையும் அழுக்குகளையும் சுத்தப்படுத்துகிறார்கள். அவர்களை ஏன் வெளியேறச் சொல்கிறீர்கள்?'

'ஏனென்றால் அவர்கள் அசுத்தமானவர்கள். அவ்வளவுதான்.'

வேறு நபர். இன்னொரு கேள்வி. 'ரிஸர்வேஷனை நிறுத்திவிடவேண்டும் என்று சொல்கிறீர்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள் எப்போதோ முன்னேறிவிட்டார்கள், இப்போது கஷ்டப்படுபவர்கள் நாம்தான் என்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த வட்டாரத்தில் அப்படி முன்னேறிய நபர் ஒருவரைப் பற்றி சொல்லுங்கள்.'

'நான் அவர்களுடன் பழகுவதில்லை. எனக்கு யாரையும் தெரியாது.'

அவர்கள் ஏன் அசுத்தமாக இருக்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் ஒதுக்குப்புறத்திலும் குப்பைமேட்டிலும் சாக்கடை ஓடும் சேரிகளிலும் குடியேறியிருககிறார்கள். ஏன் அங்கிருக்கிறார்கள்? அவர்கள் ஏழைகள். ஏன் அப்படி? வேலையில்லை. ஏன் இல்லை? படிக்கவில்லை. ஏன் படிக்கவில்லை? வசதியில்லை. இன்னும் கேள்விகள் அடுக்கினால் முகத்தில் அடிப்பது போல் இப்படி பதில் வரும். 'விதி!'

12ம் வகுப்பு வரை படித்த ஒருவரும் குப்பை அள்ளும் தொழிலில்தான் இருக்கிறார். சேறும் சகுதியும் ஊறிப்போயிருக்கும் அந்த மைதானத்தில் வரிசையாக குப்பை லாரிகள் வந்துகொண்டிருக்கின்றன. நிறுத்திவிட்டு ஒரு காலை வண்டி மேல் வைத்து, பின்பக்கக் கதவை பிடித்து இழுக்கும்போதே கழிவுகள் மார்பிலும் தொடையிலும் சரியத் தொடங்குகின்றன. நீண்ட கம்பி கொண்டு கிளறுகிறார்கள். சில இடங்களில் கெட்டித்துப்போயிருக்கிறது. சில இடங்களில் கருஞ்சாக்கடைக் கட்டிகளாகத் திரண்டிருககிறது.

அவர் காலில் செருப்பில்லை. தலையில் ஒரு துண்டு சுற்றியிருக்கிறார். ட்ரவுசரை முட்டி வரை கிழித்துவிட்டிருக்கிறார். மேலுக்கு வண்ணமிழந்த டீஷர்ட். லாரியில் இருந்து குப்பை மலையை கீழே தள்ளுவதே பெரும் பாடு. அது ஆன பிறகு, தரையில் சிதறியதை வகைப்படுத்தி பிரித்து அள்ளி எடுத்துச் சென்று வேறோரிடத்தில் குவிக்கவேண்டும்.

'எடுத்து தலைமீது வைத்து நடக்கும்போது பல சமயங்களில் உடைந்து தலையிலும் முதுகிலும் தொடை, கால் என்று உடல் முழுவதும் கழிவுகள் சிதறியோடும்.' ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலைப்பாகையும் கையுறையும் தரவேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் தனியார் நிறுவனங்கள் தராத பட்சத்தில் அரசு இவற்றை அளிக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருககிறது. 'ஆனால் இன்றுவரை எங்களுக்கு இந்த அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படவில்லை. தங்களுக்குச் சாதகமாக சட்டப்படி உத்தரவு வாங்குவதற்காக வக்கீலை வைத்து வழக்கு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் முதலாளிகள். அந்த வக்கீலுக்கு ஆயிரக்கணக்கில் பணம் தருகிறார்கள்.'

பணி நிரந்தரம் கிடையாது. அன்றாடம் கிடைக்கும் கூலி மட்டுமே. பணியில் நேரும் விபத்துக்கு இழப்பீடு கிடையாது என்பது மட்டுமல்ல விடுமுறையின் போது சம்பளமும் கிடையாது. 'ஒருமுறை கம்பியைக் கொண்டு லாரியில் உள்ள குப்பையைக் கிளறும்போது சட்டென்று பறந்து வந்த ஒரு கிளாஸ் துண்டு கண்ணைக் கீறியெடுத்துவிட்டது.' இடுங்கிய கண் கொண்டு காமிராவைப் பார்க்கிறார் ஒரு தொழிலாளி.

அம்பேத்கர் நினைவுவிழா கொண்டாட்டங்களில் இவர்களும் பங்கேற்கிறார்கள். அன்றைய தினம் மட்டும் புத்தாடை அணிந்து, இனிப்பு வாங்கி உண்டு,  பாடல்கள் இசைத்துக்கொண்டு, ஆட்டம் போட்டுக்கொண்டு குழந்தைகளையும் கட்டு சாப்பட்டையும் சுமந்துகொண்டு, மனைவி உறவினர் நண்பர்களுடன் இவர்கள் ஊர்வலமாக நடந்துசெல்கிறார்கள். பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. சாலைகள் பிதுங்கி வழிகின்றன. ஜெய் பீம் முழக்கங்கள் திரும்பும் திசையெங்கும் எதிரொலிக்கின்றன. 

ராமாபாய் அம்பேத்கர் நகரில் நடைபெற்ற காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் இவர்களில் ஒருவரும் அடக்கம். 

'ஏனென்றால் அவர்கள் அசுத்தமானவர்கள். அவ்வளவுதான்.'

2 comments:

malgudi said...

கூர்மையான வார்த்தைகள் நிஜமாய் மனதைத் தைக்கின்றது.

kalai said...

சுத்தத்தை அசுத்தமாக்கும் சுத்தமானவர்களின் அசுத்தத்தை சுத்தமாக்கும் அசுத்தமானவர்கள். இந்த அசுத்தமானவர்களின்! துயரங்களை வார்த்தைகளால் எழுத முடியாதது, மனம் கனக்கிறது.