February 6, 2012

கருத்துரிமை : சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும்

1

சல்மான் ருஷ்டியின் The Satanic Verses நாவலைத் தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரினின் புத்தகம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டியால் கலந்துகொள்ள முடியவில்லை. வீடியோ கான்ஃபரன்ஸிங்கூட சாத்தியப்படவில்லை. அதே போல் தஸ்லிமா நஸ்ரின் எழுதிவரும் தொடர் சுயசரிதையின் ஏழாவது பாகமான Nirbasan (எக்ஸைல் என்று பொருள்) வெளியிடப்படக்கூடாது என்று கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். வேறு வழியின்றி அரங்குக்கு வெளியில் புத்தகம் வெளியிடப்பட்டது. கொலை மிரட்டல்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் வாருங்கள் என்று சல்மான் ருஷ்டிக்கு காவல் துறையால் உத்தரவாதம் அளிக்கமுடியவில்லை (கொலை மிரட்டல்களை உற்பத்தி செய்தவர்களே அவர்கள்தாம் என்று சொல்லப்படுகிறது). தஸ்லிமா நஸ்ரின் புத்தக வெளியீட்டைத் தடுப்பவர்களையும் காவல் துறையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பது மட்டுமின்றி நடந்த சம்பவத்துக்கு அரசாங்கத்திடமிருந்து பொறுப்பான எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. மொத்தத்தில் இரு எழுத்தாளர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

இந்த இரு சம்பவங்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை முதலில் பார்ப்போம். எழுத்தாளர்கள் இருவரும் இஸ்லாமியர்கள். இவர்களை எதிர்ப்பவர்களும் இஸ்லாமியர்களே. ருஷ்டிக்கு இரானின் கொமேனியும் தஸ்லிமாவுக்கு வங்கதேச இஸ்லாமிய அமைப்பும் தடையுத்தரவும் கொலை உத்தரவும் பிறப்பித்தன. ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் இஸ்லாத்தின் இறைவனை நேரடியாகப் பகடி செய்தது. தஸ்லிமாவின் லஜ்ஜா இஸ்லாத்தின் பிற்போக்குத்தனங்களைக் கேள்விக்கு உட்படுத்தியது.
வங்கதேசத்துக்கு இன்று வரை தஸ்லிமா அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ருஷ்டி மீதான ஃபத்வா கொமேனியின் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது. ஓர் இந்தியப் பிரஜை என்னும் முறையில் ருஷ்டி எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம்; முன்அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை. ஆனால் வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமாவால், அவரது விருப்பத்துக்குரிய ‘இரண்டாவது வீடான’ கொல்கத்தாவுக்கு இன்று வரை வரமுடியவில்லை. மேற்கு வங்க அரசின் அனுமதியும் விசா நீட்டிப்பும் கிட்டவில்லை.

1 comment:

Anonymous said...

அரவிந்தன் நீலகண்டனின் கம்யூனிசம் புக்கை படிக்கின்றேன். இதுவரை படித்தவரையில் கூட எனக்கு எதுவும் புரியவில்லை. அவரின் கடவுளும் ஹெர்ட்சும் என்ற புக்கை முன்பு படித்து அப்போது அதுவும் புரியவில்லை.