March 6, 2012

முதலாளித்துவமும் அம்பேத்கரும்


அம்பேத்கரைத் தம்மில் ஒருவராகச் சித்தரிக்கும் முயற்சியை இந்துத்துவவாதிகள் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறார்கள். சமீபகாலமாக இந்தப் போக்கு வலுவடைந்து வருகிறது. இது உண்மையிலேயே விந்தைக்குரிய முயற்சியாகும். எந்த கருத்தாக்கத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் அவர் தீர்க்கமாக எதிர்த்து வந்தாரோ, எந்த மதத்தின் கோளாறுகளைத் தன் வாழ்நாள் முழுவதும் அம்பலப்படுத்தி வந்தாரோ, எந்த அமைப்பின் குறைபாடுகளைக் கடுமையாக விமரிசத்தாரோ, அவற்றின் ஒட்டுமொத்த அடையாளமாக அவரை மாற்ற இந்துத்துவவாதிகள் அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாதத்தை நிரூபிக்க, பல்வேறு கட்டுக்கதைகளையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அம்பேத்கரை வளைத்துக்கொள்ள இந்துத்துவவாதிகள் முன்வைக்கும் ஒரு வாதம், அவர் சோஷலிசத்தை நிராகரித்து முதலாளித்துவ அமைப்பை ஏற்றார் என்பதாகும். அம்பேத்கர் மார்க்சியத்தை மறுதலித்தார் என்றும், சோஷலிசக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடினார் என்றும் அவர்கள் விரித்துரைக்கிறார்கள். மார்க்ஸுக்கும் மார்க்சியத்துக்கும் எதிராக அம்பேத்கரைத் தந்திரமாக முன்னிறுத்துவதன் மூலம், இடதுசாரி சிந்தனையோட்டம் கொண்டவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்கள் நோக்கம். இந்தக் கதைகளை முறியடிக்க ஒரே வழி, அம்பேத்கரை முழுமையாக உள்வாங்கிக்கொள்வதுதான்.

தனி உடைமை

புத்தரைப் போலவே அம்பேத்கரும் ஏழைமையைக் கொண்டாட மறுத்தார். உடைமைகள் அற்றவரை அவர் சமாதானப்படுத்தவில்லை. அவர்களைத் தட்டிக்கொடுக்கவில்லை. அதிகப் பொருள்கள் இல்லாதிருப்பது பற்றியோ ஆசையைத் துறப்பது பற்றியோ அறிவுரை கூறவில்லை. ஒன்று சோஷலிசம் இருக்கவேண்டும் அல்லது ஏழைமை இருக்கவேண்டும் என்றார்.

தனிச்சொத்துரிமையும் முதலாளித்துவமும் அழித்தொழிக்கப்படவேண்டிய தீமைகள் என்று அவர் கருதவில்லை. தனி உடைமையையும் தன் சொத்தைப் பாதுகாக்கும் உரிமையையும் அம்பேத்கர் ஏற்றுக்கொண்டார். அரசு இந்த உரிமைகளில் தலையிடாது என்பது மட்டுமல்ல, இந்த உரிமைகளை யாரும் மீறிவிடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் அரசு ஏற்கும். முதலாளித்துவமும் தனிச் சொத்துரிமையும் சமூகத்தில் இருந்து அழிக்கப்பட்டாகவேண்டும் என்று அவர் கருதவில்லை. உழைக்கும் வர்க்கத்துக்கு எந்த வகையிலும் இந்த இரு அம்சங்களும் தீங்கு ஏற்படுத்தக்கூடாது என்று அவர் விரும்பினார். அவ்வாறு நிகழாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வதே ஓர் அரசின் பொறுப்பு என்று வரையறுத்தார்.

தொழில்மயமாக்கலும் அரசின் பாத்திரமும்

இந்தியா சுதந்தரம் பெறுவதற்கு முன்பே, தொழில்மயமாக்கலில் அரசு வகிக்கவேண்டிய பாத்திரத்தையும் ஏற்கவேண்டிய பொறுப்பையும் பற்றி அம்பேத்கர் உரையாடத் தொடங்கிவிட்டார். தொழில்மயமாக்கலின் பலன்களை ஒருசிலர் மட்டும் அறுவடை செய்துகொள்வதைத் தடுக்க அவர் விரும்பினார். கனரக தொழிற்சாலைகள் முழுக்க முழுக்க அரசு கட்டுப்பாட்டில் இருக்கவேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். அம்பேத்கரின் துரித தொழில்மயமாக்கல் இந்தியாவின் பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கத் துடித்தது. சமத்துவமின்மையை ஒழிக்கும் நோக்கம் கொண்டிருந்தது. அரசாங்கத்தின் இயக்கமும் மக்களின் இயக்கமும் சீராக இருக்கவேண்டும் என்பது அதன் இலக்கு.

துரித தொழில்மயமாக்கலுக்கான முதலீட்டைத் தனியார்களால் அளிக்கமுடியாது. பதுக்கல்காரர்களாக தனியார்கள் இருப்பதால் அவர்களால் பெரும் திட்டத்தில் முதலீடு செய்யவியலாது. இயல்பிலேயே பேராசை குணம் கொண்டவர்களாக மக்கள் இருக்கிறார்கள். எனவே, அரசின் தேவை எழுகிறது. வேளாண் உற்பத்திக் கருவிகள் பொதுவில் அரசிடம் இருக்கவேண்டும். கூட்டுப் பண்ணையாக்க முறை மூலம் விவசாயிகள் வளம் பெறவேண்டும். ஆக, விவசாயம், தொழில் உற்பத்தி இரண்டிலும் அரசு தலையீடு இருக்கவேண்டும்.

விவசாயம், பெருள் உற்பத்திக்கு அடுத்தபடியாக காப்பீட்டுத் துறை அரசிடம் இருக்கவேண்டும் என்றார் அம்பேத்கர். தனியார் நிறுவனங்களிடம் காப்பீட்டுத் துறை இருப்பது நல்லதல்ல. அவற்றால் மக்களின் பணத்துக்குப் பாதுகாப்பு அளிக்கவியலாது. ஆனால், ஓர் அரசால் மக்களின் பணத்துக்குக் காப்பாக தம் செல்வத்தை முன்வைக்கமுடியும் என்பதால் மக்களுக்கு அரசு காப்பீட்டு நிறுவனங்களின்மீது இயல்பாகவே நம்பிக்கை பிறக்கும். இந்த நம்பிக்கையைத் தனியார்களால் ஏற்படுத்தமுடியாது.

எங்கே ஓர் அரசு தன் கடமைகளைச் சரிவரச் செய்கிறதோ அங்கே தனி நபர்களின் உடைமைகளும் பொருளாதார நலன்களும் பாதுகாக்கப்படும். இதையே அவர் அரசு சோஷலிசம் என்றார். அதே சமயம் இது ஒரு பொருளியல் கோட்பாடு மட்டுமல்ல. சமூக, தார்மீக பொறுப்புகளும் அதற்கு உள்ளன.

அரசு சோஷலிசம்

முதலாளித்துவம் நீடித்திருக்கவேண்டுமானால் அது தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைப் பேணியாகவேண்டும். உழைப்புக்கேற்ற கூலி அளித்தாகவேண்டும். அவ்வாறு நடக்கும் என்னும் நம்பிக்கை அம்பேத்கருக்கு இல்லை. எனவே அவர் அரசு சோஷலிசத்தை மாற்றாக முன்வைத்தார். பொதுமக்களின் நலன்கள் புரறக்கணிக்கப்பட்டால் அரசின் தலையீடு இருக்கவேண்டும் என்பது அவர் கருத்து. Laissez-faire என்னும் கட்டுப்பாடற்ற வர்த்தகப் பரிவர்த்தனைகளை அவர் ஏற்கவில்லை.

துரித தொழில்மயமாக்கல் இந்தியாவுக்கு அவசியம். இதனை தனியார்களால் செய்யமுடியாது. அரசே இந்தப் பொறுப்பை வகிக்கவேண்டும். தனியார்களால் செய்ய முடிந்தது தனிப்பட்ட முறையில் வளத்தைப் பெருக்கிக்கொள்வது மட்டுமே. ஐரோப்பாவில்நடந்தது இதுதான் என்றார் அம்பேத்கர். இந்தியர்கள் இதை ஓர் எச்சரிகையாகக் கொள்ளவேண்டும் என்றார் அவர்.

மார்க்சிய பாணி சோஷலிசத்துக்கும் அம்பேத்கரின் சோஷலிசத்துக்கும் வேறுபாடுகள் இருந்தன. ‘அனைவரும் ஒன்றுபோல்’ என்னும் லட்சியப் பார்வையை அவர் ஏற்கமறுத்தார். ‘அனைவருக்கும் ஒன்றுபோல் வாய்ப்புகள்’ என்பதே அவர் அடைய விரும்பிய இலக்கு. உழைப்பைச் செலுத்தாமல் பொருளாதார ரீதியில் சிலர் உயர்ந்திருப்பதும், உழைப்பைச் செலுத்திய பிறகும் ஏழைமையில் சிக்கித் தவிக்கும் நிலையையும் அவர் அகற்ற விரும்பினார். சமூக நீதி மீதான அக்கறையின் அடிப்படையில் அவர் இதனை அணுகினார்.

அம்பேத்கர் முன்வைத்த அரசு சோஷலிசத்தின் பரந்த லட்சியங்கள் இவை.
அனைவருக்கும் பலனளிக்கும் தொழில்மயமாக்கல். அனைவருக்கும் பலனளிக்கும் சோஷலிசம். அனைவருக்கும் பொதுவான அரசியலமைப்புச் சட்டம். அனைவருக்கும் பொதுவான ஓர் அரசு. சமூகமும் அரசும் ஒன்றிணைந்து, ஒருமித்து செயல்படவேண்டும். சமூகத்தின் நலன்களை ஓர் அரசு பிரதிபலிக்கவேண்டும். சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை அரசு களையவேண்டும்.

சோஷலிசத்தை நிர்மாணிக்கவேண்டிய பொறுப்பை சட்ட மன்றத்துக்கு அளித்துவிடுவதல்ல அம்பேத்கரின் முடிவு. அரசியலமைப்புச் சட்டத்தில் இது வரையறுக்கப்படவேண்டும் என்றார். சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டுமானம் எவ்வாறு அமையவேண்டும் என்பதை அரசியலமைப்புச் சட்டம் நிர்ணயம் செய்யவேண்டும்.

ஒருவன் வேலை வாய்ப்பின்றி இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனிடம் இரண்டு வாய்ப்புகளைக் கொடுப்போம். உனக்கு ஒரு வேலை தருகிறோம். ஆனால், வேலை நேரம் பற்றியோ ஊதியம் பற்றியோ நீ பேசக்கூடாது. தொழிற்சங்கங்களில் இணைவதோ அடிப்படை உரிமைகள் பேசுவதோ கூடாது. சம்பளமும் குறைவாகத்தான் இருக்கும். இரண்டாவது வாய்ப்பு, உனக்கு அத்தனை அடிப்படை உரிமைகளும் அளிக்கப்படும். பேச்சுரிமை, வழிபாட்டு உரிமை, விரும்பும் அமைப்புகளில் இணையும் உரிமை அனைத்தும் இருக்கும். இரண்டில் எதை அவன் தேர்ந்தெடுப்பான்? அரசு செலவில் அரசு கொடுக்கும் இலவசங்களைக் கொண்டு ஒரு சுமையாக வாழ அவன் விரும்புவானா? அரசு செலவில் தன் இறுதிச் சடங்குகள் நடைபெறுவதை அவன் விரும்புவானா? ‘இந்நிலையில் தங்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள அடிப்படை உரிமைகளை அவர்கள் பறிக்கொடுக்கிறார்கள்.’

முதலாளித்துவமும் அரசுத் தலையீடும்

அரசு தலையீடு இல்லாமல், தனியார்களிடம் முழு அதிகாரம் ஒப்படைக்கப்படும்போது மேலே கண்டதைப் போன்ற பெரும் அபாயங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. அளவற்ற சுதந்தரம் என்பது நிலவுடைமையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப வாடகையை உயர்த்திக்கொள்வதற்கும், முதலாளிகள் தங்கள் லாபத்தைப் பெருக்க தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பதற்குமே உதவும் என்றார் அம்பேத்கர். பல ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பணியாற்றியாகவேண்டும். அதற்கு பல நூற்றுக்கணக்கான ஆலைகள் அமைக்கப்பட்டாகவேண்டும். பல லட்சம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பண்டங்கள் உற்பத்தி செய்யப்படவேண்டும். இதற்கெல்லாம் தெளிவான சட்டத்திட்டங்கள் வேண்டாமா? கட்டுப்பாடுகளும் கடப்பாடுகளும் வேண்டாமா? யாருடைய நலன்களும் பாதிப்படையாமல் இருக்கவேண்டியது அவசியமல்லவா? உற்பத்தியும் ஊதியமும் விநியோகமும்  சீராக இருக்கவேண்டாமா?

அம்பேத்கரைப் பொருத்தவரை இந்த இடத்தில்தான் ‘அரசுத் தலையிடல்’ அவசியமாகிறது. எங்கு அரசு தலையீடு இல்லையோ, எங்கு சட்டத்திட்டங்கள் இல்லையோ,எங்கு சோஷலிசம் இல்லையோ, எங்கு முதலாளிகள் அச்சமின்றி செயல்படுகிறார்களோ, அங்கே ‘தனியார் நிறுவனங்களின் சர்வாதிகாரம் நிலவும்’ என்றார் அம்பேத்கர். வேலையில்லாதவர்கள், பணியில் இருப்பவர்கள் ஆகிய இரு பிரிவினரையும் சட்டப்படி பாதுகாப்பதே அம்பேத்கரின் நோக்கமாக இருந்தது. அவர்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதே அவரது அக்கறையாக இருந்தது.  இதை எப்படி உறுதிபடுத்துவது?

பொதுவாக, ஜனநாயக நாடுகள் கடைபிடிக்கும் வழி இதுதான். வலிமை வாய்ந்த ஒருவன் ஒரு எளியவனை பொருளாதார ரீதியில் கட்டுப்படுத்தாமல் இருக்க சட்டப்படி வழிவகைகள் செய்யப்பட்டிருக்கவேண்டும். பாதிக்கப்படுபவர்கள் சட்டத்தை அணுகுவதற்கான வாய்ப்புகள் இருக்கவேண்டும். ஆனால் அம்பேத்கர் இதனை ஏற்க மறுத்தார். வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டாலும், அவர்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்தி அரசாங்கத்தை உருவாக்கினாலும், சட்டமன்றமும் அரசாங்கமும் அதிகாரம் உள்ளவர்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. அதிகாரம் இல்லாத எளியவர்களுக்கு இங்கே நீதி கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. ‘அதிக பலம் கொண்டவர்களுக்கு அரசு அதிகாரம் வழங்கப்பட்டால்’ இந்தப் பிரச்னை நீடிக்கும். பலம் பெற்றவர்களிடமும் அதிகாரமும் கூடிவரும்போது அவர்கள் தம்மில் எளியோரைப் பொருளாதார ரீதியில் கட்டுப்படுத்த துணிவார்கள். எளியோரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும். இதைத் தடுக்க ஒரே வழி சோஷலிசம். அரசு சோஷலிசத்தின் மூலம் தனி நபர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

அம்பேத்கரின் அரசு சோஷலிசம், முதலாளித்துவ அச்சுறுத்தலில் இருந்து எளியோரைப் பாதுகாக்கும். செல்வம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். பசியில் இருந்தும் வேலையின்மையில் இருந்தும் அபரிமிதமான உற்பத்தியில் இருந்தும் பிற சமூகத் தீங்குகளில் இருந்தும் அது மனிதர்களை விடுவிக்கும். அம்பேத்கரின் சோஷலிசத்தில் செல்வம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். விவசாயமும் உற்பத்தியும் கனரகத் தொழிற்சாலைகளும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். வலிமையானவர்களின் மிதமிஞ்சிய அதிகாரமும் அபரிமிதமான செல்வமும் கட்டுப்படுத்தப்படும். அதே சமயம் அங்கே முதலாளிகளுக்கும் இடமிருக்கும். தொழிலாளர்களின் உரிமைகளைப் போலவே அவர்களுடைய உரிமைகளும் பாதுகாக்கப்படும். ஒவ்வொருவரும் தம்முடைய திறமையை சுதந்தரமாக வளர்த்துக்கொள்ளலாம். சோஷலிசத்தின் பெயரால் அரசு எவருடைய தனித்தன்மையையும் அழிக்காது. அனைவருக்கும் நீதி கிடைக்கும். சமமாக.

(அம்ருதாவில்வெளிவந்த கட்டுரை)

No comments: