March 12, 2013

கொல்கத்தா : பயணம் ஆரம்பம்


ஒவ்வொருமுறை பயணம் மேற்கொள்ளும்போதும் அதைப் பற்றி விரிவாக பிளாகில் எழுதவேண்டும் என்று நினைப்பேன். குறிப்புகள்கூட எடுத்து வைப்பதுண்டு. பிறகு,  இதையெல்லாம் எதற்கு எழுதிக்கொண்டிருப்பது என்று தோன்றும். அல்லது, உற்சாகமாக ஆரம்பித்து பாதியில் நிறுத்திவிடுவேன். (காஷ்மிர் டைரி ஓர் உதாரணம்). நேரம் இல்லை, படிப்பதற்கு  நிறைய இருக்கிறது, புத்தகப் பணி, அலுவலகப் பணி, தமிழ்பேப்பரில் அவ்வப்போது எழுதுவது போதாதா என்று ஒவ்வொருமுறையும் ஒரு சாக்குபோக்கைக் கண்டுபிடிப்பதும் அதை நானே நம்புவதும் சகஜமாகிவிட்டதால் பிளாக் பக்கமே வர முடியாமல் போய்விட்டது.

சென்ற மாதம் குடும்பத்துடன் கொல்கத்தா சென்று வந்தேன். வழக்கம் போல் குறிப்புகள் எடுத்துக்கொண்டேன். வழக்கம் போல் காமிராவிலும் செல்ஃபோனிலும் போட்டிப்போட்டுக்கொண்டு நிறைய படங்களும் பிடித்து வைத்துக்கொண்டேன். இதோ, பீடிகை எல்லாம் கொடுத்து அது பற்றி எழுதத் தொடங்கியாகிவிட்டது. தமிழில் பயணக்குறிப்புகள் பதிவு செய்யப்படுவதில்லை, பயணப் புத்தகங்கள் வெளிவருவதில்லை என்று புகார் மட்டும் வாசித்துவிட்டு சும்மா இருப்பதில் பயன் எதுவும் இல்லை அல்லவா?

0


டார்ஜிலிங், கேங்டாக் என்றெல்லாம் விரிவாக யோசித்துவிட்டு கடைசியில் கொல்கத்தா மட்டும் போதும் என்று முடிவெடுத்திருந்தோம். 1661 கிலோ மீட்டர் ஹவுரா மெயில் பயணம் வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 1 இரவு 11.40 மணிக்கு ஆரம்பமானது. நள்ளிரவு என்பதால் அன்று ரயிலில் யாருடனும் பேசமுடியவில்லை. மறுநாள் காலை, எங்களுக்கு நேர் எதிரில் இருந்த பெண் புன்னகையுடன் சகஜமாகப் பேசத் தொடங்கிவிட்டார். கொல்கத்தாவுக்கு இதுதான் முதல் பயணமா? எங்கே வேலை? எத்தனை நாள் தங்கப்போகிறீர்கள்? எங்கெல்லாம் போகிறீர்கள்?

தன் பெயரை நினைவில் வைத்திருக்க ஒரு எளிய வழியையும் அவர் சொன்னார். 'மனிஷா கொய்ராலாவில் இருந்து மனிஷாவை எடுத்துக்கோங்க. நரேந்திர மோடியில் இருந்து மோடியை எடுத்துக்கோங்க. இரண்டையும் ஒன்று சேர்த்தா அது என் பெயர்.' அவர் ஒரு சமையல் கலை நிபுணர். 'விதவிதமா நிறைய செய்வேன். ஆனால், என் பையன் தயிர் சாதம் தாண்டி எதையும் சாப்பிடமாட்டான்.' என்று வருத்தப்பட்டார்.

சமையல் செய்ய கற்றுக்கொடுப்பதைப் பகுதி நேரப் பணியாக அவர் மேற்கொண்டுவருகிறார். வீடு, புரசைவாக்கத்தில். அவருடைய பெற்றோர் (அல்லது மாமியார்) வீடு கொல்கத்தாவில். 'கொல்கத்தா அதிகம் சென்றதில்லை. ஒரே அழுக்கு இடம்' என்று முகம் சுளித்தார். அந்த பஜார் போ, இந்த பஜார் போ, அங்கே சாப்பிடு, இங்கே டீ குடி என்று ஒரு பெரிய பட்டியலை வாசித்தார். கையோடு கொண்டுவந்திருந்த சில குஜராத்தி ரொட்டிகளைப் பகிர்ந்துகொண்டார்.

எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னபோது, கற்றுக்கொள்ளும் ஆர்வமிருந்தால் போதும், ஒரே மாதத்தில் இந்தியில் பேசலாம் என்றார். 'என் கணவர் பிட்ஸ் பிலானி. எனக்கு ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது. தட்டித் தடுமாறி கற்றுக்கொண்டேன். இப்போது என்னால் பயமின்றி எவருடனும் சகஜமாகப் பேசமுடியும்.'

அவர் சொன்ன ஒவ்வொரு கதையிலும் Gujarati Pride தூக்கலாக இருந்தது. 'நரேந்திர மோடியை இனி குஜராத்தின் முதல்வர் என்று அழைக்காதீர்கள். வருங்காலப் பிரதமர் அவர்.' குஜராத் 2002 அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. 'சர்ச்சையில் சிக்காதவர்கள் யாராவது இருக்கமுடியுமா என்ன?' என்று சிரித்தார். 'குஜராத் வளர்கிறது, அது போதுமே' என்றார். மேற்கொண்டு பேசினேன். 'அந்த ஒரு விஷயத்தை விட்டுவிடுங்கள். மற்றபடி அவர் ஒரு பெரிய தலைவர் என்பதை ஒப்புக்கொள்வீர்கள்தானே?' மார்கண்டேய கட்ஜு நினைவுக்கு வந்தார். ஒரு விமானப் பயணத்தின்போது தன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு மோடி விசிறியுடன் அவர் கோத்ரா பற்றி தர்க்கம் செய்ய, அந்த குஜராத்திக்காரர் கடுப்புடன் தன் சீட்டை மாற்றிக்கொண்டுவிட்டார்.

மனிஷா மோடியின் மற்றொரு பகுதிநேரப் பணி, மெஹந்தி வேலைப்பாடு. மும்பையிலும்  பிற பகுதிகளிலும் நடத்தப்படும் மெஹந்தா பயிற்சி வகுப்புகளில் அதிகப் பணம் கொடுத்து கலந்துகொண்டு இந்தக் கலையை அவர் கற்றுத் தேர்ந்திருக்கிறார். 'தமிழ்நாட்டுப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் போல் வட இந்தியப் பெண்களுக்கு மெஹந்தி. திருமணம் போன்ற விசேஷங்களில் மண்டபத்திலேயே தனியாக டெண்ட் போடுவோம். விருந்தினர்கள் வந்து மொய்த்துக்கொள்வார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு என்று மொத்தமாகக் கட்டணம் வசூலித்துவிடுவேன். என்னிடம் சில உதவியாளர்களும் இருக்கிறார்கள்.' தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இப்போதுதான் மெஹந்திமீது ஆர்வம் ஏற்பட ஆரம்பித்துள்ளது என்றார்.

தமிழ்நாட்டில் பல பிரபலங்கள் தன்னுடைய கஸ்டமர்களாக இருக்கிறார்கள் என்பதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. 'இப்ப சமீபத்தில் சௌந்தர்யா வீட்டுக்குப் போயிருந்தேன். நான்தான் வரவேண்டும் என்று அவர் பிடிவாதமாக இருந்தார். வேறொரு நண்பர் மூலம் என்னைப் பற்றி அவருக்குத் தெரியவந்திருக்கிறது. இப்போது அவர் என்னுடைய விசிறியாகிவிட்டார்.'

நான் மேற்கொண்டு எதுவும் கேட்காததால் அவரே தொடர்ந்தார். 'சௌந்தர்யா வீட்டுக்குப் போய்தான் மெஹந்தி வைத்துவிட்டேன். டைட் செக்யூரிட்டி. பிரபலம் என்றாலே அப்படித்தானே? அதுவும் லேசுபட்டவரா அவர் அப்பா? நான் போகும்போது அவரைப் பார்த்தேன். ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் போனதும் திரும்பிப் பார்த்தார். மற்றபடி அவர் பிஸி என்பதால் நான் தொந்தரவு செய்யவில்லை. அவர் மனைவி பேசினார். போனேன், வந்தேன் என்று வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.'

அவர் அப்பா யார் என்று கேட்டபோது விழித்தார். 'இத்தனை நேரம் நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்றே தெரியவில்லையா?' இல்லை என்றதும் சப்தமாகச் சொன்னார். 'ரஜினி காந்த்.' சிறிது நேர அமைதிக்குப் பிறகு, 'அவர் ஒரு நடிகராக இருக்கிறார்' என்றார்.

3 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

Anonymous said...

\\ அவர் அப்பா யார் என்று கேட்டபோது விழித்தார்\\

how did you introduce yourself to her marudhan?

Anonymous said...

http://thiruttusavi.blogspot.in/2013/03/blog-post_22.html

read this post....