April 9, 2013

ராகுல்ஜியின் நெடும் பயணம்

ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீண்டுசெல்லக்கூடிய ராகுல்ஜியின் சுயசரிதை இப்படித் தொடங்குகிறது.
ஓடத்தைப் போல் வாழ்க்கை நதியைக் கடப்பதற்கே நான் கருத்துகளை ஏற்றுக்கொண்டேன். அவற்றைத் தலைமேல் சுமந்து திரிவதற்காக அல்ல.
(சமர்ப்பணம்) நான் முன்னேறிச் செல்ல வாய்ப்பளித்துவிட்டு, பின்னாலேயே நின்றுவிட்ட என்னோடு ஓடி வந்தவர்களின் நினைவுக்கு.
கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆஜம்கர் மாவட்டத்தில் 9 ஏப்ரல் 1893 அன்று ஒரு பிராமண குடும்பத்தில் ராகுல் சாங்கிருத்யாயன் பிறந்தார். பூணூல் போட்டாகிவிட்டபடியால் மந்திரம் கற்றுக்கொண்டார். நண்பர்கள் சவகாசத்தில் கவனமாகவும் சுத்தமாகவும் இருக்கவேண்டும் என்று அவர் அறிவுறுத்தப்பட்டிருந்தார். நிஜாமாபாத் பள்ளியில் தொடக்ககால படிப்பு. சுலோகங்கள், சுலோகங்கள் தவிர மேலதிகம் படிக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. பள்ளிப்பாடங்களைப் பொருத்தவரை அவருக்கு ஒரே ஒரு பிரச்னைதான். 'படிப்பது எனக்கு எப்பொழுதுமே கடினமாக இருந்ததில்லை. உண்மையில் நான்கு மாதப் படிப்புக்காக என் ஆயுளில் பன்னிரண்டு மாதங்கள் வீணாகிக் கொண்டிருந்தன.'

வீட்டுக்கு அருகில் ஓரிடத்தில் பேய்கள் உலாவுவதாகப் பேசிக்கொண்டார்கள். ராகுல்ஜியும் குறிப்பிட்ட அந்தப் பகுதியைக் கடக்க நேரிடும்போது கவனமாக இருப்பார். மனத்துக்குள் சுலோகங்கள் ஓடும்.

வீடு, படிப்பு, நண்பர்கள், சுலேகம் என்றிருந்த ராகுல்ஜியை ஒரு செய்யுள் அடியோடு புரட்டிப்போட்டது.
உலகைச் சுற்றிப்பார் விழித் தெழுந்து,
மறுமுறையும் மனிதப் பிறப்பு வாய்க்குமா உனக்கு?
மனிதப் பிறப்பு தொடர்ந்தாலும்
மறுமுறையும் இளமை கிடைக்குமா உனக்கு?
கடவுளைச் சற்றே நகர்த்தி வைத்துவிட்டு யோசித்தபோது, இன்னொரு பிறவி கிடைக்காது என்பது சர்வநிச்சயமாகத் தெரிந்தது. ஒரே மாதிரியான அலுப்பூட்டும் இந்த வாழ்க்கை முறையில் இருந்து விடுபட்டு ஒரு புதிய சாகச வாழ்வை மேற்கொள்ள அவர் துடித்தார். இந்த நினைவு வந்தபிறகு அவரால் இயல்பாக வீட்டோடு ஒட்டியிருக்கமுடியவில்லை. கையில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு (22 ரூபாய் தேறியது) வீட்டைவிட்டு ஓடிப்போனார்.

பள்ளிக்கூடங்களுக்கு வெளியில் ஒரு புதிய உலகம் அவருக்காக காத்திருந்தது. பாடப்புத்தகங்களுக்கு வெளியில் சுவாரஸ்யமான பல செய்திகள் காணக்கிடைத்தன. உலகம் அவருடைய பாடசாலையாக மாறிப்போனது.

கால் போன போக்கில் நடக்கவும், கிடப்பதை உண்ணவும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்கவும் முடிவு செய்தார்.

சத்திரங்களும் கோயில்களும் உணவு அளித்தன. பிச்சை வாங்கி உண்பதில் அவருக்குப் பிரச்னை எதுவும் இருக்கவில்லை. படுத்து உறங்க எங்காவது இடம் கிடைக்கத்தான் செய்தது. சில சமயம் சாதுக்களின் கூட்டத்தோடு கலந்துவிடுவார். சில சமயம் ஆன்மிகப் பிரசாரம் நடைபெறும் இடங்களில் அடைக்கலம் புகுவார். வாகான இடம் கிடைக்காதபோது, பல இரவுகளை நடந்தபடியே அவர் கழித்திருக்கிறார்.

விரைவாக படிக்கும் திறனும் படித்தவற்றின் சாரத்தை உள்வாங்கி நினைவில் வைத்திருக்கும ஆற்றலும் இருந்தது. இந்தியில் எழுதப்பட்ட சில புத்தகங்களை முதலில் வாசித்தார். விசார சாகர், விசார சந்திரோதயம், அஷ்ட வக்ர கீதா டீக்கா, பகவத் கீதை. துளசிதாசரின் வினய பத்திரிகா, துர்க்கா சப்தசதி (துர்க்கையின் தோத்திரப் பாடல்), தால்ப்ய ஸ்தோத்திரம், சாணக்கிய நீதி, வைராக்கிய சதகம். இன்னும் பல.

ஆன்மிகமும் ஆன்மிகம் சார்ந்த சித்தாந்தமும் அவரை மயக்கின. 'பிரம்மம் என்பதுதான் உண்மையானது. இந்த உலகம் பொய். பிரம்மமும் உயிர்ப்பிராணிகளும் வெவ்வேறானவை அல்ல. இரண்டும் ஒன்றுதான்.'

இந்து மதத்தின் தத்துவங்களை உள்வாங்கிக்கொள்ள முயன்றார் ராகுல்ஜி. படித்தவற்றில் வேதாந்தம் ராகுல்ஜியைக் கவர்ந்தது. 'காட்டில் சிங்கம் கர்ஜிப்பதற்கு முன் நரி போன்றவைகள் ஊளையிட்டுக்கொண்டிருக்கும். சிங்கநாதம் கேட்டதும் அவை அடங்கிவிடுவதைப் போலவே, வேதாந்தத் தத்துவத்தின் கர்ஜனை கேட்பதற்கு முன் சாஸ்திரங்களில் பலவித சித்தாந்தங்கள் தலைகாட்டிக் கொண்டிருக்கும்.'

மேற்கொண்டு போவதற்கு சமஸ்கிருதம் அவசியம் என்று தெரிந்தது. இந்தி மொழியில் உள்ள வேதாந்த நூல்களை அதற்குள் அவர் படித்து முடித்திருந்தார். அவரது அறிவுப்பசி இப்போது பன்மடங்கு அதிகரித்திருந்தது. வாசிப்பில் உள்ள சுவையையும் பயணத்தின் சுவையையும் அவர் இப்போது நன்கு அறிந்திருந்தார். வாழ்நாளின் இறுதிக்கட்டம் வரை இந்த இரு ஆர்வங்களும் தொடர்ந்து வந்தன.

சமய நம்பிக்கைகளை அவர் விடாது பற்றிக்கொண்டிருந்தார். 'தினமும் மூன்று முறை குளித்து சந்தியாவந்தனம் செய்தேன். எங்குச் சென்றாலும் தர்ப்பைப்புல் விரிப்பைக் கையோடு கொண்டு சென்றேன். ஒரு வேளை மட்டும் என் கையால் சமைத்துச் சாப்பிட்டேன்.'

இப்போது ராகுல்ஜியின் வயது 17.  காசி நதிக்கரையில் இருந்து தொடங்கிய அவர் பயணம் இப்போது அயோத்தி வழியாக ஹரித்துவாரை நோக்கி அவரை இழுத்துச் சென்றது. சமஸ்கிருதம் கற்கவும் சமய குரு யாரிடமாவது சேர்ந்து தத்துவம் பயிலவும் அவர் ஆர்வமாக இருந்தார்.

வழியில் கண்ட சந்நியாசிகளிடம் பேச்சுகொடுத்தார். அவர்கள் எங்கிருந்து புறப்பட்டார்கள், எங்கே சென்றுகொண்டிருக்கிறார்கள், எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று விசாரித்தார். பற்றற்ற நிலையிலும் உல்லாசமாக அவர்கள் இருந்ததை ராகுல்ஜி கவனித்தார். 'கால்நடையாக அயோத்தி வழியாக ஹரித்துவார் செல்ல நினைத்தபோது...
நான் உடனே சந்நியாசியாகிவிட வேண்டுமென்றோ அல்லது யோகாப்பியாசத்தில் இறங்கிவிட வேண்டுமென்றோ கருதவில்லை. முதலில் சமஸ்கிருத நூல்களையும் வேதாந்த நூல்களையும் நன்கு படிக்க முடிவுசெய்தேன். அதன் பின்னரே சந்நியாசியாக விரும்பினேன்.'

ஆஜம்கட்டில் இருந்து அயோத்தியா. அங்கிருந்து ஹரித்துவார். இமயமலையின் அழகு அவரை வசீகரித்தது. பத்ரிநாத், ரிஷிகேசம், கோரிநாத், கங்கோத்ரி, அலக்நந்தா என்று பயணம் நீண்டது. சாதுக்களும் சந்நியாசிகளும் வழி நெடுகிலும் கும்பல் கும்பலாகப் பயணம் செய்துகொண்டிருந்தனர். அவர்களுடன் பல தினங்களை ராகுல்ஜி கழித்தார். சந்நியாசிகளின் வாழ்வை முதல்முறையாக நேரடியாக அருகில் இருந்து காணும் வாய்ப்பு கிடைத்தது. அவர் நினைத்திருந்தது போல் சந்நியாசிகள் எந்நேரமும் சாமி, சாமி என்று தொழுதுகொண்டே இருக்கவில்லை. இயற்கை அழகை ரசித்துக்கொண்டே கஞ்சா புகைத்தார்கள்.  இடம்விட்டு இடம் நகர்ந்துகொண்டே இருந்தார்கள். செல்லும் திசையெங்கும் அவர்களுக்கு நல்ல மரியாதை. மக்கள் தாமாகவே முன்வந்து தின்பண்டங்களையும் துணிமணிகளையும் அளித்தார்கள். 

சந்நியாசிகளோடு சேர்த்து சில மடாதிபதிகளின் நட்பும் கிடைத்தது. இந்த இடத்தில் ராகுல்ஜிக்குச் சில அடிப்படை சந்தேகங்கள் எழுந்தன. உண்மையில் நான் தேடிக்கொண்டிருப்பது எதை? எது எனக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகிறது? மேற்கொள்வது ஆன்மிகப் பயணம் என்றாலும் ஆன்மிகத்தைக்காட்டிலும் பயணம் என்னை அதிகம் ஈர்ப்பது ஏன்? தான் இதுவரை சேகரித்து வந்த நம்பிக்கைகள் சற்று ஆட்டம் காண்பதை அவர் உணர்ந்தார். 

‘ஹரித்துவார யாத்திரைக்குப்பின் அல்லது அதற்கு முன்பிருந்தே நான் நாளுக்கு மூன்றுமுறை செய்துவந்த சந்தியா வந்தனம் மந்தமாகிக் கொண்டே வந்தது ஏன்? நான் பக்தி கொண்டிருந்த துறவறத்தைப் பிரயாணக் கவர்ச்சி ஒரு கலக்கு கலக்கி இருக்கலாம் அல்லது சாது, சந்நியாசிகளுடன் பழகியதால் என் தீவிரத்தன்மை சற்றுத் தளர்ந்து விட்டிருக்கலாம். அல்லது தொடர்ந்து எவரும் நிற்காமல் பிரயாணம் செய்து கொண்டிருந்ததால் அதற்கெல்லாம் ஓய்வு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.’

கேதாரநாத்தில் தங்கியிருந்த சமயத்தில் மேலும் விரிவாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ராமாயணம், விசாரசாகர், குருமுகி லிபியில் எழுதப்பட்ட பஞ்சகிரந்தி, சிவபுராணவிரிவுரை ஆகியவற்றைப் படித்தார்.

இருளும் நிச்சயமின்மையும் திருடர்களும் காட்டு விலங்குகளும் இப்போது அவருக்குப் பழகிப்போயிருந்தன.

காசிக்குத் திரும்பிக்கொண்டிருந்த சமயம் நண்பர்கள் சொன்ன ஒரு கதையை ராகுல்ஜி தன் புத்தகத்தில் பகிர்ந்துகொண்டார். 'சாதுக்கள் படுத்திருந்தபோது ஒரு திருடன் மேலிருந்து கொக்கி போட்டான். கிழவன் மாட்டிக்கொண்டான். ‘நான் செய்ததை மன்னித்துவிடுங்கள், கடவுள் எனக்குக் கயிறு அனுப்பிவிட்டார். சென்று வருகிறேன்’ என்று அந்தக் கிழவன் கத்த ஆரம்பித்துவிட்டான். தவறு புரிந்து திருடன் கயிரை விட கிழவனுக்கு நல்ல அடி.'

1910ம் ஆண்டு சமஸ்கிருத இலக்கண நூலான லகுகௌமுதி படிக்க ஆரம்பித்தார்.  காளிதாசரின் ரகுவம்சம் படித்தார். வால்மீகி ராமாயணம் படித்தார். கங்கையில் நீச்சல் பயின்றார். சமயம் கிடைக்கும்போது ஆன்மிகச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார். அவ்வாறு ஏற்கெனவே சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தவர்களைக் காட்டிலும் மேலான படிப்பறிவைப் பெற்றிருந்ததால் இவரது பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தவிர்க்கவியலாதபடி, மந்திர தந்திரங்களின்மீது ராகுல்ஜிக்கு ஆசை பிறந்தது. அவை பற்றி எழுதப்பட்ட சமஸ்கிருத நூல்களைப் படித்தார். ‘இந்த தந்திரங்களைக் கற்க தனிமையிலே மனத்தை ஈடுபடுத்தி வந்ததால், சமஸ்கிருத மொழி அறிவு வளர்ந்துகொண்டே சென்றது. இது எனக்கு ஒரு ரொக்க லாபமல்லவா?’

செம்பில் இருந்து தங்கம் தயாரிக்கமுடியும் என்று எழுதியிருந்ததை நம்பி பரிசோதனைகளில் இறங்கினார். தேவைப்பட்ட ரசாயனங்களை வாங்கி வந்து எரித்தார். பலனில்லை. வேர்கள், மூலிகைகள் பற்றிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகளை வாசித்தார்.  வாசனை எண்ணெய் தயாரிக்கும் முறையைத் தெரிந்துகொண்டார். ‘நல்லெண்ணையை ஒரு சீசாவில் நிரப்பி அதில் மற்ற நறுமணப் பொருள்களைக் கலந்து, பல நாட்கள் அதை வெயிலில் வைத்து முயற்சித்தேன். கொஞ்சமும் பலனளிக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அதற்காக நான் செலவு செய்த பணத்தில் பாதியைக் கொடுத்திருந்தாலே மார்க்கெட்டில் ஒரு நல்ல ரகமான வாசனை எண்ணெய் கிடைத்திருக்கும்.’ 

மந்திர தந்திரங்களில் ராகுல்ஜி 'தேர்ச்சி' பெற்றிருந்தை அறிந்த ஒருவன் தன் வீட்டில் காணாமல் போன பாகவதம் புத்தகத்தைக் கண்டுபிடிக்கச் சொல்லி முறையிட்டான். ராகுல்ஜியும் தன் 'ஞான திருஷ்டியைப் பயன்படுத்தி' புத்தகத்தைக் கண்டுபிடித்துக்கொடுத்துவிட்டார். ஆச்சரியப்பட்டு போன அவன் தன் அக்கம்பக்கத்து வீட்டாரிடமும் ராகுல்ஜியின் 'மகிமை' குறித்து புகழ்ந்து தள்ள, ஒரு கூட்டமே ஐயா, சாமி என்று பாய்ந்து வந்தது.  அதிலொருவன், குழந்தையின்மைக்கு மருந்து கிடைக்குமா என்று கேட்க, ராகுல்ஜி அச்சத்துடன் ஒதுங்கிகொண்டார்.

(தொடரும்)

2 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

Anonymous said...

Neenga yeththanai oorai thaniyaaga sutri vandhulleergal?