July 7, 2013

முதலாளித்துவப் பயங்கரவாதம் என்பது என்ன?

கலை நிகழ்ச்சி
அம்பத்தூர் மார்க்கெட் அருகிலுள்ள ஜி.கே. கல்யாண மண்டபத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (புஜதொமு) நேற்று மாலை நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டேன். தலைமை, ஆவடி--அம்பத்தூர் பகுதி செயலாளர் மு. முகிலன். சிறப்புரையாற்றியவர் மாநில இணைச் செயலாளர், ம.சி. சுதேஷ்குமார். முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிக்க தொழிலாளி வர்க்கம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் கருத்தரங்கின் விவாதப் பொருள்.

கூட்டத்துக்குத் திரண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். முதல் இரு வரிசைகளில் சில பெண்கள் அமர்ந்திருந்தனர். ஆயத்த ஆடை உற்பத்தியில் ஈடுபடுவர்கள், ஒப்பந்தப் பணியில் இருக்கும் தொழிலாளர்கள், எலெக்ட்ரிகல் பணியில் ஈடுபடுபவர்கள் என்று வெவ்வேறு பின்னணியில் இருந்து பார்வையாளர்கள் வந்திருந்தனர். இவர்களில் பலர் முதன்முறையாக இதுபோன்ற அரங்கங்களுக்கு வருபவர்கள் என்பதால் அனைவருக்கும் புரியும்படி எளிமையாக தோழர்கள் உரையாற்றினார்கள்.

மானேசர், மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சுனில்திமன் என்பவர் கலந்துகொள்வதாக இருந்தது. முடியவில்லை. அவர் உரையாற்றியிருந்தால், மாருதி போராட்டம் பற்றி விரிவாக அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

முதலாளி, தொழிலாளி என்றால் புரிகிறது. முதலாளித்துவப் பயங்கரவாதம் என்பது என்ன? தொழிலாளி வர்க்கம் என்பது என்ன? ஹூண்டாய், மாருதி, டிவிஎஸ், நோக்கியா போன்ற பெரும் நிறுவனங்களில் இணைவதும் பணிபுரிவதும் பெருமைக்குரிய விஷயம் அல்லவா?

இப்படி நினைப்பவர்களுக்காக, தொழிற்சாலைகள் எப்படி இயங்குகின்றன, தொழிலாளர்கள் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் ஏன் அளிக்கப்படுவதில்லை போன்ற அடிப்படையான விஷயங்கள் தகுந்த உதாரணங்களுடன் விவரிக்கப்பட்டன.

அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் பலவற்றில் டோக்கன் சிஸ்டம் நடைமுறையில் இருக்கிறதாம். கழிப்பறைக்குச் செல்லவேண்டுமானால்கூட டோக்கனை சூப்பர்வைஸரிடம் கொடுத்துவிட்டு, திரும்பவேண்டும். இரண்டு டோக்கனுக்கு மேல் ஒருவருக்குக் கிடைக்காது. உணவு நேரம் முடிந்தவுடன் உடனே பணிக்குத் திரும்பிவிடவேண்டும். கழிப்பறைக்குள்கூட கூடுதல் நேரம் செலவழிக்கமுடியாது.  ஒரே வேலைதான். என்றாலும் ஆண் தொழிலாளிக்கு ஒரு சம்பளம். பெண் என்றால் குறைந்த சம்பளம். என்னைக் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொண்டால் உடனே சம்பளத்தை உயர்த்துகிறேன் என்று பெண் தொழிலாளர்களிடம் பேரம் பேசும் சூப்பர்வைஸர்கள் அநேகம்.

17 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களைத் தேடிப்பிடித்து வேலையில் சேர்த்து முழுவதுமாகக் கசக்கிப் பிழிந்து சக்கையாக வெளியில் துரத்துகிறார்கள். மூன்றாண்டுகள் வேலை செய்தால் வேலை நிரந்தரம், கூடுதல் சம்பளம் என்றெல்லாம் ஆசை காட்டி, வேண்டிய மட்டும் வேலையை வாங்கிகொண்டு, அது சரியில்லை, இது சரியில்லை என்று ஏதாவது சாக்குபோக்குக் காட்டி வேலையைவிட்டு நீக்கிவிடுகின்றனர்.

தொழிலாளர்கள் தங்களுக்குள் சங்கம் அமைத்துக்கொள்ளலாம் என்கிறது சட்டம். ஆனால் நிஜத்தில் சங்கம் அமைப்பது எவ்வளவு சவாலான காரியம் என்பதைத் தெரிந்துகொள்ளமுடிந்தது. சங்கம் அமைக்க முயலும் தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவமானப்படுத்தப்படுறார்கள். அடியாள்களை வைத்து மிரட்டப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள். ஹெச்.ஆர் மேனேஜர்களை வீட்டுக்கு அனுப்பி, 'என்னம்மா உங்க வீட்டுக்காரர் ஒழுங்கா வேலை செய்யமாட்டாரா? எதுக்கு அவருக்கு சங்கம் வேலையெல்லாம்?' என்று உளவியல் தொந்தரவு கொடுக்கிறார்கள்.

இன்னும் சிலர், ஒர்க்கர்ஸ் கமிட்டி என்னும் பெயரில் தாங்களாகவே ஒரு அமைப்பை ஏற்பாடு செய்து, தொழிலாளர்களை அதில் இணைக்க முயன்றுவருகிறார்கள். இந்தக் கமிட்டியில் இணைபவர்களுக்குச் சில சலுகைகளை அளிப்பதன்மூலம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பலவீனப்படுத்துகிறார்கள்.

மொத்தத்தில் தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு இல்லை. எந்நேரமும் யாரும் வேலையில் இருந்து துரத்தப்படலாம். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை. சங்கம் அமைக்கும் உரிமை இல்லை. பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை.

தொழிலாளர்கள் ஓர் அமைப்பாகத் திரண்டுவிடாதபடி தடுக்க அவர்கள் பலவாறாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர், தாற்காலிகத் தொழிலாளர், நிரந்தர ஊழியர், சீனியர், ஜூனியர் என்றெல்லாம் வகைப்படுத்தி அவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் பாதிப்புக்குள்ளாகும்போது நிரந்தரத் தொழிலாளர்கள் அவருக்குக் குரல் கொடுப்பதில்லை. தாற்காலிகத் தொழிலாளர்கள் கொத்துக் கொத்தாக வேலையில் இருந்து துரத்தப்படும்போது பிற தொழிலாளர்கள் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதில்லை. இந்தப் பிரிவினைகள் போக, சாதி, மதம், பாலினம் போன்ற பிரிவினைகளும் தொழிலாளர்களைத் தனித்தனிக் குழுக்களாகப் பிய்த்துப் போடுகின்றன. இவற்றையெல்லாம் மீறி ஒரு வர்க்கமாக ஓர் அமைப்பாகத் தொழிலாளர்கள் திரளவேண்டியிருக்கிறது. இது ஒரு வரலாற்றுத் தேவையும்கூட.

உடனடியாக மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யவேண்டும் என்பதையும் அரங்கில் பட்டியலிட்டார்கள்.
  • பணிநிரந்தரச் சட்டம், காண்டிராக்ட் முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்கள் கறாராக அமல்படுத்தப்படவேண்டும். 
  • தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 
  • புதிய தொழிற்சங்கம் தொடங்க விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் பதிவு செய்யவேண்டும். 
  • ஒர்க்கர்ஸ் கமிட்டி தடை செய்யப்படவேண்டும். 
  • எல்லாத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் 15,000 வழங்கப்படவேண்டும்.
  • பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும் ஊதிய சமத்துவமும் வழங்கப்படவேண்டும்.
எல்லாவற்றுக்கும் அடிநாதமாக உள்ள தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகிய மக்கள் விரோத கொள்கைகள் எதிர்க்கப்பட்டன. உணவு பாதுகாப்புச் சட்டம், ஆதார் அட்டை போன்றவற்றால் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதும் வலியுறுத்தப்பட்டன.

பல பெரும் நிறுவனங்களில் எதிர்ப்புகளை மீறி தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி சங்கம் அமைத்த சம்பவங்கள் விவரிக்கப்பட்டன.

உழைக்கும் மக்களிடையே உள்ள மயக்கங்களைச் சுட்டிக்காட்டவும் உரையாற்றியவர்கள் தயங்கவில்லை. 'சிங்கம் 2 ஓடும் திரையரங்கங்களில் இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். டிவி முன்னால் கிரிக்கெட் பார்க்கவும் சீரியல் பார்க்கவும் ஆண்களும் பெண்களும் திரண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது இந்த உந்துதல்? எந்த முதலாளித்துவம் அவர்களைக் கசங்கிப்பிழிகிறதோ அதே முதலாளித்துவம்தான் இந்த மயக்கங்களையும் அவர்களுக்கு அளிக்கிறது. இதில் அவர்கள் தங்களை இழக்கின்றனர். தலயோ, தளபதியோ அல்ல உங்கள் தலைவர். மார்க்ஸும் லெனினும் பகத் சிங்கும்தான் உங்கள் தலைவர்கள். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். ஒரு மகத்தான வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.'

4 comments:

Anonymous said...

முதலாளித்துவ பயங்கரவாதம் என்பது புத்தகம் எழுதவைத்து தான் நிறைய சம்பாதித்துக்கொண்டு எழுதியவர்களுக்கு ராயல்டி கொடுக்காமல் இழுத்தடித்து ஏமாற்றுவது.

எஸ் சம்பத் said...

நல்ல கூட்டத்திற்கு சென்றதோடல்லாமல், மிகச் சரியாக தொகுத்து வழங்கிய தோழர் மருதனுக்கு நன்றி. தொழிலாளர் வர்க்கத்தின் முன்னால் மிகப்பெரிய சவால் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக முதலாளித்துவம் தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்துவதை கண்காணிக்க வேண்டிய தொழிலாளர் துறையின் மீது திரை மறைவில் ஆதிக்கம் செலுத்துகிறது. தொழிற்தாவாச்சட்ட வரம்பிற்குள் வரும் தொழிலாளி ஒரு பிரச்சனைக்காக உயா்நீதிமன்றம் சென்றால், தொழிலாளர் துறை மூலமான வாய்ப்பை பயன்படுத்திவிட்டுத்தான் வர வேண்டும் என உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. தொழிலாளர் துறையோ ஜவ் மிட்டாய் போல் இழுத்தடித்து உப்புச் சப்பில்லாமல் முடித்து வைக்கிறது. இதில் புதிய பொருளாதார மண்டலத்தில் வரும் பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்கிற அவசியமே இல்லை. தேர்தல் கட்சி சார்ந்த தொழிற்சங்கங்கள் சம்பிரதாய போராட்டங்களோடு தங்கள் பங்கை முடித்துக் கொள்கின்றனர். பணிச்சுமை, உழைப்பு சுரண்டல்கள் தொடர்கிறது. இவற்றின் வெளிப்பாடுதான் இது போன்ற கூட்டங்களில் இளைஞர்கள் பங்களிப்பு. துறைகள் கடந்து தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைய வேண்டும்.

Anonymous said...

நன்றி தோழர் மருதன். மிகசரியான புரிதலை ஏற்ப்படுத்தும் வண்ணம் தொகுத்து எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி!

Anonymous said...

அருமையான பதிவு