October 26, 2013

மோடி இஸ்லாமியர்களின் விரோதியா?

நூல் வெளியீட்டு விழா என்னும் முகமூடியில் நேற்று புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கின் தலைப்பு, ‘மோடி என்ற முகமூடி.’ முதல் முகமூடி ஏன் தேவைப்பட்டது என்பதை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் தன் உரையின் தொடக்கத்தில் விளக்கினார். மோடி சென்னை வந்திருந்தபோது பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருக்கிறார்கள். காவல் துறையும் கொடுத்துவிட்டது. ஆனால், கூட்டத்தின் உள்ளடக்கம் மோடி எதிர்ப்பு என்பது தெரியவந்ததும் கொடுத்த அனுமதியைத் திரும்பப்பெற்றுவிட்டார்கள். எனவே, அதே கூட்டத்தை நூல் வெளியீடு என்னும் பெயரில் இப்போது நடத்தி முடித்திருக்கிறார்கள். ‘முன்பெல்லாம் திருமண விழா என்று ஏற்பாடு செய்துவிட்டு அந்தச் சாக்கில் அரசியல் பேசுவார்கள். இப்போதும் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை என்பதையே இந்த ஏற்பாடு நமக்கு உணர்த்துகிறது.’

மோடியின் முகமூடியைக் கிழித்தெறிவோம்! என்ற தலைப்பில் திருச்சியில் செப்டெம்பர் 09 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மருதையன் ஆற்றிய உரை நூல் வடிவில் நேற்று வெளியிடப்பட்டது. திருச்சியிலும் சென்னையிலும் மகஇக பொதுக்கூட்டங்கள் நடத்தியதன் காரணம் இந்த இரு இடங்களிலும் சமீபத்தில் மோடி வந்து சென்றதுதான்.

குஜராத் இந்தியாவின் முன்னணி மாõநிலமாகத் திகழ்கிறது, நரேந்திர மோடி வளர்ச்சி நாயகனாக வலம் வருகிறார், உலகமே வியக்கும் வண்ணம் குஜராத் தொழில்வளர்ச்சி பெற்றுள்ளது, அடுத்த பிரதமராக மோடியே வரவேண்டும் என்று இந்தியா முழுவதும் ஆதரவு குரல்கள் வலுத்து வருகின்றன என்றெல்லாம் மீடியாவில் ஒவ்வொரு நாளும் வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகள் செய்திகளே அல்ல, மார்க்கெட்டிங் வித்தைகள்தான் என்பதை உணர்த்துவதே நேற்றைய பொதுக்கூட்டத்தின் மைய நோக்கம்.

மோடி ஒரு கிரிமினல் மட்டுமல்ல, சைக்கோவும்கூட என்றார் பெங்களூரு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாலன். முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை மட்டுமல்ல, எஸ்6 சபர்மதி வண்டி எரிப்பையும் தூண்டிவிட்ட சூத்திரதாரி  மோடி என்று குற்றம்சாட்டினார் அவர். இரண்டாயிரம் பேருக்கும் மேல் கொல்லப்பட்டட பிறகும் மோடிமீது எஃப்ஐஆர் போடக்கூட குஜராத் காவல்துறை மறுத்துவிட்டதையும் கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்பி ஜாவித் ஜாஃப்ரியின் மனைவி கொடுத்த ரிட் மனுவை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் சுட்டிக்காட்டிய பாலன், இப்படி நீதி அமைப்புகள் செயல்படும் ஓரிடத்தை வளர்ச்சியடைந்த மாநிலம் என்று எப்படிச் சொல்லமுடியும் என்று கேள்வி எழுப்பினார்.

மோடியை இஸ்லாமியர்களின் விரோதி என்று கருதுவது தவறு என்றார் மருதையன். ‘இவ்வாறு நாம் சொல்வதைத்தான் அவர் உண்மையில் விரும்புவார், ஆனால் அவருடைய மார்க்கெட்டிங் வலையில் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. மோடி முஸ்லிம்களின் விரோதி என்றால் இந்துக்களின் நண்பரா? இப்படித்தான் ஹிட்லர் தன்னை யூதர்களின் எதிரிகளாக அறிவித்து அவர்களைக் கொன்றொழித்து ஜெர்மானியர்களைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டான். ராஜபக்ஷே இப்படித்தான் தன்னைத் தமிழர்களின் விரோதியாகக் காட்டிக்கொண்டு சிங்களர்களைக் கவர்ந்துகொண்டான். மோடியும் இதே வழியில் தன்னை இஸ்லாமியர்களின் விரோதியாகக் காட்டிக்கொண்டு இந்துக்களின் ஆதரவைத் திரட்டப் பார்க்கிறார். ஹிட்லர் யூதர்களைக் கொன்றொழித்ததோடு நிறுத்திக்கொண்டாரா? இல்லை, அவரது கனவு உலக மேலாதிக்கம். ராஜபக்ஷே தமிழர்கள்மீதான போரை நிறுத்திக்கொண்டபிறகு மாறிவிட்டாரா? இல்லை. அடுத்ததாக இஸ்லாமியர்கள்மீதான தாக்குதலைத் தொடங்கிவிட்டார். மோடியும் அவ்வாறுதான். அவருக்கு இஸ்லாமியர்கள் மட்டும் எதிரிகள் அல்ல. கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும்கூட அவர்  எதிரிதான்.’

இந்துக்களை மட்டுமல்ல ராமரையேகூட தேவைப்படும்போது உபயாகித்து தேவையில்லாதபோது தூக்கியெறியத் தயங்காதவர்தான் மோடி என்றார் மருதையன். ‘ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று ரத யாத்திரை சென்று ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றார் அத்வானி. இப்போது ராமருக்கு மார்க்கெட் இல்லை என்று தெரிந்ததும் மோடி ராமரை ஒதுக்கிவைத்துவிட்டார். பாபர் மசூதிக்கு உள்ளே திருட்டுத்தனமாகத்தான் கொண்டு சென்று வைத்தார்கள் என்றபோதும் முன்பாவது ராமர் கட்டடத்துக்குள்ளே பாதுகாப்பாக இருந்தார். இப்போது கோயில் கட்டுவோம் என்று சொல்லி அவரை வெளியில் இழுத்து வந்துவிட்டார்கள். சரி மோடி கோயில் கட்டுவார், கட்டுவார் என்று அவரும் காத்திருந்தார். ஆனால் மோடியோ திடிரென்று கோயிலைவிட கழிப்பறையே அவசியம் என்று சொல்லி ராமரை ஏமாற்றிவிட்டார்.’

மோடி போன்ற ஒரு ஃபாசிஸ்டுக்கு நிச்சயம் மதமோ மத நம்பிக்கைகளோ பொருட்டல்ல என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார் மருதையன். ராமர் கோயில் கட்டுவேன் என்று அன்று அத்வானி சொன்னதற்குக் காரணம் உண்மையிலேயே ராமர்மீது அவருக்கு இருந்த பக்தி அல்ல; வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைவதற்காகவே அவர் அப்படிச் சொன்னார். அந்த வகையில் அத்வானி, மோடி உள்ளிட்ட இந்துத்துவப் பரிவாரங்களின் அரசியல் என்பது இந்துக்களை ஏமாற்றி, அவர்களுடைய இறை நம்பிக்கையை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் அரசியல் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.’

மோடி எதிர்ப்பு என்பது காங்கிரஸ் ஆதரவாகத் திரும்பிவிடும் அபாயத்தையும் மருதையன் சுட்டிக்காட்டினார். உண்மையில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை ஆதார் அட்டை சர்ச்சையைக் கொண்டு விளக்கினார் மருதையன். ‘ஆதார் அட்டை என்பது மக்களைக் கண்காணிப்பதற்கான ஒரு ஏற்பாடு. உலகில் வேறு எங்கும் இல்லாதபடி ஒவ்வொருவருடைய கைவிரல் ரேகை, ஐரிஸ் போன்ற பிரத்தியேக அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டு வங்கிக்கணக்குடன் இணைக்கப்படுகின்றன. இலங்கை உள்ளிட்ட சர்வாதிகார நாடுகளில்கூட இப்படி ஒவ்வொருவரைரயும் பதிவு செய்யும் வழக்கம் இல்லை. இதை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது என்றாலும் பாஜகவும் இதனை வரவேற்கவே செய்கிறது. இந்தியாவில் குடியேறியுள்ள வங்கதேசத்து முஸ்லிம்களுக்கு ஆதார் வழங்கப்பட்டுவிட்டால் அவர்களும் இந்தியக் குடிமக்கள் ஆகிவிடுவார்களே என்ற ஓர் அச்சம் மட்டும் பாஜகவுக்கு இருக்கிறது. இதுதான் அவர்கள் காங்கிரஸில் இருந்து வேறுபடும் ஓரிடம். மற்றபடி, பாஜக ஆதாரை வரவேற்கவே செய்கிறது. இந்த விஷயத்தில் மட்டுமல்ல, பொருளாதார கொள்கையை எடுத்துக்கொண்டால்கூட இந்த இரு பெரும் கட்சிகளுக்கு இடையில் எந்த வேறுபாடும் இல்லை.’

2002க்கு மோடி குறைந்தபட்சம் மன்னிப்புகூட கேட்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பு கேள்வி எழுப்பினால், சீக்கியர்களிடம் மட்டும் நீங்கள் மன்னிப்பு கேட்டீர்களா என்று பாஜக திருப்பிக் கேட்கிறது. தொடர்ந்து இப்படி ஒருவரை மாற்றியொருவர் குற்றம்சாட்டிக்கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. தொலைக்காட்சி விவாதங்களில்கூட இதனை நாம் அடிக்கடி பார்க்கிறோம். மருதையன் பதிலுக்கு இன்னொரு கேள்வியை முன்வைத்தார். ‘வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது ஏன் காங்கிரஸ்மீது நடவடிக்கை எடுக்கவில்லை?’ அதே போல், பாஜகவைக் குறைகூறும் காங்கிரஸ் ஏன் மோடிமீது நடவடிக்கை எடுக்கவில்லை? மாயா கொட்னானி, பாபு பஜ்ரங்கி போன்றவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு, தண்டனையும் அளிக்கப்பட்டதற்குக் காரணம் காங்கிரஸ் அல்ல என்பதை மருதையன் சுட்டிக்காட்டினார். சில பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நேர்மையான காவல் துறையினரின் தொடர் முயற்சிகளால்தான் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. காங்கிரஸ் அமைதியாகவே இருந்தது. இந்தக் கள்ள அமைதிக்குக் காரணம் காங்கிரஸ், பாஜக இரண்டுக்கும் இடையிலான திரை மறைவு ஒப்பந்தம்தான்.

அந்த வகையில், மோடிக்கு மாற்று காங்கிரஸ் அல்ல என்றார் மருதையன். அதே போல், திமுக, அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ்த் தேசியவாதிகள் என்று அனைவரையும் தீவிரமான விமரிசனத்துக்கு உட்படுத்தி நிராகரித்தார் மருதையன். இதுவரையில் இங்கே நடத்தப்பட்டது தனியார் முதலாளிகளின் ஆட்சியே. தனியார்மயமும் தாராயமயமும் உலகமயமும்தான் இங்கே நிரந்தரமாக ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. இந்தக் கொள்கைகயை ஏற்று நடப்பவர்கள் மட்டுமே ஆட்சி செய்யமுடியும். எனவே, இவர்களால் எந்தவொரு மாற்றையும் அளிக்கமுடியாது. மாறாக, ஏமாற்றத்தையே அளிக்கமுடியும் என்றார் மருதையன். திமுக இல்லாவிட்டால் அதிமுக; காங்கிரஸ் இல்லாவிட்டால் பாஜக என்பன போன்ற எளிமைப்படுத்தல்களுக்குள் விழுந்துவிடாமல் மக்கள் அரசியல் உணர்வுடன் செயல்படவேண்டும். வகுப்புவாதத்தையும் ஊழலையும் பிரிவினையையும் வளர்த்தெடுக்கும் மக்கள் விரோத அரசியல் கட்சிகளை நிராகரிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


நேற்று வெளியிடப்பட்ட புத்தகம்
திருச்சி,சென்னை, கான்பூர், ஆந்திரா என்று ஊர் ஊராகச் சென்று மோடி ஆற்றிய உரைகளைக் கேட்டேன். பெரும்பாலும் உளறல்கள், அல்லது தவறுகள். இவை போக வேறு எதுவும் இல்லை என்றார் மருதையன். மோடி ஒரு சிறந்த பேச்சாளர் என்பது தொடங்கி அவரைப் பற்றி கட்டமைக்கப்படும் பிம்பங்கள் ஒவ்வொன்றும் பொய்யாயனவை. குஜராத்தை எடுத்துக்கொண்டால், அங்கே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் அது முதலாளிகளுக்கான வளர்ச்சி மட்டுமே என்றார் மருதையன். முஸ்லிம்கள் சேரிகள் போன்ற பகுதிகளுக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். தலித்துகளைவிட கீழான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். இன்னமும்கூட அவர்கள் அச்சத்துடன்தான் வாழ்கிறார்கள் என்றார்.

தி இந்துவின் எடிட்டராகஇருந்த சித்தார்த் வரதராஜன் நீக்கப்பட்டு மீண்டும் என்.ராம் குடும்பத்தினர் நிர்வாகத்தைக்கைப்பற்றிக்கொண்டதன் பின்னணி; ‘தமிழ் இந்துத்துவர்களாக வலம் வரும் நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன் குழுவினரின் அரசியல்’; தங்கப் புதையல் கனவு கண்ட சாமியார் (முதலில் அவரை விமரிசித்து பிறகு யு டர்ன் அடித்த மோடி); வாஜ்பாய், மோடி ஆகியோருடன் நெருக்கமாக இருந்த அஸ்ரம் பாபு என்று பல விஷயங்களைத் தொட்டுப் பேசினார் மருதையன்.

அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கம் போல் அனைத்து ஏற்பாடுகளும் சீராக மேற்கொள்ளப்பட்டிருந்தன. வினவு இணையத்தளத்துக்கான தனி அரங்கு உருவாக்கப்பட்டிருந்தது. கீழைக்காற்று அரங்கில் முற்போக்கு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. துண்டேந்தி பார்வையாளர்களிடம் நிதி சேகரிப்பும் நடத்தப்பட்டது. நிதியுதவி மட்டும் போதாது, இயக்கத்துக்கு உங்களால் முடிந்த பங்களிப்பையும் சிறிதளவாக இருந்தாலும் மேற்கொள்ளவேண்டும் என்று விண்ணப்பித்துக்கொண்டார் மருதையன்.

குஜராத்தில் நடைபெறுவது அம்பானி, டாடா போன்ற பெரும் முதலாளிகளுக்கான அரசு மட்டுமே; வளர்ச்சி என்று சொல்லப்படுவது அவர்களுக்கான வளர்ச்சி மட்டுமே என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார் மருதையன். மோடியும் கூடாது, காங்கிரஸ், மூன்றாவது அணி ஆகியவற்றாலும் பலனில்லை என்றால் என்னதான் வழி? ஒன்று, தேர்தல் புறக்கணிப்பு. இரண்டாவது, புரட்சி. ‘மக்கள் எழுச்சியடைந்து வீதிக்கு வந்தால்தான் மாற்றம் சாத்தியம். புரட்சி என்பது நாமே தேர்ந்தெடுப்பதல்ல. அதைவிட்டால் வேறு வழியில்லை என்னும் நிலைக்கு நம்மை இன்று கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது இன்றைய சூழல்.’

திருச்சி பொதுக்கூட்டத்தில் மருதையன் ஆற்றிய உரை

1 comment:

Anonymous said...

மோடி ஏன் உளறி பேச வேண்டும்? யாராவது அறிவள்ளவரை எழுதிக் கொடுக்க சொல்லி அதை மனனம் செய்து வந்து ஒப்பிக்கலாமே? மிகவும் சிறப்பாக எழுதிக் கொடுக்க மருதையன் மாதிரி, மருதன் மாதிரி அறிவுள்ளவர்கள் நிறைய பேர் இருக்கத் தானே செய்கின்றார்கள்?