December 31, 2013

2013 - பிடித்த பத்து புத்தகங்கள்

பட்டியலிடும் சமயம் இது. இந்த ஆண்டு நான் படித்த புத்தகங்களில் என்னைக் கவர்ந்த பத்து இவை. (இதே வரிசையில் அல்ல).


Dr Ambedkar and Untouchability. Christophe Jaffrelot, Permanent Black
   
200 பக்கங்களைக்கூட தாண்டாத சிறிய புத்தகம் என்றாலும் மிக அருமையாக அம்பேத்கரின் பன்முக ஆளுமையை இதில் ஜாஃப்ரிலா படம் பிடித்து காண்பித்திருக்கிறார். அம்பேத்கரைத் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தில் இருந்து தொடங்குங்கள் என்று தாராளமாக யாருக்கும் சிபாரிசு செய்யலாம்.

Making India Hindu, Edited by David Ludden, Oxford


பலருடைய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. அயோத்தி, டிடி ராமாயணம், நாகா சாதுக்கள், வாஜ்பாய், உத்தரப் பிரதேசம், குஜராத் என்று பரந்துபட்ட தளங்களில் விரிந்து செல்லும் இந்தக் கட்டுரைகள் புதிய வாசல்களைத் திறந்துவிடும் வல்லமை கொண்டவை. ஒரு கட்டுரையை வாசித்து முடிக்கும்போது ஒன்பது புதிய புத்தகங்களின் அறிமுகம் கிடைக்கிறது. ஒரு நல்ல புத்தகம் இதைத்தான் செய்யவேண்டும் அல்லவா?

An Uncertain Glory : India and its contradictions, Jean Dreze, Amartya Sen, Allen Lane
    
நாளைய இந்தியாவைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருப்பவர்களைப் பிடித்து இழுத்து வந்து இன்றைய இந்தியாவின் பிரச்னைகள் ஒவ்வொன்றையும் விரிவாக அறிமுகம் செய்து வைத்து கவலைப்பட வைக்கிறது இந்தப் புத்தகம். புள்ளிவிவரங்கள், தகவல் கோர்வைகள் போன்றவை எழுத்தின் ஓட்டத்தை மட்டுப்படுத்தும். ஆனால் அவை நம்மைப் பாதிக்கும் விஷயங்கள் பற்றியவை என்பதால் அக்கறையுடனும் கவனத்துடனும் வாசிக்கவேண்டியது அவசியம்.

Talking Back, Sabyasachi Bhattacharya, Oxford


‘இந்திய தேசியவாதம் குறித்த தெளிவான அறிமுகத்தை அளிக்கும் புத்தகம் இது. காந்தி, நேரு, தாகூர், சாவர்க்கர், பங்கிம் சந்திர சாட்டர்ஜி உள்ளிட்டோரின் தேசியவாத சிந்தனைகளை சாறு பிழிந்து அளித்திருக்கிறார் ஆசிரியர். சிறிய புத்தகம் ஆனால் புத்துணர்ச்சியூட்டும் வகையில் அடர்த்தியானது. தாகூர் மற்றும் காந்தி பற்றிய இவருடைய இன்னொரு புத்தகத்தை வாசிக்கவேண்டும்.

Gandhi’s Religion : A Homespun Shawl, JTF Jordens, Oxford


ராமச்சந்திர குஹாவின் ஒரு கட்டுரைமூலம் அறிமுகமான புத்தகம். மத நம்பிக்கையை ஒத்திவைத்துவிட்டு காந்தியைப் புரிந்துகொள்வது சாத்தியமேயில்லை என்பதை அற்புதமாகப் புரியவைக்கும் புத்தகம் இது. இறையியல், தத்துவம் குறித்த விவாதங்கள் அனைத்தையும் நான் புரிந்துகொண்டுவிட்டேன் என்று சொல்லமுடியாது. ஆனால் புரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆர்வத்தை நிச்சயம் இது ஏற்படுத்தியிருக்கிறது.


Narendra Modi The Man, The Times, Nilanjan Mukhopadhyay, Tranquebar.


மோடியைவிட்டு அங்குமிங்குமாகத் தாவிச்சென்று பல விஷயங்களைப் பேசுகிறது என்றபோதும் கோர்வையாகவும் எளிமையாகவும் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தைக் கிட்டத்தட்ட ஒரே மூச்சில் படித்துமுடித்துவிடமுடியும்.  ஒவ்வொரு இந்திய மாநிலத்தைப் பற்றியும் ஒவ்வொரு முக்கிய அரசியல்வாதி பற்றியும் இப்படியொரு புத்தகம் வரவேண்டும்.

The Politics of India Since Independence, Paul R Brass, Cambridge


இந்த ஆண்டு நான் கண்டறிந்த இரு முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் பால் ஆர். பிராஸ். (இன்னொருவர் ஜாஃப்ரிலா). சுதந்தரத்துக்குப் பிறகான இந்திய அரசியலை ஒரு புத்தகத்துக்குள் இதைவிட நன்றாக ஒருவரால் அடக்கிவிடமுடியும் என்று தோன்றவில்லை. காலநிகழ்வுகளை வரிசைப்படுத்திவிட்டு நகர்ந்துவிடாமல் முடிந்தவரை விரிவாக அவற்றை எடுத்து பிராஸ் ஆராய்ந்திருக்கிறார். இவருடைய பல கட்டுரைகள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. சரண் சிங்கை முன்வைத்து  இவர் எழுதியிருக்கும் இரு பாக வட இந்திய அரசியல் வரலாற்றை இந்த ஆண்டு வாசித்து முடிக்கவேண்டும்.

Karl Marx A Nineteenth-Century Life, Jonathan Sperber, W.W. Norton & Co


கார்ல் மார்க்ஸ் பற்றிய ஒரு நல்ல விவாதபூர்வமான அறிமுகம். மார்க்ஸ் காலத்து ஜெர்மனியின் அரசியல், சமூகச் சூழலையும் சேர்த்தே விவரித்துச் செல்கிறது. மார்க்ஸின் சிந்தனையோட்டம் வளர்ந்த பின்னணியும் விரிவாகவே அலசப்பட்டுள்ளது. இன்னமும் வாசித்து முடிக்கவில்லை. 

To Make the Deaf Hear, Ideology and Programme of Bhagat Singh and his comrades, Irfan Habib, Three Essays Collective
பகத் சிங்கை வெடிகுண்டு வீசியவராகவும் இளவயதிலேயே மரணடைந்துவிட்ட ஒரு துடிப்பான இளைஞனாகவும் மட்டும் காண்பவர்களுக்கு இந்தப் புத்தகம் அளவுகடந்த வியப்பை ஏற்படுத்தும். பகத் சிங்கின் சிந்தனையோட்டம் வளர்ந்த கதையை இதில் இர்ஃபான் ஹபீப் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார். பாரதி புத்தகாலயம் நல்ல தமிழில் இதனைக் கொண்டுவந்திருக்கிறது.

Ahmedabad : Shock City of Twentieth-Century India, Howard Spodek, Orient Blackswan
அகமதாபாத் செல்வதற்கு முன்பே இந்தப் புத்தகம் கிடைத்திருந்தால் அந்நகரை புதிய கண்களைக் கொண்டு பார்த்திருப்பேன். ஒரு நகரைப் பற்றி எப்படி எழுதவேண்டும் என்பதை இதிலிருந்து தெரிந்தகொள்ளமுடியும் பல ஆண்டுகள் அகமதாபாத்தில் தொடர்ந்து வசித்த அனுபவத்தின் துணை கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்நூலில் வரலாறும் சமூகவியலும் சரியான விகிதங்களில் கையாளப்பட்டிருக்கின்றன.  


0

4 comments:

somasundaram suddhanandham said...

2013-ல் எழுத்தாளர் மருதன் படித்ததில் பிடித்த நூல்கள்,அவற்றை பற்றிய அறிமுகம்,எழுதிய எழுத்தாளர்,வெளியிட்ட நிறுவனம் என அனைத்து விபரங்களும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.புத்தக விரும்பிகள் சென்னை புத்தகத்திருவிழாவில் கிடைக்குமா என முயற்சி செய்ய ஒரு வாய்ப்பு.
sudha47@ymail.com







இராய செல்லப்பா said...

நல்ல வேளை, ஒரு தமிழ் நூல் கூட இடம்பெறவில்லை!

Ashok raj said...

பிடித்த தமிழ் புத்தகம் எது???

Ashok raj said...

உங்களுக்கு பிடித்த தமிழ் புத்தகம் எது ???