March 10, 2015

இந்தியாவின் மகள்

இந்தியாவின் மகள் பார்த்தாகிவிட்டதா என்று கேட்டபோது படபடப்புடன் பதிலளித்தார் சிந்து. 'பார்த்தேன். கோபத்தையும் எரிச்சலையும் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியவில்லை. ஒரு நாள் முழுக்க வேலை ஓடவில்லை.' ஆங்கில ஆன்லைன் செய்தி நிறுவனம் ஒன்றில் எடிட்டோரியல் துறையில் பணியாற்றிவருபவர் இவர். இந்தியாவின் மகள் ஏன் தன்னைக் கவரவில்லை என்பதற்கு அவர் சொன்ன காரணங்கள் இவை.
  1. இதில் மேற்கத்திய மீடியா ஏன் இந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறது என்று புரியவில்லை. இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கும் என்று காட்ட விரும்புகிறார்களா?
  2. இதற்கு முன்னால் யாருமே தாண்டாத எல்லைக்கோட்டையா இதில் வரும் ஆண்கள் தாண்டியிருக்கிறார்கள்? அப்படி என்ன புதிதாக இதில் வந்துவிட்டது?
  3. இதில் வரும் டிரைவரின் காதல் கதை (அல்லது பாலியல் கதை) அயல்நாட்டுப் பார்வையாளர்களைக் கவர்வதற்காகவே எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் டெல்லி சம்பவத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை.
  4. இதில் வரும் பெரும்பாலானவர்கள் சொல்லிக்கொடுத்ததைச் சொல்பவர்களாகவே தோற்றமளிக்கிறார்கள்.
  5. இந்தியா ஒரு பின்தங்கிய நாடு என்று காட்டவேண்டும் என்பதற்காகவே இதை எடுத்திருக்கிறார்கள்.
  6. என் கணவன் தூக்கிலிடப்பட்டால் நானும் குழந்தைகளும் இறந்துவிடுவோம் என்கிறார் பலாத்காரம் செய்தவனின் மனைவி. இந்த வாசகங்களுடன் படத்தை நிறைவு செய்திருக்கக்கூடாது.
  7. பின்னணி இசை, குழைந்து பேசும் வாய்ஸ் ஓவர் இரண்டும் பிடிக்கவில்லை.
  8. சேரிப் பகுதிகளைத் திரும்பத் திரும்பக் காட்டுவது எரிச்சலூட்டுகிறது. இத்தகைய பகுதிகளில் இருப்பவர்கள்தான் குற்றமிழைப்பார்கள் என்னும் மேல்தட்டு மனோபாவத்தை ஆதரிப்பது போல் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் மகளை ஏற்க மறுத்தற்கு கவிதா கிருஷ்ணன், விருந்தா குரோவர் உள்ளிட்டவர்கள் வேறு சில காரணங்களை முன்வைக்கிறார்கள். 
  1. வழக்கு நிலுவையில் இருக்கும்போது இத்தகைய பதிவுகள் வெளிவருவது சட்டப்படி சரியல்ல.
  2. கருத்து சுதந்தரத்துக்கு எல்லை உண்டு. பிரவீண் தொகாடியா முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுவதை நாம் கண்டிக்கவில்லையா?
  3. கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியின் தனிமனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன.இந்த வீடியோவால் குற்றவாளிக்குக் கிடைக்கவேண்டிய நீதி கிடைக்காமல் போகலாம்.
  4. இந்த ஆவணப் படம் சட்டப்படி எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பல குளறுபடிகள், திரை மறைவு வேலைகள் நடந்துள்ளன. 
சட்டப்படி சரியா என்னும் கேள்வி போக, இப்போது நாம் பார்த்த காரணங்களில் பெரும்பாலானவை பிரத்தியேக அபிப்பிராயங்கள். மேலே நாம் பார்த்த எதிர்ப்பாளர்கள் யாருமே இந்த ஆவணப்படத்தைத் தடை செய்யவேண்டும் என்று கோரவில்லை. எனக்குப் பிடிக்கவில்லை என்றார் சிந்து. வழக்கு முடியும்வரை காத்திருந்திருக்கலாம் என்கின்றனர் கவிதா கிருஷ்ணன் உள்ளிட்டோர்.

சிந்துவிடம் குறிப்பாக நான் இது பற்றி விவாதித்தற்குக் காரணம் பெண்களுக்கு எதிரான பிற்போக்குக் கருத்துகள் கொண்டிருப்போரைக் கடும் சீற்றத்துடன் புறந்தள்ளுபவர் அவர். கவிதா கிருஷ்ணனின் இடதுசாரி அரசியல் நிலைப்பாடு, பெண்ணியச் சிந்தனை, முற்போக்குப் பார்வை ஆகியவற்றைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன் என்பதால் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதைத் தேடிப்பிடித்து வாசித்தேன். இவை போக, இந்த ஆவணப் படத்தை எடுத்த லெஸ்லி உட்வினின் உள்நோக்கம், செயல்பாடுகள் ஆகியவற்றை கேள்விக்கு உட்படுத்தும் சில கட்டுரைகளையும் வாசிக்க நேர்ந்தது. இப்போதைக்கு நான் செய்யவேண்டியதெல்லாம் ஆவணப்படத்தைப் பார்த்து முடிப்பதுதான்.

அதற்கு முன்னால் சில வார்த்தைகள்.
  • கேத்தரின் மேயோ என்ன நோக்கத்துடன் மதர் இந்தியா எழுதினார் என்று உள்புகுந்து ஆராய்வதைவிட முக்கியமானது அவர் எழுதியது உண்மையா, பொய்யா என்பதைத் தெரிந்துகொள்வது. மேயோ குறித்த தனிப்பட்ட சர்ச்சைகளில் வெளிவந்த உண்மைகளைக் காட்டிலும்  மதர் இந்தியா முன்வைத்த உண்மைகள் வலிமையானவை என்பது என் கருத்து. இது லெஸ்லி உட்வினுக்கும் இந்தியாவின் மகளுக்கும்கூட பொருந்தும்.
  • பலரும் நினைப்பதுபோல் (குறிப்பாக, பாரதப் புதல்வர்களும் இந்துத்துவர்களும்) இந்த ஆவணப்படத்தை அனுமதிப்பதன்மூலம் இந்தியாவின் மானத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் காட்சிபடுத்தப்படும்போதும் விவாதிக்கப்படும்போதும் அல்ல; இழைக்கப்படும்போதுதான் மானம் கப்பல் அல்லது விமானம் ஏறும். அது தினம் தினம் ஏறிக்கொண்டேதான் இருக்கிறது.
  • இந்தியா இன்றளவும் ஒருநிலப்பிரபுத்துவ அல்லது அரை நிலப்பிரபுத்துவ சமூகமாகவே இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் இங்கே பெருகுவதற்கும் பெண்களை இழிவாக நினைக்கும் போக்கு பெருமளவில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் இந்தச் சமூக அமைப்பு ஒரு முக்கியக் காரணம்.
  • நிலப்பிரபுத்துவ சமூக முறை மாறாமல் தொடர்வதற்குக் காரணம்  மக்களிடம் ஊறிக்கிடக்கும் பிற்போக்கு அம்சங்கள். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிறவெறி நீடிப்பது போல் இந்தியாவில் மதவெறி (இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய) வலுவாக நீடிக்கிறது. ஆணாதிக்கம் நீடிக்கிறது. 
  • மீண்டும், பலரும் சொல்வதைப்போல், பெண்கள்மீதான வன்கொடுமைகள் பெருகுவதற்குக் காரணம் 'இந்திய அல்லது இந்து கலாசாரம்' அழிந்து வருவதல்ல; வலுவடைந்து வருவதுதான். இந்த 'இந்து அல்லது இந்திய கலாசாரம்' பெண்களை மனிதர்களாக மதிக்க நமக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. கவிதா கிருஷ்ணன் சுட்டிக்காட்டுவதைப்போல் மகள்களாக, சகோதரிகளாக, காதலிகளாக, மனைவிகளாக, தெய்வங்களாக அவர்களைப் பாவிக்க மட்டுமே  கற்றுக்கொடுக்கிறது. ஆண்களுக்குச் சமமானவர்களாக அல்ல; ஆண்களால் அரவணைக்கப்படவேண்டிய உயிர்களாக அவர்களைச் சார்ந்திருக்கவேண்டியவர்களாகச் சுருக்கிக்காட்டுகிறது. அதனால்தான், 'இந்தியாவின் மகள்' என்னும் தலைப்பையே கவிதா கிருஷ்ணன் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
  • குற்றம் இழைத்தவரின் சாதியும் மதமும் சமூக நிலையும் இங்கே முக்கியமல்ல. சாதி, மதம், இசம் அனைத்தையும் கடந்தது ஆணாதிக்க வெறி. அவர் வசிப்பது குப்பத்திலா கோபுரத்திலா என்பது முக்கியமல்ல. ஆணாதிக்க வெறி பொருளாதார நிலையைக் கடந்தது.
  • ஊர்வசி புட்டாலியாவின் The Other Side of Silence தெளிவாகச் சுட்டிக்காட்டுவதைப் போல் ஒரு பெண் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதற்குக் காரணம் பாலியல் இச்சை மட்டுமல்ல. பழிவாங்கும் வெறி, வன்மம் ஆகியவையும்கூட இத்தகைய கொடூரங்களைச் செய்யும்படி ஒருவனைத் தூண்டிவிடுகிறது. பிரிவினையின்போது பல பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டதற்குக் காரணம் அவர்கள் மாற்று மதத்தைச்சார்ந்தவர்கள் என்பது மட்டும்தான். இப்போதும்கூட வகுப்புவாத மோதல்கள் நடைபெறும்போது கூட்டாகப் பெண்களை வன்புணர்ச்சி செய்யும் கொடூரங்கள் அரங்கேறி வருவதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
  • வேறுபாடின்றி அனைத்து மதங்களும் பெண்களுக்கு எதிரானவையாக, அவர்களுடைய சுயமரியாதைக்கு எதிரானவையாக இருக்கின்றன. மத நம்பிக்கை மத வெறியாக விரிவடையும்போது பெண்கள் பலியிடப்படுகிறார்கள்.
  • நிலப்பிரபுத்துவ மனோபாவத்தில் இருந்து நம் சமூகம் விடுபடவேண்டுமானால் சாதி, மதம், ஆணாதிக்க உணர்வு உள்ளிட்ட அனைத்து பிற்போக்கு அம்சங்களில் இருந்தும் நாம் விடுபட்டாகவேண்டும். 
  • அரசாங்கம் தனி நபர்களின் தேர்வுகளில் இருந்து விலகியிருக்கவேண்டும். ஒரு மனிதனின் உணவு, உடை, கல்வி, காதல், திருமணம், பாலியல் நாட்டம், அரசியல் தேர்வு ஆகியவற்றில் அரசு தலையிடக்கூடாது. கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது.
  • எனக்குப் பிடிக்கவில்லை அதனால் ஒரு படைப்பைத் தடைசெய்யவேண்டும் என்று குரல் கொடுப்பது ஆபத்தானது. இந்தியாவின் மகளை மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணையும் மதிக்கவும் வரவேற்கவும் நாம் கற்றுக்கொண்டே தீரவேண்டும்.
அடுத்த பதிவு, ஆவணப்படத்தைக் கண்டபிறகு.

4 comments:

சரவணன் said...

///அதனால்தான், 'இந்தியாவின் மகள்' என்னும் தலைப்பையே கவிதா கிருஷ்ணன் கேள்விக்கு உட்படுத்துகிறார்.///

மிகவும் சரி. வேறு யாரும் (எனக்குத் தெரிந்து) குறிப்பிடாத சரியான விமர்சனக் கருத்து இது.

சரவணன்

எஸ் சம்பத் said...

//எனக்குப் பிடிக்கவில்லை அதனால் ஒரு படைப்பைத் தடைசெய்யவேண்டும் என்று குரல் கொடுப்பது ஆபத்தானது. இந்தியாவின் மகளை மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணையும் மதிக்கவும் வரவேற்கவும் நாம் கற்றுக்கொண்டே தீரவேண்டும்.//
மிகச் சரி

ஆழமான, கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
நானும் இன்னும் பார்க்கவில்லை. பார்த்தவுடன் விவாதிப்போம்

Anonymous said...

I just read an adverse criticism against this article by Jeyamohan in his blog. Hence, I came here.

Anonymous said...

I just read an adverse criticism against this article by Jeyamohan in his blog. Hence, I came here.