‘நான் பிபன் சந்திராவின் மாணவன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் ராகேஷ் பதப்யால். இந்த அறிமுகத்தின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளத் தவறிவிட்டேனோ என்று சந்தேகப்படுபவரைப்போல் மீண்டுமொரு முறை அழுத்தமாகச் சொன்னார். ‘பிபனின் கடைசி மாணவர்களில் ஒருவன் என்று சொல்லலாம்.’
ஜவாஹர்லால்
நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள செண்டர்
ஃபார் மீடியா ஸ்டடீஸ் பிரிவில்
பேராசிரியராக இருக்கிறார் ராகேஷ் பதப்யால். ஊடகப்
பிரிவுக்கான வகுப்பறைகளையொட்டி இவருடைய சிறிய, ஆர்ப்பாட்டமில்லாத
அறை அமைந்துள்ளது. மேஜை முழுக்க பத்திரிகைகள்,
கடிதங்கள், அலுவலகக் கோப்புகள், காகிதங்கள். அலமாரியில் புத்தகங்கள் நிரம்பியிருந்தன. ஒன்பது புத்தகங்களைச் சரியவிடாமல்
ஒன்றை மட்டும் அதிலிருந்து உருவியெடுப்பது
சாத்தியமில்லை.
ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் ஹரிஷ் கரே உரையாற்றி
முடித்திருந்தார். அவருடைய உரையைக் கேட்பதற்காகத்தான்
அன்றைய தினம் பல்கலைக்கழகம் சென்றிருந்தேன். நிகழ்ச்சியை
ஒருங்கிணைத்து, வழிநடத்திச் சென்றவர்களில் ஒருவரான ராகேஷ் பதப்யாலை
அப்போதுதான் முதல் முறையாகச் சந்தித்தேன்.
கூட்டம் முடிந்து கலையும்போது கவனமாக
என்னைக் கண்டுபிடித்து, கையசைத்துக் கூப்பிட்டு தோளில் கைபோட்டபடி தன்
அறைக்கு அழைத்து வந்துவிட்டார்.
தன் எதிரில் இருந்த இரண்டு
நாற்காலிகளில் ஒன்றில் அமர வைத்துவிட்டு
சாவகாசமாகத் தன் இருக்கையில் சாய்ந்துகொண்டு
கேட்டார். ‘சென்னையில் இருந்து வருவதாகச் சொன்னீர்கள்.
ஹரிஷ் கரே பேசப்போகிறார் என்பது
உங்களுக்குஎப்படித் தெரியும்?’
‘நேற்று
இங்கு வந்திருந்தபோது அறிவிப்பு ஒட்டியிருந்ததைப் பார்த்தேன்.’
‘ஓ. பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளில்
வெளியாட்கள் கலந்துகொள்வதில்லை. மாணவர்களுக்காகப் பிரத்தியேகமாக இத்தகைய சந்திப்புகளைத் தொடர்ந்து
நடத்தி வருகிறோம்.’
‘மன்னிக்கவும்,
அனைவரும் வரலாம் என்று அதில்
போட்டிருந்ததாக நினைவு.’
உண்மையில்
ஒரு முறையல்ல, இரண்டு,
மூன்று முறை கவனமாகப் படித்துப்
பார்த்துவிட்டு அது பொது அழைப்பு
அல்ல என்பதை உறுதிபடுத்திக்கொண்டபிறகுதான் இங்கே வந்திருந்தேன். அனுமதித்தால்
உள்ளே நுழைவது, இல்லாவிட்டால் பக்கத்து கட்டடத்துக்குத் தாவிச் சென்றுவிடுவது என்பது
திட்டம். நல்ல வேளையாக உள்ளே
அனுமதித்துவிட்டார்கள். ஆனால் ஹரிஷ் கரே
வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே
நான் அந்தக் கூட்டத்தோடு சம்பந்தப்படாத
ஓர் அந்நியன் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.
‘அது ஒரு விஷயமே இல்லை.
புதிய முகம் என்பதால் தெரிந்துகொள்வதற்காகக்
கேட்டேன். மற்றபடி இங்கே யாருக்கும்,
எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை.’
அவர் சொன்னது நூற்றுக்கு நூறு
உண்மை என்பது அங்கே நான்
கழித்த கிட்டத்தட்ட மூன்று முழு தினங்கள்
உறுதிசெய்தன. முதல் நாள் நான்
பல்கலைக்கழகம் வந்தது ஒரு கருத்தரங்கில்
கலந்துகொள்வதற்காக. இந்தியா, பிரேசில் இரு நாடுகளையும் ஒப்பிட்டு
இரு நாட்டுப் பேராசிரியர்களும் ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்து விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கம்
அது. (இது பற்றி தனியே
எழுதவேண்டும்). இதையும் இணையம் மூலமே
அறிந்துகொண்டேன். இதிலும், அனைவரும் வரலாம் என்று அழைப்பு
இல்லை. அங்கு சென்று என்னை
அறிமுகப்படுத்திக்கொண்டு அனுமதி கேட்டபோது அவர்கள்
மறுக்கவில்லை. அந்தத் துணிச்சலில்தான் மறுநாள்
ஹரிஷ் கரே நிகழ்ச்சிக்கும் சென்றிருந்தேன்.
‘இங்கே
நீங்கள் சுதந்தரமாக எங்கும் சுற்றித் திரியலாம்.
தினம் பத்து கருத்தரங்குகள் நடைபெறும்.
ஒவ்வொரு துறையிலும் இப்படி ஏதாவது ஏற்பாடு
செய்துகொண்டுதான் இருப்பார்கள். அப்படி எதுவும் இல்லாவிட்டாலும்
மாணவர்களிடம் நீங்கள் உரையாடிக்கொண்டிருக்கலாம். இந்தப் பல்கலைக்கழகத்தை
நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமானால் குறைந்தது ஒரு முழு நாள்
நீங்கள் ஒதுக்கவேண்டும். நான் இங்கேதான் இருப்பேன்.
எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். என்ன
உதவி தேவைப்பட்டாலும் கேட்கலாம். சரி, தமிழ்நாட்டில் பதிப்புலகம்
எப்படி இருக்கிறது?’
நான் பதிலளித்துக்கொண்டிருக்கும்போதே அவருடைய செல்பேசியில் அழைப்பு
வந்தது. மன்னிக்கவும் என்று செல்போனை பாக்கெட்டில்
இருந்து உருவி மேஜைமீது வைத்துவிட்டு
ஸ்பீக்கரை இயக்கிவிட்டார். வணக்கம் சார், வைஸ்
பிரஸிடெண்ட் ஆபிஸில் இருந்து பேசுகிறேன்
என்றது எதிர்முனை பெண்குரல். யாரோ ஒரு பேராசிரியரின்
பெயரைச் சொல்லி அவருடைய தொலைபேசி
எண் கிடைக்குமா என்று கேட்டார்கள். அவர்
நம்பரை நான் தருவது இருக்கட்டும்,
என் நம்பரை உங்களுக்கு யார்
தந்தது என்றார் பதப்யால். ஒரு
நிகழ்ச்சிக்காக போன மாதம்தான் உங்கள்
பல்கலைக்கழகம் வந்திருந்தோம். நீங்கள்தான் கொடுத்தீர்கள் என்றுஅந்தப் பெண் பதிலளித்ததும், ஓ
அப்படியா, சரி விரைவில் நீங்கள்
கேட்ட நம்பரை தருகிறேன் என்று
சொல்லி செல்பேசியை அணைத்தார். சத்தியமாக இவர் அந்த நம்பரைத்
தரப்போவதில்லை என்பது தெரிந்தது.
ராகேஷ்
பதப்யால் அகடமிக் வட்டத்தில் பிரபலமானவர்.
இவருடைய சமீபத்திய புத்தகம், JNU: The Making of India's National University,
1964-89. இன்றைய தேதியில் சிறப்பாக
இயங்கிவரும் வெகு சில அரசு
அமைப்புகளில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் ஒன்று.
1964ல் உருவாக்கப்பட்ட இந்தியாவின் இந்த முதன்மையான கல்வி
நிறுவனம் கல்வி போதிக்கும் ஒரு
பெரும்கூடமாக மட்டுமல்லாமல், அறிவுலக செயல்பாட்டுக்கான ஒரு
விரிவான தளமாகவும் திகழ்கிறது. ராகேஷ் பதப்யாலின் 640 பக்கப்
புத்தகம், பல்கலைக்கழகத்தின் தோற்றம், அதன்
விழுமியங்கள், செயல்படும் துறைகள், மதிப்பீடுகள் வளர்த்தெடுக்கப்பட்ட விதம் ஆகியவற்றை விவரிக்கிறது.
வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்த மாணவர்கள்
தங்களுடைய அரசியல் கருத்துகளை எப்படி
இங்கே கூர்படுத்திக்கொள்கிறார்கள் என்பதையும் ஓர் இயக்கமாக அவர்கள்
எப்படித் திரள்கிறார்கள் என்பதையும் பதப்யால் விவரித்திருக்கிறார். கூடவே, சமகால சமூக,
அரசியல் வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்திய
வரலாற்றில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வகித்துவரும்
பாத்திரம் என்ன என்பதையும் ஒருவரால்
இந்தப் புத்தகத்தின்மூலம் துல்லியமாகத் தெரிந்துகொள்ளமுடியும்.
ஹார்பர்
காலின்ஸ் வெளியிட்டுள்ள தனது புத்தகத்தை அலமாரியில்
இருந்து உருவியெடுத்துவந்து காண்பித்தார்.
‘இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு
பல்கலைக்கழகத்தை நீங்கள் பார்வையிட்டால் ஒவ்வொரு
கல்லும் உயிர்பெற்று எழுந்து வருவதை உணரலாம்.
படித்து முடித்தவுடன் உடனே எனக்கு மெயிலில்
எழுதுங்கள்.’
தமிழில்
எத்தகையபுத்தகங்கள் அதிகம் வெளிவருகின்றன என்னும்
அவருடைய கேள்விக்குப் பதிலளிக்கத் தொடங்கினேன். தமிழ்நாட்டில் செயல்படும் பதிப்பகங்களைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தினேன். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட பிறகு நிறுத்தி நிதானமாகக்
கேட்டார்.
‘ஏன் நல்ல புத்தகங்கள் குறைவாக
வருகின்றன? ஏன் மொழிபெயர்ப்புகள் அதிகம்
இல்லை? ஆய்வு நூல்கள் ஏன்
அதிகம் வெளிவருவதில்லை? பொழுதுபோக்கும் சுயமுன்னேற்றமும் எளிய அறிமுக நூல்களும்
போதும் என்று தமிழ் வாசகர்கள்
நினைத்துவிட்டார்களா?’
என்னால்
அவர் கேள்விகளுக்குப் பதிலளிக்கமுடியவில்லை. உதாரணத்துக்கு, அவருடைய ஜெஎன்யு புத்தகத்தை
மொழிபெயர்த்து கிழக்கு பதிப்பகத்தில் கொண்டுவருகிறோம்
என்று வைத்துக்கொள்வோம். அந்த 640 பக்கங்களைத் தமிழ்படுத்தினால் குறைந்தது 800 பக்கங்களுக்கு அது நீண்டுச்செல்லும். கிட்டத்தட்ட
அதே விலை வைக்கவேண்டி வரலாம்.
எவ்வளவு பேர் ஆர்வத்துடன் அதனை
வாங்கி படிப்பார்கள்? இங்கிருப்பவர்களுக்கு ஜெஎன்யு முக்கியமில்லை என்பது
பதில் என்றால், சென்னை ஐஐடியின் வரலாறோ
அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தின் வரலாறோ
எழுதவைத்து கொண்டுவந்தால் வரவேற்பு இருக்குமா?
‘ஏன் இந்த நிலை? இதை
ஏன் யாரும் ஆராயவில்லை? இத்தகைய
புத்தகங்களுக்கான தேவை இருப்பது தெரிந்தும்
ஏன் யாரும் அதற்காகப் பணியாற்றவில்லை?
வெளியிட்டால் வாங்க யாரும் இல்லை
என்று சொல்லாதீர்கள். கிட்டத்தட்ட உலகம் முழுவதிலும் இதுதான்
நிலை. வாசிப்பு வழக்கம் குறைந்துகொண்டுதான் வருகிறது.
ஆனால் அதற்காக எழுதும் வழக்கத்தைக்
குறைத்துக் கொள்ளவேண்டியதில்லை. மிக முக்கியமான, எழுதும்
ஆற்றலைக் கைவிடவேண்டியதில்லை. இதை நீங்கள் யோசிக்கவேண்டும்.
உங்கள் சூழலில்
உண்மையான பிரச்னைஎது? வாசிக்கும் ஆற்றல் இல்லாததால் அல்லது
நல்ல புத்தகங்களை எழுதும் ஆற்றல் இல்லாததா?’
இரண்டும்தான்.
ஆனால் இந்த இரண்டுக்கும் தொடர்பு
உள்ளதா? வாசிக்கும் ஆற்றலுக்கு ஏற்றாற்போல்தான் இங்கே புத்தகங்கள் உருவாக்கித்
தரப்படுகின்றனவா? சந்தையின் தேவைக்காக சரக்கு சப்ளை செய்யப்படுகிறதா?
ஆம் எனில் இதற்கு யாரைக்
குற்றம் சொல்லவேண்டும்? எழுதுபவரையா, வாசிப்பவரையா, பதிப்பாளரையா? அல்லது மூவரையுமா? அல்லது
முகம், பெயரறற்ற, உருவமற்ற சந்தையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டு நாமெல்லாம் தப்பித்துவிடலாமா? ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஏன்
துடிப்பாக இருக்கிறது அல்லது அப்படி எனக்குத்
தோற்றமளிக்கிறது என்பதற்கான விடை இதுதான். அது
சந்தைக்காக எதையும் சப்ளை செய்வதில்லை.
காட்டுச்செடிகளைப்போல் தன்னியல்புடன் சுயவிருப்பத்துடன் கட்டுப்பாடுகளின்றி சுதந்தரமாக வளர்ந்துகொண்டிருக்கிறது இந்தப் பல்கலைக்கழகம். அதனாலேயே
உயிர்ப்புடனும் அறிவு தாகத்துடனும் இருக்கிறது.
பதப்யால்
ஒரு வங்காளி. மேற்கு வங்கத்தில் வகுப்புவாதத்தின்
வரலாறு என்பது இவருடைய இன்னொரு
புத்தகம். 1943 தொடங்கி 1947 வரை, அதாவது வங்கப்
பஞ்சம் தொடங்கி நவகாளி வரையிலான
நிகழ்வுகளை இதில் அவர் ஆராய்ந்துள்ளார்.
சேஜ் பதிப்பக வெளியீடு. பெங்குவின்
புக் ஆஃப் மாடர்ன் இந்தியன்
ஸ்பீச்சஸ் இவருடைய இன்னொரு வெளியீடு.
அவர் பணியாற்றியுள்ள பதிப்பகங்களில் அவரைக் கவர்ந்தது சேஜ்.
‘இரண்டு காரணங்கள். முதலாவதாக, அகடமிக் தலைப்புகளை அதிகம்
கொண்டுவருகிறார்கள். இரண்டாவது, ஒழுங்காக ராயல்டி அளிக்கிறார்கள்.’
இரண்டாவது அழைப்பு.இந்தமுறையும் செல்பேசியை எடுத்து ஸ்பீக்கரை இயக்கி மேஜைமீது வைத்த பிறகுதான் ஹலோ என்றார். அழைத்தவர் அவர் மனைவி. கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள். சொன்னால் சொன்ன நேரத்துக்கு ஏன் உங்களால் எங்கும் கிளம்பமுடியவில்லை? உடம்பு இப்பொழுது பரவாயில்லையா? போன வாரம் போனதாகச் சொன்ன அந்தக் கடைக்கு இன்று போகமுடியுமா? இன்னாரின் விஷயம் அதற்குப் பிறகு என்ன ஆனது? கூச்சத்துடன் நான் எழுந்து நின்றுகொண்டேன். ஆனால் அவர் விடவில்லை. உஷ் என்று கை காட்டி அமரவைத்துவிட்டு தொடர்ந்து பேசிமுடித்துவிட்டுதான் ஓய்ந்தார்.
‘மனைவி. இங்கேதான் பேராசிரியராக இருக்கிறார். கொஞ்ச நேரம் பொறுங்கள். அவர் வந்ததும் அறிமுகம் செய்துவைக்கிறேன். ஒரு காபி சாப்பிட்டுவிட்டு அப்படியே கிளம்பிப்போய்விடலாம். நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?’
‘சஃபதர்ஜங். உறவினர் வீட்டில்.’
‘அங்கே எங்கே?’
சொன்னேன். ‘இருங்கள். நாங்களும் அந்த வழியாகத்தான் போவோம் என்று நினைக்கிறேன். உங்களை அப்படியே காரில் இறக்கிவிடுகிறோம்.’
‘இல்லை, பரவாயில்லை. நாளை வரும்போது உங்களை வந்து பார்க்கிறேன்.’
பலனில்லை. அப்படியே பிடித்து அமரவைத்துவிட்டார். ஐந்தே நிமிடங்களில் அவர் மனைவி வந்துவிட்டார். அறிமுகம் செய்துவைத்தார்.
மீண்டுமொருமுறை பத்யபாலின் செல்பேசிஅடிக்க மீண்டும் அதை எடுத்து வழக்கம்போல் ஸ்பீக்கரை போட்டு வழக்கம் போல் மேஜைமீது வைத்துவிட்டு, நீங்கள் பேசிக்கொண்டிருங்கள் என்று எங்களுக்குச் சைகை காட்டிவிட்டு சத்தம்போட்டு உரையாடத் தொடங்கிவிட்டார்.
பிபன் சந்திராவின் மறதி மிகவும் பிரசித்தி பெற்றது என்று படித்திருக்கிறேன். இன்று மாலை வீட்டுக்கு வாருங்கள் என்று சில மாணவர்களை அழைப்பாராம். அவர்கள் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டும்போது, என்ன இவ்வளவு தூரம், ஏதாவது முக்கியமான விஷயமா என்பாராம். நீங்கள் தான் சார் எங்களை வரச்சொன்னீர்கள் என்று அவர்கள் குரல் கொடுத்தால் ஓ, அப்படியா என்று விழிப்பாராம். தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் இயல்பாகப் பழகக்கூடியவர் என்றும் படித்திருக்கிறேன். காரை நிறுத்தி தன் மாணவர்களை ஏற்றிக்கொண்டுச் செல்வது அவருக்கு வாடிக்கை. ஆனால் பிபன் கார் என்று தெரிந்தால் மாணவர்கள் கண்டும் காணாமலும் போய்விடுவார்களாம். ஏறச்சொன்னாலும் ஏற்கமாட்டார்களாம். காரணம் கிட்டத்தட்ட தினமும் அவர் கார் பாதி நின்றுவிடும். இறங்கி எல்லோரும் தள்ளிவிடவேண்டும்.
பேசிமுடித்துவிட்டு, சரி கிளம்புவோமா என்று ஒரு புன்னகையுடன் எங்களை அவர் அழைக்கும்போது அவர் மனைவி நிதானமாகக் கேட்டார்.
‘இதைப்போல் ஸ்பீக்கர் போட்டு பேசவேண்டாம் என்று எவ்வளவுமுறை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். திரும்பத் திரும்ப ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’
அறையைவிட்டு வெளியில் வந்தபோது மெல்லிய குளிர் பாய்ந்துவந்து ஒட்டிக்கொண்டது. சில நிமிடங்கள் பேசியபடி நடந்துசென்று காரை நெருங்கினோம். கிட்டத்தட்ட இருட்டிவிட்டது. பின் இருக்கையில் பதப்யாலுடன் அமர்ந்துகொண்டேன். மெலிதான வேகத்தில் காரை ஓட்டிக்கொண்டே பேசிக்கொண்டிந்தார் அவர் மனைவி. (அவருடன் மேற்கொண்ட உரையாடலை அடுத்து எழுதவேண்டும்). திடீரென்றுகேட்டார்.
‘சற்று முன்னால் நான் உங்களிடம் பேசினேனே! அதையும் ஸ்பீக்கரிலா போட்டீர்கள்?’
நல்ல வேளையாக நான் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. பதப்யால் பதிலளிப்பதற்கு முன்னால் அவசர அவசரமான இருவருக்கும் நன்றி கூறியபடியே காரில் இருந்து இறங்கி வேகமாக நடக்கத் தொடங்கினேன்.
2 comments:
ஜே.என்.யு. இன்னும் கொஞ்சம் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள முயலலாம், குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலிலிருந்து. இப்போதே ஆப்பிரிக்க நாடுகளிலிலிருந்து பலர் வருகிறார்கள் என்றாலும் ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாட்டினரை ஈர்க்க முயலலாம். என்னைக் கேட்டால் அரசு இப்போது அமைத்துவரும் நாளந்தா பல்கலையை உருப்படவிடும் என்று தோன்றவில்லை. ஜே.என்.யு.தான் நிஜத்தில் நாளந்தா! சார்க் பல்கலைக்கழகம் என்ன மாதிரி உருவாகுமோ தெரியவில்லை.
ரசு இப்போது அமைத்துவரும் நாளந்தா பல்கலையை உருப்படவிடும் என்று தோன்றவில்லை.
why ???
Post a Comment