Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

May 10, 2009

ஈழமும் தமிழக அரசியலும்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் 3200 தமிழர்கள் இறந்துவிட்டதாக செய்தி வெளிவந்திருக்கிறது. இரண்டாயிரம் என்கின்றன வேறு சில இணையக்குறிப்புகள். தி ஹிந்து 300 மட்டுமே என்கிறது. அதுவும்கூட புலிகளின் தாக்குதலால்தானாம்.

போர் நிறுத்தம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டதாகத திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறது சன் டிவி. மக்கள் தொலைக்காட்சியிலும் ஜெயா டிவியிலும் மட்டுமே இலங்கை பற்றிய செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

ஈழத்தை கையில் எடுக்காமல் இருப்பது திமுகவின் அரசியல். ஈழத்தைக் கையில் எடுத்தது ஜெயலலிதாவின் அரசியல். இலங்கைக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர்களை சாமர்த்தியமாகத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் ஜெயலலிதா. இலங்கை அரசுக்கு எதிராக, இந்திய அரசுக்கு எதிராக கிளம்பி்கொ்ண்டிருக்கும் எதிர்ப்பலைகளைத் தனக்கான ஆதரவு அலையாக மாற்றிக்கொள்ளத் துடித்துக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றே தீருவேன் என்று ஒவ்வொரு மேடையிலும் அடித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.

கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா காந்தி, அத்வானி, மாயாவதி என்று இன்று முன்னணியில் உள்ள எந்த இந்திய அரசியல் தலைவராலும் தனிஈழம் பெற்றுத்தரமுடியாது என்பதுதான் நிஜம். தனிஈழம் அமைவதை எப்படி இலங்கை விரும்பாதோ அதேபோல் இந்தியாவும் விரும்பாது. ஒருவேளை ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தாலும் இந்தியாவின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருந்திருக்கும்.

ஈழம் குறித்த மயக்கத்தில் ஜெயலலிதா தமிழகத்தை ஆழ்த்திக்கொண்டிருக்கும் அதே சமயம், தேர்தலுக்குள் தாக்குதலை இறுதிகட்டத்துக்குக் கொண்டுசென்றுவிடவேண்டும் என்னும் முனைப்புடன் இலங்கை அரசு முன்னேறிக்கொண்டிருக்கிறது.

February 10, 2009

ஈழக்குறிப்புகள் : ஈழமும் இந்தியாவும்

1) ஒரு வேளை ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தால், இந்தியா ஈழப்போராட்டத்தை ஆதரித்திருக்குமா?

ஆதரித்திருக்காது. ஈழத்தமிழர்கள் நலன் மீது இந்தியாவுக்குத் துளி அக்கறையும் கிடையாது. அக்கறைகொள்வதால் லாபம் எதுவும் இல்லை என்பதுதான் காரணம். மாறாக, இலங்கை அரசுக்கு ஆதரவு அளிப்பது பல வழிகளில் லாபம் அளிக்கக்கூடியது. இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்வதை நியாயப்படுத்த ராஜீவ் காந்தி இன்று காங்கிராஸால் பயன்படுத்தப்படுகிறார்.

2) பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஈழம் பற்றிய இந்தியாவின் பார்வை மாறுமா?

ஈழப் பிரச்னையில் காங்கிரஸின் கொள்கைக்கும் பா.ஜ.கவின் கொள்கைக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. தவிரவும், பா.ஜ.க. அகண்ட பாரதக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் கட்சி. ஆளும் சிங்களக் கட்சியின் கொள்கை, அகண்ட இலங்கை. அந்த வகையில், நரேந்திர மோடிக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் நிறைய ஒற்றுமைகள். சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து இவர்கள் கவலைப்படமாட்டார்கள். அவர்களை அழித்தொழிக்கவே விரும்புவார்கள். பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவேன் என்று முழங்கும் பா.ஜ.க.வுக்கும் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்களர்களைக் குடியேற்றும் இலங்கை அரசுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என்ன?

3) இந்தியா இதற்கு முன்னால் பலமுறை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்திருக்கிறதே? இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் ஈழப்போராட்டத்தை அங்கீகரித்து ஆதரித்திருக்கிறார்களே? புலிகளுக்கு விசேஷ பயிற்சிகளையும் அளித்திருக்கிறார்களே? தமிழர்களின் நலன்மீது அக்கறை இல்லாமலா இவை சாத்தியமாயிற்று?

இதற்கான விடையை மன்மோகன் சிங் அரசே பல முறை தெளிவாகச் சொல்லிவிட்டது. இலங்கைக்கு இன்று நாங்கள் ஆயுதங்கள் வழங்கவில்லை என்றால் சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையை கைக்குள் போட்டுக்கொண்டுவிடும். அதற்காகவாவது நாம் இலங்கை அரசுடன் ஒத்துழைத்துதான் தீரவேண்டும். இதன் பொருள், இலங்கை மீது அதிகாரம் செலுத்த இந்தியா விரும்புகிறது என்பதுதான். உலகத்தின் பிக் பிரதராக அமெரிக்கா எப்படித் தன்னை முன்னிறுத்திக்கொள்கிறதோ, அப்படியே இந்தியாவும் தன்னை ஆசியாவின் பிக் பிரதாக முன்னிறுத்திக்கொள்ள விரும்புகிறது. வர்த்தக ரீதியிலும் (இலங்கை மார்க்கெட்டை முழுவதுமாகப் பிடித்துக்கொள்ளலாம்), ராணுவ ரீதியிலும் (படைத்தளங்கள் அமைத்துக்கொள்ளலாம்) இலங்கை முக்கியத்துவம் கொண்ட பிரதேசம். இன்னொரு நாட்டுக்கு இலங்கையை விட்டுக்கொடுக்கமுடியாது. குறிப்பாக, எதிரி நாடுகளுக்கு.

எப்படி கிடைக்கும் இலங்கை? நட்பாக இருப்பதன் மூலம். அல்லது, மிரட்டுவதன் மூலம். இரண்டையும் இந்தியா செய்து பார்த்திருக்கிறது. புலிகளையும் பிற இயக்கங்களையும் வளர்த்துவிட்டு, அவர்கள் மூலம் இலங்கையை மிரட்டி இருக்கிறது. அதனால் புலிகள் பலனடைந்தனர் என்றாலும் இந்தியாவின் நோக்கம் அதுவல்ல. கொஞ்சியும் இருக்கிறது இந்தியா. இந்தா கச்சத்தீவு என்று அன்று அள்ளிக்கொடுத்ததன் மூலம். தமிழர்கள் மீது தாக்குதல் தொடுங்கள், கண்டுகொள்ளமாட்டோம் என்னும் நிலைப்பாட்டை இன்று எடுத்துள்ளதன் மூலம். வழிமுறைகள் மாறலாம். நோக்கம் ஒன்றேதான்.

ஒருவேளை, விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை அரசாங்கத்தை முற்றிலுமாகக் கைப்பற்றி ஆட்சியமைத்துவிட்டால், இந்தியா உடனே புலிகள் மீதான தடையை விலக்கி, புலிகளை ஆதரிக்க ஆரம்பித்துவிடும். பிரபாகரனா ராஜபக்ஷேவா என்பதல்ல கேள்வி. அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

4) ஈழம் உருவாவதை தி.மு.க. ஆதரிக்குமா?

ஈழக்கோரிக்கையை ஆதரிக்கவேண்டுமானால் மத்திய அரசாங்கத்தை எதிர்த்தாகவேண்டும். தி.மு.க.வுக்கு இதில் ஆர்வம் இல்லை என்பது வெளிப்படை. யாராவது பிரிவினை கோஷம் போட்டால் ஒழித்துவிடுவோம் என்று இந்தியா முன்னர் மிரட்டியபோது, அவசரஅவசரமாகப் பெரியாரின் தனி திராவிட நாடு கொள்கையை கைகழுவியது தி.மு.க. தனிதேசக் கொள்கையை தி.மு.க. என்று்ம் ஆதரிக்காது.

(தொடரும்)

ஈழக்குறிப்புகள் : இலங்கை அரசும் சிங்களர்களும்

இலங்கைக்கு வழங்கிக்கொண்டிருந்த வானொலி சேவையை பிபிசி துண்டித்துக்கொண்டுவிட்டது. இலங்கை மீது பிபிசி வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை. சில செய்திகளை இலங்கை மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும்போது, இடையிடையே இசையை ஓடவிட்டு கெடுக்கிறார்கள். சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதே கிடையாது. ஆங்கிலம், சிங்களம், தமிழ் மூன்று மொழி நிகழ்ச்சிகளுக்கும் இதே நிலைமைதான். இலங்கை அரசுடன் இதுவரை பலமுறை பேசிப்பார்த்துவிட்டோம். பதிலில்லை. ஆகவே, சேவையைத் துண்டித்துக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

பிபிசிக்கே இந்த நிலைமை என்றால் உள்நாட்டு ஊடகவியலாளர்களின் கதி என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம். போர் காலங்களில் அரசாங்கங்கள் செய்திகளைத் தணிக்கை செய்வது வாடிக்கைதான் என்றாலும் இலங்கை அரசின் ஊடக அடக்குமுறை உச்சத்தைத் தொட்டிருக்கிறது. மிகக் கடுமையான தணிக்கை. கொலை மிரட்டல். தாக்குதல். தாதாக்களே தேவலை.

ஊடகங்களுக்கு எதிராக மூன்று வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறது இலங்கை அரசாங்கம். எதிரான செய்திகள் அனைத்தையும் அமுக்குவது முதல் வகை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான செய்திகள் எதிலும் வந்துவிடாதபடி கவனமாக இருப்பார்கள். இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளை மட்டுமல்ல இந்தியப் பத்திரிகைகளையும் தன் வயப்படுத்த இலங்கை அரசு முனைப்புடன் முயன்றுவருகிறது.

செய்திகளைத் திரித்து வெளியிடுவது இரண்டாவது வகை. புலிகள் தரப்பு இழப்புகளைப் பூதாகரப்படுத்தியும் இலங்கை ராணுவ இழப்பை சிறிதாக்கியும் வெளியிடப்படும் செய்திகள் இந்த வகைக்குள் அடங்கும். மூன்றாவது, லசந்த விக்கிரமதுங்கவுக்கு நேர்ந்த கதி. மிரட்டியும் கேட்கவில்லையா? நீக்கிவிடு.

கடந்த சில வாரங்களாக, கொழும்பிவிலும் பிற பகுதிகளில் உள்ள சிங்களர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். தமிழர்கள் மீதுள்ள அக்கறையால் அல்ல. இலங்கை அரசாங்கத்தின் போக்கு அதிருப்தி அளிப்பதால். புலிகளுடனான போரில் கொல்லப்பட்ட சிங்களர்கள் பற்றிய சரியான புள்ளிவிவரங்களை இலங்கை அரசு அளிக்க மறுத்துவருகிறது. என் கணவர் எங்கே, என் சகோதரர் எங்கே, என் மகன் எங்கே என்று கேட்டு ராணுவத் தலைமையகத்தை சிங்கள மக்கள் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சொல்கிறோம், சொல்கிறோம் என்று தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கிறது அரசு. இன்று வரை சரியான தகல்கள் வெளிவரவில்லை.

இலங்கையின் பயங்கரவாத ஆட்சிமுறையால் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் மாத்திரமல்ல. சிங்களர்களும்தான். அமெரிக்காவை எடுத்துக்கொள்ளுங்கள். அமெரிக்காவின் மேலாதிக்க வெறி இராக், ஆப்கனிஸ்தான் போன்ற அந்நிய தேசங்களை மட்டுமல்ல அமெரிக்காவையும் சேர்த்தே குட்டிச்சுவராக மாற்றியிருக்கிறது. எனவேதான், அமெரிக்காவுக்கு எதிராகச் சென்ற ஆண்டு முழுவதும் அமெரிக்கர்கள் முழுவீச்சில் போராடினார்கள். சிங்களர்கள் செய்யவேண்டியதும் இதுவேதான். இலங்கை அரசின் செயல்பாட்டை சிங்களர்கள் அம்பலப்படுத்தவேண்டும். கண்டிக்கவேண்டும். எதிர்த்துப் போராடவேண்டும்.

(தொடரும்)

ஆதாரம்

BBC suspends FM radio broadcasts for Sri Lanka
Reporters Without Borders வெளியிட்டுள்ள அறிக்கை
Sri Lanka Journalism 'under threat' பிபிசி கட்டுரை

February 2, 2009

ஈழக்குறிப்புகள் : பத்திரிகை தர்மம் -- என். ராமும் லசந்த விக்கிரமதுங்கவும்

தி சண்டே லீடரில் வெளிவந்த லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஆசிரியத் தலையங்கத்தின் தமிழ் வடிவம் இங்கே. ஜனவரி 8, 2009 அன்று காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். என்று, எவ்வாறு நிகழும் என்பதை மாத்திரம்தான் லசிந்தவால் முன்கூட்டியே ஊகிக்கமுடியவில்லை. மற்றபடி, தன் மரணத்தை அவர் எதிர்பார்த்திருந்தார். நிச்சயம் அரசாங்கம்தான் பொறுப்பாளி என்று தெளிவாக எழுதியும் வைத்திருந்தார்.

ராஜபக்ஷேவை மகிந்த என்று அழைக்கும் வெகு சிலரில் ஒருவர் லசந்த விக்கிரமதுங்க. ராஜபக்ஷேவின் ஆட்சியை தீவிரமாக விமரிசனம் செய்து அவர் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களுள் முதன்மையானவரும் அவரேதான். பெரும்பான்மையினரின் பார்வையை பதிவு செய்கிறோம் என்னும் பெயரில் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைலைகளை லசிந்த விக்கிரமதுங்க நியாயப்படுத்தவில்லை. நம் நண்பர்தானே என்பதற்காக கண்டும் காணாமலும் இருந்துவிடவில்லை. புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான போரில் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவித் தமிழர்கள்தான் என்பதை அழுத்தமாகப் பலமுறை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ராஜபக்ஷேவை கடுமையாகக் கண்டித்தும் இருக்கிறார். மிரட்டல்கள், அடிதடிகள், தாக்குதல்கள் எதுவும் அவரைத் தடுத்துநிறுத்திவிடவில்லை. எனவே கொல்லப்பட்டார்.

லசந்த விக்கிரமதுங்க விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர். ராஜபக்ஷேவை விமரிசனம் செய்ததைப் போலவே புலிகளையும் அவர் விமரிசனம் செய்திருக்கிறார். நான் எடிட்டர், நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும் என்று தன்னுடன் பணிபுரிபவர்களை லசிந்த என்றும் அடக்கி ஆட்கொண்டது கிடையாது. பத்திரிகையாளர்கள் உண்மையை பயமின்றி எடுத்துக்கூறவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. தி சண்டே லீடர் செய்தியாளர்களுக்கு அளவற்ற சுதந்தரத்தை அவர் அளித்திருந்தார்.

லசிந்த விக்கிரமதுங்கவைப் போலவே என். ராமும் ஒரு எடிட்டர். இந்தியாவின் தேசியப் பத்திரிகையாகத் தன்னைப் பிரகடனம் செய்துகொள்ளும் தி ஹிந்துவின் எடிட்டர் இன் சீஃப். என். ராமும் புலிகள் எதிர்ப்பாளர். ஆனால், என்றாவது லசிந்தவைப் போல் நாணயத்தின் இரு பக்கங்களை அவர் பார்த்திருக்கிறாரா? இலங்கை அரசாங்க சார்பு செய்திகள் தவிர்த்து வேறொன்றை அவர் இதுவரை பதிப்பித்திருக்கிறாரா? இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து ஒரு சிறிய பெட்டிச் செய்தியையாவது தி ஹிந்துவில் யாரேனும் கண்டதுண்டா?

இது தேசிய அவமானம் என்பதாக மங்களுர் பப் விவகாரம் பற்றி நீட்டியும் முழக்கியும் தலையங்கம் எழுதிய தி ஹிந்து இலங்கை ராணுவத்துக்கு இந்தியா அளிக்கும் தார்மீக ஆதவை என்றாவது சுட்டிக்காட்டி சாடியிருக்கிறதா? இலங்கை ராணுவம் போரில் சிறு முன்னேற்றம் கண்டாலும் ஆஹா வீழ்ந்தது முல்லைத்தீவு, அடுத்து கிளிநொச்சிதான் என்று கிளர்ச்சியுடன் எழுதிக்கொண்டு போகிறது தி ஹிந்து. புலிகள் இத்தோடு ஒழிந்தார்கள், இனி அவ்வளவுதான் என்று வாரத்துக்கு இருமுறையாவது செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

லெட்டர்ஸ் டு தி எடிட்டர் பகுதியிலும் கடுமையான தணிக்கை. இருபது கடிதங்கள் வெளியானால் அதில் பத்தொன்பது தி ஹிந்துவை ஆதரித்து வந்திருக்கும். ஸார், மிகவும் சரியாகச் சொன்னீர்கள். புலிகள் ஒழிக்கப்படவேண்டியவர்கள். புலிகள் ஆயுதம் ஏந்துவதால்தான் இத்தனை பிரச்னையும். ராஜபக்ஷே அப்பழுக்கற்ற தியாகி. அவர் அளிக்கும் வாய்ப்புகளை புலிகள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தமிழகத்தில் உள்ள கட்சிகள் புலிகளிடம் பேசி, ஆயுதங்களை துறக்கச் செய்யவேண்டும். மற்றபடி, தனி ஈழம் அமையும் என்று சொல்வதற்கில்லை.

சிறிதும் சளைக்காமல், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ராஜபக்ஷேவிடம் பேசி ஏதாவது மேட்டர் வாங்கி முதல் பக்கத்தில் போட்டுவிடுகிறார் என். ராம். 'தமிழர்களை நான் அவசியம் பாதுகாப்பேன். இந்தியா இனி அவர்களைப் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை. உங்கள் எல்லோரையும்விட தமிழர்கள் மீது எனக்கு அளவுகடந்த பாசமும் நேசமும் உண்டு. எங்கள் எதிரி விடுதலைப் புலிகள். அவர்கள் மீது மட்டும்தான் நாங்கள் யுத்தம் தொடுத்துக்கொண்டிருக்கிறோம். இடையில் எப்போதாவது, பை மிஸ்டேக் சில சிவிலியன்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.'

என். ராமின் பத்திரிகை தர்மத்துக்கும் லசந்த விக்கிரமதுங்கவின் பத்திரிகை தர்மத்துக்கும் ஏன் இத்தனை பெரிய வித்தியாசம்? அதற்கான காரணத்தை லசந்தவே சொல்லியிருக்கிறார். 'உயர்பதவி, புகழ், பொருள், பாதுகாப்பு அனைத்துக்கும் மேலாக ஒரு அழைப்பு இருக்கிறது. அதுதான் மனச்சாட்சி.' லசிந்த தன் மனச்சாட்சியின் அழைப்பை இறுதிவரை நிராகரிக்கவி்ல்லை.

(தொடரும்)

February 1, 2009

ஈழக்குறிப்புகள் : முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்கலாமா?

சிலர் ப்ரெயின் வாஷ் என்றார்கள். மொத்தமாக முன்கூட்டியே காசு வாங்கியிருப்பார் என்றார்கள் வேறு சிலர். இன்னும் சிலருக்கு சந்தேகம். இத்தனை சுத்தமாக முத்துக்குமாருக்குத் தமிழ் எழுத வராது, நிச்சயம் யாரோ அந்த உரையை தயார் செய்து கொடுத்திருக்கவேண்டும். வேண்டப்பட்டவர்களை ஆதரித்து, வேண்டாதவர்களைச் சாடும் வண்ணம் யாரோ இதைத் தயாரித்திருக்கவேண்டும். சிலருக்கு அக்கறை.கொளுத்திக்கொண்ட இடம் தவறு, அமெரிக்கத் தூதரகத்தில் இதை நிகழ்த்தியிருந்தால் இந்நேரம் சர்வதேச பரபரப்பு கிடைத்திருக்கும். ஒன்றுக்கும் உதவாத சாஸ்திரி பவன் முன்பாகவா தன் உயிரை எரித்துக்கொண்டிருக்கவேண்டும்?

மற்றொரு பக்கம், வீர வணக்கங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. நேற்று மாலை மக்கள் தொலைக்காட்சியில் முத்துக்குமாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச்சென்றதை காண்பித்தார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். சிங்கள அரசு ஒழிக! இந்திய அரசு ஒழிக! பிரபாகரன், முத்துக்குமார் இருவரும் இணைந்திருக்கும் படங்களை பலர் கையில் வைத்திருந்தனர். திரும்பும் பக்கமெல்லாம் புலிக்கொடி.

கனடா, நெதர்லாந்து, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளில் தமிழர்கள் வீதிகளில் இறங்கி வந்து பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கிறார்கள். முத்துக்குமார் எதிர்பார்த்ததைப் போலவே அவர் உடல் ஒரு குறியீடாக மாறியது. இந்தக் குறியீட்டை நம் அரசியல் போராட்டத்துக்குப் பயன்படுத்துவோம் என்று ம.க.இ.க அமைப்பினரும் வேறு சிலரும் கேட்டுக்கொண்டபோது அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. நேற்றே உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது.

ஏன்? ஊர்வலம் தொடர்ந்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விடும். உடல் எங்கெல்லாம் கொண்டுசெல்லப்படுகிறதோ அங்கெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிடுவார்கள். போராட்டம் தீவிரமடையும். ஏற்கெனவே சென்னையில் மாணவர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழகம் முழுவதும் இது தொடர்ந்தால், நிலைமை கைமீறிப்போய்விடும். இந்தியாவில் வேறு எந்தப் பகுதியிலும் சிறு சலனமும் இல்லாத நிலையில், தமிழகத்தில் மட்டும் இத்தனை ஆர்ப்பாட்டம் ஏன் என்று மத்திய அரசு கோபித்துக்கொள்ளக்கூடும். எனவேதான், கருணாநிதி இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். முத்துக்குமாரின் மரணத்தை யாரும் அரசியலாக்கவேண்டாம்.

பிறகு எதை அரசியலாக்குவது? ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாறிமாறி தொடுக்கும் அரசியல் யுத்தங்களையா? என்னை சொல்கிறாயே அங்கே மட்டும் என்ன வாழ்ந்ததாம் என்கிற ரீதியில் வெளிவரும் அறிக்கைகளையா?

விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்னும் பெயரில் இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாள் அவகாசம் முடிந்து, கூடுதல் தீவிரத்துடன் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன. இந்த ஆண்டு தொடங்கி இதுவரை கிட்டத்தட்ட ஐநூறு தமிழர்கள் இறந்துபோயிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். புலிகள் அல்ல பொதுமக்கள் என்று தெரிந்தேதான் கொன்றுகொண்டிருக்கிறார்கள். சந்தேகமேயில்லாமல் இது இனஒழிப்பு.

ஒன்றுமே செய்யாமல் சும்மா நேரத்தை கடத்தும் அரசாங்கத்தைக் கண்டு கொதித்துப்போய்தான் முத்துக்குமார் தீக்குளித்திருக்கிறார். அரசியல் போராட்டம் ஒன்றை என் மரணம் முன்னெடுத்துச்செல்லவேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டு விரிவான மரண சாசனத்தையும் எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறார். இதை அரசியலாக்காமல் வேறு எதை அரசியலாக்கவேண்டும்? இதற்காக அல்லாமல் வேறு எதற்காகப் போராடவேண்டும்? இது பற்றி அல்லாமல் வேறு எதைப் பற்றி பேசவும் விவாதிக்கவும் முடியும்?

முத்துக்குமாரின் மரணம் பல விஷயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசாங்கம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தமிழக அரசும். இலங்கை ராணுவம் தொடுக்கும் போரை இந்தியா ஆதரிக்கிறது. ஆகவே, தமிழகமும். மத்திய அரசாங்கத்தை எதிர்த்து தன்னால் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடமுடியாது என்பதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார் கருணாநிதி.

தமிழகம் எங்களுக்குக் குரல் கொடுக்கும் என்று இலங்கைத் தமிழர்கள் இனி நம்பவேண்டாம். எதிர்பார்க்கவும் வேண்டாம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் இந்த விஷயத்தில் கைகோர்த்துக்கொண்டுவிட்டன.

மங்களூர் கிளப் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களோடு தங்களை உடனடியாக இணைத்துக்கொள்கிற நடுத்தர, மேல்தட்டு மக்கள் இலங்கைத் தமிழர்களுக்காக அந்த அளவுக்குக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. முத்துக்குமாரின் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். பெரும்பாலானவர்கள் அடித்தட்டு மக்கள்.

(தொடரும்)