September 23, 2008

சாரு நிவேதிதாவும் மோர்க்குழம்பும்

சென்ற சனிக்கிழமை கிழக்கு பதிப்பகத்தில் நடைபெற்ற மொட்டை மாடிக்கூட்டத்தில் சாரு நிவேதிதா உரையாற்றி முடித்தபோது ஒரு விஷயம் புரிந்தது. கோணலாக எழுத மட்டுமல்ல, பேசவும் அவரால் முடியும். முடிந்திருக்கிறது.

ஒரே ஒரு உதாரணம். பணம். புகழ். இரண்டுமே வேண்டாம் எனக்கு. இப்படிச் சொல்லி முடித்த கையோடு ஓர் அங்கலாய்ப்பு. ஓரான் பாமுக்கின் புத்தகம் ஒரு லட்சம் காபி விற்றுக்கொண்டிருக்கிறது. இங்கே? சுஜாதாவின் புத்தகங்கள் குறைந்தது ஒரு லட்சம் போகவேண்டும். என்னுடையது பத்தாயிரம் போகலாம். ஆனால், 150 காபி விற்றாலே இங்கே பெஸ்ட் செல்லர் என்கிறார்கள். எத்தனை பெரிய துன்பம் இது!

துன்பம்தான். ஆனால் யாருக்கு? பணம், புகழ் இரண்டையுமே விரும்பாதவருக்கு தன் படைப்புகள் லட்சம் போகிறதா கோடி போகிறதா என்னும் வீண் விசனம் என்னத்துக்கு? ஒரு வேளை, தன் சீரிய சிந்தனைகள் பரவலாக மக்களிடம் போய் சேர்ந்தால் போதும் என்று நினைக்கிறாரோ? ஐயோ!

சென்னை ஸ்கேன் என்னும் கல்கி இணைப்பில் கோணல் பக்கங்கள் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய விமரிசனக் கட்டுரை எழுதியிருந்தேன். (அந்தப் பிரதி இப்போதைக்கு என்னிடம் இல்லை. கிடைத்தால், இங்கே பிரசுரிக்கிறேன்). அந்தக் கட்டுரையை இப்படி முடித்திருந்தேன். யாருமே பேசத்துணியாத விஷயங்களை எடுத்துக்கொண்டு விரிவாக, ஆழமாக, அக்கு அக்காகப் பிரித்துப்போட்டு விவாதித்துக்கொண்டிருக்கிறார் சாரு நிவேதிதா. மகிழ்ச்சி. ஆனால், யாருமே பேசத்துணியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஆராய்ந்து விவாதிப்பதற்கு எத்தனையோ சங்கதிகள் உள்ளன. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு மற்றவர்களை கலவரப்படுத்தும் எண்ணங்களை மட்டும் ஏன் அவர் தொடர்ச்சியாகப் பதிவு செய்யவேண்டும்?

வேறு சில நண்பர்களும் அவரை இதுபோல் கேட்டிருக்கிறார்களாம். அவர்களுக்கு சாரு அளித்த பதில் இது . நான் எதைப் பற்றி பேசவேண்டும், எதை எப்படி எழுதவேண்டும் என்று யாரும் அறிவுரை சொல்லத்தேவையில்லை. உங்களுக்கு இஷ்டம் இல்லாவிட்டால், என்னைப் படிக்காதீர்கள்.

இதே சாரு நிவேதிதா, இணையத்தளத்தில் எழுதும் பதிவர்களை உரிமையுடன் கண்டிக்கிறார். நான் ஜென் மாஸ்டர்போல. ஓங்கி ஒரு அடிஅடித்து ஒழுங்கா விளையாடு என்பேன். ஒழுங்கா ஆடு என்பேன். நிறைய பிராக்டிஸ் செய். பிறகு வா, விளையாடுவோம். Intense ஆக ஆடுங்கள். நான் கேட்பது Intensity தான். Blog-ல் எழுதுவதுபோல எழுத்தை டெமாக்ரடைஸ் பண்ணியது நல்லதுதான். ஆனால் அந்த ஆட்டத்தை போகிற போக்கில் ஆடாமல் intense-ஆக ஆடுங்கள்.

புரிகிறதா? சாரு எதைப் பற்றி எழுதுகிறார், எப்படி எழுதுகிறார் என்பதை நாம் கண்டுகொள்ளக்கூடாது. ஆனால் மற்றவர்கள் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்பதை சாரு சொல்லிக்கொடுப்பார். சரி, அதென்ன intensity? சாருவின் எழுத்தில் வெளிப்படும் intensity எப்படிப்பட்டது?

சாருவின் எழுத்துகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதலில் பொழுதுபோக்கு. (சினிமா, இசை, மது மற்றும் பெண் வகைகள்). இரண்டாவது, இலக்கியம். (லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள், ஃபோர்னோ எழுத்துகள், ஜெயமோகன் சாடல், சொந்த சிறுகதைகள், நாவல்கள்) மூன்றாவது, அரசியல். (சமூகப் பிரச்னைகள்).

கோணல் பக்கங்களில் சாரு எழுதுபவை பெரும்பாலும் முதல் வகையராவைச் சேர்ந்தவை. காரல் மார்க்ஸ், பைபிள், நமீதா, பாபா, சாய் பாபா, கமலஹாசன், தலித்தியம், புரட்சி, சீலே, ஆண்டாள், செ கெபாரா என்று எல்லாமே இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும். சொந்த அனுபவங்கள் நிறைய. வாசகர்கள் இவருக்கு உருகி உருகி எழுதிய கடிதங்கள். பதில்கள். பாரீஸ் வீதிகளையும் விலை மாதர்களையும் மது வகைகளையும் சிலாகித்து எழுதப்படும் பயண அனுபவங்கள். நல்லி குப்புசாமி செட்டியார். அந்துமணி. ஆப்பிரிக்க சினிமா. காபரே நடனங்கள். கம்யூனிஸம்.

இன்னது என்றில்லை. எழுதிக்கொண்டே போவார். ஜிலுஜிலு நடையில். தொடர்ந்து பத்து கட்டுரைகளில் கொண்டாடியதை பதினோறாவது கட்டுரையில் தூக்கிப் போட்டு மிதிப்பார். ச்சீ வேண்டாம் என்று அவர் ஒதுக்கியதை பின்னர் எடுத்து சுத்தப்படுத்தி புனிதத்தன்மை சேர்த்து ஆஹா ஓஹோ என்பார். பெரியார், தலித்தியம், நாத்திகவாதம் என்று அனல் பறக்கும் கட்டுரைகளைப் படித்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று சாய் பாபாவின் படத்தில் இருந்து விபூதி கொட்டும். கும்பிட்டுவிட்டு தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கவேண்டும்.

இரண்டாவது, இலக்கியம். ஜீரோ டிகிரியில் சில பக்கங்களை அல்லது சில வரிகளை மேலோட்டமாகப் படித்துவிட்டு அதிர்ந்து அல்லது மிரண்டு போன வாசகர்களுக்கு சாரு தன் உரையில் தெரிவித்த ஒரு செய்தி இதோ. என் எழுத்துகளை சிலர் ஃபோர்னோ என்று சொல்கிறார்கள். நான் ஃபோர்னோவுக்குப் பக்கத்தில்கூட இதுவரை போனது கிடையாது. சில எரோடிக் எலிமெண்ட்ஸ் இருக்கும். மற்றபடி, ஃபோர்னோ எழுதுவது மிகவும் கடினம். இங்கு யாருக்கும் அது எழுதத்தெரியாது.

மூன்றாவது, சமூகக் கட்டுரைகள். லத்தீன் அமெரிக்காவில் சுற்றியலைந்துவிட்டு கால் வலிக்கும்போது சிறிது ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக இந்தியா, இலங்கை, தமிழ் நாடு என்று தொட்டுச் செல்வார். இவருக்கென்று அரசியல் கருத்துகள் எதுவும் கிடையாது. இந்துத்துவாவை எதிர்ப்பார். அடக்குமுறை என்று கத்துவார். எழுத்துகளில் தணிக்கை கூடாது என்பார். அச்சமில்லை, அச்சமில்லை என்று பாடுவார். கூர்மையாகவும், பரபரப்பாகவும் எழுதி இணையத்தில் வெளியிட்ட ஓர் அரசியல் கட்டுரையை மறுநாள் டெலீட் செய்துவிடுவார்.

Intensity என்றால் தீவிரம். பலம். அதிகாரம். சாருவின் எழுத்துகளில் வெளிப்படும் inensity இவ்வளவுதான்.

ஆனால் இதே சாரு இப்படியும் பேசுகிறார். போகிற போக்கில் ஆடாமல் intense-ஆக ஆடுங்கள். ரிஸ்க் ஃபேக்டர் ஏதாவது இருந்தால் ஓடிவிடக்கூடாது. அப்போதும் விளையாடவேண்டும்.

எனில், நீங்கள் மட்டும் ஏன் ஸார் நின்று விளையாடவில்லை? நான் எழுதிய கட்டுரையைத் டெலீட் செய்யமாட்டேன் என்று சொல்லும் தில் ஏன் இல்லாமல் போனது?

ஒரு கலகக்காரனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்வதில் சாருவுக்கு அதீத ஆர்வம். என்னை எல்லோரும் திட்டுகிறார்கள், ஒரு புழுவைப் போல் பார்க்கிறார்கள், என் எழுத்தை யாரும் இங்கே கொண்டாடுவதில்லை என்று எல்லோருக்கும் தெரிந்த உண்மைகளை தனக்குச் சாதகமாகத் திருப்பிக்கொள்ளத் தெரிந்தவர்.

இவர் ஒரு போராளியும்கூட என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? கேரளாவில் பல போராட்டங்களை முன்னின்று நடத்திருக்கிறாராம் சாரு. பெப்ஸிக்கு எதிராக. கோக்குக்கு எதிராக. சந்தேகம் இருந்தால் கேரள இதழ்களைப் பிரித்து பாருங்கள். முதல் பக்கத்தில் என் புகைப்படம் வந்திருக்கிறது. சவால் விடுகிறார் சாரு. நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். அவர் வாழும் தமிழகத்தில் பல பிரச்னைகள் இருக்கும்போது, புகைவண்டி பிடித்து கேரளா சென்று அவிட புரட்சி நடத்துவது ஏன்?

நேர்மையாக இப்படி ஒப்புக்கொள்கிறார் சாரு.

இங்கே நான் அடிவாங்கினால் பிளாட்பார்மில் அடிவாங்கிவிட்டு உள்ளே போவதுபோல போகவேண்டும். கேரளாவில் நான் போராடுவது என்பது ஒரு செய்தி. அங்கே நான் ஓர் அடையாளம். என்னால்தான் லத்தி சார்ஜ் எதுவும் நடக்கவில்லை என்று அங்கு சொன்னார்கள். ஏனென்றால் என்னைப் பார்த்து போலீஸ் பயப்படுகிறது. இங்கே I am Nobody. Nobody. தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. ரவிகுமாரையே அடித்து மன்னிப்புக் கேட்டார்கள்.ஒரு எம்.எல்.ஏ.வையே அடிக்கும்போது வேறு என்ன சொல்ல? சுப்ரீம்கோர்ட் நீதிபதி தார்குண்டையே ஒரு இன்ஸ்பெக்டர் இங்கு அடித்துவிட்டார். மேதா பட்கராக இருக்கட்டும், அருந்ததி ராயாக இருக்கட்டும், தார்குண்டாக இருக்கட்டும் யாராக இருக்கட்டும் இங்கே வந்து பாருங்கள், நாங்கள் அடிப்போம். என்ன நடந்தாலும் அது இங்கே செய்தி ஆகாது. நான் தமிழ்நாட்டில் ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டால் அந்த நிகழ்ச்சி இங்கு செய்தியாக்கப்படவேண்டும். சும்மா அடிவாங்குவதில் என்ன இருக்கிறது?

சாரு போராடுவார். கொடி பிடிப்பார். அடக்குமுறை ஒழிக என்று குரல் கொடுப்பார். அடிகூட வாங்குவார். ஆனால் யாராவது டிஜிடல் காமிரா கொண்டு போய் அவரை விதவிதமாகப் படம் எடுக்கவேண்டும். மீடியா முழுவதும் (தி ஹிந்து, தெஹல்கா, முடிந்தால் நியூ யார்க் டைம்ஸ்) இந்தச் செய்தி விவாதிக்கப்படவேண்டும். சாரு, சாரு என்று தமிழகமே, இந்தியாவே குரல் கொடுக்கவேண்டும். இருக்கும் வேலைகளை ஒதுக்கிவிட்டு மனித உரிமை காவலர்கள் ஓடிவந்து சாருவின் நெற்றியில் பேண்ட எய்ட் போடவேண்டும். இத்தனையும் செய்வதாக இருந்தால், சாரு புரட்சி செய்வார். ரத்தம் சிந்துவார். வருத்தப்பட்டு நமக்காக பாரம் சுமப்பார்.

அருந்ததி ராயின் பெயரை சாரு அடிக்கடி முணுமுணுப்பது வழக்கம். அவரைப் பிடிக்குமாம். எனக்குப் பயமாக இருக்கிறது. பிடிக்கும் என்று சாரு சொல்வது அருந்ததி ராயின் எழுத்துகளையா அல்லது அவரையேவா? காரணம், அருந்ததி ராயை இவர் படித்ததாகத் தெரியவில்லை.

அருந்ததி ராய்க்கும் சாருவுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. மற்றவர்கள் விவாதிக்காத பல விஷயங்களை அருந்ததி ராய் துணிச்சலுடன் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரும் ஒரு நாவலாசிரியர். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். எழுதுவதோடு நிறத்திக்கொள்ளாமல் அனல் பறக்கப் பேசுபவர். சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக்கொள்பவர். இவர் எழுத்துகளைப் பார்த்து கோபம் அடைந்தவர்கள் அநேகம். கலகக்காரர் என்னும் முத்திரை இவருக்கு உண்டு.

இனி, வித்தியாசங்கள். அருந்ததி ராய் எழுதுவது தன் சமூகத்தைப் பற்றி. சமூகத்தில் நடைபெறும் அத்துமீறல்கள் பற்றி. மக்களை நேரடியாக பாதிக்கும் அரசியல் முடிவுகள் பற்றி. என் தேசம் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்னும் மயக்கம் இல்லை இவரிடம். பல முறை அதிகாரத்தைப் பகைத்துக்கொண்டிருக்கிறார். வழக்குகள், மிரட்டல்கள் எதுவும் இவரை எதுவொன்றும் செய்துவிடவில்லை. இரவோடு இரவாக தான் எழுதியவற்றை டெலீட் செய்யும் வழக்கமும் இல்லை இவரிடம்.

எனில், சாருவுக்கு எழுத்துத்துணிச்சலே இல்லையா என்று ஆதங்கப்படுபவர்களுக்கு ஒரு செய்தி. சாரு நிவேதிதா சமீபத்தில், ரோஜா முத்தையா நூலகம் சென்றாராம்.
சரபோஜி மன்னரின் சமையல் குறிப்புகள் அவரைப் பெரிதும் கவர்ந்துள்ளன. எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாமா என்று கேட்டபோது அது ஓர் அமெரிக்க நிறுவனத்தால் காபிரைட் செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்துகொண்டிருக்கிறார். உடனே, அவருக்குக் கோபம் வந்துவிட்டது. சரபோஜியின் சமையல் குறிப்புகளை எடுத்தாள அமெரிக்காவிடம் அனுமதி கேட்கவேண்டுமா, இதென்ன அநியாயம்?

அமெரிக்க அடக்குமுறைக்கு எதிராக சாரு செய்யவிருக்கும் காரியம் என்ன தெரியுமா? நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று துணிச்சலாக தன் வலைத்தளத்தில் சரபோஜியின் சமையல் குறிப்புகளை அடுத்தடுத்து விவரிக்கப்போகிறாராம். சாருவின் இந்த மோர்க்குழம்பு துணிச்சலை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும்.

எதைப் பற்றியும் யாரும் எப்படியும் எழுதலாம். எதைப் பற்றியும் எல்லோரும் படிக்கலாம். எனவே சாரு எழுதிக்கொண்டிருக்கிறார். எனவே, சாருவைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

11 comments:

பிரதிபலிப்பான் said...

//சாரு போராடுவார். கொடி பிடிப்பார். அடக்குமுறை ஒழிக என்று குரல் கொடுப்பார். அடிகூட வாங்குவார். ஆனால் யாராவது டிஜிடல் காமிரா கொண்டு போய் அவரை விதவிதமாகப் படம் எடுக்கவேண்டும். மீடியா முழுவதும் (தி ஹிந்து, தெஹல்கா, முடிந்தால் நியூ யார்க் டைம்ஸ்) இந்தச் செய்தி விவாதிக்கப்படவேண்டும். சாரு, சாரு என்று தமிழகமே, இந்தியாவே குரல் கொடுக்கவேண்டும். இருக்கும் வேலைகளை ஒதுக்கிவிட்டு மனித உரிமை காவலர்கள் ஓடிவந்து சாருவின் நெற்றியில் பேண்ட எய்ட் போடவேண்டும். இத்தனையும் செய்வதாக இருந்தால், சாரு புரட்சி செய்வார். ரத்தம் சிந்துவார். வருத்தப்பட்டு நமக்காக பாரம் சுமப்பார்.//


புரிகிறது அவர் பேர், புகழுக்காக ஆசைப்படாதவர் என்று.

சென்ஷி said...

ஆரம்பத்திலேந்து சரவெடிதான்.. கடைசிவரைக்கும் விடாம வெடிக்குற இந்த பட்டாசுதான் இப்போதைக்கு சூப்பர் ஹிட்டு :)

Anonymous said...

vazhimozigirEn - moththaththaiyum

இலவசக்கொத்தனார் said...

இதையும் கொஞ்சம் பாருங்க. Intensity என்பதை விட Irresponsible எனச் சொன்னதில்தான் எனக்குக் கடுப்பு. அதுவும் பொறுப்பு பத்தி சாரு பேசினது ரொம்பவே கடுப்பு.

அங்க இருந்த பதிவர்கள் அப்ப எதிர்த்துக் குரல் கொடுக்காதது எரிச்சல். அதை இன்னமும் justify செய்பவர்களைக் கண்டு பரிதாபம்.

முரளிகண்ணன் said...

அசத்தல்

பரத் said...

சரவெடி!!
super!

ச.சங்கர் said...

நல்லா திட்டியிருக்கீங்க.ஆனா நேர்மையா :)

Anonymous said...

இங்கே எழுதுவது என்பது ஒரு திறமை . ஒரு சிலர் நன்றாக கிரிக்கெட் விளையாடுவது போல. அவர் எழுத்தை போல அவரும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. சிலர் தன் திறமையை வியாபார ரீதியாக பயன்படுத்த நினைக்கலாம் இல்லையா.

ஷங்கர்

Anonymous said...

oru pakka gnaayathai thaan avar peysukiraar...

Anonymous said...

avanllamm oru aalnu neenka en ethi pathi elthuringa. he is a mental

Anonymous said...

போலிகளில் 4 வகை உண்டு:

1. அரிப்பு உள்ள போலிகள்: இவர்கள் ஒரு போலித்த‌னத்தை செய்யும் முன் திட்டமிட வேண்டும் என்ற அறிவு இல்லாதவர்கள். இந்த வகை போலிகள் ஒரு போலித்தனத்தை செய்யும் அரிப்பு ஏற்படும் போது அந்த அரிப்பிற்கு அடிமையாகி பின்விழைவுகளைப் பற்றி யோசிக்க முடியாமல் அப்போலித்தனத்தை செய்து மாட்டிக் கொள்வார்கள்.

2. திட்டமிட வக்கில்லாத போலிகள்: இவர்கள் ஒரு போலித்தனத்தை செய்யும் முன் திட்டமிட வேண்டும் என்பதை அறிந்த‌வர்கள். ஆனால் எப்படி திட்டமிட வேண்டுமோ அதை அறியாமல் மாட்டிக் கொள்கிறவர்கள்.

3. normal போலிகள்: ஊரில் உள்ள பெரும்பாலான போலிகள் இந்த வகைதான்.

4. grandmaster போலிகள்: இவர்கள் ஒரு போலித்த‌னத்தை திட்டமிட்டு செய்யும் போது பிரமாதமாய் திட்டமிட்டு செய்வார்கள். இவர்களை நாம் கண்டே பிடிக்க முடியாது. மாட்டிக் கொள்ளவே மாட்டார்கள். அதிர்ஷ்டக் குறைவினால் இவர்களாகவே மாட்டிக் கொண்டால்தான் உண்டு.

எழுத்தாளர் சாரு திட்டமிட வக்கில்லாத ஒரு போலி. மருதன், பிச்சைபாத்திரம் பிளாகின் ஆசிரியர் சுரேஷ்கண்ணன் போன்ற‌ பலரும் சாருவின் போலித்தனத்தை சுட்டிக் காட்டியுள்ளனர். மருதனாலும், சுரேஷ் கண்ணன் போன்றவர்களாலும் கூட கண்டுபிடிக்க முடியாதபடி பிரமாதமாய் திட்டமிட்டு ஒரு போலித்தனத்தை செய்யும் திறமை சாருவுக்கு இல்லை. அப்படி செய்யும் திறம் இருக்கும் ஒருவரை மருதனாலோ அல்லது சுரேஷ்கண்ணன் போன்ற‌வராலோ அல்லது வேறு யாரோலோ கூட இவ்வளவு எளிமையாக கண்டு பிடித்து விட முடியாது. இதனால் சாருவின் போலித்தனத்தை மிகத் திறமையாக கண்டுபிடித்து விட்டதாக மார்தட்டிக் கொள்ள மருதனுக்கோ அல்லது வேறு யாருக்குமோ கூட தகுதி இல்லை என்றே சொல்வேன்.

...d...