நேற்று மாலை நடைபெற்ற கிழக்கு மொட்டைமாடிக்கூட்டத்தைப் பற்றி நண்பர் ஹரன் பிரஸன்னா இங்கே விரிவாக எழுதியிருக்கிறார். யுவ கிருஷ்ணா (லக்கி லுக்) எழுதிய சுண்டி இழுக்கும் விளம்பர உலகத்தை அறிமுகம் செய்து வைத்து உரையாடினார் சோம. வள்ளியப்பன். நான் எழுதிய மால்கம் எக்ஸை வெளியிட்டவர் பா. ராமசந்திரன். த.மு.எ.ச. இயக்கத்தைச் சேர்ந்தவர்.பெற்றுக்கொண்டவர் வெங்கடேஷ்.
சமீபத்தில் பார்த்த குறும்படத்தின் கதையை விவரித்தார் பா. ராமசந்திரன். பேருந்து ஒன்றில் வெள்ளையர்கள் சிலர் ஏறுகிறார்கள். அவர்கள் அமரும் இருக்கைக்குப் பக்கத்தில் சில கறுப்பினச் சிறுவர்கள் உற்சாகத்துடன் கதை பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஐயோ தொட்டால் தீட்டு வந்துவிடுமே என்னும் பயம் வெள்ளையர்களுக்கு. முகத்தைச் சுளித்துக்கொள்கிறார்கள். சங்கடத்துடன் நெளிகிறார்கள்.
சிறுவர்களுக்கு இது தெரிந்துவிடுகிறது. இது அவர்களுக்குப் புதிதல்ல. வெள்ளையர்கள் கற்றுத்தந்திருக்கும் பாடம் இது. உன் தோலின் நிறம் கறுப்பு ஆகவே நீ இழிவானவன்.
அவமானத்தால் வாடிப்போகும் அந்த சிறுவர்கள் ஏதாவது செய்யமுடியுமா என்று பார்க்கிறார்கள். டிக்கெட் பரிசோதகர் பேருந்துக்குள் நுழைகிறார். சட்டென்று ஒரு சிறுவன், அருகில் இருந்த வெள்ளையரின் கையில் இருந்த டிக்கெட்டை பிடுங்கி வாயில் போட்டு மென்று விழுங்கிவிடுகிறான்.
எங்கே டிக்கெட் என்று பரிசோதகர் கேட்டபோது திருதிருவென்று விழித்த அந்த வெள்ளையர் கறுப்பினச் சிறுவனைச் சுட்டிக்காட்டி, அவன் சாப்பிட்டுவிட்டான் என்கிறார். நம்ப மறுத்த அந்த பரிசோதகர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகிறார். கேள்வி மேல் கேள்வி. ரசித்து ரசித்து சிரிக்கிறார்கள் சிறுவர்கள். என்னையா அவமானப்படுத்திறாய்? உனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.
மால்கம் எக்ஸின் கோபம் இந்த சிறுவர்களின் கோபத்தைப் போன்றதுதான். அடித்தால் திருப்பி அடி என்றார் அவர்.
மால்கம் எக்ஸ் தொடர்பாக எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு நான் திருப்திகரமாக பதிலளித்தேனா என்று தெரியவில்லை. மேடையில் பேசி எனக்குப் பழக்கமில்லை. திணறிவிட்டேன். ஆகவே, அந்தக் கேள்விகளைத் தொகுத்து இங்கே பதிலளிக்கிறேன்.
1 comment:
ஒரு தோழரின் தேவை வாதத்தில் வெல்லுவது. நீங்கள் கூடிய விரைவில் அதில் நிபுணத்துவம் பெறுவீர்கள். அதற்கான சாத்தியங்களை நான் கண்டேன். :-) பின்பு, யாரையும் விட்டுவைக்காதீர்கள்.
Post a Comment