January 11, 2009

நான் எடிட் செய்த புத்தகம் 4 : இந்திரா

வளைந்து கொடுக்காத உறுதியுடனும் எவருக்கும் அஞ்சாத அசாத்திய துணிச்சலுடனும் உள்ள ஒருவரை இரும்பு மனிதர் என்று அழைக்கிறோம். இந்திய அரசியல் களத்தில் இரண்டு இரும்பு மனிதர்கள் இருந்தனர். சர்தார் படேல். இந்திரா காந்தி. அதட்டி, மிரட்டி, உருட்டி பல சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்துவைத்தார் படேல். எமர்ஜென்சி கொண்டு வந்து அடிப்படை மனித உரிமைகளை ரத்து செய்து, தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள யத்தனித்தார் இந்திரா.



இந்திரா ஆட்சிகாலத்தில், பல பெண்களுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. என் அம்மாவின் பெயர் இந்திரா. துணிச்சலான பெண்ணாக இரு என்றல்ல, இந்திரா காந்தி போல் இரு என்று வாழ்த்துவார்கள். இந்திரா காந்தி இருந்திருந்தால் இந்நேரம் பாகிஸ்தானை ஒரு வழி செய்திருப்பார், அப்படிப்பட்ட தலைவர்தான் நமக்கு இங்கே தேவை என்று சமீபத்தில்கூட பலர் முணுமுணுத்து கேட்டிருக்கிறேன். புரியவில்லை. கண்ணைமூடிக்கொண்டு இப்படியெல்லாம் எப்படி கொண்டாடமுடிகிறது இந்திராவை? அவ்வளவு ஞாபகமறதிக்காரர்களா நாம்?

ஆர். முத்துக்குமார் எழுதிய இந்திராவின் வாழ்க்கை வரலாறு கிழக்கு வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்திராவின் மீது நேரடியாகக் குற்றச்சாட்டுகளை இந்நூல் முன்வைக்கவில்லை என்றாலும், அவர் இழைத்த சில தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. இந்திராவின் அரசியல் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்திய ஃபெரோஸின் ஆளுமை இப்புத்தகத்தில் வெளிப்படுகிறது.

நூலில் இருந்து ஒரு பகுதி.

1955ம் ஆண்டு. நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் ஆற்றப்போகும் முதல் உரை. அதில்அவர் எடுத்துக்கொண்ட விவகாரம் காப்பீட்டுத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள். ராம் கிருஷ்ண டால்மியா என்ற பிரபல தொழிலதிபதிரின் நிர்வாகத்தில் இருந்த பாரத் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியின் முறைகேடுகளை நாடாளுமன்றத்தில் வைத்து அம்பலப்படுத்தினார் ஃபெரோஸ். விவகாரம் வீரியமிக்கது என்பது தெரிந்ததும் உடனடியாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

துரித கதியில் விசாரணை நடந்தது. விளைவு, டால்மியா குற்றம் செய்திருப்பது நிருபிக்கப்பட்டது. வெற்றி. அற்புதமான வெற்றி. தன்னுடைய மாமனாருக்கு எதிராக. மனைவிக்கு எதிராக. தன்னுடைய குடும்பத்தைப் பிரிப்பவர்களுக்கு எதிராக. ஃபெரோஸின் இந்த முயற்சியால் காப்பீட்டுத் துறையில் அரசாங்கம் நுழைந்தது.

வெற்றி பெற்றது ஃபெரோஸ். ஆனாலும் இந்திராவால் அந்த வெற்றியைத் தாங்க முடியவில்லை. காரணம், ஃபெரோஸின் வெற்றி தன் தந்தைக்கு எதிரானது என்பதால். ஃபெரோஸை மேலும் வெறுக்கத் தொடங்கினார் இந்திரா.

1956ம் ஆண்டு. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி உறுப்பினராக இந்திராவைத் தேர்வு செய்வது என மூத்த தலைவர்கள் முடிவு செய்தனர். முக்கியமாக, லால் பகதூர் சாஸ்திரி. கட்சிக்குள் அதிகாரம் வாய்ந்த பதவி. ஆகவே, அதனை நியமன முறையில் அடைவதில் இந்திராவுக்கு விருப்பமில்லை.

தேர்தல் அறிவிக்கப்பட்டது. உறுப்பினர்களின் ஏகபோக ஆதரவோடு காரியக் கமிட்டி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் இந்திரா. இதனையடுத்து தேர்தல் பிரசாரம், கட்சி வளர்ச்சிப் பணிகள் என்று தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் இந்திரா. இதற்கு நேர்மாறாக ஃபெரோஸ் தாரகேஷ்வரி சின்ஹா, மஹ்முனா சுல்தானா, சுபத்ரா ஜோஷி என்று பல பெண்களுடன் வெளிப்படையாகப் பழக ஆரம்பித்தார்.

விஷயம் வெளியே கசிந்து அதன்மூலம் நேரு அவமானப்பட நேரிடுமே என்று ஃபெரோஸ் துளியும் கவலைப்படவில்லை. அந்த சமயத்தில் இப்படி ஒரு செய்தி. அல்லது வதந்தி.

‘இந்திராவுக்கும் மத்தாயுக்கும் ரகசிய உறவு.’

2 comments:

Anonymous said...

Interesting quote. Will certianly buy the book

மாலன் said...

தந்தைக்கும் கணவருக்கும் இடையில் - இருவரின் EGOவிற்கும் என வாசிக்க-மாட்டிக் கொண்டு திண்றும் பல இந்தியப் பெண்களில் ஒருவராகத்தான் இந்திராவும் இருந்தார். இந்திரா பற்றி முன்பு நான் கல்கியில் ஒரு குறுந்தொடர் எழுதியிருந்தேன். அதில் அதை விவாதித்திருக்கிறேன். நேருவின் ம்றைவிற்குப் பின்னரே இந்திரா தன் சுயத்தை கண்டெடுத்தார்
மாலன்