February 22, 2009
கெரில்லாக்கள் எப்படி உருவாகிறார்கள்?
ஒரு கெரில்லா இயக்கத்தை ஆரம்பிப்பது சிரமமானது. அதைவிட சிரமமானது இயக்கத்தை தொடர்ந்து நடத்துவது. தொடர்ந்து நடத்துவதைக் காட்டிலும் சிரமம் தரக்கூடியது புரட்சி நடத்தி வெற்றி பெறுவது. வெற்றி பெறுவதைக் காட்டிலும் சிரமமானது எது தெரியுமா? வெற்றிக்குப் பிறகும் புரட்சியைத் தொடர்வது.
The Battle of Algiers என்னும் ஃபிரெஞ்சுத் திரைப்படத்தில், FLN (National Liberation Front) இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் சக போராளியிடம் கூறும் வாசகம் இது. இன்று காலை, யுடிவி தொலைக்காட்சியில் இந்தப் படம் ஒளிபரப்பப்பட்டது. ஆக்கிரமிப்பு அரசாங்கத்துக்கும் (பிரான்ஸ்) கெரில்லா போராளிகளுக்கும் (FLN) இடையில் நடைபெறும் யுத்தங்களின் தொகுப்பே இப்படம். நவம்பர் 1954ல் ஆரம்பித்து டிசம்பர் 1960 வரை அல்ஜீர்ஸில் (அல்ஜீரியாவின் தலைநகரம்) நடைபெற்ற போராட்டங்களை கண்முன் நிறுத்துகிறது இந்தப் படம்.
1830ல் ஃபிரெஞ்சுப் படை அல்ஜீர்ஸை நெருங்கியது. நகரம் சூறையாடப்பட்டது. பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார்கள். மசூதிகள் தரைமட்டமாக்கப்பட்டன. ஃபிரெஞ்சுக் கொடியை பறக்கவிட்டு வெற்றி வெற்றி என்று ராணுவத்தினர் கொண்டாட ஆரம்பிப்பதற்குள், பாரீஸில் பத்தாம் சார்லஸ் மன்னர் தூக்கியெறியப்பட்டிருந்தார். அவர் உறவினர் லூயி ஃபிலிப் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். ராணுவத்தினருக்குக் குழப்பம். இப்போதுதான் அல்ஜீரியாவை சுற்றிவளைத்திருக்கிறோம். இந்த நேரம் பார்த்தா ஆட்சி மாறவேண்டும்? பாரீஸில் பெரிய அளவில் விவாதம் கிளம்பியது. அல்ஜீரியாவை என்ன செய்வது? ஆக்கிரமிக்க வேண்டாம் விலகிவிடலாம் என்றே பலரும் அபிப்பிராயப்பட்டனர். எதற்கு வம்பு? ஆக்கிரமிப்பைத் தொடங்கிய முந்தைய மன்னரை மக்கள் தூக்கியடித்துவிட்டனர். அதே முடிவை நாமும் எடுத்தால் ஆபத்து அல்லவா?
எதிர்பாராத வகையில் புதிய மன்னர் அல்ஜீரிய ஆக்கிரமிப்பைத் தொடரலாம் என்றே முடிவு செய்தார். இப்போதுதான் நுழைந்திருக்கிறோம், உடனே விலகினால் நமக்குத்தான் சேதம் அதிகம் என்று வியாக்கியானம் கொடுத்தார் மன்னர். ராணுவத்தைத் திரும்பப்பெற்றுக்கொண்டால் நாளை ஊர், உலகம் என்ன சொல்லும்? சுண்டைக்காய் அல்ஜீரியாவிடம் பயந்து பின்வாங்கிவிட்டோம் என்று ஏளனம் செய்யாதா? மாமன்னர் நெப்போலியன் ஆண்ட மாபெரும் ஃபிரெஞ்சு சாம்ராஜ்ஜியத்துக்கு அவமானத்தைப் பெற்றுத்தரலாமா? ஆகவே, எனதருமை மக்களே, இந்த ஆக்கிரமிப்புக்கு உங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள். 1834ல் பிரான்ஸ் அல்ஜீரியாவை முறைப்படி (என்றால் முறையற்ற முறையில்) தனது காலனியாக இணைத்துக்கொண்டது. அப்போது அல்ஜீரியாவில் இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மில்லியன்.
இந்தப் பின்னணியில் விடுதலைக்கான வேட்கையை மக்களிடையே தூண்டிவிடும் காரியத்தில் இயங்குகிறது எஃப்.எல்.என். இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடத்திவைப்பதில் ஆரம்பித்து மக்களுக்குப் பாதுகாப்பு தருவதுவரை பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். மாட்டிக்கொண்டால் கில்லடினுக்குத் தலையைக் கொடுத்துவிடவேண்டும் என்பதால் பதுங்கிப் பதுங்கிதான் இயங்கிக்கொண்டிருக்கிறது இக்குழு.
தகுந்த இளைஞர்கள் தேடிப்பிடிக்கப்படுகிறார்கள். சிறுவர்கள் உளவு கண்டறிந்து சொல்கிறார்கள். வெள்ளை முக்காடு அணிந்த பெண்கள் ஆயுதங்கள் கடத்துகிறார்கள். தாக்குதல்கள் ஆரம்பிக்கின்றன. யாரைக் கொல்லவேண்டும் என்பதை தலைமை முடிவு செய்யும். தனியாக அகப்படும் ஃபிரெஞ்சு ராணுவ வீரர்கள் முதலில் பலியாகிறார்கள். நகரம் முழுவதும் படுகொலைகள் ஆரம்பமாகின்றன.
ஃபிரெஞ்சு ராணுவம் நகரத்தை சுற்றி வளையம் ஒன்றை ஏற்படுத்துகிறது. ராணுவத்தினர் குவிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு தெருமுனையிலும் பாதுகாப்பு அரண். பரிசோதனை இல்லாமல் ஒருவரும் தெருவைக் கடக்கமுடியாது. கெரில்லா குழு புதிய வியூகம் ஒன்றை அமைக்கிறது. கொல்லும் வேலை ஒருவருக்கு அளிக்கப்படும். பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே துப்பாக்கியை மறைத்துவைக்கும் பணி இன்னொருவருக்கு. பரிசோதனை முடிந்து வெளியே வரும் நபருக்கு துப்பாக்கியைக் கொண்டுபோய் சேர்க்கும் வேலை மூன்றாவது நபருக்கு. கொல்லப்படும் ஃபிரெஞ்சு வீரரிடம் இருந்து ஆயுதம் பறிமுதல் செய்யப்படுகிறது.
அடுத்த கட்டம், வெடிகுண்டு தாக்குதல். குண்டுகள் வைக்கும் பணி பெண்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. நீளமான தலைமுடியைக் கத்தரித்துக்கொண்டு, உதட்டுச்சாயம் பூசிக்கொண்டு, பிரெஞ்சுப் பெண்களைப் போல் குட்டைப் பாவாடை, மேல் சட்டை அணிந்துகொண்டு தோள்பையுடன் கிளம்புகிறார்கள் பெண்கள். பையில் குண்டு. ஒருவர் விமான நிலையத்தில் பையைக் கொண்டுபோய் வைக்கிறார். இன்னொருவர், மதுபான விடுதியில். மூன்றாமவர், சந்தையில். மூன்றும் அடுத்தடுத்து வெடிக்கின்றன. பிரெஞ்சு மக்கள் அதிக அளவில் கொல்லப்படுகிறார்கள்.
கெரில்லாக்கள் எதிர்பார்த்தபடியே அல்ஜீர்ஸீல் வசிக்கும் ஃபிரெஞ்சு மக்கள் கொந்தளிக்க ஆரம்பிக்கிறார்கள். உங்களை நம்பித்தானே இங்கே குடிபெயர்ந்தோம். எங்கள் உயிருக்கு உங்களால் உத்தரவாதம் அளிக்கமுடியாதபோது நாங்கள் ஏன் இங்கே இருக்கவேண்டும்? பாரீஸிலும் மக்கள் கேள்விகேட்க ஆரம்பிக்கிறார்கள். பிரெஞ்சு அரசாங்கத்துக்கு அதிருப்தி. கூடுதலாக, எரிச்சல். ஒரு காலனியை கட்டிக்காப்பது லேசான செயல் அல்ல என்பதை அவர்கள் உணர்கிறார்கள். ஆனாலும், பிடிவாதமாக கூடுதல் துருப்புகளை அனுப்புகிறார்கள். தீவிரவாதிகளை உடனே நசுக்குங்கள். விடுதலைப் போராட்டத்தை முடக்குங்கள்.
மூர்க்கத்துடன் எஃப்.எல்.என் தலைமையைத் தேட ஆரம்பிக்கிறது ஃபிரெஞ்சுப் படை. குத்துமதிப்பாகப் பலரை பிடித்துச்சென்று சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறார்கள். சொல்லு, எங்கே உன் தலைவர்? உங்கள் நபர்கள் எங்கே மறைந்திருக்கிறார்கள்? மின்சாரம் பாய்ச்சுகிறார்கள். தலைகீழாக நிற்கவைத்து அடிக்கிறார்கள். உடலில் துளை போடுகிறார்கள்.
இரு தரப்பினருக்கும் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருகின்றன. மறைவிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது தலைமை. நான்கைந்து பேரே இறுதியில் எஞ்சுகிறார்கள். என்னை விடுங்கள் நான் சென்று தாக்குகிறேன் என்று ஒரு போராளி கண்கள் சிவக்க சொல்லும்போது, மூத்தவர் அவரைச் சாந்தப்படுத்துகிறார். நாமும் உயிருடன் இல்லாவிட்டால் இயக்கம் அழிந்துவிடும். தலைவர்கள் என்பதற்காக அல்ல, இயக்கத்துக்காகவது நாம் நம்மைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்.
கடுமையான அடக்குமுறையால் 1860ல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். இயக்கம் செத்துப்போகிறது. அப்பாடா கெரில்லாக்கள் ஒழிந்தார்கள் என்று நிம்மதியடைகிறது ராணுவம். இரண்டு ஆண்டுகள் அல்ஜீரியாவில் சிறு சலனமும் இல்லை. 1962ல் மீண்டும் கலகம் தொடங்குகிறது. திகைத்து நின்றது பிரான்ஸ். முதல் கல்லை வீசியவர்கள் யார் என்று தெரியவில்லை. பெண்கள் தெருவில் இறங்கி கூச்சல்போட்டது எப்படி என்று தெரியவில்லை. சுதந்தரம் வேண்டும், ஃபிரெஞ்சுப் படையே வெளியே போ என்ற சிறுவர்களும் சிறுமிகளும் எப்படி கோஷமிட்டார்கள் என்று தெரியவில்லை. சட்டையை, கந்தல் துணியை, பர்தாவை கிழித்து, தேசியக்கொடிகளை உருவாக்கிக்கொண்டார்கள். முன்வரிசையில் இருந்தவர்கள் செத்து விழும்போது, அடுத்து வரிசை மக்கள் கொடியை ஏந்தியபடி முன்னால் வந்து நின்றார்கள். டாங்கிகளை உருட்டிக்கொண்டு வந்தது ராணுவம். விமானங்களை தலைக்கு மேலே பறக்கவிட்டு பயமுறுத்தியது. கண்டவுடன் சுட உத்தரவு போட்டது. முடியவில்லை. இனி தாங்காது என்னும் நிலையில் ஜூலை 5, 1962ல் ஃபிரான்ஸ் அல்ஜீரியாவைவிட்டு ஓடிப்போனது.
கறுப்பு வெள்ளையில் ஓடும் இந்தப் படம் 1966ல் வெளிவந்தது. திரைக்கதைக்காகவும் யதார்த்தமான பாத்திரப் படைப்புக்காகவும், காட்சியமைப்புகளோடு கலந்து நிற்கும் இசைக்காகவும் இன்றுவரையில் பெரிதும் சிலாகிக்கப்படுகிறது இப்படம். மேம்போக்காகப் பார்த்தால் இது கெரில்லா போராளிகளுக்கு ஆதரவான படம் போல் தோன்றலாம். உண்மை அதுவல்ல. சாகஸக்காரர்களாகவோ கதாநாயகர்களாகவோ எஃப்.எல்.என் இயக்கத்தினர் காண்பிக்கப்படவில்லை. அதே போல், ஃபிரெஞ்சு ராணுவத்தினரையும் வில்லன்களாக உருமாற்றவில்லை இப்படம். அல்ஜீர்ஸ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களையும் சித்திரவதைகளையும் ஏற்றுநடத்தும் ஃபிரெஞ்சு உயர் கமாண்டர் சாந்தமான முகபாவத்துடன் காட்சியளிக்கிறார்.
தீவிரவாதிகளைக் கொல்கிறோம் என்னும் பெயரில் அப்பாவி மக்களைக் கொல்வது, சித்திரவதை செய்வது தவறில்லையா என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது அந்த அதிகாரி அமைதியான குரலில் அளிக்கும் பதில் இது. போரில், சரி தவறு என்று எதுவும் இல்லை. சித்திரவதை செய்வதை நம் சட்டம் அனுமதிப்பதில்லை என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். நாங்கள் செய்வது விசாரணைதான். அதில் சிலர் இறக்க நேரிடலாம். ஒன்றும் செய்வதற்கில்லை. உங்களுக்கு வெற்றி வேண்டுமானால் எங்களை நச்சரிக்காமல் இருங்கள். வழிமுறைகள் பற்றி கவலைப்படவேண்டாம்.
கெரில்லாக்களின் நீதியும் இதுவேதான். ஆக்கிரமிப்பாளர்கள் ஆயுதம் ஏந்துவதால்தான் நாங்களும் ஆயுதம் ஏந்துகிறோம். அவர்கள் எங்களை மட்டும் கொல்வதில்லை. எங்கள் மக்களையும் சேர்த்தே கொல்கிறார்கள். நாங்கள் எங்கள் எதிரிகளை மட்டும் கொல்வதில்லை. எதிரி தேசத்து மக்களையும் சேர்த்தேதான் கொல்கிறோம். எங்கள் போராட்ட முறையை எங்கள் எதிரிகளே தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஆக்கிரமிப்பாளர்கள் மறைவதில்லை. ஆகவே, கெரில்லாக்களும்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
கொரில்லாவா? இல்லை, கெரில்லா தானா?
சரவணகுமரன், கெரில்லா என்பதே சரி. ஆங்கிலத்தில், Guerrilla. மூலம், ஸ்பானிஷ்.
நல்ல பதிவு, தோழர் மருதன்.
19 ம் நூற்றாண்டில் அல்ஜீரியாவை பிரான்ஸ் தனது காலனியாக்கி இருந்தது. ஆனால் பல வருடங்களின் பின்னர் (இப்போது சரியாக ஞாபகமில்லை) அதனை தனது மாகாணமாக அறிவித்திருந்தது. தென் ஆப்பிரிக்கா போல அல்ஜீரியாவில் பிரெஞ்சு மக்கள் சென்று குடியேறி வாழ்ந்து வந்தனர். FLN இயக்க தலைவர்கள் அனைவரும் பிரான்ஸில் கல்வி கற்ற தலைமுறையை சேர்ந்தவர்கள். FLN ஒரு தேசியவாத அமைப்பு.
மருதன், இதை வாசிக்கும்போது எல்.டீ.டீ.ஈ. இயக்கம் நினைவுக்கு வந்தது. புலிகளை முற்றாக அழித்தாலும் தமிழர்களின் போராட்டம் முற்றுபெறாது. இன்றில்லாவிட்டாலும் தமிழீழம் நிச்சயம் கிடைத்தே தீரும்.
Is this movie available in DVD?
மிஸ் செய்துவி்ட்டேன். மீண்டும் எப்போது படத்தை ஒளிபரப்புவார்கள்? சிடி கிடைக்குமா? தகவல் சொல்லுங்களேன்.
உலகம் முழுவதும் இந்தப் படம் பிரபலம். நிச்சயம் டிவிடியில் கிடைக்கும்.
Post a Comment