March 21, 2009

குற்றமும் தண்டனையும்


திடீரென்றுதான் அந்த எண்ணம் வந்தது. முதலில் பயமாக இருந்தாலும் யோசித்துப் பார்த்தபோது அதிலுள்ள நியாயம் புலப்பட்டது. உபயோகமற்ற பொருளை என்ன செய்வோம்? விசிறிதானே எறிவோம்? அப்படி எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். எந்த பொருளுமே இருப்பதற்கான நியாயத்தை வெளிப்படுத்தவேண்டும். அது மேஜையாக இருந்தாலும் சரி, மைப்புட்டியாக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி. பலனில்லை என்னும்போது அதன் இருப்பு அர்த்தமற்றதாகிவிடுகிறது. நீக்கிவிடவேண்டியதுதான்.

இந்த மூதாட்டியால் யாருக்காவது துளி பிரயோஜனமாவது உண்டா? இவரால் நான் பலனடைந்தேன் என்று ஏதாவது ஒரு ஜீவன் இதுவரை சொல்லியிருக்கிறதா? எதற்கு இவருக்கு ஒரு வீடு? எதற்கு சொத்துக்கள்? எதற்கு அழகிய போர்வைகள், உடைகள், மரச் சாமான்கள், விலைமதிப்பற்ற ஆபரணங்கள்? எதற்காக, யாருக்காக இவர் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்? இந்த வயதில் எதற்காக வட்டிக்குப் பணம் கொடுக்கிறார்? இன்னும், இன்னும் என்று எதற்காக வெறியுடன் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்? ராஸ்கோல்நிகோவ் ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தான். கொன்றுவிடலாம். தவறேயில்லை.

படிப்பு கைகூடவில்லை. துரத்திவிட்டார்கள். செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள ஒரு எலிப்பொந்தில் வாகை. வாழ்கிறேன் என்று சொல்லமுடியாது. உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆகவே, இன்னும் சாகவில்லை. கையில் காசில்லை. காசில்லாத மனிதருக்கு வாழ்வின் வசந்தங்கள் தெரிவதில்லை. வறுமையும் பிணியும் வலியும் மட்டுமே வந்து சேர்கின்றன. வெறுப்பும் வெறுமையும்கூட. வயிறு பசித்தாலும், உடல் சுணங்கினாலும் மூளை சும்மாயிருப்பதில்லை. தன் பாட்டுக்கு யோசித்துக்கொண்டிருக்கிறது. அதன் விளைவுதான் இந்த திடீர் யோசனை.

Crime and Punishment நாவலுக்கான கதையை ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி வளர்த்தெடுத்தபோது, அவர் ராஸ்கோல்நிவோவைப் போலத்தான் இருந்தார். கடித்துத் தின்னும் வறுமை. கையில் இருந்த பணம் சூதாட்டத்தில் கரைந்துபோய்விட்டது. கடன் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தது. விற்பதற்கோ அடமானம் வைப்பதற்கோ வீட்டில் எதுவும் இல்லை. வீடே இல்லை. நல்ல உணவு சாப்பிட்டு நாள்கள், வாரங்கள் ஆகிவிட்டிருந்தன. இறந்துபோன சகோதரின் குடும்பத்துக்குச் செய்துகொண்டிருந்த பண உதவியை தொடரமுடியாத நிலை.

கதையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் தஸ்தயெவ்ஸ்கி. தி ரஷ்யன் மெஸெஞ்சர் என்னும் இலக்கிய ஏட்டில் தொடர்ந்து பன்னிரண்டு அத்தியாயங்களில் எழுதி முடித்தார். இது நடந்தது 1866ம் ஆண்டு. தொடர் முடிந்ததும், புத்தகமாகவும் வெளிவந்தது. அத்தோடு அந்த நாவலை மறந்துவிடமுடியவில்லை தஸ்தயெவ்ஸ்கியால். எடுத்து வைத்துக்கொண்டு சில அத்தியாயங்கள் சேர்த்தார். செழுமைப்படுத்தினார். அங்கே, இங்கே என்று நிறைய திருத்தினார். சில பகுதிகளை கிழித்துப்போட்டுவிட்டு மீண்டும் எழுதினார். எழுதியவற்றை கொண்டுபோய் எரித்தார். மீண்டும் எழுதினார். ஒரு வழியாக நாவல் முழுமையடைந்தது.

ராஸ்கோல்நிகோவ் தன் முயற்சியில் வெற்றி பெறுகிறான். அந்த மூதாட்டி கொல்லப்படுகிறார். வெளியேறும் சமயம் பார்த்து, கொல்லப்பட்டவரின் சகோதரி அறைக்குள் நுழைந்துவிடுகிறார். யோசிக்கவேயில்லை ராஸ்கோல்நிகோவ். போடு! ஒரு கொலைக்குப் பதிலாக இரு கொலைகள். பாதகமில்லை என்றுதான் உள்மனம் இப்போதும் சொல்லியது.

தன் அறைக்கும் திரும்பிவிடுகிறான் ராஸ்கோல்நிகோவ். அமைதி, அமைதி, அமைதி! பொறு மனமே பொறு. ஏன் இப்படி உன் கைகள் நடுங்குகின்றன? ஏன் தடதடவென்று இதயன் அடித்துக்கொள்கிறது? பயந்துவிட்டாயா? ராஸ்கோல்நிகோவ் நீ மெய்யாகவே பயந்துவிட்டாயா? ஆனால், ஏன்? தேவையற்ற பொருள்களைதானே நீ நீக்கியிருக்கிறாய்? அதன் மூலம் உலகுக்கு நன்மைதானே செய்திருக்கிறாய்? நன்றாக ஆழ அகல யோசித்து எடுத்த முடிவுதானே இது? பின் ஏன் இத்தனை சங்கடம்?

ஐயோ, பார் உன் முகமெல்லாம் வியர்த்துகிடக்கிறது. கை, கால், கன்னம், தொடை என்று அங்கம் அங்கமாக நடுங்குகிறது. ராஸ்கோல்நிகோவ் ஓடிச்சென்று ஒரு போர்வைக்குள் தஞ்சம் கொள்கிறான். கண்களை இறுக மூடிக்கொள்கிறான். தலையைத் தன் கைகளால் பிடித்துக்கொள்கிறான். உணவு இல்லை. நீர் அருந்தவும் முடியவில்லை. உடைகளை மாற்றிக்கொள்ளவும் தோன்றவில்லை.

புகையாக உருவங்கள் கண்முன் தோன்றி மறைகின்றன. ஏதேதோ நினைவுகள் கல் வீசப்பட்ட குட்டையாக கலங்கி கலங்கி அலைகழிக்கிறது. நான் எங்கே இருக்கிறேன்? அந்த மூதாட்டி ஏன் அடிக்கடி என் அறைக்குள் வரவேண்டும்? இந்த அறை உலகின் எந்த மூலையில் இருக்கிறது? என் கை, கால்களே ஏன் அசைக்கவும் முடியவில்லை? காதோடு வந்து என்னிடம் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பது யார்? யாருடைய குரல் அது? ஏன் என்னை அது கொல்கிறது?

துப்பறியும் அதிகாரி ஒருவர் ராஸ்கோல்நிகோவை சுற்றிச்சுற்றி வருகிறார். நேரடியாக அந்தக் கொலைகளைப் பற்றி அவர் பேசுவதில்லை என்றாலும் ராஸ்கோல்நிகோவ் உள்ளுக்குள் ஒவ்வொரு விநாடியும் உடைந்துபோகிறான். எல்லோரும் என்னை சந்தேகிக்கப்படுகிறார்கள். என்னை சிக்கிவிடப் பார்க்கிறார்கள். என்னை தண்டிக்க விரும்புகிறார்கள். காய்ச்சல் மீண்டும் மீண்டும் அவனைப் படுக்கையில் சாய்க்கிறது.

ஒரு கதாபாத்திரத்தின் விசித்திரமான மனநிலையை இந்த அளவுக்கு நுட்பமாக ஆராய்ந்த இன்னொரு நாவல் இல்லை. மனோதத்துவ ஆராய்ச்சியை மிகத் திறமையுடனும் துல்லியமாகவும் நிகழ்த்திக்காட்டிய நூலும் இதுவேதான். அந்த வகையில், உலக இலக்கியங்கள் அனைத்திலிருந்தும் இந்நூல் தனித்து நிற்கிறது.

சரி, கதையின் முடிவு என்ன? இறுதிவரை ஒருவரும் ராஸ்கோல்நிவோவைச் சந்தேகிக்கவில்லை. ஆனாலும், இனி ஒரு நொடியும் தாங்க இயலாது என்னும் நிலையில் தன் தலையை இரு கரங்களாலும் அழுத்திப்பிடித்தபடி நரம்பு தெறிக்கக் கத்துகிறான் ராஸ்கோல்நிகோவ். ’ஆமாம், ஆமாம், ஆமாம். நான்தான் அந்தக் கொலைகளைச் செய்தேன். போதுமா?’

(கல்கியில் வெளிவந்த என் கட்டுரை)

4 comments:

Anonymous said...

எப்போதோ படித்த புத்தகம். அழகிய நடையில் அறிமுகம் செய்திருக்கிறீர்கள் மருதன். மீண்டும் படிக்கும் ஆவலை தூண்டுகிறது. பரணில தேடவேண்டும் :-)

butterfly Surya said...

நல்ல அறிமுகத்திற்கு நன்றி மருதன்.

வாழ்த்துகள்.

Anonymous said...

தமிழிலேயே இந்தப் புத்தகம் உண்டு.

எம்.ஏ.சுசீலா said...

எம்.ஏ.சுசீலா
திரு மருதன் அவர்களுக்கு , வணக்கம். தங்கள் பதிவைக் கண்டேன். என் தமிழ் மொழிபெயர்ப்பில்- அண்மையில் மதுரை பாரதி புத்தக நிலைய வெளியீடாகக் குற்றமும் தண்டனையும்(முழுமையாக) வெளிவந்திருக்கிறது. பார்த்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
தங்கள் கட்டுரைகளை ஆர்வமுடன் படிக்கிறேன். அரசியல் கட்டுரைகள் நடுநிலையோடு சிறப்பாக உள்ளன.வாழ்த்துக்கள்.
என் வலைக்கும் வருகை புரிய அழைக்கிறேன்.
http://www.masusila.blogspot.com