March 4, 2009

அரசியலின் கதை : ஐந்து


’உங்கள் மீது எந்த தவறும் இல்லை, நீங்கள் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இப்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?’ அந்த என்.டி.டி.வி. நிருபர் உமா குரானாவிடம் ஒய்யாரமாகக் கேட்ட கேள்வி இது. சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு, உமாவிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி இதுவே. ஆனால், உமா குரானாவால் இதற்குத் தெளிவான ஒரு பதிலை சொல்ல முடியவில்லை. முந்தாநாள் வரை, தானுண்டு தன் வகுப்புகள் உண்டு என்று இருந்தவர் மீது அநாயசமாக ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளே தள்ளினார்கள். அதிலும் லேசுபட்ட குற்றச்சாட்டா? தன்னிடம் பயிலும் மாணவிகளைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறாராம்.

உமா தன் மாணவிகளுடன் பேசும்போது ரகசியமாகச் சில வீடியோ காட்சிகளை பதிவு செய்து சில பல ஒட்டு வேலைகளுக்குப் பிறகு, அந்தப் பதிவுகளையே சாட்சியங்களாக சமர்ப்பித்திருக்கிறார்கள். விஷயம் தெரியவந்ததும் சம்பந்தப்பட்ட பள்ளி உமாவை நிர்த்தாட்சண்யமாக வேலையிலிருந்து துரத்தியிருக்கிறது. மாணவர்களும் பெற்றோர்களும் கொடுமைக்காரி உமா ஒழிக என்று பள்ளி வாசலில் நின்று கோஷம் போட்டிருக்கிறார்கள். எங்கள் குலத்துப் பெண்களை எப்படிச் சீரழிப்பாய் என்று சில மாணவ ஹீரோக்கள் உமா மீது பாய்ந்திருக்கிறார்கள். அவர் கையைப் பிடித்து இழுத்து வந்து சாலையில் வைத்து நையப் புடைத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த டெல்லி நகரமும் கொந்தளித்திருக்கிறது. உமா கைது செய்யப்பட்டு பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அந்தோ அநியாயம் என்று சீறிப்பாய்ந்த செய்தித்தாள்கள் உப்பு, மிளகாய், பெருங்காயம் எல்லாம் சேர்த்து ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்தியை சமைத்து வெளியிட்டிருக்கிறது. எல்லாம் முடிந்த பிறகு, நீதிமன்ற தீர்ப்பு வந்திருக்கிறது. இது போலியாக ஜோடிக்கப்பட்ட வழக்கு. உமா நல்லவர். பிறகு, என்.டி.டி.வி. பேட்டி. எப்படி உணர்கிறீர்கள் உமா மேடம்?

அந்த ரிப்போர்ட்டரின் பெயர் பிரகாஷ் சிங். லைவ் இந்தியா நியூஸ் சானல் என்னும் நிறுவனத்தில் பணிபுரிபவர். தனிப்பட்ட பிரச்னை காரணமாக, உமா மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ள இந்த நிருபரைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் ஒரு பிஸினஸ்மேன். டிவி சானலுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கரையில்லை. சூப்பர் மாட்டர். பரபரப்புக்குப் பரபரப்பு. விளம்பரத்துக்கு விளம்பரம். தவிரவும், எக்கச்சக்கப் பணம். உமா குரானாவின் அந்தரங்க நிகழ்ச்சியின் இப்பகுதியை உங்களுக்கு வழுங்குபவர்கள் ஸோ அண்டு ஸோ. இருபத்து நான்கு மணி நேரமும் ஒலிபரப்பியிருக்கிறார்கள். இடையிடையே விவாதங்கள், நேரடி கள ஆய்வுகள். எக்கச்சக்க பேட்டிகள். பெண்களின் பாதுகாப்புப் பற்றி. ஆசிரியர்களின் கடமை பற்றி. சீரழிந்து வரும் கலாசாரம் பற்றி. டி.ஆர்.பி. ரேட்டிங் உச்சத்துக்குப் போயிருக்கிறது.

உமா நல்லவர். தீர்ப்பு வந்துவிட்டது. இப்போது இந்த நியூஸ் சானல் என்ன செய்யப்போகிறது? மீண்டும் ஒரு 24 மணி நேர ஒலிபரப்பு? உமா எத்தனை நல்லவர், அவர் எவ்வளவு பண்பாணவர் என்பதற்கான வீடியோ ஆதார ஒலிபரப்பு? இந்த நிகழ்ச்சிக்கு யாராவது விளம்பரம் தருவார்களா? இப்பகுதியை உங்களுக்கு வழுங்குபவர்கள் ஸோ அண்டு ஸோ?

மாட்டார்கள். ஒருவர் நல்லவர் என்பது நியூஸ் ஆகாது. இந்த நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி. ரேட்டிங் கிடைக்காது. யாரும் பார்க்கமாட்டார்கள். காரமான சர்ச்சைகள் வேண்டும். பார்ப்பவர்கள் ஆச்சரியப்படவேண்டும் அல்லது ஆத்திரப்படவேண்டும் அல்லது அதிர்ச்சியடையவேண்டும்.

சாமியார் மேட்டரா? சூப்பர். பாலியல் வக்கிரங்களா? எங்கே, எங்கே? உடனே கவர் செய். கோரமான விபத்தா? புகைப்படங்கள் நிச்சயம் வேண்டும். கலரில். நடிகர்கள், நடிகைகள் பற்றிய கிசுகிசுவா? இங்கே கொண்டா. அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்கிறார்களா? அட்சரம் பிசகாமல் அப்படியே எழுதிக்கொடு. யாருடைய அந்தரங்கத்தையாவது ரகசியமாகத் தெரிந்து கொள்ள முடியுமா? ஃபோட்டோ எடுக்க முடியுமா? வீடியோ?

வேறு வழியில்லை என்கிறது மீடியா. தினம் ஒரு சானல் முளைத்துக்கொண்டிருக்கிறது. எத்தனை மெகா சீரியல்களைத்தான் எடுப்பது? கற்பனை வக்கிரங்களைப் பார்த்துப் பார்த்து மக்களுக்குப் போரடித்துவிட்டது. அவர்களை கவர்ந்திழுக்கவேண்டாமா? சீட்டின் நுனிக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டாமா? தவிரவும், எங்கள் போட்டியாளர்களை முந்தி நாங்கள் முன்னேறவேண்டாமா? நம்பர் ஒன் டிவி சானல் என்னும் பெயர் வரவேண்டுமென்றால் சும்மாவா?

மீடியாவின் அரசியலை விரிவாக விவாதிப்போம்.

(தொடரும்)

3 comments:

kankaatchi.blogspot.com said...

Advice to viewers:
Dont react to such type of dirty business tactics of the foreign media puppets.
People are enjoying the dirty,horror,vulgar scenes
shown in the films daily .
Such things make them crazy
and lazy
People never keep anything in their mind.
They will conveniently forget them and look forward for another such episode each day.
Let the sufferer suffer lonely or stick to the path of facing the incidents boldly.by ignoring the past.
IT IS A NEW LIFE EVERYDAY
YERTERDAY LIFE IS DEAD

Anonymous said...

sorry one small spelling mistake in your blog.ஒலிபரப்பியிருக்கிறார்கள் is wrong. TV is a visual medium.Both audio and vidio.
Regards
Ranga

kankaatchi.blogspot.com said...

இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஒன்றும் புதிதல்ல
பட்டினத்தடிகளும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கழுவிலேற்றபட்டார்
அனால் அவர் ஞாநியாதலால் அவர் இறக்கவில்லை .இது இறைவனின் திருவிளையாடல் என்று ஏற்றுகொண்டார்
சிலப்பதிகாரத்தில் கோவலன் திருட்டு குற்றஞ் சாட்டப்பட்டு கொலையுண்டதும் அதை எதிர்த்து உண்மையை நிலைநாட்ட கண்ணகி பாண்டிய மான்னனிடம் நீதி கேட்டதும், மன்னன் உயிர் துறந்ததும் வரலாற்று காவியங்கள்.
ஆனால் அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் நிச்சயம் வீண் பழி சுமத்தியவர்களை
தண்டிக்கும் என்பது சத்தியம்.
இந்த பிரச்சினையை பெரிதுபடுத்தி ஆதாயம் தேடிய தொலைகாட்சி சில ஆண்டுகள் கழித்து வீண் பழி சுமத்தியவனின் கதி என்ன ஆயிற்று என்று படம் பிடித்து காட்டினால் உண்மை விளங்கும்.