April 7, 2009

அரசியலின் கதை : 13

அரசாங்கத்தின் விருப்பம் என்ன? மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ளவேண்டும். நம் முடிவுகளுக்குக் கட்டுப்படவேண்டும். எதிர்த்துப் பேசக்கூடாது. பேரணி நடத்தக்கூடாது. ஒழிக கோஷம் போடக்கூடாது. ஏசக்கூடாது. தேர்தல் சமயங்களில் மறக்காமல் ஆதரவு அளிக்கவேண்டும். தமக்கு எதிராக விமரிசனங்களை முன்வைப்பவர்களை அரசாங்கம் விரும்புவதில்லை. இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் என்று பேதம் இல்லாமல் அனைவருக்கும் இது பொருந்தும். ஜனநாயக தேசம், சுதந்தர பூமி என்றெல்லாம் நாம் சொல்லிக்கொண்டாலும் விமரிசனம் என்று வரும்போது அரசாங்கம் விழித்துக்கொண்டுவிடுகிறது. தம்மோடு முரண்படுபவர்களுக்கு வெவ்வேறு பெயர்கள் கொடுத்து அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுகிறது.

தீவிரவாதிகள். பயங்கரவாதிகள். புரட்சியாளர்கள். கம்யூனிஸ்ட்டுகள். நக்ஸலைட்டுகள். கலகக்காரர்கள். பிரிவினைக்காரர்கள். தேசத்துரோகிகள். அரசாங்கத்தின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்பவர்களுக்குக் கிடைக்கும் பட்டப்பெயர்கள் இவை. அமெரிக்காவில் Patriotic Act என்று ஒரு சட்டப்பிரிவு உண்டு. இதன்படி சந்தேகப்படும் நபர்களை உடனே உள்ளே தள்ளி முட்டிக்கால்களை பெயர்க்கலாம். அவர் வீட்டு தொலைபேசியை ஒட்டுக்கேட்கலாம். வீடு புகுந்து சோதனை போடலாம். பணத்தை முடக்கலாம். சித்திரவதை செய்யலாம். காலவரையின்றி சிறையில் அடைத்து வைத்திருக்கலாம். கிட்டத்தட்ட ஒவ்வொரு தேசமும் இதுபோன்ற சட்டத்தை இயற்றி வைத்திருக்கிறது. நமக்குப் பொடா.

மேலைநாட்டு தத்துவவியலின் தந்தை என்று சாக்ரடீஸ் அறியப்பட்டதற்கு முக்கியக் காரணம் கேள்வி கேள் என்ற அவரது கர்ஜனைதான். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றினாலும் இது ஒரு புரட்சிகர சிந்தனை என்பதில் சந்தேகமில்லை.

இதை Dialectic என்று அழைக்கிறார்கள். அதாவது, தொடர்ச்சியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்துக்கொண்டே இருப்பது. நீ அழகாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த ஒற்றை வார்த்தையை கேள்விகளால் கட்டுடைக்கலாம். அழகு என்றால் என்ன? எது அழகு? ரோஜா அழகு என்று அவர் பதில் அளித்தால் மீண்டும் கேள்வி. எப்படிச் சொல்கிறீர்கள்? எனில், அனைத்து மலர்களும் அழகானவையா? ரோஜா மட்டும் ஏன் பிரதானம்? அழகாக இருப்பதாக நினைக்கிறேன் என்று சொல்கிறீர்கள். நினைப்பது என்றால் என்ன? இப்படியே கேட்டுக்கொண்டே போகலாம்.

அழகு என்றால் என்ன? நீதி என்றால் என்ன? சரி என்றால் என்ன? தவறு என்றால் என்ன? அரசாங்கத்துக்குக் கட்டுப்படவேண்டும் என்று சொல்கிறீர்கள். ஏன் அப்படி? அரசாங்கம் என்பது நம்மைவிட பெரிய அமைப்பா? அரசாங்கம் எது சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டுமா? புஷ் செய்துகொண்டிருப்பது சரி என்று அமெரிக்கர்கள் தலையாட்டவேண்டுமா? நாளை இரான் மீதோ ஆப்கனிஸ்தான் மீதோ அமெரிக்கா போர் தொடுத்தால் ஆஹா பேஷ் பேஷ் என்று அமெரிக்கர்கள் துள்ளிக் குதிக்கவேண்டுமா?

மன்மோகன் சிங் ஏன் அணுச்சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இத்தனை ஆர்வம் காட்டுகிறார்? இதுதான் இப்போது இந்தியாவுக்குத் தேவை என்று அவர் பதிலளித்ததால் அப்படியா சரி ஐயா என்று நகர்ந்து விடக்கூடாது. அணுசக்தி இல்லாவிட்டால் இந்தியா குடிமூழ்கிப்போய்விடும் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? தேசத்தின் வளர்ச்சிக்காக போடப்படும் ஒப்பந்தம் பற்றிய முழு விவரங்களையும் ஏன் அளிக்க மறுக்கிறீர்கள்? இன்னின்ன காரணங்களால் இந்த ஒப்பந்தம் தேவை என்று ஒரு பட்டியலை ஏன் உங்களால் அளிக்கமுடியவில்லை? தேவையில்லாமல் நாங்கள் பயப்படுகிறீர்கள் என்று நீங்கள் நினைத்தால், எங்கள் பயத்தை போக்குவது உங்கள் கடமை அல்லவா?

இதுதான் Dialectic முறை. கேள்வி. எதிர்க் கேள்வி. தர்க்கம். ஒவ்வொரு பிரச்னையையும் இப்படித்தான் அணுகவேண்டும் என்றார் சாக்ரடீஸ். இதை Socratic Method என்று அழைக்கிறார்கள். தத்துவவியலில் மட்டுமல்ல அரசியலிலும் இது பிரதானமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, அறிவியல் உலகம் இந்த முறையை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

(தொடரும்)

2 comments:

திலீபன் said...

‌நீ‌ங்க‌ள் சொல்வதுபோல், சாதாரணகுடிமகனாகிய நாம் பிரதமரையோ அல்லது முதல்வரையோ தொடர்புகொண்டு கேள்விகேட்பது எப்படி?ஒரு MLA-வையே பர்த்து கேள்விக்கேட்க முடியவில்லையே?

(இஸ்ரேலுடன்(I.A.I) ஆயுதம் வாங்குவதில் சுமார் 10000 கோடி ஊழல் நடந்துள்ளதாக இடதுசாரிகள் கூறுவதுப்பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரையிட தாழ்மையுடன் வேண்டிக்கோள்கிறேன்)

ரா.கிரித்ரன் said...

நாம் தேர்ந்தெடுக்கும் கட்சிக்காரர்கள் நமக்காக கேட்க வேண்டும் கேள்வி.

நம் நாட்டில் நடப்பதோ தங்கள் கட்சியின் நன்மைக்காக மட்டுமே selectiveஆக எதிர்த்து கேள்வி கேட்கிறார்கள்.

இதில் இடது,வலது சாரிகள் வேறு பழைய காலத்து புரட்சி அது,இது என்று குட்டையை குழப்புவார்கள்.