ஐ.நா. தலையிட்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஈழம் பெற்றுத்தரும் என்று நம்பியவர்களும், குறைந்தது, மகிந்தா இழைத்த போர்க்குற்றங்களுக்குத் தண்டனையாவது பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்தவர்களும் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆனால், ஐ.நா.வின் கடந்த கால வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதில் பேரதிர்ச்சி எதுவும் இல்லை.
ஐ.நா தொடங்கப்பட்டது 1945ம் ஆண்டில். அதற்கு முன்னால் சர்வதேச நாடுகளின் சங்கம் (லீக் ஆஃப் நேஷன்ஸ்) என்று ஒரு பஞ்சாயத்து தலைவர் இருந்தார். முதல் உலகப்போர் ஏற்படுத்திய பேரழிவுக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட தலைவர் இவர். இவரிடம் பல பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. மனிதர்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்படவேண்டும். குறிப்பாக, பெண்களின் உரிமை, வெள்ளையர் அல்லாதவர்களின் உரிமை, போர்வீரர்களின் உரிமை. நாடுகள் தங்கள் இஷ்டத்துக்கு ஆயுதங்கள் தயாரித்துக்கொள்வதை தடுக்கவேண்டும். நீயா நானா என்று நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். எங்கே என்ன பிரச்னை வெடித்தாலும் முதல் ஆளாக போய் பார்த்து பேசி, அமைதி வழியில் சுமூகமான தீர்வு காணவேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், மானுட குலத்தின் மேன்மையை கட்டிக்காக்கவேண்டும்.
கட்டவும் இல்லை காக்கவும் இல்லை லீக். எஞ்சியிருந்த கால் வாசி மீசையைத் தடவியபடி ஹிட்லர் ஐரோப்பாவை கபளீகரம் செய்து தன் பாக்கெட்டில் செருகிக்கொண்டபோது, லீக் செய்வதறியாது திகைத்து நின்றது. பிறகு சுதாரித்துக்கொண்டு, இது முறையல்ல, உலக அமைதியை நீங்கள் கெடுப்பது போல் தெரிகிறது, போரை கைவிடுங்கள் என்று சட்டப்புத்தகத்தில் இருந்து சில ஆர்டிகிளை இடம்சுட்டிப்பொருள் விளக்கியது. சர்தான் போப்பா என்று லீகை ஒதுக்கித்தள்ளிவிட்டு மூர்க்கத்துடன் முன்னேறினார் ஹிட்லர். லீக் திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்தபோதே இரண்டாம் உலகப் போர் நடந்து முடிந்துவிட்டது.
பஞ்சாயத்து தலைவரின் பணியும் முடிவுக்கு வந்தது. இனி லீக் தேவையில்லை என்று ஐரோப்பிய பெரும்தலைகள் ஒன்றுசேர்ந்து லீகை கருணைக்கொலை செய்தன. ஹிட்லரைப் போன்ற அடாவடிகளோடு அன்பொழுக பேசிக்கொண்டிருக்கக்கூடாது காதைத் திருகி நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே, லீகைவிட சக்திவாய்ந்த ஒரு தலைமை தேவை. இந்த எண்ணத்துடன் அக்டோபர் 25, 1945 அன்று ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. உருவாக்கியவர்கள் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளின் அணியைச் சேர்ந்த அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், சோவியத் யூனியன், சீனக் குடியரசு ஆகிய நாடுகள். யாரைச் சேர்க்கலாம், என்னென்ன விதிமுறைகள், சட்டத்திட்டங்கள் என்னென்ன போன்ற விஷயங்களை விவாதித்து ஐ.நாவுக்கு ஒரு வடிவம் கொடுத்தார்கள்.
கடமைகள் வரையறுக்கப்பட்டன. இன்னொரு யுத்தத்தை தாங்கும் திராணி யாரிடமும் இல்லை. ஆகவே, இனியொரு போர் கூடவேகூடாது. உலக நாடுகளுக்கு இடையே, வேறுபட்ட சமூகங்களுக்கு இடையே ஒற்றுமை பூக்கவேண்டும். ஒரு சர்வாதிகார நாடு தன் மக்களை ஒடுக்குவதை, அழிப்பதை அனுமதிக்கக்கூடாது. ஏழைமையில் இயற்கை சீற்றத்தில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு புணரமைப்பு.
ஐக்கிய நாடுகள் என்னும் பெயரை முதலில் பயன்படுத்தியவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட். தொடக்கத்தில் ஐம்பது நாடுகள் உறுப்பினர்களாக இருந்தனர். இன்று 192 நாடுகள். மொத்தம் ஐந்து பிரிவுகளை ஐ.நா. உள்ளடக்கியுள்ளது. விஷயங்களை விவாதித்து முடிவெடுக்க ஜெனரல் அஸெம்பிளி. உலக அமைதி பேண பாதுகாப்பு கவுன்சில். இதில் மொத்தம் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பினர்கள். எந்த தீர்மானத்தையும் தடுக்கும் வீட்டோ அதிகாரம் இவர்களுக்கு உண்டு. மூன்றாவதாக, பொருளாதார, சமூக நல கவுன்சில். நான்காவது, செயலகம் (செகரடேரியேட்). ஐ.நா.வுக்குத் தேவைப்படும் புள்ளிவிவரங்களை, அறிக்கைகளைத் தயாரித்து அளிக்கும் பிரிவு. ஐந்தாவதாக, சர்வதேச நீதிமன்றம். நாடுகளுக்கிடையிலான சச்சரவுகளை சட்ட ஆலோசனைகள் மூலமாகத் தீர்த்து வைக்கும் பிரிவு.
இவைபோக, ஐ.நா.வின் அதிகாரபூர்வ அமைப்புகள் பல உள்ளன. ஒரு நாட்டில் நடைபெறும் போர்க்குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்க, சர்வதேச கிரிமினல் நீதிமன்றம். இது பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று செயல்படும். இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை சர்வதேச நீதிமன்றம் எடுத்துக்கொள்ளலாம். பிறகு, உலகச் சுகாதார மையம், ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிதியகம் (யுனிசெஃப்), காலனி ஆதிக்கத்தை விடுவிக்கும் கமிட்டி. அமைதியை விரும்பும் நாடுகளுக்கு மட்டுமே உறுப்பினர் அட்டை. சேர்க்கலாமா வேண்டாமா என்பதை பாதுகாப்பு கவுன்சில் ஆராய்ந்து பரிந்துரைக்கும். புது செட்டப்பில் பக்காவான ஒரு பஞ்சாயத்து தலைவர் தயார்.
ஒரு நல்ல நாளில் வேலையை ஆரம்பித்தது ஐ.நா. சில வாரங்கள்தான் கழிந்திருக்கும். லிட்டில் பாய், ஃபேட் மேன் என்னும் இரு அணுகுண்டுகளைத் தயாரித்து ஜப்பான் மீது வீசியது அமெரிக்கா. ஐயோ என்று மக்களோடு மக்களாகச் சேர்ந்து ஐ.நா.வும் அலறியது. மேலதிகம் எதுவும் செய்யவில்லை. முடியவில்லை. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா நிரந்தர உறுப்பினர். ஐந்து வல்லரசுகள் கொண்ட கூட்டணி அது என்றாலும் பிற உறுப்பினர்களைவிட அமெரிக்கா பொருளாதார ரீதியில் முன்னணியில் இருந்தது. ஆகவே, தவிர்க்கமுடியாதபடி, ஐ.நா,வில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக அமெரிக்கா மாறிப்போனது. வாய்மூடி அமைதியாக இருப்பதைத் தவிர ஐ.நா.வுக்கு வேறு வழி இருக்கவில்லை.
ஐ.நா. ஆரம்பிக்கப்பட்ட சில வாரங்களிலேயே ஐ.நா.வின் தோல்வியும் ஆரம்பமாகிவிட்டது. வால்பிடித்ததுபோல் மற்ற நாடுகள் அணுகுண்டு பரிசோதனைகளில் ஒன்றன்பின்ஒன்றாக இறங்கியபோது, ஐ.நா. மேற்கொண்ட அதிகபட்ச நடவடிக்கை அறிக்கைக் கண்டனங்களை அச்சடித்து அனுப்பியதுதான். 1947 தொடங்கி சோவியத் யூனியனுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் மத்தியில் பல கட்டங்களாகப் பனிப்போர் மூண்டபோது, ஐ.நா.வால் இடைமறித்து தடுக்கமுடியவில்லை. எதற்கும் லாயக்கற்ற ஓர் அமைப்பு இது என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரிச்சர்ட் நிக்ஸன் வெளிப்படையாக ஐ.நா.வை குறைகூறினார்.
அமைப்பு ரீதியாகவும் ஐ.நா. பலகீனமடைய ஆரம்பித்தது. பாதுகாப்பு கவுன்சில் ஒன்றுசேர்ந்து பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று ஐ.நா.வின் அரசியல் சாசனம். அப்படித்தான் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு ஒருநாள் இந்த விதிமுறையை ஐவர் குழு உடைத்தது. எதற்கு வீண் விவாதம், வெள்ளைப்பூண்டு? பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் நாங்கள். நாங்களே கூடிப்பேசி முடிவெடுக்கிறோம். அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும். ஐவரில் மூவர் ஒப்புதல் கொடுத்துவிட்டால், தலைவர் ரெடி.
பனிப்போரின் முடிவில் 1991ல் சோவியத் யூனியன் சிதறியபோது, எஞ்சியிருந்த ஒரே பெரும் வல்லரசான அமெரிக்காவின் பின்னால் பதுங்கிகொண்டது ஐ.நா. உலக விஷயங்களை தன்னிச்சையாக ஆராய்ந்து, விவாதித்து, தீர்வு காணும் வழக்கம் ஒழிந்துபோனது. விவாதங்கள் என்னும் பெயரில் பாதுகாப்பு கவுன்சிலில் குத்துச்சண்டைகளே அதிகம் நடைபெற்றன. நீ, நான் என்று நாடுகள் தங்களுக்குள் போட்டிப் போட்டுக்கொண்டு ஆயுத பலத்தைக் கூட்டிக்கொண்டன.
1994ல் ருவாண்டாவில் மூண்ட இனமோதலில் பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 1998 தொடங்கி 2002 வரை காங்கோவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் 50 லட்சம் மக்களை பலிவாங்கியது. சூடான், டாஃபர் இனப்படுகொலை பல ஆயிரக்கணக்கான மக்களை சீரழித்தது. இஸ்ரேல் பாலஸ்தீன் மீது தொடர் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்திகொண்டிருக்கிறது. காஸா முனை விட்டுவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. மார்ச் 2003ல் சர்வதேச தீவிரவாதத்துக்கு எஜதிரான போரின் ஒரு பாகமாக ஜார்ஜ் புஷ் ஆப்கனிஸ்தானையும் இராக்கையும் ஆக்கிரமித்தார். சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டார். இராக் இன்று வரை விடுவிக்கப்படவில்லை.
ஐ.நா. என்ன செய்தது? என்ன செய்துகொண்டிருக்கிறது? எண்ணற்ற விவாதங்களை நிகழ்த்தினார்கள். டன் கணக்கில் தீர்மானங்கள் கொண்டு வந்தார்கள். குண்டு விழ விழ கண்டனங்களையும் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். பெரும் செலவில் நிறைய மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆக்கிரமித்த நாடு, ஆக்கிரமிக்கப்பட்ட நாடு. இரு தரப்பினரையும் சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார்கள். தேநீர் அருந்தினார்கள். ஆக்கிரமிப்பாளர்களுக்கு கொஞ்சம் அட்வைஸ். இனி இதுபோல் செய்யாதீர்கள். சீரழிந்த மக்களுக்கு ஏதாவது பார்த்துப் போட்டு செய்துகொடுங்கள். வரட்டுமா?
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் வழியே உணவுப் பொட்டலங்கள். காயமடைந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் வண்டிகள். நிலைமை முற்றினால், அமைதி காக்கும் படைகள். இவ்வளவுதான் செய்யமுடிந்திருக்கிறது. இவ்வளவுதான் செய்யமுடியும். ஐ.நா.வால் எந்தவொரு போரையும், எந்தவொரு இனப்படுகொலையையும், எந்தவொரு ஆக்கிரமிப்பு யுத்தத்தையும் தடுத்து நிறுத்தமுடியவில்லை என்பதுதான் நிஜம்.
நிலைமை இவ்வாறிருக்க, மகிந்த ராஜபக்ஷே மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்கும் என்று எப்படி நாம் எதிர்பார்க்கலாம்? ஐ.நாவில் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொரு நாடும் தன் தோட்டத்தில் ஒரு கல்லறையை கட்டி பராமரித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் மீதும் ரத்தக்கறை படிந்துள்ளது. இலங்கை மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல் என்று அத்தனை நாடுகளும் போர்க்குற்றங்கள் செய்திருக்கின்றன. இலங்கை குற்றவாளி என்றால் இவர்களும் குற்றவாளிகளே. எனவே, இவர்கள் யாரும் இலங்கையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. எனவே, வழக்கம்போல், ஐ.நா. அமைதி காக்கிறது.
(ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை)
11 comments:
நல்ல கட்டுரை .
ஆனால் ஐநாவையும் விட்டுவிட்டு வேறு எங்கேதான் தமிழர்கள் போக முடியும் ?
UN is unfit. Time to dissolve it
UN is unfit. Time to dissolve it
இலங்கை விடயத்தில் ஐநாவை நம்பியது உண்மை. ஆனால் ஐநா தன் நிஜ சொரூபத்தை வெளிகாட்டிவிட்டது. சோகம் மருதன்
போரே குற்றம் தான் இதில் தனியாக போர் குற்றம் வேறா?..
அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...
உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு
அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!
ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்
http://en.wikipedia.org/wiki/1991_uprisings_in_Iraq
america kai kodukkum endru ninaiththu sadamidam rasayana ayudhathaal adi vaangi 10000 makkal irandhargal.
இதுல மனிந்தாவை அவரே விசாரிச்சுக்கட்டும்னு ஒரு தீர்வு வேற, தூ
மருதன் அவர்களே,
தீவிர கம்யூனிஸ்டான தங்களிடம் ஒரு கேள்வி. மேற்குவங்கத்தில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக மாவோயிஸ்டுகளைத் தடை செய்து அரசாங்கம் அறிவித்துள்ளது. மாவோயிஸ்டுகள் சீனாவின் கைக்கூலியாக இந்தியாவில் குழப்பம் விளைவிப்பதைத் தடுக்கவே இச்செயல் என்று சொல்லப்படுகையில் மாவோயிஸ்டுகள் மீதான தடையை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? அவர்கள் ஒழிக்கப்படவேண்டியவர்கள்தானே?
திரு Dondu :
லால்கார் குறித்தும் மாவோயிஸ்டுகள் குறித்தும் கல்கியில் இருந்து ஒரு கட்டுரை கேட்டிருந்தார்கள். நேற்றுதான் எழுதி அனுப்பிவைத்தேன். இன்னும் சில தினங்களில் இங்கே அதை மீள் பிரசுரம் செய்கிறேன்.
லால்கார் சம்பவத்தை மாவோயிஸ்டுகள் மோதலாக மட்டும் பார்ப்பது பிரச்னையை திசை திருப்பும் செயல். அங்கே நடந்திருப்பது அரசாங்கத்துக்கு எதிரான பழங்குடி மக்களின் எழுச்சி.
ஐநாவை நம்ப வேண்டாம் என்றால், அடுத்த லாஜிகல் ஸ்டெப், இந்தியா ஐநாவை விட்டு வெளியே வந்து விட வேண்டும் என சொல்லுவீர்களா?
Post a Comment