October 26, 2009

திக்கற்ற இரு குழந்தைகள்

திக்கற்ற இரு குழந்தைகள், பண்டித எஸ்.எம். நடேச சாஸ்திரி, மலிவுப் பதிப்பு, ஒரு ரூபாய், ராம்நாத் பப்ளிகேஷன்ஸ், சென்னை 2. என் தந்தை எழுதிய புத்தகம், படித்துப் பாருங்கள் என்று ஒரு பிரதியை (அவரிடம் எஞ்சியிருந்த ஒரே பிரதி) கொண்டு வந்து கொடுத்தார் ரங்கநாதன். வானிலை ஆராய்ச்சியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பெங்களூருவில் வசிக்கிறார். இரு மாதங்களுக்கு முன் அவரைச் சந்தித்து உரையாடினேன். வானிலை தொடர்பாக ராமநாதன் எழுதிய அறிமுகப் புத்தகம் அறிவியல் வெளியீடாக வெளிவந்துள்ளது.

1-2-1958ல் வெளிவந்த திக்கற்ற இரு குழந்தைகள் நூலிருந்து ஒரு பகுதி.

பினாகபாணி:
எனக்குத்தான் ஏதோ சிறிது தலைவலி. நீங்கள் ஏன் காலஷேபத்துக்கு போகவில்லை?

ராதை:
நான் உங்களிடம் உண்மையான காரணத்தைச் சொல்லட்டுமா?

பினாகபாணி:
என்ன ஆஷேபம்?

ராதை:
சொல்வதா வேண்டாவா என்று நிதானிக்கலானேன்.

பினாகபாணி:
என்மேல் ஓர்விதச் சந்தேகமும் வேண்டாம். உண்மையான காரணத்தைச் சொல்லலாம்.

ராதை:
அமிருதவல்லி என்னை அக்காலஷேபத்துக்கு அழைக்கவில்லை.

பினாகபாணி:
அழைக்கவில்லையா?

ராதை:
ஆனால், நான் அவர்கள் என்னை அழைத்திருக்கவேண்டும் என்று எதிர்பார்த்திருக்கக்கூடாதுதான். என்னை அப்படி அழைக்கவேண்டிய பாத்தியமொன்றுமில்லை. ஏதோ இத்தனை போர்கள் போகையில் நான் மட்டில் அழைக்கப்படாமல் நிறுத்தப்பட்டேனே என்பதுதான் என்னைப் பாதிக்கிறது.

0

இயற்கை வருணனைகள், சூழல் விவரிப்புகள் தனியாகவும், உரையாடல்கள் தனியாக நாடக பாணியிலும் இடம்பெற்றிருக்கின்றன. பக்கத்துக்குப் பக்கம், துன்பங்கள், வெடித்து கிளம்பும் அழுகைகள், வேதனைகள்.

முதல் பக்கத்தில் ஆசிரியர் பற்றி ஒரு குறிப்பு.

1906 ஏப்ரல் 11 இரவு கோயிலுக்குப் போனைவர் திரும்பி வருகையில் மிரண்டோடி வந்த குதிரை தாக்கி, கீழே விழுந்து அடிபட்டு அதே காரணமாக மறுநாள் காலை உயிர் நீத்தார். இவர் எழுதிய வேறு நூல்கள், 'கோமளம் குமரியானது', 'மாமி கொலுவிருக்கை', 'தலையணை மந்திரோபதேசம்' முதலியன.

அதே புத்தகத்தில், கமலாம்பாள் சரித்திரம் குறித்து தி ஹிந்து வெளியிட்டுள்ள blurb இடம்பெற்றிருக்கிறது.

'நமது சமூகப்பழக்க வழக்கங்கள், நம்மவர்களின் வாழ்க்கை முறைகளை இப்புஸ்தகத்தில் விவரித்திருப்பது போல வேறு எந்தப் புஸ்தகத்திலும் காண்பதரிது.'

திக்கற்ற குழந்தைகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, வானிலை புத்தகத்தை மட்டும் பெற்றுக்கொண்டேன்.

October 23, 2009

ஆண் இனம் அழிவை நோக்கி?

கிழக்கு மொட்டைமாடியில் நேற்று நடைபெற்ற கூட்டத்துக்காக பேராசிரியர் மோகனா தயாரித்து அளித்த பிரஸெண்டேஷன் இது. தலைப்பு, ஆண் இனம் அழிவை நோக்கியா?
Chromosomes 221009
View more presentations from marudhan.

டார்க் எனர்ஜி குறித்து முனைவர் த.வி.வேங்கடேசுவரன் முன்னர் நடத்திய உரையாடல் இங்கே.

October 12, 2009

ஜனநாயகமும் சித்திரவதைகளும்


ஆறு முதல் ஏழு மணி நேரங்கள் வரை துரத்தி அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள். எட்டி உதைத்தும், இரும்பு தடி கொண்டு தாக்கியும் சித்திரவதை செய்திருக்கிறார்கள். கண், காது, கை, கால், தொடை என்று உடல் எங்கும் ரத்தம். படத்தில் உள்ள ஜோயல் எலியட் (Joel Elliott) ஓர் அமெரிக்கப் பத்திரிகையாளர். டெல்லியில் உள்ள Caravan இதழில் மே மாதம் தொடங்கி பணிபுரிந்துவருபவர். தி நியூ யார்க் டைம்ஸ், தி கிறிஸ்டியன் சயின்ஸ் மானிடர், சான் ஃபிரான்ஸிஸ்கோ க்ரானிகல் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதி வருபவர்.

நடந்து செல்லும்போது, காவல்துறையினர் நடைபாதையில் வைத்து ஒருவரை அடித்து சித்திரவதை செய்வதைப் பார்த்து பதறி குரல் எழுப்பியிருக்கிறார். கோபம் கொண்ட காவல் அதிகாரிகள் இவரையும் இழுத்துப் போட்டு அடித்திருக்கிறார்கள். தான் அனுபவித்த சித்திரவதைகளை ஒரு ரிப்போர்ட்டாகப் பதிவு செய்திருக்கிறார் ஜோயல்.

அவுட்லுக்கில் வெளியாகியுள்ள அந்த ரிப்போர்ட்டை இங்கே படிக்கலாம். கார்டியனில் வெளியான மற்றொரு செய்தி இது. டெல்லி காவல்துறை முற்றிலும் நேர்மாறான விளக்கத்தை அளித்திருக்கிறது. ஜோயல் ஒரு காரை திருடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதைத் தடுக்கும் முயற்சியை மட்டுமே நாங்கள் மேற்கொண்டோம். ஜோயல் இதை மறுத்திருக்கிறார் என்பது ஒரு பக்கம் இருக்க, இப்படியொரு காரணத்தைச் சொல்லிவிட்டால், யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானால் சித்திரவதை செய்யலாமா?

டெல்லி காவல்துறைக்கு எதிராக 2006ம் ஆண்டில் மட்டும் 5360 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மனித உரிமை மீறல்கள், கஸ்டடியில் பாலியல் பலாத்காரம், சித்திரவதை, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் போன்றவை இந்தப் பட்டியலில் அடங்கும். (National Crime Records Bureau (NCRB) 2006 Annual Report). இந்த 5360 குற்றச்சாட்டுகளில், 579 வழக்குகளில் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அந்த விசாரணைகளின் முடிவுகள் என்ன என்பது வெளியிடப்படவில்லை. ஏப்ரல் 2006 முதல் மார்ச் 2007 வரை, டெல்லி சிறைச்சாலைகளில் 25 பேர் லாக்கப்பில் வைத்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் பலாத்காரத்தின் தலைநகரமும் டெல்லிதான். இந்தியாவில் அதிக பாலியல் பலாத்கார வழக்குகள் டெல்லியில்தான் பதிவு செய்யப்படுகின்றன. அதிகாரபூர்வமான கணக்கின்படி, 581 பாலியல் வண்புணர்ச்சி வழக்குகள், 835 பாலியல் அத்துமீறல் வழக்குகள் 2007ல் மட்டும் பதிவாகியுள்ளன. பதிவாகாத வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் இருக்கக்கூடும்.

0

அதே அவுட்லுக் இதழில், ராமச்சந்திர குஹாவின் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. The Axis Year என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரை, 1984ம் ஆண்டு இந்தியாவைப் பற்றியது. ஆபரேஷன் ப்ளூ ஸ்டார், இந்திரா காந்தி படுகொலை, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீக்கியக் கலவரம் ஆகியவற்றைப் பட்டியலிட்டு அலசுகிறார் குஹா. ஏகப்பட்ட வில்லன்களைக் கொண்ட 1984ன் கதாநாயகனாக ஜோதி பாசுவை முன்னிறுத்துகிறார் குஹா. காங்கிரஸ் காந்தியவாதீகளைக் காட்டிலும் அசலான காந்தியவாதி இவரே. கல்கத்தாவில் கிட்டத்தட்ட 50,000 சீக்கியர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், டாக்ஸி ஓட்டுனர்கள். டெல்லியிலும் பஞ்சாபிலும் சீக்கியர்கள் துரத்தி விரட்டி படுகொலை செய்யப்பட்டபோது, காங்கிரஸ் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஜோதிபாசு அரசாங்கம் தனது சீக்கியர்களை பாதுகாத்தது. அதே 1984ல் போபால் விஷவாயு கசிவால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

சீக்கியப் படுகொலைகளுக்கு இன்னமும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. போபால் விஷவாயு சம்பவத்துக்கும் தீர்ப்பு கிடைக்கவில்லை. எனவே, 1984ம் ஆண்டு சம்பவங்களின் தாக்கத்தை இன்றைய இந்தியாவிலும் காணமுடிகிறது என்கிறார் ராமச்சந்திர குஹா. எனவே, 1984ம் ஆண்டை The Axis Year என்று வருணிக்கிறார் குஹா. தடுப்பு நடவடிக்கைகள், எதிர் நடவடிக்கைகள் எடுக்கமுடியாமல் அரசாங்கம் செயலிழந்திருந்த ஆண்டு.

1984ம் ஆண்டில் மட்டுமா அரசாங்கம் செயலிழந்திருந்தது? ராமச்சந்திர குஹா எழுதிய India After Gandhi உலகின் மிகப் பெரிய ஜனநாயகமான இந்தியாவைக் கொண்டாடும் ஒரு நூல். (இந்தியா : காந்திக்குப் பிறகு, பாகம் ஒன்று, தமிழில்). ஆம், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து்கொண்டிருக்கின்றன. ஏழைமை, வேலையின்மை, பஞ்சம், பசி ஆகியவை இன்னும் மறைந்துவிடவில்லை. காஷ்மீர், வடகிழக்கு பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. நக்சல் தீவிரவாதம் பெருகிக்கொண்டிருக்கிறது. பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை. குடிநீர் இல்லை. சாலைகள் இல்லை. குறைகள் ஆயிரம் உண்டிங்கே. ஆனால், இத்தனை குறைகள் இருந்தாலும், இத்தனை போதாமைகள் இருந்தாலும், இந்தியா இன்னமும் ஒரு தேசமாக, உடைபடாத, பிரிவுபடாத தேசமாக திகழ்கிறது. இது இந்தியாவின் வெற்றி. இந்திய ஜனநாயகத்தின் வெற்றி. குஹா அப்படித்தான் பார்க்கிறார்.

ஜோயல் எலியட் தாக்கப்பட்ட சம்பவத்தை குஹாவின் பார்வையில் பார்க்கும்போது, சில விஷயங்கள் தெளிவாகின்றன. இத்தனைப் பெரிய ஜனநாயக தேசத்தில், ஒரு நபரோ, சில நபர்களோ தாக்கப்படுவது பெரிய விஷயமல்ல. கோடிக்கணக்கான மக்கள் வாழும் ஒரு தேசத்தில், சில ஆயிரம் மனித உரிமை மீறல்கள் நடப்பது தவறில்லை. அவற்றை நாம் பெரிதுபடுத்தவேண்டிய அவசியமும் இல்லை.

விருது


தாரைப் புள்ளிக்காரர் அறக்கட்டளை, எழுத்துக்களம் இலக்கிய அமைப்பு இணைந்து நடத்திய 2009-ம் ஆண்டுக்கான இலக்கிய நூல்களுக்கான பரிசுகள்/விருதுகள் வரிசையில், நான் எழுதிய இந்தியப் பிரிவினை நூலுக்கு விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

நூல் விவரம்

October 11, 2009

ஹொண்டுராஸ் குறித்து சாவேஸ்


ஹொண்டுராஸ் ஆட்சிக் கவிழ்ப்பு, பராக் ஒபாமா, பிரேஸில் நட்புறவு, வெனிசூலாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் என்று பல விஷயங்கள் குறித்து தி நேஷனுக்கு ஹியூகோ சாவேஸ் அளித்த போட்டி இங்கே. ஹொண்டுராஸ் ஆட்சிக் கவிழ்ப்பை மிகக் கடுமையாகச் சாடிய நாடு வெனிசூலா. அமெரிக்காதான் இதற்குப் பதிலளிக்கவேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார் சாவேஸ். கவிழ்ப்புக்குப் பிறகு புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டால், அது வீழ்த்தப்படும் என்று எச்சரித்தார். ஹொண்டுராஸுக்கான எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்திக்கொள்ளப்போவதாகவும் செய்தி வெளிவந்தது.

ஜூன் 28, 2009 அன்று ஹொண்டுராஸ் ராணுவம், அதிபர் மானுவேல் ஜெலாயாவின் ஆட்சியைக் கவிழ்த்தது. ஜெலாயா நாடு கடத்தப்பட்டு, கோஸ்டாரிகாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். உலகம் முழுவதிலும் இருந்து பல கண்டனங்கள் எழுந்தன. நான் கடத்தப்பட்டிருக்கிறேன் என்று பேட்டி அளித்தார் ஜெலாயா. படுக்கையில் இருந்து எழுப்பி, என் பாதுகாவலர்களைத் தாக்கி, என்னை இழுத்துச் சென்றார்கள். எனக்குப் பிறகு ஆட்சியை யார் கைப்பற்றினாலும் அவர்களை நான் ஆதரிக்கமாட்டேன். ஜெலாயாவின் ராஜிநாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. அது தன்னுடையதல்ல என்று மறுத்தார் ஜெலாயா. ஒருவரும் சட்டை செய்யவில்லை. ராபர்ட்டோ மிச்சிலட்டி என்பவர் அதிபராக அமர்த்தப்பட்டார். ஐ.நா., அமெரிக்கா என்று தொடங்கி உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தன. ஐ.நா. ஒரு பக்க கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியது. இது நீதிக்குப் புறம்பானது என்றார் ஒபாமா. நடந்திருப்பது ஆட்சிக்கவிழ்ப்புதான் என்றார்.

செப்டம்பர் 21 அன்று ஜெலாயா, ஹொண்டுராஸின் தலைநகரமான டெகுசிகால்பாவுக்குத் தன் மனைவியுடன் திரும்பினார். அங்கிருந்த பிரேசில் தூதரகரத்தில் அவருக்கு அடைக்கலம் கிடைத்தது. ஜெலாயா இங்கே வரவில்லை என்று தொடக்கத்தில் அறிவித்த புதிய அதிபர் ராபர்ட்டோ மிச்சிலட்டி, பின்னர் அதை ஒப்புக்கொண்டார். பிரேசில் தூதரகம் ஜெலாயாவை ஒப்படைக்கவேண்டும் என்று அறிக்கை விட்டார். பிரேசில் மறுத்துவிட்டது. ஜெலாயாவுக்கு நாங்கள் எந்தவித உதவியும் செய்யவில்லை, எங்கள் உதவியுடன் அவர் திரும்பி வரவில்லை என்றும் அறிவித்தது. ஹொண்டுராஸ் இதனை ஏற்கவில்லை. பத்து தினங்களுக்குள் ஒப்படைக்கவேண்டும் என்று கெடு விதித்தது. சாவேஸ் அளித்த அதே பதிலைத்தான் லூலா டெசில்வாவும் அளித்தார். ஆட்சிக் கவிழ்ப்பாளர்களிடம் உட்கார்ந்து எங்களால் பேசிக்கொண்டிருக்கமுடியாது.

லூலா டெசில்வாவுடனான தன் உறவு குறித்த தி நேஷன் பேட்டியில் விவரிக்கிறார் சாவேஸ். லூலாவின் வருகைக்குப் பிறகு, பிரேசில் நல்ல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது என்று பாராட்டுகிறார். 'எங்கள் நெருக்கத்தை உடைக்கவேண்டும் என்று சமீப காலங்களில், சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால, அவை தோல்வியடைந்துவிட்டன.'

ஒபாமாவின் வருகைக்குப் பிறகு, அமெரிக்கா-வெனிசூலா உறவு முன்னேற்றம் கண்டிருக்கிறதா? மறுக்கிறார் சாவேஸ். 'இன்னமும் மோசம்தான் அடைந்திருக்கிறது.' அமெரிக்கா லத்தீதன் அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து குழுப்பங்கள் விளைவித்துக்கொண்டிருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்த வகையில், ஹொண்டுராஸ் ஆட்சிக் கவிழ்ப்பு ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க நாடுகளையும் பாதிக்கும் ஒரு செயல் என்கிறார் சாவேஸ்.

1980களில் ரொனால்ட் ரீகன், ஹொண்டுராஸை தனது அரசியல் தளமாகப் பயன்படுத்திக்கொண்டார். நிகாரகுவா, எல் சல்வடார், கவுதிமாலா போன்ற நாடுகளில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஹொண்டுராஸில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன. ஹொண்டுராஸ் விவாகரத்துக்கு சாவேஸ் முக்கியத்துவம் அளிப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. 2002ல் வெனிசூலாவில் சாவேஸின் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்து தோற்ற Robert Carmona-Borjas, ஹொண்டுராஸ் ஆட்சிக் கவிழ்ப்பில் பங்கேற்றிருக்கிறார்.

புதிய ஆட்சியாளர்கள் ஹொண்டுராஸில் தற்சமயம் கடுமையான அடக்குமுறையை கொண்டுவந்திருக்கிறார்கள். செய்திகள் தணிக்கை செய்யப்படுகின்றன. போராட்டக்காரர்களையும், ஜெலாயா ஆதவாளர்களையும் ஒடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜெலாயாவின் ஆட்சி ஏன் கவிழ்க்கப்பட்டது? சாவேஸின் பதில் இது. 'ஜனநாயகத்தைப் பார்த்து பலர் பயப்படுகிறார்கள்.'

மேலதிக விவரங்களுக்கு :

1) Battle for Honduras--and the Region
2) Honduran Coup Regime in Crisis
3) Honduras coup leaders tighten curbs on media
4) Democracy Derailed in Honduras
5) Zelaya Speaks

October 9, 2009

மாவோயிஸ்டுகள் யார்?



Sudeep Chakravarti எழுதிய Red Sun புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து, நூறு பக்கங்கள் கடப்பதற்குள் மாவோயிஸ்டுகள் குறித்து சூடான தலைப்புச் செய்திகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. நக்ஸலைட் பீதி. தாலிபன் பாணியில் தலையை வெட்டிக் கொலை. இந்தியாவின் மிகப் பெரும் பயங்கரவாத அச்சுறுத்தல். இன்னபிற. மினுக் மினுக்கென்று மின்னும் சிவப்பு வட்டங்களை இந்திய வரைபடத்தில் ஒட்டவைத்து, 'நக்ஸல் பயங்கரத்தை' விவாதித்துக்கொண்டிருக்கிறது மீடியா.

ரெட் சன் ஒரு பயண நூல். இந்தியாவில் நக்ஸலிஸம் பரவியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று, பலருடன் (அரசாங்க அதிகாரிகள், மாவோயிஸ்டுகள், மக்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், சல்வா ஜுடும்) பேசி, தகவல்கள் சேகரித்து இந்நூலை எழுதியிருக்கிறார். தன் புத்தகத்தை சுதீப் இவ்வாறு அறிமுகம் செய்துவைக்கிறார். 'இந்தியாவில் மாவோயிஸம் என்னும் தலைப்பில் வரலாறு எழுதும் எண்ணம் எனக்கில்லை. நான் அதற்குத் தகுதியானவன் அல்ல. இயக்கத்தின் வரலாறு, அதைச் சார்ந்தவர்களால் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. இனியும், எழுதப்படும்.'

முன்னுரையில் இருந்து ஒரு பகுதி.

'நம் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல், மாவோயிஸம் அல்ல. ஏழைமை, செயலற்ற அரசாங்கம், அநீதி, ஊழல் ஆகியவைதான். மூன்றில் ஒரு பகுதியில் மாவோயிஸ்டுகள் பரவியிருப்பது, நம் தோல்விகளைத்தான் பிரதிபலிக்கிறது. சரியாக நடத்தப்படாதவர்கள், வாழ்வாதாரம் மறுக்கப்பட்டவர்கள், அநீதி இழைக்கப்பட்டவர்கள் ஆகியோரே மாவேயிஸ்ட் இயக்கத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்த யதார்த்தங்களை மாவேயிஸ்ட் தலைவர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். எனவே, பலாத்கரத்தைப் பயன்படுத்தி இந்தச் சூழலை மாற்றலாம் என்று நம்புகிறார்கள்.'

வேறொரு இடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். 'இந்தப் புத்தகத்தில், இடது சாரி போராளிகளை, எந்தவொரு இடத்திலும் 'தொந்தரவு' என்றோ 'சாபம்' என்றோ 'பரவும் கிருமிகள்' என்றோ குறிப்பிடமாட்டேன். அவ்வாறு குறிப்பிட்டாகவேண்டும் என்றால், பெரும்பாலான இந்திய அரசாங்க அமைப்புகளையும் பல அதிகாரிகளையும் இதே பெயர்களில் அழைக்கவேண்டியிருக்கும்.'

இந்தியாவில் நக்சலிஸம் பரவியிருக்கும் பகுதிகள் பிற்படுத்தப்பட்ட, வளர்ச்சி குன்றிய பகுதிகளாக நீடிப்பது நிச்சயம் தற்செயலானதல்ல. இதனை இந்திய அரசாங்கமும் ஒப்புக்கொள்கிறது. மாவோயிஸத்தை முற்றிலுமாக வெறுத்தொதுக்கும் காவல்துறை அதிகாரிகள்கூட சில விஷயங்களை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார்கள். ஆம், அவர்களிடம் மக்கள் பலம் உள்ளது. ஏதுமற்ற ஏழைகள், குடியானவர்கள், விவசாயிகள், பழங்குடிகள், இளைஞர்கள், படித்தவர்கள் என்று பலரும் நக்ஸலைட்டுகளை ஆதரிக்கிறார்கள். அவர்களை வெற்றிகொள்வது சுலபமான காரியமல்ல. நக்சலிஸம், சட்ட ஒழுங்கு பிரச்னையல்ல.

சுதீப் சந்திக்கும் ஓர் அதிகாரியின் கருத்து இது. நக்சலிஸத்தை மிகப் பெரிய அச்சுறுத்தலாகக் காட்டுவதை இந்தியா விரும்பவில்லை. ஆமாம் அது ஒரு பிரச்னைதான் என்று மேம்போக்காக குறிப்பிடவே அரசு விரும்புகிறது. நக்சலிஸத்தைப் பற்றி அதிகம் விவாதிக்க ஆரம்பித்தால், அதிகம் கவலைப்பட ஆரம்பித்தால், பிரச்னையின் பின்னணியை ஆராயவேண்டியிருக்கும். ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம், பிகார், ஆந்திரா, ஜார்க்கண்ட் என்று இந்தியாவின் வளர்ச்சியற்ற பகுதிகள் குறித்து சிந்திக்கவேண்டியிருக்கும். அதை இந்தியா விரும்பாது. அதே சமயம், காஷ்மீர் குறித்தும் பாகிஸ்தான் குறித்தும் இந்தியா கவனம் செலுத்தும். காஷ்மீர் தீவிரவாதம் குறித்து உரத்து விவாதங்கள் நடத்தும். வெளி எதிரிகள் இருந்தால் பரவாயில்லை. உள் எதிரிகளை அங்கீகரிக்கக்கூடாது.

மாவோயிஸ்டுகள் யார்? சுதீப் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். 'மாவோயிஸ்டுகள் தேசபக்தி கொண்டவர்கள். அவர்களே இதனை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் தனி தேசம் கோரவில்லை. அது ஏற்கெனவே அவர்களிடம் உள்ளது. அவர்கள் நினைத்தபடி அது இல்லை என்பதுதான் விஷயம்.'

தற்போதைய மீடியா செய்திகளைப் பார்க்கும்போது, பெரிய அளவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் நடவடிக்கையை இந்தியா எடுத்து வருவதை யூகிக்க முடிகிறது.

புத்தகத்தை முழுவதுமாகப் படித்த பிறகு, மேலதிகம் எழுதுகிறேன்.