July 28, 2010

90,000 ஆப்கனிஸ்தான் போர் ஆவணங்கள்

ஆப்கனிஸ்தான் போர் குறித்து கிட்டத்தட்ட 90,000 ரகசிய ஆவணங்களை இணையத்தில் மொத்தமாக வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்ஸ் என்னும் அமைப்பு. அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் குறித்த பல உண்மைகள் இதிலிருந்து கசிய ஆரம்பித்துள்ளன.

அமெரிக்கா குறித்து இதுவரை வெளிவந்துள்ள ரகசியங்களில் இதுவே ஆகப் பெரியது என்கிறது விக்கிலீக்ஸ். அனைவருக்கும் விஷயம் போய் சேரவேண்டும் என்பதற்காக இந்த 90,000 ஆவணங்களையும் துறை வாரியாகப் பிரித்து, வகுத்து, சீர்படுத்தி அளித்திருக்கிறார்கள். எதையும் எடிட் செய்யவில்லை. அமெரிக்காவின் போர் தந்திரம், கொல்லப்பட்ட ஆப்கனிஸ்தான் மக்களின் சரியான எண்ணிக்கை, பாகிஸ்தானுடன் அமெரிக்கா செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தங்கள், சிஐஏவின் திரை மறைவு நடவடிக்கைகள், அரசியல் பேரங்கள், அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் என்று பலவற்றை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இணையத்தில் வெளியிடுவதற்கு முன்பு நியூ யார்க் டைம்ஸ், தி கார்டியன், டெர் ஸ்பீகல் (ஜெர்மன் பத்திரிகை) ஆகிய இதழ்களுக்கு இந்த ஆவணங்களைச் சில வாரங்களுக்கு முன்பே அனுப்பிவிட்டது விக்கிலீக்ஸ். ஒரு ரகசிய வெப்சைட்டில் ஆவணங்களை ஏற்றிவிட்டு, அவற்றை இறக்கிக்கொள்வதற்கான கடவுச்சொல்லை இந்தப் பத்திரிகைகளுக்குத் தனித்தனியே அளித்துவிட்டார்கள்.

இந்த ஆவணங்களில், 2004ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வரையிலான ஆப்கன் நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 11 தாக்குதலையடுத்து தீவிரவாதத்துக்கு எதிரான போரை அமெரிக்கா ஆப்கனிஸ்தானில் தொடங்கி வைத்தது. ஆப்கனில் ஒளிந்துகொண்டிருக்கும் ஒசாமா பின் லேடனையும் அல் காயிதாவையும் தாலிபன்களையும் அழித்தொழிக்கப்போகிறோம் என்னும் அறிவிப்புடன் இந்தப் போர் தொடங்கப்பட்டது. இறுதியில், ஆப்கனிஸ்தானை மட்டும்தான் அமெரிக்காவால் அழிக்கமுடிந்தது. இராக்கிலும் இதுவேதான் நிலைமை. பயங்கர ஆயுதம், பயலாஜிகல் ஆயுதம் எதையும் கண்டுபிடிக்காமல், சதாமை தூக்கிலேற்றிவிட்டு, இராக்கை தடையின்றி சூறையாடிவருகிறது அமெரிக்கா.

முன்னதாக, இராக் குறித்து விக்கிலீக்ஸ் ஒரு ரகசிய வீடியோ காட்சியை வெளியிட்டது. பாக்தாத் வானில் பறந்து செல்லும் அமெரிக்க அபாச்சி ஹெலிகாப்டர் ஒன்று, குண்டு வீசி 12 நபர்களைத் தகர்க்கிறது. இறந்தவர்களில் இருவர் ராய்டர்ஸ் செய்தியாளர்கள். பெரும் புகையுடன் குண்டு வெடித்து உடல்கள் வெளிச்சத்தில் சிதறுவதை ஹெலிகாப்டரில் அமர்ந்தபடி பார்த்து ரசிக்கிறார்கள் அமெரிக்க வீரர்கள். விடாதே, சுடு சுடு என்று உணர்ச்சி பொங்க கத்துகிறான் ஒருவன். ஹா, என் குறி தவறவில்லை என்று உற்சாகத்துடன் பதிலளிக்கிறான் இன்னொருவன்.

இந்த முறை, புஷ் அரசும் அமெரிக்க ராணுவமும் மேற்கொண்ட குற்றச்செயல்களுக்கான மிக விரிவான ஆதாரங்களை விக்கிலீக்ஸ் வெளிக்கொண்டுவந்துள்ளது. நீதிமன்றம்தான் இனி மேற்கொண்டு முடிவு செய்யவேண்டும் என்கிறார் விக்கிலீக்ஸ் அமைப்பின் நிறுவனரான ஜூலியன் அசான்ஜே. இந்த ரகசிய ஆவணங்களைக் கொண்டு வந்து சேர்த்தவர்கள் யார் என்னும் கேள்விக்கு அவர் விடையளிக்கவில்லை. மேற்கொண்டு 15,000 குறிப்புகள் கைவசம் இருப்பதாகவும் அவற்றை முழுவதுமாக ஆய்வு செய்த பிறகு வெளியிடுவதாகவும் அவர் உறுதியளித்திருக்கிறார்.

விக்கிலீக்ஸ், ஸ்வீடனில் இருந்து இயங்கி வரும் ஒரு சர்வதேச அமைப்பு. இது 2006ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பொதுமக்கள் நலன் சார்ந்து இயங்கும் இந்த அமைப்பு,
Whistle-blowers என்று அழைக்கப்படும் ரகசிய கண்காணிப்பாளர்களின் புலனாய்வு செய்திகளை இணையத்தில் ஆதாரத்துடன் வெளியிட்டு வருகிறது. பாதுகாப்பு காரணமாக, தகவல் அளிப்பவர்களின் பெயர் வெளியிடப்படுவதில்லை. விக்கிலீக்ஸைத் தொடங்கியவர் ஜூலியன் அசான்ஜே. இணையம் தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் பத்து லட்சத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை இந்த அமைப்பு சேகரித்துள்ளது.

அந்தப் பத்து லட்சத்தோடு இது இன்னொரு லட்சம். கடிதங்கள், வீடியோ காட்சிகள், உரையாடல்களின் ஆடியோ பதிவு, கடிதங்களின் நகல், கணிப்பொறியில் சேகரிக்கப்பட்டு வந்த குறிப்புகள், பட்டியல்கள், ராஜதந்திர மற்றும் ராணுவத் திட்டங்கள், பேச்சுவார்த்தைகளின் எழுத்து வடிவம் என்று பல வடிவங்கள் இதில் அடங்கும். கேபிள், ரேடியோ செய்திகளை இடைமறித்தும் பதிவு செய்திருக்கிறார்கள். கூடுதலாக, சிஐஏ உளவாளிகளின் குறிப்புகள், அமெரிக்கத் தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.

ஆப்கனிஸ்தான் போர் குறித்து அமெரிக்கா இதுவரை வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்க இந்த ஆவணம் போதும். குறிப்பாக, சிவிலியன் இழப்புகள் குறித்து அமெரிக்கா அள்ளி வீசும் புள்ளிவிவரங்களை இது தவிடுபொடியாக்குகிறது. ராணுவ மற்றும் போர் விதிமுறைகளை அமெரிக்கா பலமுறை மீறியுள்ளதையும் இந்த ஆவணங்களின் துணை கொண்டு அறிந்துகொள்ளமுடியும்.

அனைவரும் இந்த ஆவணங்களைப் பார்வையிடமுடியும் என்றாலும் அனைத்தையும் புரிந்துகொள்வது சாத்தியமில்லை. பல தகவல்களை டிகோட் செய்து பார்க்கவேண்டியிருக்கும். துண்டு, துண்டாக இருக்கும் பல உதிரித் தகவல்களை ஒன்றாக்கிப் புரிந்துகெள்வது அத்தனை சுலபமல்ல. அதாவது, இப்போது நமக்குக் கிடைத்திருப்பது அடிப்படைத் தகவல்கள் மட்டுமே. இதை ஆய்வு செய்து, செம்மைப்படுத்தி கோர்வையான ஓர் அறிக்கையை தயார் செய்யவேண்டியிருக்கும். அதற்கான பணிகள் ஆரம்பமாகிவிட்டன.

சரி, அமெரிக்கா இதை எப்படி எடுத்துக்கொண்டுள்ளது? எதிர்பார்த்தபடியே, வெள்ளை மாளிகை விக்கிலீக்ஸைக் கண்டித்துள்ளது. அமெரிக்காவின் நலன்களுக்கும் தோழமை நாடுகளின் நலன்களுக்கும் இந்த ஆவணம் ஊறு விளைவிக்கக்கூடியது என்கிறது வெள்ளை மாளிகையின் அறிக்கை. ஆனால், ஆவணங்கள் போலியானவை என்று அவர்களால் மறுக்கமுடியவில்லை. முழுவதையும் படித்துப் பார்த்து முடிவுக்கு வர சில வாரங்கள் தேவைப்படலாம் என்று நேரம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆப்கன் ரகசிய ஆவணம் மூன்று வகையான செய்திகளை அளிப்பதாக இதுவரை ஆராய்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்கா சொல்லி வந்த பல பொய்களை இந்த ஆவணங்கள் தோலுரித்துக்காட்டும். உதாரணத்துக்கு, தாலிபனோடு மோதும்போது அமெரிக்கா அடைந்த தோல்விகள் குறித்து இது வரை எந்தச் செய்தியும் வெளிவரவில்லை. இந்த ஆவணங்கள் அமெரிக்காவின் தோல்விகளைப் பட்டியலிடுகிறது. இரண்டாவது, பின் லேடன் பற்றிய குறிப்புகள். 2003ம் ஆண்டுக்குப் பிறகு அல் காயிதா தலைமை குறித்து எந்தவித உருப்படியான தகவலும் கிடைக்கவில்லை என்று சிஐஏ சொல்லியிருக்கிறது. ஆனால், ஆவணங்களைப் பார்க்கும்போது, 2006ம் ஆண்டு பின் லேடன் பாகிஸ்தானில் இருந்திருக்கிறார். அங்கிருந்து தன் படைகளை வழி நடத்தியிருக்கிறார். மூன்றாவது, அமெரிக்கவின் போர்க் குற்றங்கள்.

பாகிஸ்தானுக்கும் தாலிபனுக்கும் இடையில் நல்லுறவும் தொடர்பும் இருந்து வருவதை ஆப்கன் ஆவணம் நிரூபிக்கிறது என்கிறது அமெரிக்காவின் டைம்ஸ். பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐயும் தாலிபனை ஆதரித்தும் வளர்த்தும் வந்துள்ளது அதிர்ச்சியூட்டுகிறது என்று போலியாக வியப்பு தெரிவிக்கிறது டைம்ஸ். வேறு சில பத்திரிகைகளும் பாகிஸ்தானைப் பிரதானப்படுத்தி அதிர்ச்சியடைந்திருக்கின்றன. இன்றைய தி ஹிந்துவிலும் லெட்டர்ஸ் டு தி எடிட்டரில் பலர் பாகிஸ்தான் குறித்து அச்சப்பட்டிருக்கிறார்கள். இந்தியா நீண்ட காலமாகவே சொல்லிவருவதைத்தான் இந்த ஆவணங்கள் மெய்ப்பித்துள்ளதாம்.

உண்மையில், பாகிஸ்தானுக்கும் தாலிபனுக்கும் இடையிலான தொடர்பு குறித்து அதிர்ச்சியடைய வேண்டிய அவசியமே இல்லை. 1990களில் தாலிபானை வளர்த்து ஆளாக்கியது அமெரிக்காதான். தாலிபனை மட்டுமல்ல, அல் காயிதாவையும் அமெரிக்காதான் வளர்த்தெடுத்தது. பாகிஸ்தான் இந்த அமைப்புகளுக்கு உதவவேண்டும் என்பதும் ஒரு ஏற்பாடுதான். பின்னாள்களில், இதே பாகிஸ்தானின் உதவியுடன் அமெரிக்கா இந்த இரு அமைப்புகளையும் வேட்டையாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அமெரிக்காவைப் போல் பாகிஸ்தானால் அத்தனை சுலபத்தில் தன் வேடத்தை மாற்றிக்கொள்ளமுடியவில்லை. தாலிபனைப் பகைத்துக்கொள்வது சாத்தியமல்ல. அமெரிக்காவைப் பகைத்துக்கொள்வது புத்திசாலித்தனமானதல்ல. எனவே, ராஜதந்திர ரீதியில் (அமெரிக்கா இதை டபுள் கிராஸிங் என்று அழைக்கிறது) தன் இரு நண்பர்களுக்கும் பாகிஸ்தான் ஆதரவு அளிக்க முன்வந்தது. தாலிபனுக்குப் புகலிடம். தாலிபனைத் தாக்க வந்த அமெரிக்காவுக்கும் புகலிடம்.

இதில் ரகசியம் எதுவுமில்லை. ஆனாலும், திரை மறைவில் நடந்து வந்த சங்கதிகளை இப்படி பொதுவெளியில் அம்பலப்படுத்திவிட்டார்களே என்னும் கோபமும் வருத்தமும் பாகிஸ்தானை சூழ்ந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக்கொண்ட நிதியுதவி குறித்த தகவல்கள் பாகிஸ்தானைச் சங்கடப்படுத்தியுள்ளதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. விக்கிலீக்ஸ் ஆவணங்களை நம்ப வேண்டாம் இது முழுக்க முழுக்க கதை என்று மறுத்துள்ளது ஐஎஸ்ஐ.

ஒபாமா அரசுக்கு விக்கிலீக்ஸ் ஆவணம் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள் எதிர்பார்க்கின்றன. புஷ் காலகட்டத்தில்தான் ஆப்கன் யுத்தம் தொடங்கியது என்றாலும் இன்றைய தேதி வரை அந்த யுத்தத்தை நீட்டித்திருப்பவர் ஒபாமா. கூடுதலாக, முப்பதாயிரம் பேர் கொண்ட ஒரு படையை ஆப்கனுக்கு அனுப்பியதன் மூலம், புஷ்ஷின் கொள்கையும் தன் கொள்கையும் ஒன்றுதான் என்று அவர் நிரூபித்திருக்கிறார்.

ஆப்கன் குறித்த ரகசியங்கள் வெளிவந்துவிட்டதில் அமெரிக்காவுக்கு எந்தவித சங்கடமும் இருக்கப்போவதில்லை. யார் மூலமாக இந்த ரகசியங்கள் கசிந்திருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில்தான் ஒபாமா அரசு அதிக முனைப்பு காட்டி வருகிறது. இது தொடர்பான விசாரணைகளையும் முடுக்கிவிட்டிருக்கிறது. எப்படி ஓட்டைகளை அடைப்பது, இதுபோல் எதிர்காலத்தில் நிகழாமல் பார்த்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்னும் கேள்விகளுக்கு விடை காண அமெரிக்கா விரும்புகிறது. 90,000 பக்கங்கள் அல்ல 90,000 லட்சம் பக்க ஆவணங்களைத் திரட்டி வந்து அம்பலப்படுத்தினாலும் அமெரிக்காவின் பாதை மாறப்போவதில்லை.

பாகிஸ்தானின் மறுப்புக்கும் அமெரிக்காவின் கண்டனத்துக்கும் இடையில் சிக்கி சிதிலமடைந்து கொண்டிருக்கிறது ஆப்கனிஸ்தான். விக்கிலீக்ஸ் ஆவணம், இந்தச் சிதிலத்தின் ஆழத்தையும் கொடுமையையும் நம் கண் முன் கொண்டு வருகிறது.

அபு காரிப் சிறைச்சாலையின் கதவுகள் மீண்டும் நமக்காகத் திறக்கப்பட்டுள்ளன.

ஆதாரம்:

1) விக்கிலீக்ஸ்
2) ரகசிய ஆவணங்கள்
3) பாக்தாத் படுகொலை வீடியோ
4) U.S. Military Equipment 2007
5) Afghanistan, the CIA, bin Laden, and the Taliban
6) Plugging the Leaks
7) Explosive Leaks Provide Image of War from Those Fighting It
8) Pakistani agents 'aiding Taliban'
9) Afghanistan war leak papers will take 'weeks to assess'
10) The WikiLeaks Papers and the Pakistani Intelligence–Taliban Connection

14 comments:

Anonymous said...

CLICK AND READ

ரகசிய வீடியோ: ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் மிஷனரிகள்

-----------------------

Anonymous said...

@marudhan

go to layout.click editoption whic is at the bottom of the page elementblog posts.drag the label and place it below the post title. click saveand look your blog.if the label doesnt appear just below post title there is a trick. just go to new template section.pick up the first templatein itthat isblue color simple template. click apply template. then once againswitch back to your current template. labels will appear just below post title.

Anonymous said...

Excellent, Keep up your good writing always

சுதிர் said...

மருதன் நேற்று ஹிண்டுவில் இந்த செய்தி பார்த்தேன். இது பற்றி நீங்க்ள் விரிவாக எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. ஆழமான அலசல். இணைப்புகளுக்கு கூடுதல் நன்றி

no-nononsense said...

தகவல்களை திரட்டி எளிமையாக புரியும்படி சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.

இது வல்லான் வகுத்து வைத்துள்ள வாய்க்கால். இதில் அவர்களுடன் ஒத்திருக்கலாமே தவிர ஒதுங்கியிருக்க முடியாது. பிறகு You're either with us, or against us என்னும் பிரத்யேக சட்டம் பாயும். கேள்விமுறை கிடையாது. யோசித்து பார்த்தால், சமூக அடுக்குகளின் அடி முதல் முடி வரை எல்லா மட்டங்களிலும் அந்தந்த இடங்களுக்கு ஏற்றபடி இதுபோல் அதிகாரமும், பணபலமுமே ஆட்சி செய்கின்றன. மனிதர்களானாலும் கார்ப்போராட்களானாலும், இல்லை, அரசாங்கங்களேயானாலும் இது உலக பொது விதியாக உள்ளது.

அமெரிக்காவின் போர் குற்ற ரகசியங்கள் வெளிப்பட்டதில் வேறு ஒரு பிரச்னை இருப்பதாக தோன்றுகிறது. இலங்கை போன்ற நாடுகளின் போர் குற்றங்கள் பற்றிய புகார்கள் இனி சர்வதேச அரங்கில் பெரிதாக எடுபடாது. அதை முன்னெடுத்தவர்களின் முயற்சிக்கு இந்த விக்கிலீக் ஒரு பின்னடவை தருவதாக அமையக் கூடும்.

மருதன் said...

உண்மைதான். புஷ்பராஜ். அமெரிக்காவின் போர்க் குற்றங்களுக்கும் இலங்கையின் போர்க குற்றங்களுக்கும் தண்டனை கிடைக்கப்போவதில்லை. எத்தனை ஆயிரம் ஆதாரங்களை அடுக்கினாலும், இவர்களை யாரும் எதுவும் செய்துவிடமுடியாது. இது அவர்களுக்கும் தெரியும்.

போர்க் குற்றங்கள் இனி குற்றங்களே கிடையாது என்று ஐ.நா அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Anonymous said...

வெள்ளிப்பனித்துளிகளிலும் இப்படியேத்தான்... சிறியதை பெரியது விழுங்கி விடுகிறது-
zen poetry by kobayashi issa
தமிழில்- யுவன் சந்திரசேகர்.

Anonymous said...

hi marudhan,

i have started a blog. see this http://thaanthonry.blogspot.com/

if you like its appearance and if u want its template code tell me. i will send its template code to you.

(note: by having this template your blog will have a great professional look...only this template in my new blog is suitable for a jounalist. it has a great width. it has pages below header. you can create upto 10 pages at maximum. u can have archive and site map as pages. also u can have 2 floating tabs one for archive and another for site map. also u dont need to have subscribe via email as a box format. u can have it as a link format as in this blog of me. if u want to know all details tell me here. i will email you.)

Anonymous said...

ஐயா மருதன் அவர்களே எனக்கு ஒரு சந்தேகம் அமெரிக்கா போர் புரிவதற்க்கு முன்னால் ரஷ்யா எதற்க்காக ஆப்கானிஸ்தானுடன் போர் செய்தார்கள்?
தயவுசெய்து விளக்கவும்.

Anonymous said...

Subject: make blogger in Draft your default dashboard.

hi, google has launched stats for blogger. before launching it into blogger dot com google has kept this feature in draft dot blogger dot com. visit draft dot blogger dot com. login into it. then in the dashboard u can see an option at the top as "make blogger in draft my default dashboard". there is a small box before it. check mark it. then click stats in it. u can view your stats in it.

note this too:(u can set up google analytics for your blog. for that u need to visit googleanalytics dot com)

Kutti said...

Just now i started to read your blogs. Really good. How can i write my comments in Tamil.

Anonymous said...

http://www.blogbulk.com/2009/02/add-icons-to-post-footer-elements.html


using this link add the 5 words 'Email this to your friends'

aLSO U CAN PLACE AN ICON FOR FOOTER ELEMENTS..FOR ICONS VISIT ICONFINDER.COM

Anonymous said...

http://www.anshuldudeja.com/2009/11/how-show-post-date-for-blogger-posts.html

if u publish more than one post in a same day blogger dont show dates for all of them. use this link to show dates for all post titles being published on a same day

ISR Selvakumar said...

மிக எளிமையாக, அனைவரும் புரிந்து கொள்ளும்படி எழுதியுள்ளீர்கள்.