August 20, 2010

பிரிட்டிஷ் பேரரசு - 2

ஆங்கிலோ சாக்ஸன் காலத்தில் இருந்தே (கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு) பல நூற்றுக்கணக்கான நீதிமன்றங்கள் இங்கிலாந்தில் செயல்பட்டு வந்தன என்றாலும் அவை நடுநிலைமையுடன் இருந்ததில்லை. ஒரே நாட்டில், ஒரு பகுதியி்ல் செல்லுபடியாகும் ஒரு சட்ட விதி இன்னொரு பகுதியில் செல்லுபடியாகாது. ஒருவன் குற்றவாளியா, நிரபராதியா என்பது தீர்ப்பு வாசிப்பவரின் மனநிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். மேலும், அரசர் சொல்வதுதான் இறுதித் தீர்ப்பு.

1154ம் ஆண்டு இரண்டாம் ஹென்றி இங்கிலாந்தின் அரசராகப் பதவியேற்றார். முதல் முறையாக, நிர்வாகம், ஆட்சிமுறை, சட்டம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதில் இவர் ஆர்வம் காட்டினார். அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களை (Castles) அகற்றினார். வரி வசூலிக்கும் போக்கைச் சீராக்கினார்.

வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க ராஜாங்க நீதிபதிகளை இவர் நியமித்தார். இவர்களுக்குப் போதிய அதிகாரத்தையும் வழங்கினார். வழக்கு விசாரணை தொடர்பான சில பொதுவான விதிமுறைகளை இந்த நீதிபதிகள் உருவாக்கினர். இதற்கு மேல் என்ன எதிர்பார்க்கவேண்டும் என்று மக்களுக்குத் தெரியவில்லை. நமக்குக் கிடைப்பது சாதாராண நீதி அல்ல, ராஜ நீதி என்று அவர்கள் திருப்தியடைந்தனர்.

அதே சமயம், ஐரோப்பா ரோமானிய சட்டங்களைத் தூசி தட்டி எடுத்து பயன்படுத்த ஆரம்பித்திருந்தது. ரோமானிய சட்டமே நாகரீகமானது, புதுமையானது என்று ஐரோப்பா நம்பியது. ஒருவன் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிபதி முடிவு செய்யமாட்டார். குற்றம் சாட்டப்பட்டவனே குற்றத்தை ஒப்புக்கொள்ளவேண்டும். அல்லது, அவன் குற்றம் இழைத்ததை நேரில் பார்த்த இரு சாட்சியங்கள் வேண்டும். இது எழுதப்பட்ட சட்டம். பார்ப்பதற்கு நவீனமாகவும் இருந்தது. ஆனால், நடைமுறையில் எந்தக் குற்றவாளி தன் தண்டனையை ஒப்புக்கொள்கிறான்? இரண்டு பேரை பக்கத்தில் வைத்துக்கொண்டு யார் தவறு இழைக்கிறார்கள்? எனவே, சட்டத்துககு ஏற்றவாறு நடைமுறையை மாற்றிக்கொண்டார்கள். அதாவது, குற்றவாளி தன் வாயால் தண்டனையை ஒப்புக்கொள்ளும்வரை அவன் துன்புறுத்தப்பட்டான்.


ஓர் உதாரணம். பதினான்காம் நூற்றாண்டில், பிரான்ஸில் டெம்ப்ளார் இயக்கம் செல்வத்துடனும் செல்வாக்குடனும் இருந்துவந்தது. இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை அழிக்க விரும்பிய பிரான்ஸ் மன்னன் நான்காம் ஃபிலிப், அவர்களைக் கைது செய்து துன்புறுத்தினான். இவர்கள் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள், எனவே அழிக்கப்படவேண்டியவர்கள் என்று ஒரு காரணத்தையும் சொன்னான். மன்னனின் நடவடிக்கைகளுக்கு தேவாலயத்தின் ஆதரவும் ஆசிர்வாதமும் கிடைத்தது. பிடிபட்டவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்வரை சித்திரவதை செய்யப்பட்டனர்.

நூலாசிரியர் ஹாரி பிங்கமின் வாதம் இது. அதாவது, ஐரோப்பாவின் சட்டங்களைக் காட்டிலும் இங்கிலாந்து சட்டம் மேலானதாக இருந்தது. ஐரோப்பா குற்றவாளிகளைத் துன்புறுத்தியது. ஆனால், இங்கிலாந்து அவ்வாறு செய்யவில்லை. ஆயிரம் ஓட்டைகள் இருந்தாலும், குற்றவாளிகளைச் சித்திரவதை செய்யும் வழக்கம் இங்கிலாந்தில் எப்போதும் இருந்ததில்லை.

ஹாரி அதிகம் சொல்லாமல் விட்டது தேவாலயங்கள் இங்கிலாந்து மன்னர்கள் மீது செலுத்திய ஆதிக்கத்தைப் பற்றி. ஐந்தாவது போப் க்ளமெண்ட், இரண்டாம் எட்வர்டுக்கு எழுதிய கடிதத்தைப் பாருங்கள். 'எங்கள் நாட்டுக்கு ஒத்துவராது என்று சொல்லி சித்திரவதையை நீ தடை செய்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், எந்தவொரு நாடும் தேவாலயத்தின் சட்டத்தை மீறி செயல்படமுடியாது. நீ உடனே இவர்களை (கடவுளுக்கு எதிராகச் செயல்படுபவர்கள்)சித்திரவதைக்கு உட்படுத்தவேண்டும் என்று ஆணையிடுகிறேன்.' தேவாலயத்தைப் பகைத்துக் கொள்வது ஆபத்தானது என்பதை உணர்ந்த எட்வர்ட், கைதிகளைச் சித்திரவதை செய்ய உத்தரவிட்டார். ஒருவன் தேவாலயத்துக்கு எதிரானவன் என்று சந்தேகிக்கப்பட்டால், அவன் சித்திரவதை செய்யப்படலாம், கொல்லப்படலாம். இங்கிலாந்து சேர்த்து ஐரோப்பா முழுவதும் அமலில் இருந்த எழுதப்படாத சட்டம் இதுதான். தேவாலயத்தின் செல்வாக்கு நீடித்தவரை இந்தச் சட்டமும நீடித்தது.

(தொடரும்)

6 comments:

Anonymous said...

i have a doubt...do you know tamil typing? or do you type tamil in english? i type in http://tamileditor.org/


if i type anbu in english it will convert it into அன்பு directly...

மருதன் said...

http://software.nhm.in/

நான் NHM Writer பயன்படுத்துகிறேன். இதில் old typewriting, phonetic இரண்டும் உள்ளது. நான் தமிழ் டைப்ரைட்டிங் பயின்றிருக்கிறேன். எனக்கு அதுதான் வசதியாக இருக்கிறது.

சுதிர் said...

பிரிட்டன் பற்றிய தொடர் நன்றாக இருக்கிறது மருதன்

தனபால் said...

மேக்னா கார்டா பற்றி எதுவும் இல்லையே. பிரிட்டிஷ் அரசின் முக்கியமான கான்ட்ரிபுஷன் அல்லவா அது??

மருதன் said...

தனபால், அடுத்து Magna Carta பற்றிதான் எழுதப்போகிறேன்.

Anonymous said...

3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்

http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html