November 9, 2010

முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டங்கள் - 2


1

முதலாளித்துவமும் காலனியாதிக்கமும் கைகோர்த்துக்கொண்டு சூறையாடிய ஒரு கண்டம், ஆப்பிரிக்கா. ஆப்பிரிக்கா பொருளாதார ரீதியில் பின்தங்கிய கண்டம் என்பதை நிரூபிக்க ஆய்வுகளோ புள்ளிவிவரங்களோ ஆதாரங்களோ தேவைப்படாது. ஆனால், ஆப்பிரிக்கா ஏன் அவ்வாறு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மேலோட்டமாக அல்ல விலாவரியாகவும் ஆழமாகவும் அந்தக் கண்டத்தின் சரித்திரத்தை ஆராய வேண்டியிருக்கிறது. வால்டர் ரூட்னி 1973ல் எழுதி வெளியிட்ட How Europe Underdeveloped Africa என்னும் நூல் நான்கு முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. இந்தக் கேள்விகளுக்கு விடைகளைக் கண்டறியாமல் ஆப்பிரிக்காவை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது.

1) ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னால் ஆப்பிரிக்கா எவ்வாறு இருந்தது?
2) ஐரோப்பாவில் முன்னேற்றங்கள் எவ்வாறு ஏற்பட்டன?
3) ஐரோப்பாவின் இன்றைய வளமான நிலைமைக்கு ஆப்பிரிக்காவின் பங்கு என்ன?
4) ஆப்பிரிக்காவின் இன்றைய பின்தங்கிய நிலைக்கு ஐரோப்பாவின் பங்களிப்பு என்ன?

தங்கள் பங்களிப்புக்கு முன்னால் ஆப்பிரிக்கா புதிரான, இருண்ட, பின்தங்கிய பிரதேசமாக இருந்தது என்று ஐரோப்பியர்கள் சரித்திரத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். நாகரிகம் அற்ற சமூகம். பின்தங்கிய, பிற்போக்கான மக்கள். ஆடைகள் அணியக்கூட பழகாத பழங்குடிகள். இலை, தழைகளை மேய்ந்து கொண்டு, விலங்குகளை வேட்டையாடி தின்று, விசித்திர மொழிகள் பேசி, விநோத சடங்குகள் நடத்தி, புதிரான கடவுள்களை வணங்கி எப்படியோ அவர்கள் உயிர்த்திருந்திருக்கிறார்கள். கல்வி கிடையாது. கலாசாரம் கிடையாது. பண்பாடு கிடையாது. விலங்குகளைவிட சற்றே மேம்பட்டவர்கள். ஆனால், நிச்சயம் ஐரோப்பியர்களைப் போன்ற மனிதர்கள் கிடையாது.

எப்படி இந்த முடிவுக்கு ஐரோப்பா வந்து சேர்ந்தது? எந்த அடிப்படையில்? ஆப்பிரிக்காவின் வரலாறு என்பது மனித குலத்தின் ஆதி வரலாறு. பழைமையானது. வளமானது. ஆப்பிரிக்காவின் நிலப்பரப்புகளில், மலைகளில், நீர் நிலைகளில், அடர்ந்த கானகங்களில் பல்வேறு விதமான உயிர்கள் தோன்றி, வளர்ந்து, செழிப்படைந்துள்ளன. இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித குலம் தோன்றியது இங்கேதான். இயற்கையை அறிந்துகொண்டு, இயற்கையோடு இணைந்து வாழ்ந்து மனிதர்கள் முன்னேற்றம் கண்டது இங்கேதான்.

ஒருவகையில், ஆப்பிரிக்கா ஒரு தீவும்கூட. மேற்கு ஆசியாவோடு ஆப்பிரிக்கா தொட்டு இணையும் பகுதி மிகவும் மெல்லியது. மேற்குலகம் ஆப்பிரிக்காவுக்குள் ஊடுருவியது இந்த நுழைவாயிலின் மூலமாகத்தான்.

கி.மு. நான்காம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில் எகிப்திய நாகரிகம் மலர்ச்சியடைந்தது. ஆப்பிரிக்கா குறித்த எழுத்துப்பூர்வமான வரலாறு இங்கிருந்துதான் தொடங்குகிறது. ஃபேரோக்களின் கீழ் எகிப்து செழிப்பாகவும் வளமாகவும் இருந்தது. அடுத்த பல நூற்றாண்டுகளில், நைல் நதிக்கரையில் ஆப்பிரிக்க சமூகம், பல்வேறு விதமான வளர்ச்சி நிலைகளை அடைந்தது. பிறகு, ஆக்கிரமிப்புகள் ஆரம்பித்துவிட்டன. கி.மு. 700ல், ஃபொனீஷியர்கள் * (Phoenicians) வடக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியைக் கைப்பற்றினர். கார்த்தேஜ் என்னும் நகரம் நிறுவப்பட்டது. (* ஃபொனீஷியா என்பது இன்றைய லெபனான். இப்போதைய இஸ்ரேல், பாலஸ்தீனம், சிரியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது அன்றைய ஃபொனீஷியா). மத்தியத்தரைக்கடல் பகுதி முழுவதிலும் ஃபொனீஷியர்கள் கப்பல் வணிகம் செய்து தனி ராஜாங்கம் நடத்தி வந்தனர். கி.மு. 664ல் அசிரீரியர்கள் எகிப்தைக் கைப்பற்றினர்.

ஏழாம் நூற்றாண்டில் இருந்து எகிப்தின் ஆட்சிமுறை மாறிப்போனது. ராணுவ ரீதியான ஒடுக்குமுறை ஆரம்பித்தது. அத்துடன், எகிப்தின் வளங்கள் சிறிது சிறிதாக எகிப்தைவிட்டு அபகரிக்கப்பட்டன. உணவு, கலைப் பொருள்கள், விலை மதிப்பற்ற கற்கள் என்று பலவும் எகிப்தில் இருந்து களவாடப்பட்டன. நிலத்தை நம்பி பிழைத்து வந்த ஆப்பிரிக்கர்கள் தடுமாறினார்கள். நிலப்பிரபுக்கள் கூட்டம் உருவானது. பூர்விக நிலங்கள் பறிக்கப்பட்டன. முன்னர், நிலங்கள் அரசாங்கத்தின் வசம் இருந்தன. வேளாண்மை செய்யும் குழுக்களுக்கு நிலம் வாடகைக்கு அளிக்கப்பட்டிருந்தது. இப்போது, அதிகாரம் செலுத்தும் நிலப் பிரபுக்களிடம் நிலம் குவிந்துபோனது. பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில், எகிப்தின் நிலப்பரப்பு கிட்டத்தட்ட முழுமையாக எகிப்தியர்களிடம் இருந்து களவாடப்பட்டிருந்தது.

என்றால், நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை பலமடங்கு பெருகிப்போனது என்று அர்த்தம். விவசாயிகள் இப்போது விவசாய கூலிகளாக மாற்றப்பட்டிருந்தனர். இவர்கள் ஞூஞுடூடூச்டடிண என்று அழைக்கப்பட்டனர். ரஷ்யாவில் பண்ணையடிமைகள் பின்னாள்களில் பட்ட துன்பங்களைக் காட்டிலும் அதிக துன்பத்தை இந்த எகிப்திய ஃபெலாஹின்கள் அனுபவித்தனர். உற்பத்திக்காக மட்டுமே அவர்களைப் பயன்படுத்திக்கொண்டது ஆளும் வர்க்கம். அவர்கள் உருவாக்கும் விளைபொருள்களின் பெரும் பகுதி அவர்களிடம் இருந்து பறித்துக்கொள்ளப்பட்டது. அது தவிர, வரிகளும் சுமத்தப்பட்டன. வரி செலுத்தாத விவசாயிகள் துன்புறுத்தப்பட்டனர்.

விவசாயிகளுக்கும் நிலப்பிரப்புகளுக்கும் இடையில் பல மோதல்கள் வெடித்தன. எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட சில மோதல்கள் குறித்த வரலாற்று சாட்சியங்கள் இன்று காணக்கிடைக்கின்றன. அதே சமயம், சமூகத்தில் சில சாதகமான மாற்றங்களும் ஏற்பட்டன. அறிவியலும், தொழில்துறையும் வளர்ச்சி காண ஆரம்பித்தது. பத்தாம் நூற்றாண்டில், பெர்ஷியாவில் இருந்து காற்றாலைகள் தருவிக்கப்பட்டன. காகித தயாரிப்பு ஆலைகள், சர்க்கரை ஆலைகள் உருவாயின. முன்னரே செயல்பட்டுக்கொண்டிருந்த பருத்தி, தோல், இரும்பு ஆலைகள் முன்னேற்றம் கண்டன. Ayyubids, Mamluks சாம்ராஜ்ஜியங்கள் ஆட்சி செய்த காலத்தில், ஐரோப்பாவுடன் வர்த்தக உறவுகள் வளர்க்கப்பட்டன. தொழில்நுட்பங்கள் பலவற்றை எகிப்து ஐரோப்பாவுக்கு அளித்தது. பெற்றும்கொண்டது. பாலங்கள், அணைகள் கட்டப்பட்டன.

கிராமப்புறங்களை அழித்து, நகரங்கள் முன்னேற்றப்பட்டன. விவசாயிகள் சுருங்கியபோது, நகரவாசிகள் மேன்மையடைந்தனர். கெய்ரோ உருவாக்கப்பட்டது. உலகின் மிகப் பிரபலமான, நாகரிகமான நகரமாக கெய்ரோ புகழ் பெற்றது.

2

ஐரோப்பா முதலாளித்துவ பாதையில் முன்னேற ஆரம்பித்த சமயம், ஆப்பிரிக்கா நிலப் பிரபுத்துவ சமூகத்தில் உழன்றுகொண்டிருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்த சில வரலாற்றாளர்கள் அப்போதைய ஆப்பிரிக்காவையும் ஐரோப்பாவையும் சுற்றிப் பார்த்துவிட்டு தெரிவித்த கருத்து முக்கியமானது. ஐரோப்பாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. தென்படும் வித்தியாசங்கள் எதுவும், ஆப்பிரிக்காவை நாகரிகம் குன்றியதாக காட்டவில்லை. கடல் வழியாக, மேற்கு, கிழக்கு ஆப்பிரிக்காவை முதல் முதலாக வந்தடைந்த ஐரோப்பியர்களும் இதையேதான் சொல்கிறார்கள். அவர்கள் இதுவரை அறிந்து வைத்திருந்த முன்னேற்றங்களையே ஆப்பிரிக்காவிலும் அவர்கள் கண்டிருக்கிறார்கள்.

ஆக, முதல் கேள்விக்கான விடையை நாம் கண்டறிந்துவிட்டோம். ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னால் ஆப்பிரிக்கா, கிட்டத்தட்ட அப்போதைய ஐரோப்பாவையே ஒத்திருந்தது. முன்னேற்றம் ஒரு பக்கம். சுரண்டல் ஒரு பக்கம். செல்வம் ஒரு பக்கம். ஏழைமை ஒரு பக்கம். நிலவுடைமை ஒரு பக்கம். வறுமை ஒரு பக்கம். இருப்பவர்களையும் இல்லாதவர்களையும் பிரிக்கும் அதே அழுத்தமான கோடுதான் ஆப்பிரிக்காவையும் இரண்டாகப் பிரித்து வைத்திருந்தது.

பதினைந்தாம் நூற்றாண்டில் பிற்பகுதியில், ஐரோப்பாவும் ஆப்பிரிக்காவும் தொழில் ரீதியாக ஒன்றையொன்று நெருங்கி வந்தது. முதல் முயற்சி ஐரோப்பாவால் மேற்கொள்ளப்பட்டது. உலகத்தின் பிற பகுதிகளுடன் வர்த்தகம் செய்வது தவிர்க்க இயலாதது என்பதை ஐரோப்பா உணர்ந்திருந்தது. புதிய நிலங்களைக் கண்டுபிடிக்கவேண்டும். புதிய சந்தைகளை உருவாக்கவேண்டும். புதிய முறையில் லாபத்தைப் பெருக்கவேண்டும். எனவே, சர்வதேச வர்த்தக உறவு அவசியம்.

கடலில் இருந்து தொடங்கினார்கள். உலகம் முழுவதும் சுற்றி வரவேண்டுமானால் கடல் பாதை கைகூடவேண்டும். உலகின் பெரும்பாலான கப்பல்கள் ஐரோப்பாவிடம் இருந்ததால் லட்சியம் விரைவில் கைகூடியது. மேற்கு மத்தியத்தரைக்கடல் தொடங்கி, வடக்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கரை வரை வளைத்துப்போட்டுக்கொண்டார்கள். 1415ல் போர்த்துகீசியர்கள் கிப்ரால்டருக்கு அருகே உள்ள Ceuta என்னும் பகுதியை கைப்பற்றி, ஆப்பிரிக்காவின் வட மேற்கு பகுதியை தாக்க ஆரம்பித்தார்கள். அடுத்த அறுபது ஆண்டுகளில், Arzila, El-Ksar-es-Seghir, Tangier ஆகிய துறைமுகங்கள் கைப்பற்றப்பட்டன.

விரைவில், மொராக்கோவின் அட்லாண்டிக் கரையை போர்த்துகீசியர்கள் கையகப்படுத்தினார்கள். அதிகாரம் செலுத்தவும் ஆரம்பித்தனர். மொராக்கோவில் இருந்துகொண்டே, மொராக்கோவின் வளங்களைக் கொண்டே, மேலும் முன்னேறினார்கள். 1495ல் நம்பிக்கை முனை வரை கப்பல்கள் மிதந்து சென்றன. இந்தியப் பெருங்கடலையும் அடைந்தனர். நோக்கம், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள அராபியர்களை வீழ்த்தி அவர்கள் இடத்தைப் பிடிப்பது.

பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டில் இது சாத்தியமானது. இந்தியாவோடு வர்த்தக ரீதியில் கிழக்கு ஆப்பிரிக்கா இணைக்கப்பட்டது. கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து தந்தங்களை இந்தியாவுக்குக் கொண்டு சென்று விற்றார்கள். இந்தியாவில் இருந்து ஆடைகளும் மணிகளும் கொண்டு வரப்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் விற்கப்பட்டன. போர்த்துகீசியர்களோடு, டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்கார்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரும் வர்த்தகத்தில் இறங்கினர்.

விரைவில், ஆப்பிரிக்காவும் ஆசியாவும் ஐரோப்பாவின் தொழில் கேந்திரங்களாக மாறிப்போயின.

3

ஆப்பிரிக்காவின் வரலாறு என்பது பொதுவாக, வெள்ளை இனத்துக்கும் கறுப்பர் இனத்துக்கும் இடையிலான போராட்டங்களின் வரலாறாகவே தொகுக்கப்படுகிறது. இது தவறான அணுகுமுறை அல்ல. அதே சமயம், முழுமையான அணுகுமுறையும் அல்ல. ஆப்பிரிக்காவில் நிறவெறி உச்சத்தில் இருந்தது நிஜம். உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கறுப்பின மக்கள் ஒதுக்கிவைக்கப்பட்டனர். அடிமைப்படுத்தப்பட்டனர். அவமானப்படுத்தப்பட்டனர். அதே சமயம், தத்துவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்தப் பிரச்னையை அணுகும்போது, மற்றுமொரு கோணம் புலப்படுகிறது. அது, முதலாளித்துவம். நிறவெறியின் காரணமாக மட்டும் ஆப்பிரிக்கர்கள் ஒடுக்கப்படவில்லை. அவர்களது உழைப்புச் சக்தியும் களவாடப்பட்டது. எனவே, ஆப்பிரிக்காவின் வரலாறை முதலாளி வர்க்கத்துக்கும் உழைக்கும் வர்க்கத்துக்கும் எதிரான போராட்டங்களின் வரலாறாகவும் பார்க்கமுடியும்.

பொருளாதார மேம்பாட்டுக்காக வெள்ளையின முதலாளிகள், கறுப்பின தொழிலாளர்களின் உழைப்பை அபகரித்து, பொருள் சேர்த்தனர். முதலாளிகளின் தனிச்சொத்து வளர்ந்தது. முதலாளிகளின் தேசங்கள் செழுப்படைந்தன. ஆப்பிரிக்க உழைக்கும் மக்கள் தீரா ஏழைமையில் தள்ளப்பட்டனர்.

1910ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க ஐக்கியம் உருவானது தொடங்கி, முதலாளித்துவம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. முதலாளித்துவத்துவ உற்பத்தியை பெருக்க, சில தனிப்பட்ட சட்டங்கள் இயற்றப்பட்டன. உதாரணத்துக்கு, லேண்ட் பேங்க் சட்டம், வெள்ளை விவசாயிகளுக்கு மட்டும் மானியம் வழங்குமாறு பரிந்துரை செய்கிறது. மானியம் வழங்கும் பொறுப்பு இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் என்னும் அமைப்புக்கு அளிக்கப்பட்டது.

அரசாங்கமும், அரசு சார்ந்த அமைப்புகளும் ஆப்பிரிக்கர்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்குச் சாதகமாகவும் செயல்பட்டன. நோக்கம் ஒன்றுதான். தொழிலாளர்கள் எந்தவித பிரச்னையையும் எழுப்பாமல் கடுமையாக உழைக்கவேண்டும். உற்பத்தியை பெருக்கவேண்டும். முதலாளிகள் திருப்தியடையும் வகையில் லாபத்தை பெருக்கவேண்டடும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற, காவல்துறை, ராணுவம், சிறைச்சாலை, நீதிமன்றம் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டன. வேலை செய்ய மறுக்கும் அல்லது தப்பியோட முயலும் தொழிலாளர்களைக் காவல்துறையினர் கவனித்துக்கொண்டனர். நீதிமன்றங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக மட்டுமே தீர்ப்பளித்தன. தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு, வேலை நிறுத்தம், போராட்டம் என்று துணிந்தபோது, படைகள் விரைந்து வந்து இரும்புக்கரம் கொண்டு நசுக்கின.

இங்கே ஒன்றை கவனிக்கவேண்டும். தொழிலாளர்கள் என்று இங்கே குறிப்பிடப்படுபவர்கள் கறுப்பினத்தவர் மட்டுமல்ல. வெள்ளையின தொழிலாளர்களும் இந்த அடக்குமுறைகளுக்கு ஆளாயினர். இங்கே நிறபேதம் கிடையாது. முதலாளிக்கு அடங்கி நடக்காத, சரியாக பணியாற்றாத வெள்ளையின தொழிலாளர்கள் கறுப்பின தொழிலாளர்களைப் போலவே தண்டிக்கப்பட்டனர்.

வெள்ளையின தொழிலாளர்கள் நிகழ்த்திய சில போராட்டங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லாம். 1914ல் நடைபெற்ற வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போõராட்டம். 1922ல் நடைபெற்ற பொது வேலை நிறுத்தம் (Rand Revolt). 1946ல் நடைபெற்ற ஆப்பிரிக்க சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம். 1972ல் நடந்த ஒவாம்போ (Ovambo) தொழிலாளர்கள் வேலைநிறுத்தம். இந்தப் போராட்டங்களில் கறுப்பின தொழிலாளர்கள் மட்டுமல்ல, வெள்ளையின தொழிலாளர்களும் பங்கேற்றனர். அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராக வேலைநிறுத்தங்கள் நடத்தினார்கள்.

4


டிசம்பர் 7, 1917ல் தி இண்டர்நேஷனல் என்னும் இதழில், தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட பிரகடனம் முக்கியமானது. சில முக்கிய அம்சங்கள்.

‘நம் சமூகம் இரண்டாகப் பிளவுபட்டு கிடக்கிறது. உழைப்வர்கள், உழைக்காதவர்கள். உழைக்காதவர்கள், தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், இது வர்க்கப் பிரச்னைதான். எனில், இங்கே நிறம் பிரச்னைக்குரியதாக இல்லையா? இருக்கிறது. எல்லா நாடுகளிலும் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறது. எல்லா நாடுகளிலும் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தையே, தங்கள் உழைப்பின் மதிப்பைவிட வெகு குறைந்த கூலியையே பெறுகிறார்கள்.

மற்ற நாட்டுத் தொழிலாளர்களுக்கும் தென் ஆப்பிரிக்கத் தொழிலாளர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இங்கே, நிறம் கூடுதல் பிரச்னை. வெள்ளைத் தொழிலாளர்களுக்கு தரப்படும் ஊதியம் கறுப்பினத்தவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. தொழிலாளர் வர்க்கத்தில் இவர்கள் அடித்தட்டில் வைக்கப்பட்டனர். வெள்ளைத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கறுப்பின தொழிலாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதனால், வெள்ளை தொழிலாளர்கள் கறுப்புத் தொழிலாளர்களை விரோதிகளாகப் பார்த்தனர். இந்த விரோதம் கறுப்பின தொழிலாளர்களை மட்டுமல்ல வெள்ளையின தொழிலாளர்களையும் பாதிக்கிறது.

கறுப்பர்கள் அடிமைகளாக நீடிக்கையில், வெள்ளையின தொழிலார்கள் மட்டும் தனித்து விடுதலை பெற்றுவிடமுடியாது. அனைத்து தொழிலாளர்களும் கரம் கோர்த்து செயலாற்றினால்தான் இது சாத்தியமாகும். நிறத்தின் அடிப்படையில் அல்ல வர்க்கத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் ஒன்றிணையவேண்டும். நாம் அனைவரும் ஒரே வர்க்கம் என்பதை உணரவேண்டும். உழைக்கும் வர்க்கத்தின் விடுதலை கைகூட அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்.

இந்த தொழிலாளர் ஒன்றியத்தில் மண்ணின் மைந்தர்களை நாம் இணைத்துக்கொள்ளாவிட்டால், தொடர்ந்து அடிமட்ட ஊதியத்துக்கு வெள்ளை தொழிலாளர்கள் பணியாற்றவேண்டியிருக்கும். வெள்ளை தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரவேண்டுமானால், கறுப்பு தொழிலாளர்களின் வாழ்க்கை தரமும் உயர்த்தப்படவேண்டும். இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டது.

கறுப்பின தொழிலாளர்களுக்கு ஏன் தென் ஆப்பிரிக்காவில் கூலி குறைவாக அளிக்கப்படுகிறது? காரணம், அவர்களுக்கு எதிராக நிறுவப்பட்ட கடுமையான சட்டதிட்டங்கள்(The Passport System, The Compound System, The Native Indenture System). இவை, தொழிலாளர்கள் விடுப்பு எடுப்பதையும் அவர்கள் அரசியல் உரிமைகள் பெறுவதையும் தடை செய்தன.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் மூலம், கறுப்பின தொழிலாளர்கள், வெள்ளையின தொழிலாளர்களைவிட கீழானவர்களாக நடத்தப்படுவதற்கு வாய்ப்பளிக்கிறது. இதன் மூலம், கறுப்பின தொழிலாளர்கள், வெள்ளையின தொழிலாளர்கள் இருவரும் ஏய்க்கப்படுகிறார்கள்.’

The South African Question என்னும் தலைப்பில் 1928ம் ஆண்டு வெளிவந்த அறிக்கை தென் ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்களின் நிலை என்ன என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது. சில பகுதிகள்.

‘தென் ஆப்பிரிக்கா பிரிட்டனின் டொமினியனாக இருக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டிஷ் மற்றும் போயர் மக்களின் துணையுடன் தென் ஆப்பிரிக்காவைப் பொருளாதார ரீதியில் சுரண்டிவருகிறது. கறுப்பர்களை ஒடுக்குவதில் பிரிட்டிஷாரைப் போலவே தென் ஆப்பிரிக்க பூர்ஷ்வாக்களும் கவனம் செலுத்துகிறார்கள். சமீப காலமாக, இரும்பு, உருக்கு ஆலைகளும், பருத்தி, கரும்பு, சர்க்கரை உற்பத்தியும் பெருகிவருகின்றன. முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சிக்கு மேலும் மேலும் நிலம் தேவைப்படுவதால், கறுப்பர்களிடம் இருந்தும் ஒருசில வெள்ளையின விவசாயிகளிடம் இருந்தும் நிலம் அபகரிக்கப்படுகிறது. குறைவான கூலிக்கு வேலை செய்யும் ஒரு பெரும் கூட்டத்தை இங்கே பிரிட்டன் உருவாக்கியுள்ளது.

1921ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கின்படி, நீக்ரோக்கள் மற்றும் நிறத்தவர்களின் எண்ணிக்கை 55 லட்சம். வெள்ளையர்களின் எண்ணிக்கை 15 லட்சம். இதில், நீக்ரோக்கள் எட்டில் ஒரு பகுதி நிலத்தை மட்டுமே வைத்துள்ளனர். எட்டில் ஏழு பங்கு நிலம், வெள்ளையர்களிடம் உள்ளது. நீக்ரோ பிரிவுகளில் பூர்ஷ்வாக்கள் என்று தனியாக ஒரு குழு இல்லை. வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருசில வளமான நீக்ரோக்கள் தவிர ஏனையவர்கள் ஏழைகளாகவே உள்ளனர்.

கூலிகளில் பெரும்பான்மையினர் நீக்ரோக்களே. ஆலைகளிலும் போக்குவரத்து நிலையங்களிலும் பணிபுரியும் நீக்ரோ மற்றும் நிறத்தவரின் எண்ணிக்கை 4,20,000. வெள்ளையர்களின் எண்ணிக்கை 1,45,000. வேளாண் துறையில் உள்ள கூலிகளில், கறுப்பர்களின் எண்ணிக்கை 4,35,000. வெள்ளையர்கள் 50,000.
கேப் மாகாணத்தை தவிர ஏனைய பகுதிகளில் கறுப்பர்களுக்கு வாக்குரிமை கிடையாது. வெள்ளையர்களின் அதிகாரமே எங்கும் செல்லுபடியாகிறது. அவர்களுக்கு உதவ, வெள்ளை ராணுவப் படைகள் இருக்கின்றன. ’

ஆப்பிரிக்காவின் வரலாறை ஆராயும்போது, முகத்தில் அறைந்தாற்போல் தெளிவாகும் ஒரு விஷயம் இதுதான். அரசாங்கம் என்பது முதலாளித்துவத்துக்குச் சாதகமாக செயல்படும் ஒரு கருவியே அன்றி வேறில்லை.

(அம்ருதாவில் வெளியான கட்டுரைத் தொடரின் இரண்டாம் பாகம்)

6 comments:

Jawahar said...

முதலாளிகள்ன்னாலே தொழிலாளிகளுக்கு எதிரானவங்க என்பதன் அடிப்படையில் வந்த சொல்தான் முதலாளித்துவமா?

http://kgjawarlal.wordpress.com

Anisha Yunus said...

மருதன் சார்,

மஹாராஷ்டிராவில் நியூகிளியர் ப்ரொஜெக்டுக்கு எதிராய் கிராம மக்கள் ஜெயில் சென்ற சம்பவத்தை பத்தி எழுதுங்களேன்?? இந்த மாதிரி பல விஷயங்கள் சத்தமில்லாமல் போகின்றன. சுட்டி:http://timesofindia.indiatimes.com/city/mumbai/Nuke-power-project-3000-villagers-court-arrest-in-Ratnagiri/articleshow/6836138.cms

நன்றி.

மருதன் said...

Jawahar : முதலாளித்துவம் என்பது ஒரு பொருளாதார அமைப்பு. இதன்படி, உற்பத்திச் சாதனங்கள் தனி நபர்கள் அல்லது தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். சுதந்தர சந்தைப் பொருளாதாரம் என்றும் அழைக்கலாம். (சோஷலிச பொருளாதாரத்தில் இவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.)

தொழிலாளர்களுக்கு எதிரானவர்கள் என்பதற்காக முதலாளிகள் என்று பெயர் வைக்கவில்லை. தொழிலாளர்களுக்கு விரோதமாக இருப்பதால், முதலாளித்துவம் எதி்ர்க்கப்படுகிறது.

மருதன் said...

சுட்டிக்கு நன்றி அன்னு. எழுத முயற்சி செய்கிறேன்

Anonymous said...

Good detailed analysis.

ahamed5zal said...

Hai marudhan sir,

Thanks for given this article about Capitialism...Continue ur service...


bye
faizal cheguvera