January 7, 2011

நபிகள், நாராயணமூர்த்தி, நடைபாதை


ஜே. கிருஷ்ணமூர்த்தியை நாடி வருபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருக்கிறார்கள். புரியாத தத்துவங்களின் சொந்தக்காரர் என்று ஒரு சாராரும், சாக்ரடீஸ் பாணியில் தர்க்க ரீதியாக கேள்விகள் எழுப்புபவர் என்று இன்னொரு சாராரும் மதிப்பிடும் ஜேகே. புத்தரின் தம்ம பதம் இன்றைய பிரச்னைகளுக்குப் பொருந்துமா, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று இவரிடம் கேட்டால், பதிலுக்குப் பல கேள்விகள் கேட்பார். புத்தர் யார்? தம்ம பதம் என்பது என்ன? இன்று என்று நீ சொல்வது எதை? பிரச்னையின் மூலவேர் எது? நினைத்தல் என்பதன் பொருள் என்ன? இவர் முன்வைக்கும் தீர்வு ஒரு வகையில், Escapism. பிரச்னைகளை அல்ல, பிரச்னைகள் குறித்த நம் கண்ணோட்டமே மாறவேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். 'இன்றைக்கு மலர்ந்த ரோஜாவை, இன்றே முதல் முறை பார்ப்பது போல் பார். ரோஜா குறித்த உன் நேற்றைய சிந்தனைகளை இன்று கொண்டு வராதே.' மூன்று தின கண்காட்சி நிகழ்வுகளை மறந்துவிட்டு, இன்று புதிதாகக் காண்பது போல் கண்காட்சியைக் காண முயன்றேன்.

கிழக்கில் இரு புதிய மொழிபெயர்ப்பு நூல்கள் வந்திருந்தன. இந்திய-சீன வல்லரசுப் போட்டியின் பின்னணியை விவரிக்கும் நூல் ஒன்று. தலைப்பு, நீயா நானா? மற்றொன்று, நாராயணமூர்த்தியின் புதிய கனவுகள், புதிய இந்தியா. மனித முகம் கொண்ட முதலாளித்துவத்தை முன்னிறுத்தி வரும் இன்ஃபோசிஸ் தொழிலதிபர். (இப்போது இருப்பது சைத்தானின் முகம் கொண்ட முதலாளித்துவம் என்று அவர் ஒப்புக்கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை). புதிய தலைமுறை இதழில் இந்தப் புத்தகத்தின் அத்தியாயங்கள் தொடராக வெளிவந்துகொண்டிருக்கின்றன.

நாராயணமூர்த்தியின் பேட்டி ஒன்றை சமீபத்தில் தி ஹிந்துவில் வாசித்தேன். இந்தியாவில், எந்தத் துறையிலும ஆய்வுகள் அதிகம் மேற்கொள்வதில்லை என்று கவலைப்பட்டார். சரி, என்ன செய்தால் இந்த நிலை மாறும் என்று கேட்கப்பட்டபோது அவர் அளித்த விளக்கம் இது. 'ஒவ்வொரு ஆய்வு கட்டுரைக்கும் நான்கு லட்சம் ரூபாய் சன்மானம் கொடுக்கவேண்டும். அப்போதுதான், ஆய்வாளர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள். ஆண்டுக்கு இரண்டு கட்டுரைகள் எழுதினால்கூட போதுமானதாக இருக்கும். ' இதென்ன கணக்கு? பத்திரிகைக்கு கதை, கட்டுரை எழுதுவது போலவா ஆண்டுக்கு இரு ஆய்வுகள் மேற்கொள்ளமுடியும்? எந்தத் துறையாக இருந்தாலும், இது சாத்தியம் இல்லையே? சீனா, இந்தியா குறித்த இந்த இரு நூல்களையும் வாசித்த பிறகு, இங்கே மேற்கொண்டு விவாதிக்கிறேன்.

இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் ஜாயிண்ட் செகரெட்டரி கே. ஜலாலுதின், கிழக்கு பதிப்பக புத்தகங்கள் குறித்து விசாரித்துக்கொண்டிருந்தார். நிறைய புரட்சியாளர்களின் வரலாறுகளை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். ஏன் எங்கள் புரட்சியாளர் குறித்து எழுதவில்லை என்று கடிந்துகொண்டு, அன்பளிப்பாக புத்தகம் ஒன்றை அளித்தார். டாக்டர் இனாயத்துல்லாஹ் சுப்ஹானீ எழுதிய அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மது நபி (ஸல்). ஐஎஃப்டி வெளியிட்டு வரும் சமநிலை சமுதாயம் இதழ்கள் இரண்டை மற்றொரு நண்பர் முந்தைய தினம் அளித்திருந்தார். பெரும்பாலும், பிற இதழ்களிலும் ஊடகங்களிலும் வரும் இஸ்லாமுக்குச் சாதகமான கட்டுரைகளை மறுவெளியீடு செய்து வருகிறார்கள். பல இஸ்லாமிய கட்டுரையாளர்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் பேப்பரில் இரா. முருகன் எழுதி வரும் வங்கி மைனஸ் வட்டி, சமநிலை சமுதாயத்திலும் தொடராக பிரசுரமாகிக்கொண்டிருக்கிறது. (நன்றி, தமிழ்பேப்பருடன்).


ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்டிருக்கும் அறிமுகங்கள் வரிசைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. எங்கெல்ஸ், குவாண்டம் இயற்பியல், ஐரோப்பிய யூனியன், ரஷ்யப் புரட்சி, இஸ்லாம், அரசியல் என்று பல விஷயங்கள் குறித்த சிறிய அறிமுக நூல்கள் இவை. தமிழ் மொழிபெயர்ப்பில் இதே அட்டை வடிவமைப்புடன் பல புத்தகங்கள் கிடைக்கின்றன என்றாலும் பெரும்பாலானவை கடினமானவை. ஆங்கிலத்தில் நேரடியாக வாசிப்பது சுலபமாக இருக்கும். இந்திய அரசியல் வரலாறு குறித்து ஆக்ஸ்ஃபோர்ட் வெளியிட்டிருக்கும் பல புத்தகங்கள் முக்கியமானவை. அமர்த்தியா சென், ரொமிலா தாப்பர் ஆகியோரின் படைப்புகள் இங்கே கிடைக்கின்றன.

அரங்கில் முதல் முறையாக நல்ல கூட்டம். வைரமுத்து! வானில் கையை உயர்த்தி அப்பர், சுந்தர் இருவரையும் அழைத்துக்கொண்டிருந்தார். சுவிசேஷக் கூட்டம் எஃபெக்ட்டில் நல்ல கைத்தட்டல்கள். 'ஆண்டாள், நீ இருக்கும் திசை நோக்கி கைகூப்புகிறான் ஒரு வாசகன்' என்று ஆண்டாள் தமிழின் மகத்துவத்தை உணர்த்தி பாசுரம் பாடினார். மறக்காமல் கலைஞரையும் அவருடைய வாரிசுகளையும் நினைவுகூர்ந்து கொண்டாடினார். முழு உரையை, பத்ரி சிரத்தையுடன் இங்கே சேமித்து வைத்திருக்கிறார். பத்ரியின் ஸ்பெக்ட்ரம் புத்தகம் கிழக்கில் டாப் 1. அது பற்றி நாளை எழுதுகிறேன்.

சில படங்கள், குறிப்புகள்.

OUP வெளியிட்டிருக்கும் புதிய இசை களஞ்சியம் குறித்த அறிவிப்பு. சீல் செய்யப்பட்ட ஒரு அட்டைப்பெட்டியில் களஞ்சியம் தயாராக இருக்கிறது.


அழுதுகொண்டும் தொழுதுகொண்டும் படிக்கவேண்டிய புத்தகம். கடந்து செல்கையில் கண்ணில் பட்டது.


பாரதி புத்தகாலயம் வழங்கும் குழநதைகளுக்கான அட்டைப்பெட்டி புத்தகத் தொகுப்பு. அழகான தலைப்பு.


இதுவும் OUP வெளியீடு.

தொடர்ந்து இரண்டாவது நாளாக, ராஜராஜ சோழன் விற்பனையில் முன்னணியில் இருப்பதை தேநீர் சுவைத்து, கொண்டாடும் நூலாசிரியர், ச.ந. கண்ணன்.


ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு (இரு பாகங்கள், கிழக்கு) வாசகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

பல நல்ல புத்தகஙகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்திய ரயில்வேயின் கதை, நாணயங்களின் கதை, மொழிபெயர்ப்பு கதைகள், குறிப்பிடத்தக்கவை.

இங்கும் பல இலக்கிய, அரசியல் மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், விலை கூடுதல்.

சே குவேராவை ஏற்று, நக்சலித்தை நிராகரிக்கிறது பாரதி புத்தகாலயம்.

ஜேகே சொன்னது போல் பழைய நினைவுகளை மறந்துவிட்டு இன்று புதிதாகப் பார்ப்பது போல் பார்த்தேன். ஆனாலும், அதே எண்ணம்தான். இவன் ஏன் இன்றும் நடைபாதையில் புத்தகம் விற்றுக்கொண்டிருக்கிறான்?


11 comments:

சுப்புரத்தினம் said...

நன்றி தோழரே .....

உங்களோடு புத்தகக் கண்காட்சியில் வலம் வந்த்தது போல் உள்ளது...

சுப்புரத்தினம்

மயிலாடுதுறை சிவா said...

மற்ற பதிவர்களை விட உங்களது பதிவு நன்றாகவும், புகைப் படங்களும், புத்தகங்கள் பற்றியும் உள்ளது.

புத்தகவிழாப் பற்றி தினமும் எழுதுவதற்கு மனதார பாராட்டுக்கள்.

வாங்க வேண்டிய புத்தகங்கள் பற்றி ஒரு பட்டியில் அவசியம் கொடுங்கள்....

நன்றி

மயிலாடுதுறை சிவா....
வாசிங்டன்

ராஜ் பிரசாத் said...

நல்ல வருணனை மருதன்.

Krubhakaran said...

http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html

Part of Vaali's Speech @ book Fair Kaviarangam

மருதன் said...

நன்றி க்ருபா.

மருதன் said...

நன்றி மயிலாடுதுறை சிவா. என்னைக் கவர்ந்த புத்தகங்கள் குறித்து தனியே எழுத முயற்சி செய்கிறேன்.

மருதன் said...

நன்றி சுப்புரத்தினம். கண்காட்சிக்கு வாருங்கள். அங்கே உரையாடலாம்

செல்வநாயகி said...

மாறுபட்ட கோணமும், விசாலமான நோக்கும் கொண்ட உங்கள் இடுகைகளில் புத்தகக் கண்காட்சியைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

எல்லாக் கொண்டாட்டங்களையும் காது நிறையக் கேட்டுக்கொண்டிருக்கும் இணைய வாசிப்பாளர்கள் முன் அந்தச் சிறுவனின் புகைப்படமும், அதை ஒட்டிய உங்களின் குற்ப்பும் மனதில் அறைந்து பல கேள்விகளை எழுப்புகிறது. நன்றி இந்தப் பதிவுகளுக்கு.

Anonymous said...

நான் ஜே.கேவின் சில புத்தகங்களை படித்திருக்கிறேன். நினைவை விட்டு விடுவது எப்படி என்றே தெரியவில்லை. ஜே.கே புதிய காட்சியின் அழகை உணர்வதற்கு நினைவு தடையாக உள்ளது என்கிறார். சில வருடங்கள் முன்பு நான் குற்றாலத்தின் மலை உச்சியில் தடை செய்யப்பட்ட தேன் அருவியை முதல் முறை பார்த்து பரவசம் அடைந்தேன். இரண்டாம் முறை போய் அந்த அருவியை நெருங்கும் சில நொடிகள் முன் அந்த அருவி இப்படித்தானே இருக்கும் என்று ஒரு எண்ணம் மனதில் ஓடியது. சில நொடிகள் கழித்து அருவியை இரண்டாம் முறை பார்த்த போது முதல் முறை அடைந்த அதே பழைய பரவசம் ஏற்படவே இல்லை. 'ஜே.கே சொல்வது சரிதானோ' என்று தோன்றியது. ஆனால் நினைவை விட்டு விடுவது எப்படி? அருவியைப் பற்றி பழைய நினைவை விட்டு விட வழி உண்டா என எண்ணும் என் மனம் கடந்த காலத்தில் நான் பார்த்த அயோக்கியர்களைப் பற்றிய நினைவை விட்டு விட மறுக்கிறது. Leave all of these. Just explain me this. Really I would like to know what u what to convey from this statement--->
//இவர் முன்வைக்கும் தீர்வு ஒரு வகையில், Escapism.//

Hari said...

ஒரு சின்ன உதவி.

OUP வெளிட்டுள்ள அந்த அறிமுக புத்தகங்களை இணையம் மூலம் வாங்க முடியுமா? தகவல் தரமுடியுமா?

நன்றி

மருதன் said...

Hari: ஆக்ஸ்ஃபோர்ட் இணைய முகவரியில் அதற்கான வாய்ப்புகள் இருக்கும். http://www.oup.co.in/