August 5, 2011

ஆவி அழைத்தது


சில கிராஃபிக் புத்தகங்களைப் புத்தகக் கடைகளில் பிரித்து பார்த்திருக்கிறேன். அனைத்தும் அதிரடி சாசசக் கதைகள். எழுத்துகள் மிக மிகக் குறைவு. சித்திரங்களே கதைகளை நகர்த்திச் செல்லும். சென்ற வாரம் பிரிட்டிஷ் நூலகத்தில் சார்லஸ் டிக்கன்ஸின் தி கிறிஸ்துமஸ் கரோல் கிராஃபிக் வடிவில் கிடைத்தபோது செவ்விலக்கியங்களும் கிராஃபிக் வடிவில் வருமா என்ற ஆச்சரியமடைந்தேன். படித்து முடிக்கும் வரை ஆச்சரியம் நீங்கவில்லை.

கதை எளிமையானது. பணக்கார எபினேஸர் ஸ்க்ரூஜ் மிகவும் கருமி. அன்பு, நேசம், பிறருக்கு உதவும் குணம் எதுவும் இல்லாதவன். விடிந்தால் கிறிஸ்துமஸ். இருந்தும் தன் கீழ் பணிபுரியும் உதவியாளருக்கு விடுமுறை அல்ல, அரை மணி நேர தாமதம்கூட அளிக்க மனமில்லாதவன். 'எல்லா கிறிஸ்துமஸுக்கும் இப்படி அவகாசம் கொடுததுக்கொண்டே இருந்தால் என் பிழைப்பு என்னாவது?' ஏழைகளுக்கு உங்களாலான உதவி செய்யமுடியுமா என்று ரசீது புத்தகம் எடுத்துக்கொண்டு வருபவர்களிடம் ஸ்க்ரூஜ் சீறுகிறான். 'காசில்லாதவர்கள் எங்காவது சென்று தொலையட்டும். அவர்களுக்காக நான் ஏன் என் பணத்தைச் செலவழிக்கவேண்டும்?'



ஸ்க்ரூஜுடன் பணிபுரிந்த மறைந்த ஜேகப் மார்லி ஒரு நாள் திடீரென்று அவன் முன் தோன்றுகிறார். அதற்குப் பிறகு மூன்று ஆவிகள் அவனை வந்து சந்திக்கின்றன. இறந்தகால கிறிஸ்துமஸ் ஆவி, நிகழ்கால கிறிஸ்துமஸ் ஆவி மற்றும் வருங்கால கிறிஸ்துமஸ் ஆவி. இந்த மூன்றும் ஸ்க்ரூஜை வெவ்வேறு காலகட்டங்களுக்கு அழைததுச் செல்கின்றன. ஸ்க்ரூஜின் வாழ்வில் இருந்து பல காட்சிகளை அவனுக்குக் காட்டுகின்றன. குறிப்பாக, எதிர்கால ஆவி காண்பிக்கும் காட்சிகளைக் கண்டு பயந்து நடுநடுங்கிவிடுகிறான் ஸ்க்ரூஜ். அவன் மரணத்துக்குப் பிறகு யாரும அவனைப் பற்றி உயர்வாகப் பேசுவதில்லை. கஷ்டப்பட்டு அவன் சேர்த்த செல்வம் எதுவும் அவனுக்குப் பயன்படவில்லை.

இந்தக் காட்சிகளைக் கண்டு மனம் வெதும்பிய ஸ்க்ரூஜ் தன்னை மாற்றிக்கொள்கிறான். நான் இனி புதிய மனிதன் என்னை நிகழ்காலத்தில் கொண்டு சென்று விட்டுவிடு என்று கிறிஸ்துமஸ் ஆவியிடம் கெஞ்சுகிறான். அதற்குப் பிறகு ஸ்க்ரூஜ் புதிய மனிதனாக, அனைவருக்கும் உதவுபவனாக, உதவியாளருக்கு விடுமுறையும் நல்ல ஊதியமும் பரிசுகளும் அளிப்பவனாக, ஏழைகளுக்கு உதவுபவனாக மாறுகிறான். ஆகவே நல்லது செய் என்று நீதி சொல்லும் எளிமையான கதைதான். ஆனால், சார்லஸ் டிக்கன்ஸ் விவரித்துச் செல்லும் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.

பிரச்னை என்னவென்றால் அநாயசமாக 500 பக்கங்களைக் கடந்து விரியும் டிக்கன்ஸை வாசிக்கும் பொறுமை இப்போது யாருக்கும் இல்லை. மேலும், டேவிட் காப்பர்ஃபீல்ட், தி டேல் ஆஃப் டூ சிட்டிஸ் உள்ளிட்ட அவருடைய நூல்கள் நம் பாடப்புத்தகங்களில் நான் டீடெய்லாக வெளிவந்து நம் கசப்புணர்வைச் சம்பாதித்துக்கொண்டுவிட்டன.

இலக்கிய இன்பத்துக்காக மட்டுமல்ல 19ம் நூற்றாண்டு முதலாளித்துவத்தின் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்காகவும் டிக்கன்ஸின் நாவல்களை நாம் வாசிக்கவேண்டும்.இங்கிலாந்தில் தொழில் புரட்சியால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை டிக்கன்ஸ் நேர்மையாக, மிகைக் கலப்பின்றி பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக, குழநதைத் தொழிலாளர்களின் வாழ்நிலை தத்ரூபமாக அவர் நாவல்களில் பதிவாகியுள்ளன. டேவிட் காப்பர்ஃபீல்ட் ஒரு நல்ல உதாரணம். இருளடைந்த குடியிருப்புகளையும் கரும் புகைகளைக் கக்கும் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களையும் குளிரில் நடுங்கும் ஏழை சிறுவர்களையும் பிச்சைக்காரர்களையும் ரத்தமும் சதையுமாக டிக்கன்ஸின் புத்தகங்களில்தரிசிக்க முடியும்.  மனித சோகத்தையும் துயரத்தையும் பதிவு செய்யும் நாவல்கள் இன்றளவும் dickensian novels என்றுதான் அழைக்கப்படுகின்றன.

அவ்வளவு பெரிய புத்தகத்தை எப்படி வாசிப்பது என்று தயங்குபவர்கள் இதுபோன்ற கிராஃபிக் நாவல்களை வாசிக்கலாம். இவை அசல் புத்தகங்களுக்கு மாற்று அல்ல என்றாலும், அவற்றை நோக்கி நகர வைக்கத் தூண்டும் நல்ல முயற்சிகள். டிக்கன்ஸின் ஆவி இப்படிப்பட்ட முயற்சிகளை நிச்சயம் பாராட்டும்.

2 comments:

அருள்முருகன் said...

புத்தகத்தை படிக்கும் ஆவலை தூண்டியிருக்கிறீர்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

தங்களின் இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழே உள்ள முகவரிக்கு வந்து பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/10/6102011.html