November 4, 2011

கடாபி இல்லாத லிபியா


உற்சாகமாக கொடிசைத்தும் இனிப்பு வழங்கியும் லிபியர்கள் கொண்டாடும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. ‘ஒருவழியாக லிபியா விடுவிக்கப்பட்டுவிட்டது!’ என்று இடைக்கால அரசு ஆர்ப்பாட்டத்துடன் அறிவித்திருக்கிறது. லிபியாவை அச்சுறுத்திக்கொண்டிருந்த ஒரு சர்வாதிகாரி ஒழிக்கப்பட்டுவிட்டான் என்று குதூகலிக்கிறது மேற்கத்திய மீடியா. ‘ஆம், சதாமைப் போல், ஒசாமாவைப் போல், கடாபியும் தண்டிக்கப்பட்டுவிட்டார்’.

கடாபியின் 42 ஆண்டுகால ஆட்சியை இடைக்கால அரசான என்.டி.சி (நேஷனல் ட்ரான்சிஷனல் கமிட்டி) நேட்டோவின் உதவியுடன் முறியடித்துவிட்டது. எட்டு மாதங்களுக்கு முன்னால் திடீரென்று முளைத்து, திடீரென்று கடாபியை எதிர்த்து, திடீரென்று சர்வதேச அளவில் ஆதரவைத் திரட்டிக்கொண்டு குறுகிய காலத்தில் வெற்றியை ஈட்டிய ஆச்சரியமூட்டும் அமைப்பு இது. அதனால்தான் நேட்டோவுக்கும் ஐ.நாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் நன்றி தெரிவித்திருக்கிறது இந்த அமைப்பு. ‘எழுச்சிக்கு ஆதரவு அளித்ததற்கும் கடாபியின் மரணத்துக்கும் நன்றி. உலகம் முழுவதற்கும் நாங்கள் உரத்துச் சொல்கிறோம். லிபியாவின் நகரங்கள், கிராமங்கள், மலை முகடுகள், மலைகள், பாலைவனங்கள், ஆகாயம்... அனைத்தும் விடுவிக்கப்பட்டுவிட்டன.’

லிபியாவின் புதிய விடுதலையை அமெரிக்க அதிபர் ஒபாமா ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம்’ என்று பாராட்டியிருக்கிறார். ‘நாற்பதாண்டுகால மிருகத்தனமான ஒடுக்குமுறையும் எட்டு மாதக் கால வாழ்வா சாவா போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளன. லிபிய மக்கள் இப்போது சுதந்தரத்தையும் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் உணரலாம், கொண்டாடலாம்!’

கடாபியின் இறுதிக் கணம் பற்றிய வீடியோ இணையங்களில் காணக்கிடைக்கிறது. மிருகத்தனமாக அடித்தும் துப்பாக்கியால் சுட்டும் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். எட்டு மாதங்களாக நடந்துவந்த போரின் ஓர் அத்தியாயம் கடாபியின் மரணத்துடன் முடிவடைந்திருக்கிறது. கடாபி கொல்லப்பட்டதும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற கொண்டாட்டங்களைப் பற்றியும்தான் செய்திகள் வெளிவந்தனவே தவிர, கடாபி இறுதியாக தங்கியிருந்த லிபிய நகரமான சிர்ட்டே சீரழிக்கப்பட்டது பற்றியோ, அங்குள்ள மக்கள் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளது பற்றியோ எந்தவிதச் செய்தியும் இல்லை. அது அத்தனை முக்கியம் அல்ல என்பதால்.

இராக்குக்குச் சொல்லப்பட்ட அதே காரணங்களை லிபியாவுக்கும் சொல்லி, நேட்டோ உள்நுழைந்திருக்கிறது. கடாபியின் சொத்துகள் முடக்கப்பட்டன. கடாபி, அவர் மகன், உறவினர் என்று அனைவர்மீதும் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டன. மனிதகுலத்துக்கு எதிரான மாபெரும் சதித்திட்டங்களில் அவர்கள் ஈடுபடுவதாகவும் அவர்கள் பிடியில லிபியர்கள் மரணபயத்துடன் சிக்கியிருப்பதாகவும் சொல்லப்பட்டு, போர் தொடங்குவதற்கான ஒப்புதலை ஐ.நாவிடம் இருந்து முறைப்படி பெற்றுக்கொண்டார்கள். உள்ளூர் என்.டி.சியோடு இணைந்து தாக்குதல் வேட்டை ஆரம்பமானது. தலைநகரம் திரிபோலி வீழ்ந்தபோது, கடாபி தப்பியிருந்தார். அக்டோபர் 20ம் தேதி, சிர்ட்டேவில் கடாபி பிடிபட்டார். கொலைசெய்யப்பட்டார்.

லிபியாவுக்கு வெளியிலும் சிர்ட்டே மிகப் பிரபலமான நகரமாக இருந்தது. கடல் முகப்பு, பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், நவீன கட்டடங்கள், பளிங்குத்தரை மாநாட்டு மையம் என்று ஜொலித்துக்கொண்டிருந்த நகரம்தான் அது. கடாபி வேட்டையால் இன்று சீரழிந்து கிடக்கிறது.  பாதாளச் சாக்கடைக்கு மேலே ஒரு மூடி போட்டிருப்பார்களே, அந்த அளவுக்குப் பெரிய துளைகள் கட்டடங்களிலும் சாலைகளிலும் விழுந்துள்ளன. உயிருக்குப் பயந்து கிட்டத்தட்ட அனைவரும் வெளியேறிவிட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இருந்த நகரம் இன்று காலியாக இருக்கிறது.

கடாபியை அழித்ததோடு ஆட்டம் நின்றுவிடவில்லை. கடாபி ஒரு சாத்தான்தான் என்றாலும் அவர் லிபியாவை மெய்யாகவே அழித்துக்கொண்டுதான் இருந்தார் என்றும் அவர் வாழ்வதற்கு அருகதையற்ற ஒரு நபர்தான் என்றும் லிபியர்களையும் உலகத்தையும் நம்பவைக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. கடாபியின் பங்களிப்புகள் முற்றிலுமாக மறைக்கப்படுகின்றன. அல்லது, திரிக்கப்படுகின்றன. ஆப்பிரிக்காவிலேயே லிபியாவில்தான் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. பாலைவனமாகவும் பின்தங்கிய பிரதேசமாகவும் இருந்த லிபியாவுக்கு நீர்ப்பாசனம், கல்வி, தொழில்நுட்பம், இலவச மருத்துவம், இலவச கல்வி, வீட்டு வசதி, வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை அளித்தவர் கடாபி. வேறு எந்தவொரு இஸ்லாமிய நாடு போலவும் இல்லாமல், மதத்தை அரசியலில் இருந்து துண்டித்தவர் கடாபி. அமெரிக்காவும் பிரிட்டனும் பிற மேற்குலக நாடுகளும் அதிரும் வண்ணம், தனக்கு விருப்பமான நாடுகளுடன் எண்ணெய் ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டவர்.

கடாபி ஒரு சாத்தான் மட்டுமல்ல கடவுளும் கிடையாது. பின்னாட்களில் அவர் தாராளயமாக்கலுக்கு ஒப்புக்கொண்டார். மலைக்க வைக்கும் வகையில் சொத்துகளைக் குவித்துக்கொண்டார். வளர்ச்சித் திட்டங்கள் ஒருகட்டத்துக்கு மேல் முன்னேறவில்லை. மக்களிடம் இருந்து விலகிச் செல்லவும் ஆரம்பித்தார். லிபியர்களைக் கேட்டால் இன்னமும் பல குறைகளை அவர் அடுக்குவார்கள். ஆனால், இவை எதுவும், கடாபி படுகொலையை நியாயப்படுத்துவதற்குப் போதுமானதல்ல.

‘இது உண்மையில் பழிவாங்கல் நடவடிக்கையே!’ நகரவாசியான அபு அனஸ் என்பவரின் கூற்று இது. ‘இது விடுதலை அல்ல.’  அதிகாரத்துக்காக ஆட்சியைக் கைப்பற்றத் துடித்த அமைப்புகளும் எண்ணெய் வளத்துக்காக கடாபியை அகற்றத் துடித்த மேலைநாடுகளும் ஒன்றிணைந்ததன் விளைவே லிபிய ஆக்கிரமிப்பு. அதன் நீட்சியே கடாபி படுகொலை. கடாபி இல்லாத லிபியா யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பதை மேலோட்டமாக ஆராய்ந்தாலே இந்த உண்மை புலப்பட்டுவிடும். என்.டி.சியின் தலைவர் முஸ்தபா அப்தெல் ஜலீலின் இந்த முழக்கத்தைப் பாருங்கள். ‘இது ஓர் இஸ்லாமிய தேசம். ஒரு தேசமாக நாம் ஒன்றிணைந்து இஸ்லாமிய ஷரியத் சட்டங்களைச் சட்டப்பூர்வமானதாக மாற்றப்போகிறோம். இஸ்லாத்தோடு முரண்படும் எல்லாச் சட்டங்களும் இனி அதிகாரபூர்வமாக மதிப்பிழந்துபோகும்.’

ஆக, இனி லிபியா ஒரு முழுமையான இஸ்லாமிய நாடாக மாற்றம் அடையும். புதிய எண்ணெய் ஒப்பந்தங்கள் போடப்படும். ஒப்புக்குத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஆட்சி அமைக்கப்படும். அமையப்போகும் அந்தப் புதிய ஆட்சி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சாதகமாக நடந்துகொள்ளும். இந்த மாற்றங்களை விரும்பும் அனைவரும் கடாபியின் மரணத்தைக் கொண்டாடவே செய்வார்கள். ஆம், இனி லிபியா அவர்களுடையது!

(கல்கியில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம்).

2 comments:

கானகம் said...

உங்களின் வருத்தம் எது மருதன்?

மேற்கத்திய நாடுகள் மட்டுமே எண்ணெய் வளத்தைப் பங்குபோட்டுக் கொள்ளப்போவதா?

சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும், இதர மூன்றாம்தர கம்யூனிச நாடுகளுக்கு இதில் பங்கில்லையே என்ற ஏக்கமா?

இல்லை இஸ்லாமியபயங்கரவாதம் தலையெடுத்து லிபியர்கள் கஷ்டப்படப்போவதை நினைத்தா?

கடாபிக்கும், கம்யூனிச நாடுகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தனக்கு எதிராகப் பேசும், செயல்படும் நபர்களை, அமைப்புகளை அழித்து விடுவார்கள். ஆனால் அவர்களின் முடிவெல்லாம் இப்படித்தான் இருக்கும்.

கடாபி ஒரு மிகப்பெரிய கோழை என்பது அவரது மரணத்தில் தெரிந்து போனது. தங்கத்தால் செய்த துப்பாக்கியால் பலரைக் கொல்லத்தயங்காத கடாஃபி, என்.டி.சி கையில் சிக்கினால் சட்னிதான் எனத் தெரிந்தும் தற்கொலை செய்யாதது ஏன்? எ,டி.சியால் இப்படி ரத்தவிளாறாக அடித்துக் கொல்லப்பட்டது சட்டவிரோதம் எனச் சொல்லலாம். ஆனால் 40 ஆண்டுகால அடிமைகள் கொதித்தெழும்போது இந்த வகை மரணமே நிகழும்.

சும்மா என்னமாச்சும் எழுதனுமேங்கிறதுக்காக எழுதாதீங்க மருதன்.

gadaffi got the punishment what he deserved.

SURYAJEEVA said...

இது விஷயத்தில் பல மர்மங்கள், ஏகாதிபத்தியம் எங்கிருக்கிறதோ அங்கே மர்மம் எழுவது வாடிக்கையாகி விட்டது.. அவதிப் படப் போவது என்னவோ உழைக்கும் வர்க்கமே