உலகப் புகழ்பெற்ற அமெரிக்க டைம் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், அந்த ஆண்டின் சிறந்த மனிதரைத் தேர்ந்தெடுத்து அவரை அட்டையில் பிரசுரித்து, நீளமான கவர் ஸ்டோரி எழுதி, கொண்டாடித் தீர்க்கும். கடந்த 80 ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருக்கும் வழக்கம் இது. ஏன் அவர், ஏன் இவர் இல்லை என்னும் ரீதியில் ஒவ்வொரு முறையும் எதிர்ப்புகள் குவியும். சென்ற ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஏன் விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே விடுபட்டார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. டைம் பத்திரிகையின் ஆசிரியர் ஒரு நீண்ட தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டியிருந்தது.
இந்த ஆண்டு அந்தப் பிரச்னை இல்லை. அட்டையில் அவரைக் கண்டதும் அமைதியாக ஏற்றுக்கொண்டார்கள். இத்தனைக்கும் அவருக்கு முகம் இல்லை. பெயரில்லை. நாடு இல்லை. மதம் இல்லை. வலது, இடது அரசியல் நம்பிக்கைகள் இல்லை. அவர் வயது, உயரம், நிறம், மொழி எதுவும் நமக்குத் தெரியாது. அவர் தனி நபர் அல்லர். அவர் ஒரு குழு. அவரே அதன் தலைவர், ஒருங்கிணைப்பாளர், தொண்டர், செயல் வீரர். அவர் ஒரு கலகக்காரர். என்பதால் அவர் அறியப்படுகிறார். என்பதால் அதுவே அவரது பெயரும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், துனீஷியாவில் சலசலப்பு ஏற்பட்டபோது முதல் முதலாக அவரை நாம் அறிந்துகொண்டோம். அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறையால் திணறிக்கொண்டிருந்த அந்த நாடு கடந்த டிசம்பர் மாதம் அழுத்தம் தாளாமல் வெடித்துச் சிதறியது. அதற்குக் காரணமாக இருந்தவர், 26 வயது தெருவோர வியாபாரி மொஹமத் பொவாஸி. கடந்த டிசம்பர் 17ம் தேதி, மொஹமத் வழக்கம் போல் தன் வண்டியை உருட்டிக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஒவ்வொருமுறையும் சந்திக்கும் பிரச்னைதான் என்றாலும் இந்தமுறை அவர்கள் எல்லை மீறினார்கள். மொஹமத் தாக்கப்பட்டார். மேலதிகம், ஏசப்பட்டார். மேல்முறையீடு செய்து பார்த்து அதுவும் பயனற்று போகவே, தீக்குளித்து செத்துப்போனார்.
பெருகும் வேலைவாய்ப்பின்மை, உயரும் விலைவாசி, அரசு அடக்குமுறை என்று பல்வேறு பிரச்னைகளால் கொதித்துக்கொண்டிருந்த துனீஷியர்களை மொஹமத்தின் மரணம் கொதித்தெழச் செய்தது. அடுத்த நாளே ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் திரள ஆரம்பித்துவிட்டார்கள். உடனே லத்திகளையும் கண்ணீர் புகைக் குண்டுகளையும்தான் தூக்கிக்கொண்டு ஒடிவந்தார்கள் காவல்துறை அதிகாரிகள். கட்டுப்படுத்திவிடலாம் என்றுதான் நம்பினார்கள். பதாகைகளை உயர்த்தியபடி லட்சக்கணக்கானவர்கள் இறங்கி நின்றபோது, கைகளை வீசி நடந்து வந்தபோது காவல்துறை மட்டுமல்ல அரசும் பின்வாங்கியது. அழுத்தம் தாளமாட்டாமல் இருபத்தெட்டு தினங்களில் அதிபர் பென் அலி பதவியைத் துறந்தார்.
துனீஷியா ஒரு தொடக்கம் மட்டுமே. பிப்ரவரி மாதம், எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவியிழந்தார். மார்ச் மாதம் பஹ்ரைனில் பரவிய போராட்ட அலையைக் கட்டுப்படுத்த மூன்று மாத எமர்ஜென்ஸி பிரகடனப்படுத்தப்பட்டது. ஜூன் மாதம் யேமன் அதிபர் அலி அப்துல்லா தாக்கப்பட்டார். பொறுப்புகளைத் துறந்தார்.
அமெரிக்காவில் நிதி நெருக்கடி உச்சத்தைத் தொட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களைப் புறக்கணித்துவிட்டு தனியார் நிதி நிறுவனங்களையும் பெரும் பணக்காரர்களையும் கைகொடுத்து தூக்கிவிட்டது அமெரிக்க அரசு. இதனை எதிர்த்து வால்ஸ்ட்ரீட்டில் தொடங்கிய தன்னிச்சையான முற்றுகைப் போராட்டம் விரைவில் அமெரிக்கா முழுவதும் பரவி, ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் பாய்ந்து சென்றது. அலெக்ஸாண்ட்ரியா முதல் கெய்ரோ வரை; மாட்ரிட் முதல் ஏதென்ஸ் வரை; லண்டன் முதல் டெல் அவிவ் வரை; மெக்ஸிகோ முதல் இந்தியா வரை; நியூ யார்க் முதல் மாஸ்கோ வரை.
மொத்தத்தில் 2011 என்பது கலகக்காரர்களின் ஆண்டு. யார் ஆட்சியில் இருக்கவேண்டும் என்பதையும் யார் இறங்கவேண்டும் என்பதையும் இவர்களே முடிவு செய்திருக்கிறார்கள். வரலாற்றில் எந்த முன்னுதாரணமும் இல்லாதபடி, ஒரே சமயத்தில் பல நாடுகளில், பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு குழுவினர் தன்னிச்சையாகப் போராடி தாங்கள் விரும்பும் மாற்றத்தைக் கொண்டுவர முயன்றிருக்கிறார்கள்.
இவர்கள் யார்? இவர்களை எப்படி வகைப்படுத்துவது? இவர்களை இயக்குபவர்கள் யார்? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்? இவர்களை யார் அணிதிரட்டியது? அசைக்கமுடியாத சக்திகளாக கருதப்பட்ட ஹோஸ்னி முபாரக்கும் பென் அலியும் இவர்களைக் கண்டு அஞ்சி பதவியிழக்கும் அளவுக்கு எப்படிப் பலம் பெற்றார்கள்? திரைப்படக் கலைஞர்களும் ஓவியர்களும் சிறு வணிகர்களும் வேலைவாய்ப்பற்றவர்களும் ஓவியர்களும் கதாசிரியர்களும் கூலிகளும் வீடற்றவர்களும் வயதானவர்களும் பெண்களும் மாணவர்களும் எப்படி ஓரணியில் திரண்டார்கள்? எப்படி கலகக்காரர்கள் ஆனார்கள்?
இவர்களில் சிலர் எம்.பி.ஏ பட்டதாரிகள். சிலர் மருத்துவர்கள். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இளைஞர்கள். பெரும்பாலானவர்கள் மத்திய தர வர்க்கத்தினர். பெரும்பாலானவர்கள் முதல் முறையாக ஒரு பொதுப் பிரச்னையை முன்னிட்டு வாசல்படியைத் தாண்டி வீதிக்கு வந்தவர்கள். இவர்களில் டைம் பத்திரிகையைப் பற்றியும் ஃபேஸ்புக் பற்றியும் ட்விட்டர் பற்றியும் அறியாதவர்கள் இருக்கிறார்கள். அவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் அத்தனை வேறுபாடுகளையும் கடந்து 2011ம் ஆண்டின் கலகக்காரர்கள் ஒன்றிணைந்ததற்கும் செயல்பட்டதற்கும் சாதித்ததற்கும் சில அடிப்படை காரணங்கள் இருக்கின்றன. இவர்கள் தங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். அரசு, மக்களுக்கு விரோதமாகவே செயல்படுகிறது என்பதை அனுபவப்பூர்வமாக கண்டுகொண்டவர்கள். தங்கள் நாட்டின் அரசியல் அமைப்பும் பொருளாதார கட்டுமானமும் செயலிழந்துவிட்டதை ஒப்புக்கொண்டவர்கள். கட்டுப்பாடற்று ஊழல் பெருகியிருப்பதையும், ஊழலுக்கும் தங்கள் வாழ்நிலை தாழ்ந்துபோனதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதையும் புரிந்துகொண்டவர்கள். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்னும் வெற்று நம்பிக்கை இல்லாதவர்கள். கையாலாகாத்தனத்தை விட்டொழித்தவர்கள். முயன்று பார்க்கலாமே என்று முடிவெடுத்தவர்கள். எனவே வென்றவர்கள்.
கவனித்து பார்த்தால், இங்கே இந்தியாவிலும் 2011 என்பது கலகக்காரர்களின் ஆண்டாகவே அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. இயந்திரத்தனமான பணிச்சூழலை எதிர்த்து மாருதி ஆலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நில கையகப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் உள்ள கிராம மக்கள் வீதிகளில் அமர்ந்து போராடினார்கள். மூன்று பேர் இதில் உயிரிழந்தனர். அண்ணா ஹசாரே ஊழலை ஒழித்துவிடுவார் என்னும் நம்பிக்கையில் அவர் பின்னால் மெழுகுவர்த்தியோடு அணிதிரண்டார்கள். பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மதுரையிலும் இளையாங்குடியிலும் பரமக்குடியிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் அமர்ந்திருக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் சுமூகமாகத் தீர்க்கப்படவேண்டும் என்னும் கோரிக்கையுடன் கேரள எல்லையில் சாலை மறியலிலும் உண்ணாவிரதத்திலும் கடையடைப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
மீடியா வெளிச்சம் கிடைக்கப் பெறாமல் பல்வேறு சிறிய, பெரிய போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டிருக்கின்றன. ஒருசிலரைத் தவிர இவர்களில் பெரும்பாலானோரின் பெயர்கள் இறுதிவரை நமக்குத் தெரியாமலேயே போய்விடுவதற்காக வாய்ப்புகள் அநேகம். இவர்களில் பலர், தடியடிக்கும், கண்ணீர் புகைக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் ஆளானவர்கள். தொடர்ந்து ஆளாகப்போகிறவர்கள். இவர்களில் சிலருக்குத் தியாகிப் பட்டம் கிடைக்கலாம். இவர்களில் பலர் மறக்கப்பட்டுவிடுவார்கள். கண்ணுக்குத் தெரிந்த சில வெற்றிகளைத் தவிர பெரும்பாலும் இவர்கள் தோல்வியையே தழுவப்போகிறார்கள். சரித்திரத்தின் நீண்ட பக்கங்களில் இவர்களுக்கு அநேகமாக எந்தவித இடமும் இருக்கப்போவதில்லை.
ஆனாலும் இவர்கள் முக்கியமானவர்கள். காரணம், இவர்கள் ஜனநாயகத்துக்காகப் போராடுகிறார்கள். காரணம், இவர்களுடைய போராட்டத்தின் பலனைத்தான் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்; இனியும் அனுபவிக்கப்போகிறோம். காரணம், இவர்களே வரலாற்றை இயக்கும் உந்துசக்தி. இவர்களே வரலாற்றை மாற்றியும் திருத்தியும் எழுதுகிறார்கள். இவர்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள். அந்த வகையில், 2011 மட்டுமல்ல எதிர்வரும் 2012ம் இவர்களுடைய ஆண்டுதான்.
(புதிய தலைமுறை புத்தாண்டுச் சிறப்பிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்)
4 comments:
//ஆனாலும் இவர்கள் முக்கியமானவர்கள். காரணம், இவர்கள் ஜனநாயகத்துக்காகப் போராடுகிறார்கள். காரணம், இவர்களுடைய போராட்டத்தின் பலனைத்தான் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்; இனியும் அனுபவிக்கப்போகிறோம். //
இதை எப்படி எடுத்துக்கொள்வது?
கலகமென்றா?
புரட்சி என்றா?
கலகம் என்றுதான், தமிழ். புரட்சி என்பது அடியோடு புரட்டிப்போடுவது. ஆனால், இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலகக்காரர்கள் முன்வைப்பது அமைப்பில் சில சீர்திருத்தங்களை மட்டுமே. ரஷ்யாவிலும் சீனாவிலும் நடைபெற்ற மக்கள் போராட்டத்தோடு ஒப்பிடும்போது இந்த வேறுபாடு நன்கு புலனாகும்.
பல நாட்களுக்கு பிறகு உங்களுட பதிவு என்ன மெய் சிலிருக்கை வைக்கிறது...அருமை மருதன் சார்
2011 ஆம் ஆண்டின் பின் இருந்த அத்துனை கலகக்காரர்களையும் முன் வைத்த உங்களுக்கு நன்றி.
கட்டுரையில் சில இடங்களில் சில சொற்கள் ரிப்பீட் செய்ய பட்டதை தவிர உங்கள் கட்டுரை அற்புதம் மருதன்.
நீங்கள் எழுதிய புத்தகத்தில் உங்களுக்கு பிடித்த புத்தகம் எது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
கார்த்திக்.
Post a Comment