March 1, 2013

விற்பனையாகாத புத்தகங்கள்

லேண்ட்மார்க்கில் Up to 70% டிஸ்கவுண்ட் சேல் நடைபெற்றுவருகிறது என்னும் செய்தி கேள்விப்பட்டு  நேற்று ஸ்பென்சர்ஸ் சென்று பார்த்தேன். சுத்தமாகத் துடைத்து வைத்தது போல் பளிச்சென்று காலியாக இருந்தது.

புத்தகங்களும்கூட அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. தேர்ந்தெடுத்த சில புத்தகங்களுக்கு மட்டும் 70% கழிவு. மேலும் சில புத்தகங்களுக்கு 50%. சிலவற்றை மூன்றாக எடுத்தால் இரண்டுக்கு மட்டும் பில்.

அதிகம் அல்லது வேகம் விற்பனையாகாத புத்தகங்களே இவ்வாறு அளிக்கப்படுகின்றன. சில சமயம், அழுக்கடைந்த, அட்டை சற்றே கிழிந்த புத்தகங்களும் விதிவிலக்காக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும்.

இந்த மற்றும் முந்தைய லேண்ட்மார்க் சேல் அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது கீழ்வரும் புத்தகங்கள் தேக்கமடைகின்றன என்று தெரிகிறது.

  1. ரிடையர் ஆன அரசு அதிகாரிகள் / ராணுவ அதிகாரிகள் / அமைச்சர்கள் / அரசியல்வாதிகள் / கிரிக்கெட் வீரர்கள் எழுதும் நினைவுக் குறிப்புகள். 
  2. வெளிநாட்டு அரசியல்வாதிகளின் நினைவுக் குறிப்புகள். டோனி பிளேர், க்ளிண்டன் போன்ற பிரபலங்களுக்கும் இது பொருந்தும்.
  3. டாபிகல் புத்தகங்கள். உதாரணத்துக்கு, ஒபாமா வெற்றி பெற்றது எப்படி? 
  4. சுயமுன்னேற்றம். இதில் எது விற்கும், எது தேங்கும் என்று சொல்வது மிகக் கடினம். 
  5. படங்களுடன் கூடிய காஃபி டேபிள் புத்தகங்கள். 
  6. என்சைக்ளோபீடியா வகை புத்தகங்கள். (இணையம் வந்த பிறகு மவுசு குறைந்துவிட்டது).
  7. அவசியம் பார்க்கவேண்டிய 100 திரைப்படங்கள், சினிமா தயாரிப்பு, சத்யஜித் ரே, மார்லின் பிராண்டோ, ஜாஸ் இசைக் கலைஞர்கள் போன்ற வண்ணப்படங்களுடன் கூடிய புத்தகங்கள். சினிமா என்பது பார்ப்பதற்கானது மட்டுமே, படிப்பதற்கானது அல்ல என்று  நினைக்கிறார்கள் போலும். 
  8. பெரும்பாலான புதிய நாவல் முயற்சிகள். 
  9. கவிதைகள்
  10. பிரபலங்களின் பிரபலமாகாத படைப்புகள். விக்ரம் சேத்தின் தாகூர் பற்றிய ஒரு சிறிய புத்தகம் தூசு படிந்து 70% கழிவில் இருந்தது. 
  11. விளையாட்டு வீரர்கள் பற்றிய / எழுதிய புத்தகங்கள்.
  12. திரைக்கதைகள்.
  13. மொழிபெயர்ப்புகள்.
  14. தீவிர ஆய்வுகள்.
ஒரு புத்தகம் வாசகர்களால் ஏன் நிராகரிக்கப்படுகிறது அல்லது ஏற்கப்படுகிறது என்பதற்குப் பொதுவிதிகள் எதுவுமில்லை. ஆனால் ஒரு புத்தகத்தை குறைந்தபட்சம் கையில் எடுத்துப் பார்ப்பதற்கு கீழ்வரும் விஷயங்கள் தேவை என்று நினைக்கிறேன்.
  1. அட்டைப்படம் கவரவேண்டும்.
  2. கன்டெண்ட் அல்லது ஆசிரியர் பெயர். இரண்டில் ஒன்று பரிச்சயமாக இருக்கவேண்டும்.
  3. மோசமான விமரிசனம் வந்திருந்தாலும் பரவாயில்லை. புத்தகம் பற்றி எங்காவது கேள்விப்பட்டிருக்கவேண்டும். 
  4. ஈர்க்கும் Blurb
  5. பரவாயில்லையே என்று நினைக்கவைக்கும் விலை.
மேலும் இரண்டு விஷயங்கள். மேலே உள்ள அத்தனை விஷயங்களையும் உள்ளடக்கிய மோசமான புத்தகங்களும் அதிகம் விற்பனையாகின்றன. நல்ல பல புத்தகங்கள் மேற்கண்ட அம்சங்களைக் கொண்டிருந்தும் தேக்கமடைந்து, அழுக்கடைந்து, 70% off ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, அட்டை கிழிந்து, புரட்டப்படாமல் முடங்கி கிடக்கின்றன.

பத்து நிமிடங்களில் லேண்ட்மார்க்கைவிட்டு  வெளியேறிவிட்டேன். ஏற்கெனவே ஏஸி வேலை செய்யவில்லை. மன்னிக்கவும் என்று எழுதி ஒட்டியிருந்தார்கள். கிளம்பும்போது விளக்குகளையும் அணைத்துவிட்டார்கள். Fiction பிரிவுக்கு அருகில் உள்ள ஒரு எலெக்ட்ரானிக் போர்டில் நெருப்புப் பற்றிக்கொண்டுவிட்டது. ஊழியர்கள் அனைவரும் விரைந்துவந்து அணைத்தார்கள். 

தீப்பொறி பறக்கும்படி அப்படி என்ன நாவல் புதிதாக வந்திருக்கும்? 

10 comments:

யாத்ரீகன் said...

looks like it's a good time to buy if our wanted Coffee Table books are available.. but still only with a good discount.

Lakshmana Perumal said...

இன்னொரு விடயமும் முக்கியத்துவமானது. எழுத்தாளர் இன்றைய ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளிலும், செய்தி ஊடகங்களிலும் தனது பேச்சுத் திறமையை காண்பிக்கிற பட்சத்தில், அவர்களின் எழுத்துகள் நன்றாகவே இருக்கும் என்ற சராசரி மனிதன் முக்கியத்துவம் கொடுக்கிறான் என்றே தோன்றுகிறது. இல்லையெனில் "ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க " அதிகமாக விற்குமா ? இதில் இன்னொரு முக்கியக் குறிப்பு அடங்கியுள்ளது. ஊடகத்தில் வருகிற முகங்களைக் காட்டிலும் தமிழக வெகுசனத்திற்கு யார் நல்ல எழுத்தாளன் அல்லது எழுத்தாளன் என்று தெரியுமா என்பது கூட தெரியாது என்பதே உண்மை.

Lakshmana Perumal said...





இன்னொரு விடயமும் முக்கியத்துவமானது. எழுத்தாளர் இன்றைய ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளிலும், செய்தி ஊடகங்களிலும் தனது பேச்சுத் திறமையை காண்பிக்கிற பட்சத்தில், அவர்களின் எழுத்துகள் நன்றாகவே இருக்கும் என்ற சராசரி மனிதன் முக்கியத்துவம் கொடுக்கிறான் என்றே தோன்றுகிறது. இல்லையெனில் "ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க " அதிகமாக விற்குமா ? இதில் இன்னொரு முக்கியக் குறிப்பு அடங்கியுள்ளது. ஊடகத்தில் வருகிற முகங்களைக் காட்டிலும் தமிழக வெகுசனத்திற்கு யார் நல்ல எழுத்தாளன் அல்லது எழுத்தாளன் என்று தெரியுமா என்பது கூட தெரியாது என்பதே உண்மை.

'பசி'பரமசிவம் said...

பொதுஜனங்களின் ஓய்வு நேரங்களை, தொலைக்காட்சி, செல்ஃபோன், இணையம், சினிமா போன்றவை விழுங்கிவிடுகின்றன.

புத்தகங்களின் விலையும் தாறுமாறாக ஏறிக்கொண்டிருப்பதும் அவற்றின் விற்பனை குறைவதற்குக் காரணம்.

போற்றிப் பாதுகாத்து, அடிக்கடி படித்தும் பயன் பெறவேண்டிய புத்தகங்கள் பற்றிய அறிவும் நம் மக்களுக்கு மிகக் குறைவு.

LN said...

Corporate takeover லேண்ட்மார்க் கிற்கு அடிக்கப்பட்ட சாவு மணி. இன்று ஹேமு ராமையா அதன் நிலையை பார்த்தால் கண்ணீர் வடிப்பார். சென்னையில் இருந்த ஒரு சிறந்த புத்தக நிலையத்தை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டனர் டாட்டா கம்பெனி காரர்கள்.

Krishnan said...

I totally agree with LN's comment. I still remember the heydays of Landmark in the 80s and 90s under Ms. Hemu Ramaiah...spent innumerable hours in Nungambakkam store...now looks like it has gone to seed.

மருதன் said...

LN & Krishnan : இது லேண்ட்மார்க்குக்கு மட்டுமே நேர்ந்த கதி அல்ல. புகழ்பெற்ற பல பழைமையான புத்தகக் கடைகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்கூட மூடப்பட்டு வருவதாகச் செய்திகள் வருகின்றன. புத்தகம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துவருவதை யாராலும் தடுக்கமுடியவில்லை.

hariharan said...

மருதன் அவர்களே, பாட்ரிச் லுமும்பாவைப் பற்றி தமிழில் புத்தகம் ஏதும் வந்துள்ளதா? தெரியப்படுத்துங்கள்.

Anonymous said...

நீங்கள் கிட்டத்தட்ட உண்மையை நெருங்கி எழுதியிருப்பதாக நினைக்கிறேன்.
சமீபத்தில் NCBH -ல் சிறுநூல் வரிசை என 10, 15, 20 ரூபாய்களுக்கு புத்தகங்கள் விற்பதைக் கவனித்தேன். அதன் வடிவமைப்பு, தலைப்பு, ஆசிரியர் எல்லாமே பிரமாதம். ஆனால் புத்தகத்தில் வெறும் அட்டைதான் எஞ்சியது. மொத்தமாக 15 பக்கங்கள் கொண்ட நூல் 10 ரூபாய்.

தமிழ்ச் சமுதாயத்தில் எழுத்தாளன் என்பவனுக்கான பார்வை அத்தனை துல்லியமானதாகவோ, தெளிவானதாகவோ இல்லை. இதுதான் நிதர்சனம்.

மருதன் said...

ஹரிஹரன் : விடியலில் ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. “லுமூம்பா: இறுதி நாட்கள்” (மொழிபெயர்ப்பு: எஸ். பாலச்சந்திரன்). தற்போது விற்பனையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. தேடிப் பாருங்கள்.