April 3, 2014

ஷா பானுவும் பாபர் மசூதியும்

இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு அதிகம் பலியானவர்கள் இஸ்லாமியர்கள். ஷா பானு விவகாரம் ஒரு நல்ல உதாரணம். ஐந்து குழந்தைகளுக்குத் தாயான 62 வயதான ஷா பானு அவருடைய கணவரால் விவாகரத்து செய்யப்படுகிறார். கணவர் ஒரு வழக்கறிஞர். ஏற்கெனவே இன்னொரு திருமணமும் செய்துகொண்டவர். பராமரிப்பு பணம் கொடுக்கமுடியாது என்று அவர் மறுத்துவிட்டதால் நாதியற்ற ஷா பானு வழக்கு தொடுத்தார். நீண்டு நீண்டு சென்ற அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று இறுதியில் ஷா பானுவுக்கு ஆதரவான தீர்ப்புடன் முடிவடைந்தது. ஏப்ரல் 1985ம் ஆண்டு வெளிவந்த அந்தத் தீர்ப்பு, விவாகரத்து பெற்ற அனைத்து பெண்களும் ஜீவனாம்சம் பெறமுடியும் என்பதையும் இஸ்லாமியப் பெண்களுக்கும் இது பொருந்தும் என்பதையும் சுட்டிக்காட்டியது.

ஷா பானுவுக்கும் அவரைப் போல் பாதிக்கப்பட்ட பிற இஸ்லாமியப் பெண்களுக்கும் இந்தத் தீர்ப்பு பெரும் வெற்றியைத் தேடித் தந்தது. ஆனால் அடிப்படைவாதிகளின் அரசியல் விளையாட்டு இந்த வெற்றியைத் தடுத்து நிறுத்தியது. ஷா பானுவுக்கு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை ஏற்கமுடியாது என்று அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினார்கள். காமன் சிவில் சட்டத்தை இஸ்லாமியர்கள்மீது செலுத்தும் முயற்சியே இந்தத் தீர்ப்பு என்றும் இஸ்லாமியர்களை வழிநடத்த இஸ்லாமியச் சட்டங்களே போதுமானது என்றும் அவர்கள் வாதிட்டனர். இந்த வாதத்தைத் தெருவுக்குக் கொண்டு வந்து அவர்கள் போராடியபோது பல இஸ்லாமியர்களின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது. புதிய சட்டத்தைக் கொண்டுவந்து இந்தத் தீர்ப்பை மாற்றவேண்டும் என்னும் கோரிக்கை வலு பெறத் தொடங்கியது.

ஆட்சியில் இருந்த ராஜிவ் காந்தி இந்தக் குரலுக்கு அடிபணிந்தார். முஸ்லிம்களின் வாக்குகளை இழக்கவேண்டிவரும் என்று அஞ்சிய அவர், சிறப்புச் சட்டத் திருத்தம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். மற்றொரு பக்கம், ஷா பானுவுக்கும் அடிப்படைவாதிகள் அழுத்தம் கொடுத்தனர். தீர்ப்பையும் ஜீவனாம்சத்தையும் அவர் ஏற்றுக்கொண்டால் அது இஸ்லாமிய சமூகத்தைப் பாதிக்கும் என்றும் மிரட்டினர். பணம், மகனுக்குப் பதவி என்று ஆசையும் காட்டினர். ராஜிவ் காந்தியே அடிபணிந்தபோது ஷா பானுவால் தப்ப முடியுமா என்ன? பத்திரிகையாளர்களைக் கூட்டி நீதிமன்றத் தீர்ப்பைவிட ஷரியத் சட்டமே முக்கியம் என்று பேட்டியளித்தார்.

முஸ்லிம் அடிப்படைவாதிகளின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. 1992ல் ஷா பானு இறந்துபோனார். அதே ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. காங்கிரஸ் இங்கும் அதே தவறைத்தான் செய்தது என்கிறார் ஹசன் சுரூர். இஸ்லாமிய அடிப்படைவாதிகளைத் திருப்திபடுத்துவதற்காக ஷா பானுவைப் பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ் இந்து அடிப்படைவாதிகளைத் திருப்திப்படுத்த பாபர் மசூதி இடிப்புக்கு இடம் கொடுத்தது. 1949 தொடங்கி பூட்டப்பட்டிருந்த பாபர் மசூதி வளாகம் முதல் முறையாக இந்துக்களின் வழிபாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டது. விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் இதைப் பயன்படுத்திக்கொண்டு ஆயிரக்கணக்கான காவி இந்துக்களை இறக்கிவிட்டது. ராமர் கோயில் கோரிக்கையுடன் செப்டெம்பர் 1990ல் அத்வானி தலைமையில் ரத யாத்திரை தொடங்கியது. இரண்டு ஆண்டுகளில் மசூதி இடிக்கப்பட்டது. 

இஸ்லாமிய அடிப்படைவாதிகளைப் போலவே இந்து அடிப்படைவாதிகளும் மகிழ்ச்சியடைந்தனர். இரு தரப்பு அடிப்படைவாதிகளைத் திருப்திபடுத்தும் பணியை காங்கிரஸ் இனிதே செய்துமுடித்தது. தவிர்க்கவியலாதபடி சில நல்ல காரியங்களும் இதனால் அரங்கேறின.
  • காங்கிரஸின் ஆதிக்கம் குறைந்தது. இன்றுவரை அக்கட்சியால் அறுதிப் பெரும்பான்மை பெறமுடியாமல் போனது.
  • காங்கிரஸின் பலம் குறையக் குறைய இஸ்லாமியர்களின் விழிப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கியது. இன்னொரு ஷா பானு நடக்கக்கூடாது என்று அவர்கள் உறுதி பூண்டனர்.
  • மசூதியைக் காப்பதைவிடவும் மேலான காரியங்கள் செய்யப்படவேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
(முந்தைய இரு பதிவுகளின் தொடர்ச்சி)

1 comment:

Anonymous said...

அய்யா உங்கள் உட்கருத்தில் எனக்கு உடன் பாடு இருந்தாலும், எடுத்துக்கொண்ட உதாரணம் சரியானதல்ல. ஷாஹ் பானு ஒரு தனிப்பட்ட நபர் பற்றியது - நமது நாட்டின் இறையாண்மையை, நீதியை ஏற்று கொள்ளாமல் இருபது வேறு; - ஆனால் பாபர் மசூதி இடி பட்ட "தவறு" பல காரணங்கள் உண்டு நான் எதையும் நியாய படுத்தவில்லை, ஆனால் மேற்கோள் காட்டும் பொழுது சற்று சிந்தித்து எழுதவும்