January 16, 2015

பெருமாள் முருகன் - கருத்துரிமை - பைரஸி

தி இந்துவின் Lit for Life இலக்கிய விழாவில் முதல் முறையாக நேற்று கலந்துகொண்டேன். காலை 10 மணி தொடங்கி மாலை வரை நீண்ட நிகழ்ச்சிகள் குறித்து பின்னர் எழுதுகிறேன். இப்போதைக்கு ஒரே ஒரு அமர்வு குறித்து மட்டும் சில வார்த்தைகள்.

பெருமாள் முருகனையும் அவருடைய சர்ச்சைக்குள்ளான நாவலையும் முன்வைத்து நடத்தப்பட்ட ஒரு விவாதத்தில் (Free Speech in Peril : The issues at stake) இருந்து சில பகுதிகளை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.

என். ராம், நீதிபதி சந்துரு, ஆ.இரா. வேங்கடாசலபதி, சஷி குமார் ஆகியோர் இந்த அமர்வில் கலந்துகொண்டனர். 
  • பெருமாள் முருகனின் மாதொருபாகன் நூல் பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தை சமீபத்திய நிகழ்வுகளின் காலவரிசையோடு ஆ.இரா. வேங்கடாசலபதி வழங்கினார்.
  • ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டபிறகே நூல் பற்றிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. எனவே பிரச்னையின் தொடக்கப்புள்ளி தமிழ்நாடு அல்ல, டெல்லி. அங்கு இதற்கெனவே செயல்படும் ஓர் அமைப்பு தங்களுக்குப் பிடிக்காத அனைத்தையும் தடை செய்யச்சொல்லி பத்திரிகை அலுவலகங்களையும் எழுத்தாளர்களையும் மிரட்டிக்கொண்டிருக்கிறது. பெருமாள் முருகனின் புத்தகத்தைத் தடை செய்யவேண்டும் என்று அங்கிருந்தபடியே தூண்டிவிட்டவர்கள் இவர்கள்தாம் என்றார் ஆ.இரா. வேங்கடாசலபதி.
  • இப்படி பொதுவாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை; அவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர்தான் என்று தெளிவாக அறிவித்தார் என். ராம். பெருமாள் முருகனுக்கும் அவருடைய புத்தகத்தை எதிர்த்தவர்களுக்கும் இடையில் 'அமைதியை' ஏற்படுத்துவதற்காக அரசு அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைக் கட்டப்பஞ்சாயத்து என்றுதான் அழைக்கமுடியும்.
  • பெருமாள் முருகன் இறந்துவிட்டான் என்னும் அறிவிப்பை உணர்ச்சிவசப்பட்டு அவர் எடுத்த முடிவாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அவரை மீண்டும் எழுதச்சொல்லி நாம் கூட்டாகக் கேட்டுக்கொள்ளவேண்டும். மாதொருபாகனை தொடர்ந்து பதிப்பிக்கவேண்டும் என்றார் என்.ராம். (இதற்கான முயற்சிகளை ஆ.இரா போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்).
  • இது உடனடியாகச் சாத்தியமில்லை; பெருமாள் முருகனுடனான ஒப்பந்தம் அதனை அனுமதிக்காது. தவிரவும் அவர் என் நீண்டகால நண்பர் என்றார் காலச்சுவடு பதிப்பாசிரியர், கண்ணன். ஆனால், உங்களில் யாராவது வேறு பெயரில் மாதொருபாகனை பைரேட் செய்து இணையத்தில் ஏற்றினால் அதை நான் தடுக்கமாட்டேன் என்றார். 
  • மாதொருபாகன் தவிர பெருமாள்முருகனின் பிற புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்றும் கண்ணன் அறிவித்தார். (இணையம் வழியாக மாதொருபாகன் ஆங்கில நூல் விற்பனைக்குக் கிடைக்கிறது.)
  • இத்தகைய எதிர்ப்புகள் கிளம்புவது முதல் முறையல்ல; கடைசி முறையாகவும் இருக்கப்போவதிதல்லை என்றார் நீதிபதி சந்துரு. சில உதாரணங்களையும் குறிப்பிட்டார். அண்ணாவின் பிறந்தநாளைக் கொண்டாட (உண்மையில் அது பிரபாகரனின் பிறந்தநாள்) தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வைகோ நீதிமன்றத்தை நாடியபோது நீதிபதி அவரிடம் கேட்டாராம். 'உங்கள் கருத்துரிமை மீறப்படுகிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் டேம் 99 படம் வெளியிடக்கூடாது என்று நீங்கள்தான் சொன்னீர்கள். அது மட்டும் கருத்துரிமை மீறல் இல்லையா?' இரண்டு நிறுவனங்கள்தான் தமிழ்நாட்டில் (இந்தியாவில்?)  கருத்துரிமை விஷயத்தில் ஒரே போக்கைத் தொடர்ந்து கடைபிடித்துவருகின்றன என்றார் சந்துரு. ஒன்று அரசாங்கம். பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று எப்போது, யார் கேட்டாலும் தொடர்ந்து மறுத்துவிடுவார்கள். அடுத்தது, நீதிமன்றம். எப்போதும் அரசாங்கத்தின் அனுமதியை மறுத்து சந்திப்புக்கு அனுமதி வழங்குவார்கள்.
  • இந்துத்துவ, ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் இப்படி எழுத்தாளர்களின் கருத்துரிமையைப் பறிப்பதை வைத்துப் பார்த்தால் சுயமரியாதை இயக்கம் தோல்வியடைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும் என்றார் சந்துரு.  (பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட செய்தியைக் கேள்விப்பட்டு என். ராம் அதனை வரவேற்று, பகிர்ந்துகொண்டார்).
  • மேடையில் பேசிய அனைவரும் ஒரே குரலில் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஒன்று, பெருமாள் முருகனுக்கு. தயவு செய்து உங்கள் முடிவை மாற்றிக்கொண்டு இந்தப் போராட்டத்தின் நாயகனாக முன்வந்து வழிநடத்துங்கள். நீங்கள் இல்லாவிட்டால் இந்தப் போராட்டம் முழுமை அடையாது. மேலும், நீங்கள் அச்சப்பட்டு எழுத்தைத் துறப்பது அறம் அல்ல. இரண்டாவது கோரிக்கை அனைவருக்குமானது. உங்களுக்கு ஒவ்வாத விஷயங்களைப் படிக்கவோ பார்க்கவோ கேட்கவோ நேர்ந்தால், உடனே அவற்றைத் தடைசெய்யவேண்டும் என்று நினைக்காதீர்கள். அனைத்துக் கருத்துகளும் வெளிப்படுத்தப்படவேண்டும். அதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது. 
இதுதான் என்னுடைய கருத்தும். பிறகு, விரிவாக எழுதுகிறேன்.

3 comments:

Naanjil Peter said...

அருமையான பதிவு. மிக்க நன்றி. தினசரிகளில் வராத தகவல்கள்.

NAGARAJAN said...

பிற மதங்களைப் பற்றி விமர்சனங்கள் வந்து அந்த நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடந்த போதெல்லாம் இந்தக் கூட்டம் எங்கே போனது ?

பிற மதங்கள் பாதிக்கப்பட்டால் ரத்தம், ஹிந்துக்களுக்கு வந்தால் தக்காளியா ?

S.SUDHANANDHAM said...

எனக்கும் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.நெகிழ்ச்சியான நிகழ்ச்சி. ஆணித்தரமான விவாதங்கள்.ஹிந்து பத்திரிக்கை குழுமத்துக்கே உரிய கருத்து சுதந்திர,படைப்பு சுதந்திர உரிமையை அழுத்தமாக எடுத்து சொல்லிய பக்குவம்.எழுத்தாளர் பெருமாள் முருகன் உயிர்ப்பித்து வர,சரியான வாய்ப்பு.எல்லோரும் இணைந்து இனி ஒரு எழுத்தாளனுக்கு இது போன்ற”படைப்பு தற்கொலை” ஏற்படாமல்,இலக்கிய உலகை பாதுகாப்போம்.