September 29, 2012

புத்தகம் என்றொரு பண்டம்

அகில உலக அளவில்ஆங்கில ஊடகங்கள்  தற்போது இரு புத்தகங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கின்றன. ஒன்று, சல்மான் ருஷ்டியின் Joseph Anton. The Satanic Verses புத்தகத்துக்காக அயதுல்லா கொமேனியால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த காலகட்டம் பற்றிய தன்வரலாற்றுப் புத்தகம். 'ருஷ்டியின் வாழ்க்கைக்கு உள்ளே, அவரது தலைக்கு உள்ளே ஈடுருவிச் சென்று பார்க்கக்கூடிய' புத்தகம் இது என்கிறார் ஒரு விமரிசகர். 'இதுவரை அவர் எழுதியதிலேயே சிறந்தது இதுதான்' என்கிறார் இன்னொருவர்.

மறைந்து வாழ்ந்த சமயத்தில், ருஷ்டி தனக்குத் தானே சூட்டிக்கொண்ட பெயர்தான் ஜோசப் ஆன்டன். தனக்குப் பிடித்த எழுத்தாளர்களான ஜோசன் கான்ராட், ஆன்டன் செகாவ் இருவருடைய பெயர்களையும் இணைத்து உருவாக்கிய பெயர் இது என்கிறார் ருஷ்டி.

இரண்டாவது புத்தகம், ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே. ரவுலிங் எழுதிய The Casual Vacancy. குழந்தைகளுக்காக அல்லாமல், பொதுவான வாசகர்களுக்காக எழுதப்பட்ட முதல் நாவல் இது.

ருஷ்டியின் புத்தகத்தைப் பதிப்பித்தவர்கள் ஜோனதன் கேப். ரவுலிங்கின் புத்தகம், லிட்டில் பிரவுன் அண்ட் கம்பெனி வெளியீடாக வந்துள்ளது.

ஆப்பிள் ஐ பேட் போலவே ரவுலிங்கின் புத்தகத்தையும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வரிசையில் நின்று, கடை திறப்பதற்குக் காத்திருந்து வாங்கி சென்றிருக்கிறார்கள். இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ருஷ்டியின் புத்தகத்துக்கும் நல்ல மிக வரவேற்பு கிடைத்திருக்கும். கடைக்கு வந்த சில மணி நேரங்களில், ரவுலிங்கின் புத்தகம் அமேசானில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறது. கொஞ்சம் கூகிள் செய்தால், இந்த நிமிடம் வரை எத்தனை மில்லியன் புத்தகங்கள் உலகம் முழுவதும் விற்றுத் தீர்ந்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.

மேற்படி புத்தகங்களின் நிறை, குறைகளைத்தாண்டி அவை சந்தைப்படுத்தப்பட்ட முறைதான் அதிகம் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்னென்ன வழிகளைப் பயன்படுத்தி இந்த அசாத்தியமான விற்பனை நிகழ்ந்திருக்கிறது என்று பார்ப்போம்.

  • எழுத்தாளர்கள் "பிராண்ட்" போல் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
  • புத்தக வெளியீட்டுக்குச் சில நிமிடங்களுக்கு முன்புவரை கடைகளுக்குப் புத்தகங்கள் அனுப்பப்படவில்லை. ஒருவர் ஒரு புத்தகம் மட்டுமே வாங்கலாம் போன்ற கட்டுப்பாடுகளை விதித்து, செயற்கையான முறையில் பரபரப்பையும் தேவையையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
  • புத்தகத்தை விமரிசனம் செய்யும் எழுத்தாளர்களுடன் பத்திரம் போட்டு கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். கதையை சொல்லமாட்டேன். புத்தகத்தை யாருக்கும் காண்பிக்கமாட்டோன் என்று நிறைய கட்டுப்பாடுகள். வீடு வாங்கும்போது போட்டதைவிட அதிகக்  கையெழுத்து போடவேண்டியிருந்தது என்கிறார் ஒரு விமரிசகர். விதிமுறையை மீறும் விமரிசகர்கள் ருஷ்டியின் பதிப்பாளருக்கு 2 லட்சம் பவுண்ட அபராதம் கட்டவேண்டும். இப்படியொரு அக்ரிமெண்ட் போடப்பட்டிருக்கிறது என்பதையே ரவுலிங்கின் புத்தகத்தை விமரிசனம் செய்பவர் வெளியில் சொல்லக்கூடாது. 
  • புத்தகம் வெளிவரும்வரை 'விமரிசனம்' செய்யும் விமரிசனங்கள் வெளிவரக்கூடாது. 
ரவுலிங்கின் புத்தகம் வெளிவருவதற்கு முன்பே 2 மில்லியன் ஆர்டர்கள் வந்து சேர்ந்துவிட்டனவாம். ருஷ்டியின் புத்தகத்துக்கு எத்தனை மில்லியன் ஆர்டர்கள் என்று தெரியவில்லை.

சந்தேகமில்லாமல் இது ஒரு மார்க்கெட்டிங் வெற்றி. ஆப்பிள் ஐ பேட் போல் ருஷ்டி அல்லது ரவுலிங்கின் புத்தகமும் ஒரு பண்டம். அந்த வகையில் அதற்கான தேவையை உருவாக்கி, தக்கமுறையில் விளம்பரம் செய்து, அக்ரிமெண்ட் போட்டு, ஏஜெண்டுகளை நியமித்து, ஆர்டருக்கு ஏற்றபடி பண்டங்களை கடைகளுக்கு அனுப்பி டார்கெட்டை நிறைவேற்றியிருக்கிறார்கள். 

கமிஷனிங் எடிட்டர் எழுத்தாளரின் ஏஜெண்டை அணுகி ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார். அட்வான்ஸ் அளிக்கப்படுகிறது. எழுதி முடிக்கப்பட்ட 'ரா மெட்டீரியல்' எடிட்டிங் அலுவலகத்தை அடைகிறது. அங்கே தட்டி, கொட்டி, பாலிஷ் செய்யப்படுகிறது. அட்டை, பைண்டிங், இத்யாதிகள் முடிந்தபிறகு ஃபினிஷ்ட் புராடக்டாக புத்தகம் அச்சாகி வருகிறது. பிறகு வேர்ஹவுஸ், மார்கெட்டிங், சேல்ஸ், ராயல்டி. பீரியட்.

இந்தச் செயல்முறையின் மையம், நுகர்வோர். காசு கொடுத்து பண்டத்தை வாங்கவேண்டிய நபர். இவரை நம்பிதான், இவரை மையப்படுத்திதான் எந்தவொரு பண்டமும் சந்தைப்படுத்தப்படுகிறது.  எனவே பிரச்னை, சந்தைப்படுத்தும் முறை பற்றியது மட்டுமல்ல, நுகர்வோருக்கு உள்ள சுதந்தரம் பற்றியதும்தான்.

ஐ பேட், புத்தகம், டிவி என்ற எந்தவொரு பண்டத்தையும் எப்படியும் விளம்பரப்படுத்தலாம், சந்தைப்படுத்தலாம் என்பதே இன்றைய சந்தை விதி. துப்பாக்கி முதல் புத்தகம் வரை அனைத்து பண்டங்களையும், மருத்துவம் தொடங்கி விவாகரத்து வரை அனைத்து சேவைகளையும் இன்று விளம்பரப்படுத்த முடியும்.

மேற்படி புத்தகங்களும் இவ்வாறே விளம்பரப்படுத்தப்பட்டிருக்கின்றன என்றாலும் இதில் ஒரு அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. ஐ பேட் வாங்கினால் என்னென்ன வசதிகள் அதிலிருக்கும் என்று ஒருவர் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், ருஷ்டியின் புத்தகத்தையோ ரவுலிங்கின் புத்தகத்தையோ வாங்கினால் அவற்றில் இருந்து என்ன கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை நுகர்வோருக்கு இல்லை. எந்தவொரு விமரிசனமும் முன்கூட்டியே வெளிவரவிடாமல் தடுத்துவிட்டதன் மூலம், இந்தப் பண்டங்கள் எப்படிப்பட்டவை என்பதை அறியாமலேயே வாங்கி சென்றுவிடுகிறார்கள்.

சல்மான் ருஷ்டியின் தலைக்கு விலை குறிக்கப்பட்டபோது, உலகம் முழுவதிலும் இருந்து கருத்துரிமைக் காவலர்கள் அவரை உயர்த்திப் பிடித்தார்கள். ஆனால், நுகர்வோருக்கு இன்றுள்ள உரிமைகள் குறித்து வெளிப்படையாக ருஷ்டியால் குரல் கொடுக்கமுடியாது. 

எனவே, எச்சரிக்கையாக இருக்கவேண்டியவர்கள் நுகர்வோர்தான். பல வர்ண ஜால விளம்பரங்கள் உங்களைத் தாக்கிக்கொண்டே இருக்கும். வாங்கு, வாங்கு என்று ஆசை மூட்டிக்கொண்டே இருப்பார்கள். வாங்காவிட்டால் அவமானம் என்று நகைப்பார்கள். பெரும் நிறுவனங்களும் பிரபலங்களும் உங்களை நொடிக்கு நொடி நிர்பந்திப்பார்கள். சாத்தானின் ஆப்பிள் எனக்கு வேண்டாம் என்று மறுக்கும் திடத்தை நீங்கள்தான் பெற்றாகவேண்டும். 

வழக்கத்தைக் காட்டிலும் மேற்படி புத்தகங்கள் கூடுதல் அழுத்தத்துடனும் அநாகரிகமான முறையிலும் திணிக்கப்பட்டதை (இதிலும் ரவுலிங்குக்கே முதலிடம்) அமெரிக்க விமரிசகர்களும் பத்திரிகையாளர்களுமே எதிர்க்கிறார்கள்.

மருத்துவம், கல்வி போல் எழுத்தும் ஒரு வணிகம். புத்தகமும் ஒரு பண்டமே. இதை ருஷ்டியும் ரவுலிங்கும்கூட புன்சிரிப்புடன் ஒப்புக்கொள்வார்கள். இந்த உண்மையைப் புரிந்துகொள்வதுதான் சந்தையைப் புரிந்துகொள்வதற்கான முதல் வழி.

9 comments:

Bala Venkatraman said...

Excellent.

kashyapan said...

கத்தரிக்காயை அமுக்கிப் பார்த்து பிஞ்சு கத்தரிகாயைப் பொறூக்கிக் கொள்ளலாம். தேங்காயை சுண்டிப் பர்த்து விளைந்தகாயப் பொறுக்காலாம். புத்தகம் என்றால் அதுவும் முடியாதா?---கஸ்யபன்.

தமிழ் said...

அண்ணன் மருதன் அவர்கள், கொஞ்சம் எனக்கு விளங்குமாறு சொல்லவும்.
தங்கள் கருத்து என்ன?
-அதாவது புத்தகத்தின் கருத்தை வாசகன் உள்வாங்க வேண்டுமா?
-இல்லை, புத்தக சந்தைப்படுத்தலில் தெளிவாக இருக்க வேண்டுமா??
குறிப்பிட்ட இரு புத்தகங்களும் பொதுவான வாசிப்பு களங்கள். இது தவிர பிற (மொழி, வரலாறு, அறிவியல், தொழில்நுட்ப) புத்தகங்களுக்கும் இது போன்ற காரணிகளை நாம் உள்வாங்க வேண்டுமா?
-கட்டுரை யாரை நோக்கி எழுதப்பட்டுள்ளது?
-பதிப்பாளர்களையா?(எழுத்தாளர்கள்)
-வாசகர்களையா?
** ரொம்ப யோசித்து குழம்பியுள்ளேன் அண்ணா! விளக்குங்கள்

தமிழ் said...

அண்ணன் மருதன் அவர்கள்,
சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
யாருக்கு இக்கட்டுரை எழுதப்பட்டது?
பதிப்பாளர்கள்/எழுத்தாளர்கள்
(அ)
வாசகர்கள்
அடுத்தது குறிப்பிட்ட 2 நூல்களும் பொது வாசிப்புக்கானவை. இதே காரணிகள் இதர (மொழி, வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம்)புத்தகங்களுக்கும் பொருந்துமா?
தயை கூர்ந்து விளக்கவும்

மருதன் said...

தமிழ் :

பதிப்பாளர்கள் கவனிக்கவேண்டிய விஷயம், மேற்படி ஆங்கிலப் பதிப்பாளர்களைப் போல் புத்தகங்களை ஃபாசிச நோக்கில் விளம்பரப்படுத்தவோ சந்தைப்படுத்தவோ கூடாது.

எழுத்தாளர்கள் கவனிக்கவேண்டிய விஷயம், பதிப்பாளர்கள் கடைபிடிக்கும் விளம்பர உத்திகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் அதைச் சம்பந்தப்பட்ட பதிப்பாளரிடம் தெரியப்படுத்தவேண்டும். உதாரணத்துக்கு, புத்தகத்தைப் பற்றிய எதிர்மறை விமரிசனம் கூடாது என்பது போன்ற அநியாய அக்ரிமெண்டுகள் கூடாது என்று ருஷ்டியும் ரவுலிங்கும் சொல்லியிருக்கவேண்டும்.

வாசகர்கள் மேற்படி விஷயங்களைக் கவனத்தில் கொண்டு, எப்படிப்பட்ட புத்தகம்,எப்படிப்பட்ட எழுத்தாளர், இந்தப் புத்தகத்தில் இருந்து எனக்குக் கிடைக்கப்போவது என்ன என்று அனைத்தையும் ஆராய்ந்த ஒரு புத்தகத்தை வாங்கவேண்டும். விளம்பரங்களும் மார்க்கெட்டிங் மாயாஜாலங்களும் உங்களை அடித்துச் சென்றுவிட அனுமதிக்கக்கூடாது.

- மருதன்

Anonymous said...

புத்தகம் வெளிவந்து,விமர்சனமெல்லாம் வந்த பின் வாங்குவதைப் பற்றி முடிவு செய்யலாம்.வாசகர் அவசரப்பட வேண்டியதில்லை.

Anonymous said...

பாசிசம் பாசிசம் என்று சகட்டுமேனிக்கு அச்சொல்லை பயன்படுத்துவதே பாசிசம்தான் :)

Anonymous said...

http://upliftthem.blogspot.in/2012/09/college-girl-gayathri-raped-and.html

திருசெங்கோடில் உள்ள விவேகான்ந்தா கல்லூரி ஆசிரியர்கள் 4 பேர் மாணவியை கற்பழித்து கொன்று விட்டார்கள். பத்திரிக்கைகளில் செய்தி வராமல் தடுத்தும் விட்டார்கள்...இதை பிளாகில் படிக்கும் முன்பே நாமக்கலைச் சேர்ந்த பையன்கள் மூலம் எனக்கு தெரியும்...

Anonymous said...

sir note this:

in homeshop18 dot com price of books r much lesser than that of price of books in flipkart dot com ...u by yourself verify it...