May 28, 2009

ஹிட்லரும் இலங்கையும்

’எனக்கு மட்டும் அதிகாரம் கிடைத்துவிட்டால் நான் செய்யும் முதல் வேலை யூத இன ஒழிப்பாக இருக்கும். மூனிச்சில் வரிசை வரிசையாக தூக்குமேடைகள் அமைப்பேன். எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு. பிறகு, யூதர்கள் தூக்கில் போடப்படுவார்கள். துர்நாற்றம் வரும் வரை உடல் அங்கேயே தொங்கிக்கொண்டிருக்கவேண்டும். பிறகு கயிற்றில் இருந்து விடுவித்து, அடுத்த குழுவை தூக்கில் மாட்டுவோம். இப்படியே வரிசையாக தூக்கு தண்டனைகள் விதிக்கப்படும். மூனிச்சில் கடைசி யூதன் இருக்கும்வரை இது தொடரும். பிற நகரங்களும் இதை நடைமுறைப்படுத்தும். ஜெர்மனியில் இனி யூதர்களே கிடையாது என்னும் நிலை ஏற்படும்வரை இது தொடரும்.’

- ஹிட்லர், 1922ம் ஆண்டு

அதிகாரம் கையில் கிடைக்கும் முன்னரே ஹிட்லர் யூதர்களுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். ஜெர்மனியில் அதிகம் படித்தவர்கள் யார்? அரசாங்க அலுவலகங்களில் உயர் பதவிகளில் யார் நிறைந்திருக்கிறார்கள்? மருத்துவர்களாக இருப்பவர்கள் யார்? செல்வந்தர்கள் யார் யார்? இந்த நகரம் மட்டுமல்ல. எந்தவொரு நகரத்தையும் நீ சுற்றிவரலாம். ஜெர்மானியர்கள் யாராவது ஏதாவது சிறுதொழில் தொடங்க வேண்டுமானால் கடனுக்கு யாரிடம் கை நீட்டுகிறார்கள்? ஆஸ்திரிய மக்களின் அவல நிலை யாரால் ஏற்பட்டது? ஜெர்மானியர்களின் குழந்தைகள் உணவின்றி தவித்துக்கொண்டிருக்கும்போது யாருடைய குழந்தைகள் போஷாக்காக வளர்ந்துகொண்டிருக்கின்றன?

யூதர்கள். நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடும் நண்பரே. ஆனால் உண்மை. நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. எல்லாவற்றையும் என் கண்களால் அசலாகப் பார்த்தபிறகே நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். ஒரே வழிதான். அகண்ட ஜெர்மனி உருவாகவேண்டும். ஜெர்மானிய மக்கள் நலமுடன் வளமுடன் வாழவேண்டும். யூதர்களை அழித்தொழிக்காமல் இதை அடையமுடியாது.

இனவொழிப்பு ஆரம்பமானது. யூதர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவோ ஆட்சேபிக்கவோ அங்கே யாருமில்லை. எந்தவொரு அரசியல் தலைவரும், எந்தவொரு சமூக அமைப்பும், எந்தவொரு மதகுருவும் யூதர்களைத் தங்களுடன் இணைத்துப் பார்க்கவில்லை. கிட்டத்தட்ட எதிர்ப்புகளே இல்லாமல் நடத்தப்பட்ட மிகப்பெரிய இனவொழிப்பு அது.

அனாகாலிக தர்மபாலா 1900ம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவில் இருந்து ஒரு பகுதி கீழே.

’நாட்டின் செல்வ வளத்தை அந்நியர்கள் எடுத்துச் செல்லும்போது எமது மண்ணின் மைந்தர்களுக்கு போக்கிடம் எங்கே? இந்நாட்டில் வந்து குடியேறியோர் திரும்பிச் செல்வதற்கு அவர்களுக்கு நாடு உண்டு. ஆனால், சிங்களவர் செல்வதற்கு எந்த நாடும் இல்லை. அந்நியர்கள் குதூகலிக்கும்போது மண்ணின் மைந்தர்கள் இழப்புக்கு ஆளாவது என்ன நியாயம்? இங்கிலாந்துக்கு இரவலர் வருவதைத் தடுப்பதற்கு அந்நியர் தடைச்சட்டம் ஒன்று அந்நாட்டில் உள்ளது. ஆனால், உதவியற்ற, அப்பாவிச் சிங்களக் கிராமவாசி அவரது மூதாதையரது நாட்டின் செல்வத்தைத் திருடும் அந்நிய மோசடியாளருக்கு இரையாகின்றான்.’

(இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள், குமாரி ஜெயவர்த்தனா, பக்கம் 19)

ஹிட்லர் முன்வைத்த அதே முழக்கம். ஹிட்லர் கக்கிய அதே இனவெறுப்பு. ஹிட்லர் சுட்டிக்காட்டிய அதே காரணங்கள். யூதர்கள் இருக்கும்வரை ஜெர்மனி வளராது என்றார் ஹிட்லர். தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் இருக்கும்வரை இலங்கை விளங்காது என்றார் தர்மபாலா. ஜெர்மனிக்கு ஒரு ஹிட்லர் போதுமானதாக இருந்தது. இலங்கைக்குப் பல ஹிட்லர்கள். தர்மபாலா தொடங்கி ராஜபக்ஷே வரை.

ஜெர்மானியர்களுக்கு வந்து சேரவேண்டிய வாய்ப்புகளை யூதர்கள் பறித்துக்கொள்கிறார்கள். ஜெர்மானியர்கள் தொழில்முனையில், கல்வியில் நசிந்துகிடக்கும்போது யூதர்கள் மட்டும் மினுமினுப்புடன் வலம் வருகிறார்கள். ஆகவே, யூதர்கள் ஒழிக்கப்படவேண்டும். ஜெர்மனி, ஜெர்மானியர்களுக்கு மாத்திரம்தான். நம் உடலில் ஓடுவது சுத்த ரத்தம். நாம் ஆரியர்கள். ஆகவே, நாம் புனிதமானவர்கள். நாம் மட்டும்.

ஜெர்மானியர்கள் என்னும் இடத்தில் சிங்களர்கள் என்றும் யூதர்கள் என்னும் இடத்தில் தமிழர்கள் என்றும் பொருத்திக்கொண்டால் இலங்கை இனவெறியின் தத்துவம் கிடைத்துவிடும்.

ஹிட்லரை ஜெர்மனி நம்பியது. மதித்தது. ஏற்றுக்கொண்டது. யூதர்கள் கொல்லப்பட்டதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இலங்கையிலும் இதுவேதான் நடந்துகொண்டிருக்கிறது. ராஜபக்ஷே சொல்வதை இலங்கை நம்புகிறது. மதிக்கிறது. ஏற்றுக்கொள்கிறது.

அதோ பூதம் என்று ஹிட்லர் அன்று ஒரு யூதனை சுட்டிக்காட்டினார். அதோ பூதம் என்று ராஜபக்ஷே இன்று ஒரு புலியைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஹிட்லரை அன்று யாராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை. ஜெர்மனியின் உள்நாட்டு விவகாரம் என்று ஐரோப்பா ஒதுங்கிகொண்டது. இன்று, ராஜபக்ஷேவைத் தட்டிக்கேட்க யாருமில்லை.

ஹிட்லர் ஆபத்தானவர், அவரை இப்படியே விட்டுவைத்தால் ஐரோப்பாவை விழுங்கிவிடுவார் என்று ஸ்டாலின் எச்சரிக்கை குரல் எழுப்பியபோது பிரிட்டன், ஃபிரான்ஸ் உள்ளிட்ட பெரும் நாடுகள் அசட்டை செய்தன. ஆஸ்திரியா, போலந்து, செக்காஸ்லாவாக்கியா என்று தொடங்கிய ஹிட்லர் இறுதியில் பிரிட்டனை தாக்கியபோதுதான் (ஜூலை 16, 1940) விபரீதம் புரிந்தது. அவசரமாக சோவியத்துடன் கூட்டணி சேர்ந்துகொண்டன. இறுதியில், சோவித் யூனியனிடம் ஜெர்மனி சரணடைந்தது.

இன்று, ரஷ்யா இலங்கைக்கு ஆதரவாக ஐ.நாவில் வாக்களித்திருக்கிறது. சீனா, க்யூபா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகளும் இலங்கை பக்கம் சாய்ந்திருக்கின்றன.

அமெரிக்காவின் ஆசிர்வாதத்துடன் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு தேசத்தை (இஸ்ரேல்) உருவாக்கிக்கொண்டனர். அதே போல், இந்தியாவின் ஆசிர்வாதத்துடன் தங்களுக்கென்று ஒரு தேசத்தை (ஈழம்) உருவாக்கிக்கொள்ளமுடியும் என்று நீண்டநெடுங்காலமாகக் காத்துகிடந்தனர் இலங்கைத் தமிழர்கள். விடுதலைப் புலிகளுமேகூட இந்தியாவை நம்பிக்கொண்டுதான் இருந்தனர். குறைந்தது, தமிழகத்தை. இலங்கைக்கு ஆயுத உதவி அளித்ததன் மூலம், இந்தியா தன் நிலையை மீண்டும் தெளிவுபடுத்தியது.

இலங்கையின் ஹிட்லர் தனிமனிதரல்லர். புத்த பிக்கு, அரசியல்வாதி, அதிபர் என்று வெவ்வேறு வடிவங்களில் மாறிமாறி அவர் தோன்றிகொண்டிருக்கிறார். அதிகாரமும் செலுத்திக்கொண்டிருக்கிறார். தற்போதைய ஹிட்லரின் பெயர் மகிந்த ராஜபக்ஷே. அவ்வளவுதான்.

May 27, 2009

பிரபாகரன் குறித்து இரு கட்டுரைகள்

1) பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து ஒரு குர்து வலைப்பதிவாளர் (Shexmus Amed) எழுதியிருக்கும் விமரிசனம் இது. குர்து மக்களின் போராட்டத்துக்கும் இலங்கைத் தமிழர்கள் போராட்டத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக இவர் கருதுகிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பார்த்து தான் மிகவும் பெருமைப்படுவதாகக் குறிப்பிடும் Shexmus, இயக்கத்தின் பலத்தையும் பலவீனத்தையும் ஒருங்கே பட்டியலிட்டுத் தருகிறார்.

2) லங்கா கார்டியனில் அனிதா பிரதாப் எழுதியிருக்கும் கட்டுரையில் புதிதாக எந்த தகவலும் இல்லை. பிரபாகரனின் மரணம் குறித்து இவர் எழுப்பியிருக்கும் சந்தேகங்கள் ஏற்கெனவே இணையத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டவை. தனக்கு எட்டு ராசியில்லாத எண் என்று பிரபாகரன் ஒரு முறை அனிதா பிரதாப்பிடம் குறி்ப்பிட்டிருந்தாராம். பிரபாகரன் பிறந்தது நவம்பர் 26. கூட்டுத்தொகை எட்டு. 8, 17, 26 ஆகிய தினங்களில் பிரபாகரன் முக்கிய தாக்குதல் எதையும் தொடுக்கமாட்டாராம். பிரபாகரன் இறந்ததாக இலங்கை ராணுவம் குறிப்பிடும் தினம் மே 17. இறந்தவர் பிரபாகரன்தான் என்றால், அவர் நம்பிக்கை சரியாகவே இருந்திருக்கிறது என்கிறார் அனிதா பிரதாப்.

May 26, 2009

ஐ.நாவும் இலங்கை இனப்படுகொலையும்


ஜூலை 26, 2006 அன்று நடைபெற்ற மாவிலாறு அணை தாக்குதல் நான்காம் ஈழப்போரைத் தொடங்கிவைத்தது. சம்பூர், வாகரை தொடங்கி கிளிநொச்சி உள்ளிட்ட கிழக்குப் பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது இலங்கைப் படை. புலிகளின் தலைமை உள்பட அனைவரையும் அழித்துவிட்டதாகவும் போர் முடிவடைந்துவிட்டதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இலங்கை அளித்துள்ள புள்ளிவிவரம் இது. இன்றைய தேதி வரை 9,100 விடுதலைப் புலிகள் சரணடைந்துள்ளனர். 22,000 புலிகள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலங்கை ராணுவத்தின் இழப்பு 6261. பாதிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை என்ன என்பது குறித்து தகவல் இல்லை. இலங்கையின் மக்கள் தொகை, 20 மில்லியன் (200 லட்சம்) பேர். பதினெட்டு சதவீதம் பேர் தமிழர்கள். முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் எப்போது குடியமர்த்தப்படுவார்கள் என்று தெரியாது. புலிகளும் மக்களோடு மக்களாக கலந்திருக்கலாம் என்னும் சந்தேகத்தில் ஸ்க்ரீனிங் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. கையோடு, போர் சாட்சியங்களையும் வேகமாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மே 23 அன்று பான் கீ மூன் வந்திருந்தபோது, அவருக்கு ஒரு மினி டூர் ஏற்பாடு செய்தார்கள். இருபத்து நான்கு மணி நேரங்கள். பத்திரிகையாளர்களுக்கு ஒரு பஸ். அனுமதிக்கப்பட்ட பகுதிகள் மட்டுமே காண்பிக்கப்பட்டன. அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மட்டும். இன்னும் இரண்டு தினங்கள் இங்கே தங்கியிருக்கலாமா என்று கேட்டபோது மறுத்துவிட்டார்கள். பான் கீ மூனின் கருத்து இது. நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. இலங்கை அரசாங்கத்துக்கு இது ஒரு சவாலான சூழல். இதிலிருந்து மீள்வதற்கு ஐ.நா. நிச்சயம் உதவி செய்யும். முதல் காரியமாக, முகாம்களில் அடைபட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.

களத்துக்கும் நேரில் சென்று பார்த்திருக்கிறார். எரிந்து போன கார் டயர்கள், குப்பை கூளங்கள் மட்டும் கண்ணில் சிக்கியிருக்கின்றன. ஹெலிகாஃப்டரில் ஏற்றிச்சென்று ஒரு ரவுண்ட் காட்டியிருக்கிறார்கள். சேதத்தின் அளவை இப்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாக அவரால் பார்க்க முடிந்திருக்கிறது. மற்றபடி, வீதி முழுவதும் ராஜபக்ஷேவின் சிரிக்கும் கட் அவுட்கள். பிறகு, வெற்றியின் அடையாளமாக சிங்களர்களின் சிங்கக்கொடி. சரி, பார்த்ததுவரை போதும் என்று டாடா காட்டி அவரை விமானத்தில் அனுப்பிவிட்டார்கள்.

பான் கீ மூனின் வருகைக்குப் பிறகும், இதுவரை இப்படிப்பட்ட கொடுமையான ஒரு காட்சியை நான் கண்டதில்லை என்று அவர் கருத்து தெரிவித்த பிறகும், உதவிப்பணிகள் புரிவதற்கும்கூட ஒருவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை இலங்கை. காரணம், ஐ.நா குறித்த பயம் இலங்கைக்கு இல்லை. ஐ.நாவுக்கான இலங்கையின் சிறப்புப் பிரதிநிதி தயன் ஜெயதிலகாவின் கூற்று இது. எங்களுக்கு எதிராக ஐ.நா எப்படிப்பட்ட தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும் நாங்கள் பயப்படமாட்டோம். தீர்மானம் முறியடிக்கப்படும்.

நேற்று (மே 25) ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்ஸிலில் இலங்கை குறித்த விவாதம் நடந்தது. போர்க்குற்றங்களுக்காக இலங்கை மீது விசாரணை நடத்தப்படவேண்டுமா வேண்டாமா என்பதுதான் விவாதம். முதல் சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடந்திருக்கிறது. பங்கேற்ற 47 உறுப்பினர்களில் 18 பேர் விசாரணை வேண்டும் என்றும் 18 பேர் வேண்டாம் என்றும் கருதியிருக்கிறார்கள். இன்றும் விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, எகிப்து, சவுதி அரேபியா, க்யூபா, நிகாரகுவா, பொலிவியா போன்ற நாடுகள் இலங்கை பக்கம் நிற்கின்றன. எதிரணியில், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள்.

இலங்கை தன் தரப்பு வாதத்தை தன் நண்பர்களின் துணையுடன் ஐ.நாவில் சமர்ப்பித்திருக்கிறது. போர்க்குற்றம், தண்டனை என்ற பேச்சுக்கே இடமில்லை. உண்மையில், நாங்கள் செய்திருப்பது சாதனை. மிகத் திறமையாக எங்கள் சமூகவிரோதிகளை ஒழித்துக்கட்டியிருக்கிறோம். லட்சக்கணக்கான மக்களை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டிருக்கிறோம். நியாயப்படி பார்த்தால், ஐ.நா எங்களைப் பாராட்டவேண்டும். மேற்கொண்டு உதவியும் செய்யவேண்டும்.

விசாரணை மட்டுமல்ல இந்த விவாதமே தேவையற்றது என்று இந்தியா, பாகிஸ்தான், மலேஷியா ஆகிய நாடுகள் சொன்னபோது ஐ.நா அதை மறுத்துள்ளது. உடனே இந்தியாயும் சீனாவும் அவையைவிட்டு வெளியேறிவிட்டன. இனப்படுகொலைக்கான ஆயுதங்களை வழங்கியதே இந்தியாவும் சீனாவும்தான் என்னும்போது இலங்கைக்கு எதிராக எப்படி அவர்களால் வாக்களிக்கமுடியும்? எப்படி இலங்கை மீது குற்றம் சுமத்தமுடியும்?

அமெரிக்காவை எதிர்த்து ஆடும் ஒரு களமாக இலங்கையை சீனாவும் ரஷ்யாவும் பயன்படுத்திக்கொள்வதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அதேபோல், சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கவேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இருக்கிறது. இந்தியாவோடு சேர்ந்துகொண்டு சீனா இலங்கைக்கு ஆயுதங்கள் வழுங்குவதன் மூலம், ஆசியாவின் வல்லரசு என்னும் அந்தஸ்தை அது உறுதிபடுத்திக்கொள்கிறது. ஆகவே, சீனாவை எதிர்க்கவேண்டும். இது அமெரிக்காவின் லாஜிக். தவிரவும், இலங்கைக்கு எதிரான அறிக்கைப்போர் மூலமாக, இராக் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட கெட்ட பெயர் குறைவதற்கு வாய்ப்புண்டு.

ஆனால், க்யூபா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு ஆதரவு அளித்திருப்பது அதிர்ச்சிகரமானது. அமெரிக்கா இலங்கையை எதிர்க்கிறது. நாங்கள் அமெரிக்காவை எதிர்ப்பவர்கள். ஆகவே, இலங்கையை ஆதரிக்கிறோம். இத்தகைய குறுகிய கண்ணோட்டத்தில் அவர்கள் முடிவு எடுத்திருக்கலாம். அல்லது, இலங்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையே அறியாமல், இலங்கை தரப்பு செய்திகளையும் புள்ளிவிவரங்களையும் மட்டுமே நம்பி இலங்கையை ஆதரித்திருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் முடிவு அபத்தமானது. ஆபத்தானதும்கூட. ரால் காஸ்ட்ரோ அயல்துறையின் மிக மோசமான முடிவு இது. காலனியாதிக்கத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராக லத்தீன் அமெரிக்கா தொடர்ந்து போராடி வந்திருக்கிறது. இந்நிலையில், இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை அவர்கள் அறிந்து வைத்திருக்காதது பெரும் பிழை. அதைவிட பிழை அவர்களுக்கு எதிராக வாக்களித்திருப்பது.

மொத்தத்தில், ஐ.நாவின் தோல்வி எதிர்பாராதது அல்ல. ஐ.நா மட்டுமல்ல எந்தவொரு சர்வதேச அமைப்பாலும் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கமுடியாது. மகிந்த ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக்க முடியாது. ஒப்புக்கு மீட்டிங் போடலாம். பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். அறிக்கைகள் தயாரித்து வாசிக்கலாம். எதிராகவும் ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பலாம். கண்டிக்கலாம். மேற்கொண்டு எதுவும் செய்வதற்கில்லை. இலங்கை தன்னைத்தானே விசாரணை செய்துகொள்ளவேண்டும் என்னும் அற்புதமான யோசனையை மட்டுமே ஐ.நாவால் வழங்கமுடியும்.

ஐ.நாவில் இன்று கதை பேசிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாடும் தன் தோட்டத்தில் ஒரு கல்லறையை கட்டி பராமரித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் மீதும் ரத்தக்கறை படிந்துள்ளது. இலங்கை மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல் என்று அத்தனை நாடுகளும் போர்க்குற்றங்கள் செய்திருக்கின்றன. இலங்கை குற்றவாளி என்றால் இவர்களும் குற்றவாளிகளே. எனவே, எதிரெதிர் அணியில் இருந்தாலும், இவர்கள் யாரும் இலங்கையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. மகிந்த ராஜபக்ஷேவுக்கு இது மிக நன்றாகத் தெரியும். எனவே அவர் கவலையின்றி சிரித்துக்கொண்டிருக்கிறார்.

ஆதாரம் :

1) GEOPOLITICS DROWNS SRI LANKA’S TAMILS: The great game
2) UN faces fierce clash over call for Sri Lanka war crimes inquiry
3) India, Pakistan back Lanka in 'rights battle'
4) Sri Lanka : Vanni Emergency OCHA Situation Report No.17
5) Hope for Lanka reconciliation
6) UN chief ‘appalled’ by scenes in Sri Lanka
7) Sri Lankan envoy lashes out at Western "colonizers" over U.N. emergency session, but rights groups call proposed resolution "toothless"

May 22, 2009

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் -- TamilNet

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் வதந்திகளை நம்பவேண்டாம் என்று முதல் முறையாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது தமிழ்நெட்.

இணைப்பு இங்கே

பிரபாகரனின் உடல் என்று இலங்கை அரசு புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டபிறகு புலிகள் தரப்பில் இருந்து வெளிவரும் முதல் தகவல் இதுவே.

இலங்கையின் பார்வையில் இந்தியா

இலங்கையில் இருந்து வெளிவரும் தி சண்டே டைம்ஸ் இதழில் கடந்த ஞாயிறு அன்று வெளியான எடிட்டோரியல் இது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதை அடுத்து இது எழுதப்பட்டிருக்கிறது. சில பகுதிகள்.

இந்தியாவின் ஆதரவு :

காங்கிரஸ் வந்தால் என்ன பிஜேபி வந்தால் என்ன? விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போரில் இருவருமே கொழும்புக்கு ஆதரவு அளிக்கத்தான் போகிறார்கள்.

தமிழக அரசியல்வாதிகள் :

இலங்கை, ஈழம், தமிழர்கள் என்றெல்லாம் பேசிய தமிழ் அரசியல்வாதிகள் ஒட்டுமொத்தமாக தோற்றுவிட்டார்கள்.

இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி ஈழம் பெற்றுத்தருவேன் என்று எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா குறிப்பிட்டபோது காங்கிரஸ், பிஜேபி இரண்டும் மௌனம் சாதித்தன.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் ஜெயலலிதா பெரியளவில் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை அளித்தன. இறுதியில் என்ன நடந்தது? கருணாநிதி ஜெயலலிதாவை வீழ்த்தினார். ஈழப்பிரச்னை எந்த வகையிலும் ஜெயலலிதாவுக்கு உதவி செய்யவில்லை.

கருணாநிதியும் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்தவர்தான். அவ்வாறு ஆதரித்ததால் இலங்கைத் தமிழர்கள் அவர் மீது எத்தனை அதிருப்தி கொண்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். அந்த தவறை அவர் மீண்டும் செய்யவில்லை. ஈழத்துக்கான வீரமுழுக்கங்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை.

மின்சாரத் தடை, வேலையில்லா திண்டாட்டம், ஏழை போன்ற பிரச்னைகளைத் தீர்க்கமுடியாததால், இந்த தோல்வியை மறைக்க தமிழக அரசியல்வாதிகள் ஈழத்தை கையில் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த தேர்தல் முடிவு அவர்கள் கண்களைத் திறந்து வைப்போம் என்று நம்புகிறோம்.

தமிழக வாக்காளர்கள் :

உள்ளூர் மீடியா இலங்கைக்கு எதிராக நிறைய சவடால்களை அள்ளி வீசியபோதும், தமிழக வாக்காளர்கள் அவற்றை காதில் போட்டுக்கொள்ளவில்லை.

மகிந்த ராஜபக்ஷே :

நல்லவேளையாக, நம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவுக்கு இந்தியாவில் எதிரிகள் மாத்திரமல்ல விசிறிகளும் சமஅளவில் இருக்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் போருக்கு அவர்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள்.

May 20, 2009

பிரபாகரனும் பட்டாசுகளும்

இன்று இலங்கையில் அரசாங்க விடுமுறை. ராணுவத்தினர் தவிர மற்றவர்கள் வீடுகளில் தங்கியிருந்து கொண்டாடிக்கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்துக்கு அனைத்து பகுதிகளிலும் அரசாங்க கொடி பட்டொளி வீசிப் பறக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

இதுவரை நடைபெற்ற படுகொலைகள் அனைத்தையும் தனது தேசியக்கொடிக்குள் புதைத்து மறைத்துவிட்டது இலங்கை. விடுதலைப் புலிகள் அழிந்தொழிந்த இந்த வெற்றி தருணத்தை கொண்டாடுங்கள், பிரபாகரனின் மரணத்தைக் கொண்டாடுங்கள் என்று இலங்கை அறிவித்த மறுகணமே கொழும்பு வீதிகளில் பட்டாசுகள் படபடவென்று வெடிக்க ஆரம்பித்துவிட்டன. சிங்கள மக்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கிகொண்டனர். வீதிகளில் இறங்கிவந்து அகமகிழ்ந்து உரக்கப் பேசிக்கொண்டனர். கைகுலுக்கி, கட்டியணைத்துக்கொண்டனர். தொலைக்காட்சிகளில் காணக்கிடைத்த காட்சிகள் இவை.

இதைவிட அச்சமூட்டக்கூடிய இன்னொரு காட்சி இல்லை. போர் தொடங்கி ஊடகங்களில் காணக்கிடைத்த திரைக்கோப்புகளிலேயே மிகவும் கொடூரமானதாக நான் கருதுவது இதைத்தான். இந்தக் கொண்டாட்ட மனோபாவத்தை எப்படி உருவாக்கிக்கொண்டார்கள்? எப்படிப் புன்னகை செய்யமுடிந்தது? எப்படி இனிப்பு உட்கொள்ள முடிந்தது? இலங்கை அரசாங்கத்தின் செய்தி உண்மை என்றே எடுத்துக்கொண்டாலும், அழிந்துபோனவர்கள் புலிகள் மாத்திரம்தானா? மலையாக குவிந்து கிடக்கும் பல ஆயிரக்கணக்கான சடலங்களை ஒருவருமே கணக்கில் கொள்ளவில்லையா? அல்லது அவர்களுக்கும் சேர்த்தேதான் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்களா? பின்வாசலில் வரிசை வரிசையாக சடலங்கள் கிடத்தப்பட்டிருக்கும்போது, முன்வாசலைத் திறந்து வைத்துக்கொண்டு கொண்டாட முடிவது எப்படி? இதைவிட கொடூரம் வேறு என்ன இருக்கமுடியும்? ஒரே நாடு ஆனால் இனம் வேறு என்பதால் அவர்கள் எதிரிகளாகிவிட்டார்களா? அவர்கள் எதிரிகள் ஆகிவிட்டார்கள் என்பதால் அவர்கள் மரணத்தைக் கொண்டாடலாமா?

இனவெறியின் உச்சம் என்று இதனை அழைக்கமுடியும். நாம் வெறுக்கும் ஓர் இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, நாம் கொண்டாடவேண்டும். அரசாங்கம் இப்படித்தான் அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. அதைத்தான் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் எந்தவித குற்றவுணர்வும் யாருக்கும் இல்லை. பல ஆண்டுகளாக அங்கே அதிகாரபூர்வமாகக் கற்பிக்கப்படும் பாடம் இது. குழந்தைக்குப் பால் புகட்டுவது போல் மக்களுக்கு இனவெறியைப் புகட்டியிருக்கிறார்கள். ஒரு மனிதனை அவர்களால் ஒரு மனிதனாகப் பார்க்கமுடியவில்லை. அவன் தமிழன். ஆகவே, என் எதிரி. என் எதிரியின் மரணத்தை நான் கொண்டாடுவதில் என்ன தவறு? இரண்டு புலிகள், இருநூறு மக்கள் கொல்லப்பட்டனர் என்று செய்தி வெளிவந்தால், அட இரண்டு புலிகள் ஒழிந்துவிட்டார்கள் என்று அவர்களால் குதூகலிக்கமுடிகிறது. அந்த இரண்டோடு ஒட்டிக்கொண்டு இறந்த இருநூறு அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

இரண்டரை லட்சம் தமிழர்கள் அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. இவர்களை இன்னும் இலங்கை மீட்டெடுத்து குடியமர்த்தவில்லை. காரணம், இந்தக் கும்பலில் புலிகளும் கலந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்களாம். எப்படி அடையாளம் கண்டு அவர்களைப் பிரித்தெடுக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அதுவரை அந்த இரண்டரை லட்சம் தமிழர்களும் தவிக்கவேண்டியதுதான். ஆனால், இது அங்கே எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. காரணம், அடைபட்டிருப்பவர்கள் எதிரிகள்.

அடிப்படை மனித பண்புகள்கூட இல்லாதவர்களால் மட்டுமே இப்படிச் சிந்திக்கமுடியும். செயலாற்றவும்முடியும். இப்படிப்பட்ட ஒரு சமூகத்தைத்தான் இலங்கை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சமூகம் இருந்தால்தான் அரசாங்கத்தால் தமிழினம் மீது போர் தொடுக்கமுடியும். அழிக்கமுடியும். தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கவும்முடியும்.

தமிழர்கள் மீது ராணுவப் போரையும் சிங்களர்கள் மீது பிரசாரப் போரையும் இலங்கை பலகாலகமாகத் தொடுத்துவருவதால்தான் இந்தக் கொண்டாட்டம் சாத்தியமாகியிருக்கிறது. இலங்கையின் இந்தப் போருக்கு இரு இனங்களுமே இரையாகிவிட்டன.

இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல இனவெறியை தக்கவைத்துக்கொண்டும் உரம் போட்டு வளர்த்துக்கொண்டும் இருக்கும் சிங்கள சமூகமும் இந்தக் கொடுமைகளுக்குப் பொறுப்பேற்கவேண்டும்.

நடந்துகொண்டிருக்கும் போர் (ஆம், இன்னும் போர் முடியவில்லை) இனவெறுப்பு என்னும் பயங்கர ஆயுதத்தைக்கொண்டு நடத்தப்படுகிறது. எனவேதான் இத்தனை சேதம். எனவேதான் இத்தனை கொண்டாட்டம்.

இலங்கையின் கம்பங்களில் பறந்துகொண்டிருப்பது தேசியக்கொடி மாத்திரமல்ல. சிங்கள பேரினவாதத்தின் கொடியும்தான்.

May 18, 2009

பிரபாகரன்

பிபிசி நேற்றே Obituary வெளியிட்டுவிட்டது. சிஎன்என் ஐபிஎன், ராய்டர்ஸ், அசோஷியேட்டட் பிரஸ் தொடங்கி சர்வதேச ஊடகங்கள் பலவும் ஊர்ஜிதம் செய்துவிட்டன. இலங்கை ராணுவம் அளித்த தகவலின்படி என்று தொடங்கி தமிழ் சானல்கள் நேற்று ஃப்ளாஷ் நியூஸ் ஓட்ட ஆரம்பித்துவிட்டன. இலங்கையின் அதிகாரபூர்வமான ராணுவத் தளம் Prabakaran Shot Dead என்று செய்தி வெளியிட்டுவிட்டு பிறகு அவசரமாக நீக்கியும்விட்டது.

முன்னதாக, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆன்டனி, அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன், அமைதிச் செயலகத்தின் தலைவர் புலித்தேவன் ஆகியோரின் மரணத்தை அறிவித்தது இலங்கை ராணுவம். பிரபாகரன் பற்றி விதவிதமான செய்திகள் முன்னுக்குப் பின் முரணாக வலம் வர ஆரம்பித்தன. சயனைட் அருந்திவிட்டார். தப்பிச் சென்றிருக்கலாம். இன்னும் நாங்கள் அவரை நெருங்கவில்லை. பிறகு, அந்த அறிவிப்பு. உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், கடற்படைப் பிரிவுத் தலைவர் சூசை ஆகியோருடன் சேர்ந்து தப்பிச்செல்லும்போது பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றவர்களும் இறந்துபோனார்கள்.

சர்வதேச மீடியாவுக்கு இலங்கை அளிப்பதுதான் நியூஸ். களத்துக்கு நேரில் சென்று சரிபார்த்து உண்மைச் செய்தியை வெளியிடும் நிலையில் அவர்கள் இல்லை. அப்படியே விரும்பினாலும், இலங்கை ஒருவரையும் உள்ளே அனுமதிக்கப்போவதில்லை. எனவே, பிரபாகரன் கொலை, இலங்கை ராணுவம் தகவல் என்று இலங்கையின் மவுத்பீஸாக மாறி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.

நேற்று மாலையே மறுப்புகள் இணையத்தில் வெளிவர ஆரம்பித்துவிட்டன. தமிழர்களைப் பலவீனப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்தப் பிரசாரப் போரை உதாசீனம் செய்யுங்கள். நம்பத்தகுந்த ஆதாரங்கள் வெளிவரும் வரை காத்திருப்போம். வதந்திகளை உலவவிடவேண்டாம். கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்வோம். சென்னையில், பழ. நெடுமாறனிடம் இருந்து முதல் தகவல் நேற்று வெளிவந்தது. பிரபாகரன் ஆரோக்கியமாக இருக்கிறார். எந்த வதந்தியையும் நம்பவேண்டாம்.

பிரபாகரன் இறந்துவிட்டார் என்று நேற்று இணையத்தில் செய்தி வெளியிட்ட தி ஹிந்து, Prabakaran believed dead என்று தலைப்புச்செய்தியில் சிறிய திருத்தத்தைக் இன்று கொண்டுவந்திருக்கிறது. மற்றபடி, பக்கத்துக்குப் பக்கம் அலசல். இயக்கத்தின் வீழ்ச்சிக்கு வேறு யாரும் காரணமல்ல, பிரபாகரனேதான் என்கிறது ஒரு கட்டுரை. கருணாவின் பிரிவு அவர்களுக்குப் பெரிய அடி என்கிறது ஒரு பெட்டிச் செய்தி. ரணில் விக்கிரமசிங்கேவோடு ஒத்துப்போயிருந்தால் மகிந்த வந்திருக்க மாட்டார், இயக்கமும் அழிந்து போயிருக்காது என்கிறது ஒரு ஆய்வு கட்டுரை. லெட்டர்ஸ் டு தி எடிட்டரில் ஒரே பாராட்டு மழை. இரும்புக் கரம் கொண்டு தீவிரவாதத்தை நசுக்கிய மகிந்தவுக்கு வாழ்த்துகள். மகிந்தவிடம் இருந்து நம் அரசியல்வாதிகள் ஒரு சில பாடங்கள் படித்துக்கொள்ளவேண்டும்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அதிகாரபூர்வமாக இயக்கம் இன்று அறிவித்திருக்கிறது. சானல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சர்வதேச தொடர்பாளர் செ. பத்மநாபன் இதை உறுதிசெய்திருக்கிறார். பாராளுமன்றத்தில் இன்று காலை ஆற்றிய உரையில் மகிந்த ராஜபக்ஷே பிரபாரகன் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம். போர் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. தமிழர்கள் எங்கள் எதிரிகள் அல்ல. தமிழர்களைப் பாதுகாப்பது என் கடமை, என் பொறுப்பு. சிங்களம், தமிழ் இரண்டிலும் பேசி கைத்தட்டல் வாங்கியிருக்கிறார்.

ஆக பிரபாரகன் பத்திரமாக எங்கோ இருக்கிறார் என்னும் நிம்மதிப் பெருமூச்சுடன் தமிழ்ச் சமூகம் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்துள்ளது. எனில், அவர் எங்கே?

0

பிரபாகரன் எங்கே என்னும் கேள்வி இப்போதைக்கு முக்கியமானது அல்ல. பிரபாகரன் குறித்த கவலையும் அர்த்தமற்றதே. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்று யோசித்த தினம் அன்றே தன் மரணம் குறித்து அவர் சிந்தித்திருப்பார். திட்டமிட்டும் இருப்பார்.

பிரபாகரனின் மரணம் குறித்த வதந்தியை பரப்பிவிட்டதன் மூலம், நேற்று அங்கே நடைபெற்ற மாபெரும் தாக்குதல்களை, அழிவுகளை இலங்கை மிகக் கவனமாக மறைத்திருக்கிறது. நேற்று மதியம் தொடங்கி கூகிளில் அதிகம் தேடப்பட்ட இரு வார்த்தைகள், பிரபாகரன், விடுதலைப் புலிகள். இதைத்தான் இலங்கை எதிர்பார்த்தது. தமிழர்களின் தவிப்பு, குழப்பம், பீதி, அதிர்ச்சி. பிறகு, மகிழ்ச்சியும்கூட. நீ தவிக்கும் நேரத்தில், நீ மயங்கி கிடக்கும் நேரத்தில் நான் இங்கே என் இறுதி கட்ட விளையாட்டை நடத்திமுடித்திருப்பேன்.

முடித்துவிட்டார். வெற்றி என்று அறிவித்தும்விட்டார். அடுத்து தேசத்தைக் கட்டுமானம் செய்யப்போகிறோம், சர்வதேச அமைப்புகள் எங்களுக்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். ஐ.நாவின் ஒத்துழைப்பை வேண்டியிருக்கிறார். ஜப்பான், 50 மில்லியன் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவிடம் இருந்து பலமடங்கு அதிக அளவில் உதவி கிடைக்கும்.

நோக்கம் நிறைவேறிவிட்டது. இனி பிரபாகரன் எங்கிருந்தால் அவருக்கு என்ன? யாருக்கெல்லாம் அவர் தேவைப்படுகிறாரோ அவர்கள் கூகிள் செய்துகொள்ளட்டும்.

0

நேற்று, இன்று. இந்த இரு தினங்களில் வெளிந்த அத்தனை செய்தித்தாள்களையும், அத்தனை ஆய்வுக் கட்டுரைகளையும், அத்தனை லெட்டர்ஸ் டு தி எடிட்டர்களையும், அத்தனை அரசியல் சவடால் அறிக்கைகளையும், சர்வதேச ஆய்வாளர்களின் அத்தனை கணிப்புகளையும் பிரபாகரனும் அவர் இயக்கத்தினரும் இந்நேரம் மறுவாசிப்பு செய்துகொண்டிருப்பார்கள். வருந்துவதற்கும், பரீசீலனை செய்வதற்கும், நகைப்பதற்கும், பழைய அத்தியாயங்களைப் புரட்டிப் பார்ப்பதற்கும், தவறுகளைக் கண்டுகொள்வதற்கும், புதிய படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதற்கும் நிறைய விஷயங்கள் அவற்றில் இருக்கின்றன.

May 16, 2009

நேபாளத்தில் கலகம்

பிரசந்தா மட்டுமல்ல ஜனநாயகமும் நேபாளத்தில் ராஜிநாமா செய்துவிட்டது. நேபாளத்தில் ஒரு பகுதியினரும் இந்தியாவில் ஒரு பகுதியினர் தவிர அனைவரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். பிரசந்தா ஆட்சியில் அமர்ந்த மறு கணமே படபடப்பு தொடங்கிவிட்டது. இவர் எப்போது விலகுவார்? என்ன செய்தால் இவர் ஆட்சி கலையும்? எப்போது மீண்டும் மன்னராட்சி வரும்? எப்போது நேபாளத்துக்கு சுபிட்சம் கிடைக்கும்? ஜனநாயகம், நாடாளுமன்றம், காபினெட், பொதுக்குழு, விவாதம் போன்ற உபத்திரவங்கள் எப்போது ஒழியும்?

இருளுக்கு மட்டுமே பழக்கமாகிவிட்ட கண்கள் வெளிச்சத்தை விரும்புவதில்லை. தலைமுறை தலைமுறையாக மன்னர்கள் ஆண்டு வந்த தேசம் அது. மன்னர் புகழ் பாடி, அவர் பின்னால் அணிவகுத்து, அவர் இடும் கட்டளைகளை நிறைவேற்றி, அவர் ஆசிர்வதிப்பதை பெற்றுக்கொண்டு சுகமாக வாழப் பழகிக்கொண்டவர்கள். அரசியல் என்பது அரண்மனை சமாசாரம். அரண்மனை சமையற்கூடத்தில் சாப்பாடு தயாராவது போல் அவர் அலுவலக அறையில் இருந்து அரசியல் தயாராகும். உப்பு இல்லை, காரம் ஜாஸ்தி என்று விமரிசனம் செய்ய ஒருவருக்கும் அனுமதியில்லை.

ஆனால் இந்த வண்டி நீண்ட காலம் ஓடாது என்று ஞானேந்திராவுக்குத் தெரிந்துவிட்டது. என்னத்தையாவது செய்து ஜனநாயகத்தைக் கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நேபாள காங்கிரஸ், யு.எம்.எல் (நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கூட்டமைப்பு) போன்ற கட்சிகளின் துணையுடன் ஒப்புக்கு ஓர் அரசாங்கத்தை நியமித்தார்கள். இந்தக் கட்சிகளும் மன்னராட்சியை நாளானைக்கு மறுநாள் முடிவுக்குக் கொண்டுவருகிறோம் என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அதிகாரம் மட்டுமே தேவைப்பட்டது. அந்த அதிகாரத்தை மன்னரால் மட்டுமே கொடுக்கமுடியும் என்னும்போது அவரை ஏன் அகற்றவேண்டும்?

மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம்தான் இந்நிலையை மாற்றியமைத்தது. ஞானேந்திராவையும் அவரது அடிப்பொடிகளையும் ஒருசேர தூக்கி எறிந்தனர் மாவோயிஸ்டுகள். கடந்த ஏப்ரல் மாதம் பிரசந்தாவின் அரசாங்கம் பெருவாரியான மக்கள் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பிரசந்தா வெற்றி பெற்ற மறுகணமே நேபாள காங்கிரஸ், யு.எம்.எல் கட்சிகள் அலற ஆரம்பித்துவிட்டன. ஐயோ, மாவோயிஸ்டுகள் கையில் அதிகாரம் போய்விட்டால் நேபாளத்தின் கதி என்ன ஆகும்? ஆனானப்பட்ட மன்னரையே சிறையில் தள்ளியவர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்யமாட்டார்கள்? இவர்களை நம்பி எப்படி தேசத்தை ஒப்படைக்கமுடியும்? அலறியடித்துக்கொண்டு அவர்கள் இந்தியாவிடம்தான் தஞ்சம் கேட்டனர். எங்களுக்கு உங்களை விட்டால் வேறு நாதியில்லை. நீங்கள்தான் எப்படியாவது மாவோயிஸ்டுகளை முறியடிக்கவேண்டும். மன்னராட்சியை மீண்டும் கொண்டுவரவேண்டும். கவலைப்படாதீர்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றது இந்தியா.

தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும் அமைந்தது என்னவோ கூட்டணி ஆட்சிதான். நேபாள காங்கிரஸ் விலகிக்கொண்டது. இந்தியா துணை இருக்கும் தைரியத்தில் யு.எம்.எல் பிரசந்தாவின் ஆட்சியில் பங்கேற்றது. சில வாக்குறுதிகளை வழங்கினார் பிரசந்தா. தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து செயல்படுவோம். கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை அளிப்போம். இனி ஆயுதப் போராட்டத்துக்கான அவசியம் இல்லை என்னும் நிலைநில் மாவோயிஸ்ட் போராளிகள் (மக்கள் விடுதலைப் படை) நேபாள ராணுவத்தோடு இணைக்கப்படுவார்கள். மக்கள் நல சீர்திருத்தங்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும்.

தேசத்தை கட்டுமானம் செய்யும் பணிகளில் பிரசந்தா இறங்கினார். வாழ்த்துகள் பிரசந்தா என்று புன்னகை செய்தது இந்தியா. அந்த நிமிடம் தொடங்கி திரைமறைவாகவும் வெளிப்படையாகவும் எதிர்ப்புகள் பெருக ஆரம்பித்தன. பிரசந்தா வாயைத் திறந்து என்ன சொன்னாலும் அதை எதிர்க்கவேண்டும் என்பதை அடிப்படை விதியாக கொண்டு செயல்பட ஆரம்பித்தன கட்சிகள். சின்ன சின்ன தீர்மானங்களுக்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பிரசந்தா முன்வைக்கும் தீர்வுகள் நிர்த்தாட்சண்யமாக மறுதலிக்கப்பட்டன. பின்னணியில்,தெருக்கலவரம் தொடங்கி ஆட்சிக் கவிழ்ப்பு வரை அத்தனையும் அரங்கேறின. தான் கொண்டுவர விரும்பிய எந்தவொரு மாற்றத்தையும் பிரசந்தாவால் கொண்டுவரமுடியவில்லை. முளைக்கும் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கு மட்டுமே அவருக்கு நேரம் எஞ்சியிருந்தது. ஒன்று தீர்ந்தால் இன்னொன்று. அது தீர்ந்தால், மற்றொன்று. ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்தது தவறோ என்று பிரசந்தா வருந்துமளவுக்கு தடங்கல்களும் கலகங்களும் பல்கிப்பெருகின.

உச்சகட்டமாக, ராணுவ தலைமை ஜெனரல் ருக்மாங்கத் கட்வால் பிரசந்தாவின் உத்தரவை உதாசீனம் செய்தார். காபினெட்டின் அனுதியை பெறாமல் தன்னிச்சையாக இரு தவறுகளை செய்தார் கட்வால். சில ராணுவ உயர் அதிகாரிகளின் ஓய்வுக்காலத்தை நீட்டிக்கும் உத்தரவைப் பிறப்பித்தார். புதிய வீரர்களை நேபாள ராணுவத்தில் தொடர்ச்சியாக இணைத்துக்கொள்ள ஆரம்பித்தார்.

நேபாள ராணுவத்தோடு மக்கள் விடுதலைப் படையை இணைக்கவேண்டும் என்பது பிரசந்தாவின் தீர்மானம். ராணுவத்தோடு இணைவதற்காக மக்கள் படையைச் சேர்ந்த 19000 வீரர்கள் நீண்ட காலமாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அரசாங்கத்தின் ஒப்புதல் பெறாமல் வெளியில் இருந்து புதிதாக ஆள்களை தேர்ந்தெடுத்து நியமிக்கவேண்டிய அவசியம் என்ன? அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீங்கள் எப்படி நீட்டிக்கலாம்? இந்த இரு கேள்விகளுக்கும் உடனடியாக பதிலளிக்கவும் என்று பிரசந்தா ஏப்ரல் 20ம் தேதி கட்வாலுக்கு நோட்டீஸ் அனுப்பினார். தெளிவான பதில் வரவில்லை. பிரசந்தா கட்வாலை பதவிநீக்கம் செய்தார்.

ஜனநாயகத்தை அவமானப்படுத்தும் வகையில், மூன்று சம்பவங்கள் நடந்தன. கட்வாலை பதவி நீக்கம் செய்யக்கூடாது என்றது இந்தியா. நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதவ் பிரசந்தாவின் உத்தரவை நிராகரித்துவிட்டு, கட்வாலை மீண்டும் பதவியில் அமர்த்தினார். கூட்டணியில் இருந்து யு.எம்.எல் வெளியேறியது. மூன்று தவறுகள். கட்வால் பதவீ நீக்கம் என்பது நேபாளின் உள்நாட்டு விவகாரம். இதில் ஏன் இந்தியா தலையிடவேண்டும்? மாவோயிஸ்டுகளை எதிர்க்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, ராணுவத்தை அரசாங்கத்துக்கு எதிராகத் திருப்பிவிடும் பேரழிவு வேலையை ஏன் இந்தியா செய்யவேண்டும்? ராணுவத்தை நான் மதிக்கிறேன் ஆனால் அது சிவிலியன் அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டே இயங்கவேண்டும் என்று பிரசந்தா சொல்வதில் என்ன தவறு? இந்தியாவிலும் இதுதானே நடைமுறை? அரசாங்க உத்தரவை மீறி ராணுவ ஜெனரல் இங்கே முடிவெடுத்தால் மன்மோகன் சிங் அரசாங்கம் சும்மா இருக்குமா?

இரண்டாவது தவறு, நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதவின் குறுக்கீடு. என்னதான் நேபாள அரசியலமைப்பின்படி இவர் கமாண்டர் இன் சீஃப் அதிகாரம் பெற்றவராக இருந்தாலும் பிரதமரின் உத்தரவை உதாசீனம் செய்தது சரியல்ல. கட்வாலை நீக்கவேண்டும் என்பது பிரசந்தாவின் தனிப்பட்ட விருப்பமல்ல. காபினெட் அஸெம்ப்ளி எடுத்த முடிவு அது. ஆகவே, ஜனநாயகபூர்வமான முடிவு. இதை ஒரு ஜனாதிபதி எப்படி மறுக்கலாம்? ஜனாதிபதியின் முடிவை ஆதரிக்கிறோம் என்கிறது இந்தியா. ஒருவேளை இந்தியாவில் அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், இந்தியா அதை ஒப்புக்கொள்ளுமா?

மூன்றாவது தவறு, யு.எம்.எல் வெறியேற்றம். அதிகபட்சமாக அவர்கள் செய்திருக்கவேண்டியது பிரசந்தாவுக்கு எதிராக காபினெட்டில் வாக்களிப்பது மட்டுமே. இன்னும் மூன்று மாதங்களில் ரிடையர் ஆகப்போகிற ஒரு ஜெனரலை பதவி நீக்கம் செய்ததற்காக அரசாங்க கட்டுமானத்தை பாதிக்கும் ஒரு செயலை யு.எம்.எல் செய்திருக்கக்கூடாது. ஆனால் அவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்கமுடியாது என்பதுதான் உண்மை.

பதவியேற்றபிறகு பிரசந்தா அளித்த முதல் நேர்க்காணலில் ஒரு கேள்வி. நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்திருக்கிறீர்கள். உங்கள் ஆசை நிறைவேறுமா? நிச்சயமாக. நாங்கள் மக்களை அழுத்தமாக நம்புகிறோம். நாங்கள் பணியாற்றப்போவது தேசத்துக்காகவும் மக்களுக்காகவும். எங்கள் உறவை ஒருவராலும் சிதைக்கமுடியாது.

அரசியலைமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளது. அந்நிய தலையீடு (இந்திய தலையீடு என்று படிக்கவேண்டும்) பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது. ஜனநாயகம் அவமானப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தப் பின்னணியில்தான் பிரசந்தா ராஜிநாமா செய்திருக்கிறார். மனச்சாட்சியுடனும் மனிதத்தன்மையுடனும் எடுக்கப்பட்ட முடிவு அது.

May 15, 2009

ஐன்ஸ்டீனின் சோஷலிஸம்


சோஷலிஸம் குறி்த்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய ஒரு கட்டுரை Monthly Review இதழில் மே 1949ல் வெளிவந்தது. சோஷலிசம் ஏன் தேவை என்பதற்கு ஐன்ஸ்டீன் சில கருத்துகளை முன்வைக்கிறார்.

1) உற்பத்தி பெரும்பாலும் தனியார்மயமாகிவிட்டது. உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திக்குத் தேவைப்படும் முதலீடு இரண்டும் தனியார் வசம் உள்ளன.

2) உற்பத்திக்குத் தேவைப்படும் உழைப்பை உற்பத்தியாளர் (முதலாளி) தொழிலாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார். ஊதியம் (கூலி) பெற்றுக்கொண்டு தொழிலாளர்கள் பொருள்களை தயாரித்துக்கொடுக்கிறார்கள். தயாரானதும், அந்தப் பொருள்கள் உற்பத்தியாளரின் உடைமையாக மாறுகிறது. (ஒரு தொழிலாளருக்கும் அவர் உற்பத்தி செய்த பொருளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. குறிப்பிட்ட பொருளைத் தயாரித்துக்கொடுத்ததும் இந்த உறவு துண்டிக்கப்படுகிறது. இதை மார்க்ஸியம் அந்நியமாதல் என்று குறிப்பிடுகிறது).

3) தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கும் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியத்துக்கும் இடையிலான உறவுமுறை முக்கியமானது. உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அந்த தொழிலாளிக்கு கூலி அளிக்கப்படுவதில்லை. கூலியை முதலாளி தீர்மானிக்கிறார். அவ்வாறு கிடைக்கும் கூலி ஒரு தொழிலாளியின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை மட்டுமே பூர்த்திசெய்கிறது.

4) தனியார் முதலீடு ஒரு சில நபர்களிடம் மட்டுமே குவிந்துள்ளது. இதை யாராலும் தடுக்கமுடியாது. ஒரு ஜனநாயக அரசாங்கத்தால்கூட இதைக் கண்காணித்து தடுத்து நிறுத்தமுடியாது. எனி்ல், சட்டத்திட்டங்களால் எதையும் செய்யமுடியாதா? நீதித்துறையால் இதை மாற்றமுடியாதா? முடியாது. காரணம், சட்டம் இயற்றும் தகுதி படைத்தவர்களை அரசியல் கட்சிகள்தான் தேர்ந்தெடுக்கின்றன. இந்த அரசியல் கட்சிகளுக்குப் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே நிதி அளிக்கின்றன. அரசியல் கட்சிகள் எடுக்கக்கூடிய முடிவுகளை தீர்மானிப்பவர்களும் இவர்களே. இதன் விளைவாக மக்கள் நலன் புறக்கணிக்கப்படுகிறது. முதலாளிகளின் நலன் பாதுகாக்கப்படுகிறது.

5) பயன்படுத்துபவர்களை மனத்தில் கொண்டு உற்பத்தி செய்யப்படுவதில்லை. லாபம்தான் பிரதானம். லாபம்தான் உற்பத்தியை தீர்மானிக்கிறது.

6) வேலை செய்ய விருப்பமுள்ளவர்களுக்கும் தகுதி உள்ளவர்களுக்கும் வேலை உத்தரவாதம் இல்லை. வேலையில்லாதவர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எப்போதும் வேலை பறிபோகலாம் என்னும் மனநிலையில்தான் தொழிலாளர்கள் இயங்கிகொண்டிருக்கிறார்கள்.

7) தொழில்நுட்ப முன்னேற்றம் தொழிலாளர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை. மாறாக, வேலையின்மையை அதிகரித்திருக்கிறது.

8) முதலாளிகளுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. லாபம் ஈட்டுவது. சகமுதலாளிகளுடனான போட்டியில் வெல்வது. இவற்றின் காரணமாக, எப்போதும் கொந்தளிப்புகள் நிகழ்கின்றன. முதலீட்டிலும் லாபத்திலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. முதலாளிகளுக்குள்ளே நடக்கும் தொழில் போட்டியால் கடுமையான நெருக்கடிகள் ஏற்படுகின்றன. தொழிலாளர்களின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது.

9) சோஷலிஸப் பொருளாதாரம் அமைப்பதுதான் ஒரே தீர்வு. கல்வித்துறை மாறவேண்டும். தனிநபர்களைவிட சமுதாயம் முக்கியம் என்பது போதிக்கப்படவேண்டும். சமுதாயத்துக்காகப் பணியாற்ற மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும்.

10) சோஷலிஸ சமுதாயம் அமைந்தால் உற்பத்தி சமுதாயத்துக்கு உரியதாக மாறும். திட்டமிடப்பட்ட பொருளாதாரம் அமையும். சமுதாயத்தின் தேவைக்கு ஏற்ப பொருள்கள் உற்பத்தி செய்யப்படும். பணியாற்ற விருப்பமுள்ள அனைவருக்கும் வேலை பிரித்தளிக்கப்படும். ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் வாழ்வதற்கான உத்திரவாதம் அளிக்கப்படும். கல்வி, ஒரு மனிதனின் திறமையை வளர்ப்பதோடு நின்றுவிடாமல் சக மனிதர்கள் மீது அக்கறை செலுத்தவேண்டியதன் அவசியத்தையும் போதிக்கும்.

ஐன்ஸ்டீனின் கட்டுரையை முழுவதுமாக வாசிக்க இங்கே செல்லவும்.

May 11, 2009

சிபி்எம் : அரசியலும் முரண்பாடுகளும் - அ. குமரேசன் எதிர்வினை

சிபிஎம் நூல் பற்றிய என் விமரிசனத்துக்கு தனது வலைப்பதிவில் எதிர்வினை ஆற்றியிருக்கிறார் நூலாசிரியர் அ. குமரேசன். சிபிஎம் எதிர்ப்பு அரசியலும் சில விமர்சனங்களும் என்னும் தலைப்பில் வெளிவந்த குமரேசனின் எதி்ர்வினையை நன்றியுடன் இங்கே மறுபதிப்பு செய்கிறேன்.

0

சிபிஎம் எதிர்ப்பு அரசியலும்
சில விமர்சனங்களும்
(‘சிபிஎம்’ புத்தகத்தின் மீதான எதிர்வினைக்கு எதிரெதிர் வினை)

மருதன் அவர்களுக்கு நன்றி. என்னையும் வலைத்தள வாசகர்கள் கவனிக்க வைத்திருக்கிறாரே. ஓ - இது என்னைக் கவனிக்க வைப்பதல்ல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பற்றி நான் எழுதி, ‘மினிமேக்ஸ்’ வெளியீடாக வந்துள்ள ‘சிபிஎம்’ குறும்புத்தகத்தைக் கவனிக்கவைப்பது. அதற்காக மேலும் நன்றி.
அப்புறம், ரொம்ப நாளாக விரிக்காமல் வைத்திருந்த எனது வலைப்பதிவு ஏட்டை மறுபடி திறந்து இதை எழுதவைத்திருக்கிறார். அதற்காக உளமார்ந்த நன்றி.

ஒரு 78 பக்க புத்தகத்தில், ஒரு சுருக்கமான அறிமுகமாக அமையட்டும் என்கிற அளவிலேயே அந்தப் புத்தகம் எழுதப்பட்டது. அது சிபிஎம் சார்பில் எழுதப்பட்ட அதிகாரப்பூர்வ புத்தகம் அல்ல. சிபிஎம் உறுப்பினராக இருக்கிற ஒருவனால், வெளியே பரந்துபட்ட அளவில் இருக்கிற, புத்தக வாசிப்பில் ஆர்வம் முளைவிட்டிருக்கிறவர்களுக்காக எழுதப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி வளர்ந்த பின்னணி, அது செயல்படும் விதம், அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் - இவற்றைத் தொட்டுக்காட்டுவதே புத்தகத்தின் நோக்கம். இதிலே கட்சியின் மாநாட்டு ஆவணம் போலவோ, நிறைய பக்கங்களில் ஆழமான ஆய்வுடன் எழுதப்படுகிற புத்தகம் போலவோ விமர்சனம் - சுயவிமர்சனம் என்று அதிகமாக எழுத முடியவில்லை.

அடுத்து இவரது அகராதிப்படி, சுயவிமர்சனம் என்றால் கிழிகிழியென்று கிழித்துப்போடுவதாக இருக்க வேண்டும். சமுதாய இயக்கச் செயல்பாட்டில் நேரடியாக தன்னை ஒப்படைத்துக்கொளளாமல், வசதியாக எல்லாவற்றையும் தள்ளுபடி செய்து, அது நொட்டை இது நொள்ளை என்று துப்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இது சாத்தியம்தான். அதிலே ஒரு அரசியல் உண்டு. இவரது அரசியல் நோக்கத்திற்கு இப்படி சிபிஎம் கிழிபடவேண்டும் என்பது தேவையாக இருக்கலாம். எனக்கு அது வராது.

என் இயக்கத்திற்கு உண்மையானவனாகவே இருப்பேன். மினிமேக்ஸ் மூலமாகக் கிடைத்த வாய்ப்பையும் அப்படியே பயன்படுத்திக்கொண்டேன். இவரைப் போன்றவர்களையும் தாண்டி புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு எம் கட்சியைப் பற்றி ஒரு தொடக்கப் புரிதலையும், மரியாதையையும் ஏற்படுத்துவது மட்டுமே என் நோக்கம். நடுநிலை ஒப்பனை எல்லாம் போட்டுக்கொண்டு நான் எழுதுவதில்லை.

நந்திகிராமம் பிரச்சனை நிச்சயமாக கட்சியின் பயணத்தில் பாதையில் இடறிக் காயப்படுத்தும் கல்லைப் போல் வந்ததுதான். “... காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துகிற அளவுக்கு அந்தப் பிரச்சனைகளைக் கையாள்வதில் தவறு நேர்ந்ததா என்பதை சிபிஎம் நேர்மையாக ஆய்வு செய்துள்ளது” என்று பதிவு செய்திருக்கிறேன். இதுவும் ஒரு சுயவிமர்சனம்தான். நந்திகிராமம் பற்றிய ஆய்வுக் கட்டுரை அல்ல இது. கட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றைச் சொல்லும் முயற்சியில் அதுவும் ஒரு கட்டம் அவ்வளவுதான். நக்சலைட்டுகள் ஆயுதங்களோடு அந்த வட்டாரத்தை சுற்றி வளைத்துக்கொண்டது பற்றியும், சிபிஎம் மீது உள்ள ஆத்திரம் காரணமாக நக்சலைட்டுகளோடு மற்ற சில கட்சிகள் ஒத்துழைத்தது பற்றியும் அதே பத்தியில் குறிப்பிட்டிருக்கிறேன். மருதனின் கோபம் அதனால்தானோ?

“ஆய்வின் முடிவில் அவர்கள் (சிபிஎம்) என்ன கண்டுபிடித்தார்கள்” என்று கேட்டிருக்கிறார். ஆய்வின் முடிவு வந்தபின் கட்சி முழுமையாக விவாதிக்கும், அதை வெளிப்படுத்தவும் செய்யும். பொறுத்திருங்கள் நண்பரே.

“டாட்டாவின் காசோலையை திருப்பி அனுப்ப முடிந்த கட்சியால் டாட்டா நிறுவனத்தை திருப்பி அனுப்ப முடியவில்லை” என்று எழுதியிருக்கிறார். புத்தகப் பக்கங்களைத் தாண்டிய விமர்சனம் இது. தவறில்லை. ஆனால், எதற்காகத் திருப்பி அனுப்ப வேண்டும்? சொல்லப்போனால் அந்த நிறுவனத்தை அழைத்ததே இடது முன்னணி அரசுதான். இதிலே ஒளிவு மறைவு ஒன்றுமில்லை. கட்சியின் தலைமையிலான கூட்டணியின் அரசுக்கும் கட்சிக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியாதவராக மருதனை எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஆனால் அப்படித்தான் எழுதியிருக்கிறார்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில் வளர்ச்சி தேவை. அதற்கு இப்படிப்பட்ட நிறுவனங்கள் தேவை. மேற்கு வங்கத்தில் இருப்பது ஒன்றும் சோசலிச அரசோ கம்யூனிச அரசோ அல்ல. இந்திய அரசமைப்புக்கு உட்பட்ட ஒரு மாநில அரசுதான். இந்திய அரசமைப்பு சாசனத்துக்கு உட்பட்டுதான் அது செயல்பட முடியும். சிபிஎம் சொல்கிற மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கிச் செல்வதில் இவ்வாறு அரசு எந்திரம், நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய கட்டமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது என்பது ஒரு கட்டம், ஒரு வழிமுறை. இதுவே முழுப்புரட்சி அல்ல. இதைப் பற்றியும் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

சுத்த சுயம்பிரகாச புரட்சிக்காரர்களைப் பார்த்து நீங்கள் ஏன் முதலாளித்துவ அரசின் ரயிலில் பயணம் செய்கிறீர்கள், ஏன் முதலாளித்துவ ஓட்டலில் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால், அப்படிக் கேட்பவர்களை மருதன் எப்படிப் பார்ப்பார்?

“மக்கள் எதிர்ப்பை மீறி” டாட்டா கார் நிறுவனத்தை நிறுவ சிபிஎம் முயன்றதாக எழுதியிருக்கிறார். எந்த மக்கள்? மம்தா பானர்ஜியும், பாஜக ஆட்களும் திரட்டியவர்கள் மட்டுமா? சிங்கூர் வட்டாரத்துக்கு வர இருந்த ஒரு பெரிய தொழிற்சாலையை மம்தா வகையறாக்கள் தடுத்துவிட்டார்கள் என்றுதான் அந்தப் பகுதி மக்கள் இப்போது கோபத்தில் இருக்கிறார்கள்.

அதிமுக-வுடன் கூட்டணி அமைப்பதால் மக்கள் ஜனநாயகத்தைக் கொண்டுவர முடியும் என்று சிபிஎம் நம்புகிறதா என்று கேட்டிருக்கிறார். அரசு எந்திரம் பற்றிய சில கருத்துக்களையும் முன்வைத்திருக்கிறார். இதற்கெல்லாம் என்னுடைய பதில்: புத்தகத்தை மறுபடியும் படியுங்கள். இப்போது நடக்கிற தேர்தலை மக்கள் ஜனநாயக அரசுக்கான தேர்தல் என்று யாராவது எங்கேயாவது சொன்னார்களா என்ன? ஒன்றை மட்டும் சொல்லாம்: கட்சிகள் என்றால் தலைவர்கள் மட்டுமல்ல, அவற்றின் தளமாக உள்ள மக்களும்தான். கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு என்பது மக்களோடு கொள்ளும் உறவுதான். அதிலே அசூயைப் பட என்ன இருக்கிறது?

நேபாளத்தை சுட்டிக்காட்டி பிரசாந்தா பதவி விலகியதை சிலாகித்திருக்கிறார். அதே பிரசாந்தா, அமைதியான முறையில் அரசு அமைப்பதற்கு ஒத்துழைப்பதாகவும் கூறியிருக்கிறார். அவருடைய கட்சி தனது ஆயுதப்பாதையைக் கைவிட்டு அரசியலுக்கு வந்ததால்தான் அரசு அமைக்கிற அளவுக்கு வந்தது.

அப்புறம் வெறும் ஊகக் கேள்விகளாக கடைசியில் அடுக்கியிருக்கிறார். இது என்ன குருப்பெயர்ச்சி பலன்கள் புத்தகமா என்ன? எல்லா கிரக நிலைமைகளுக்கும் விளைவுகள் என்ன என்று கணித்துக்கொண்டிருப்பதற்கு? திட்டவட்டமான நிலைமைகள் உருவாகிற போதுதான் திட்டவட்டமான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். இதைத்தான் இவர் “வளைந்து நெளிந்து” என்று வர்ணிக்கிறார். ஒன்று செய்யலாம் - எதிலேயும் பட்டுக்கொள்ள மாட்டேன், தூசு படியாமல் படுசுத்தமாக இருப்பேன், யாரோடும் ஒட்ட மாட்டேன் என்று கோவணத்தையும் உருவிப்போட்டுவிட்டு நடுக்காட்டில் போய் தவம் இருக்கலாம்.

“... பலவிதமான விளையாட்டுகளை மக்கள் பார்த்து சலித்துவிட்டார்கள்,” என்று முடித்திருக்கிறார் மருதன். சலித்து சலித்து மக்கள் சரியானதைத் தேர்வு செய்வார்கள். அப்போது, எதுவும் சரியில்லை என்று பினாத்திக்கொண்டே இருப்பவர்களும் ஓரங்கட்டப்படுவார்கள் - இப்போதிருப்பதை விடவும்.

0

அ. குமரேசனின் வலைப்பதிவு முகவரி : http://asakmanju.blogspot.com/

இரண்டாம் உலகப் போர்

விரைவில் வெளிவரவிருக்கும் எனது புத்தகம்.

May 10, 2009

ஈழமும் தமிழக அரசியலும்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் 3200 தமிழர்கள் இறந்துவிட்டதாக செய்தி வெளிவந்திருக்கிறது. இரண்டாயிரம் என்கின்றன வேறு சில இணையக்குறிப்புகள். தி ஹிந்து 300 மட்டுமே என்கிறது. அதுவும்கூட புலிகளின் தாக்குதலால்தானாம்.

போர் நிறுத்தம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டதாகத திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறது சன் டிவி. மக்கள் தொலைக்காட்சியிலும் ஜெயா டிவியிலும் மட்டுமே இலங்கை பற்றிய செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

ஈழத்தை கையில் எடுக்காமல் இருப்பது திமுகவின் அரசியல். ஈழத்தைக் கையில் எடுத்தது ஜெயலலிதாவின் அரசியல். இலங்கைக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர்களை சாமர்த்தியமாகத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் ஜெயலலிதா. இலங்கை அரசுக்கு எதிராக, இந்திய அரசுக்கு எதிராக கிளம்பி்கொ்ண்டிருக்கும் எதிர்ப்பலைகளைத் தனக்கான ஆதரவு அலையாக மாற்றிக்கொள்ளத் துடித்துக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றே தீருவேன் என்று ஒவ்வொரு மேடையிலும் அடித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.

கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா காந்தி, அத்வானி, மாயாவதி என்று இன்று முன்னணியில் உள்ள எந்த இந்திய அரசியல் தலைவராலும் தனிஈழம் பெற்றுத்தரமுடியாது என்பதுதான் நிஜம். தனிஈழம் அமைவதை எப்படி இலங்கை விரும்பாதோ அதேபோல் இந்தியாவும் விரும்பாது. ஒருவேளை ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தாலும் இந்தியாவின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருந்திருக்கும்.

ஈழம் குறித்த மயக்கத்தில் ஜெயலலிதா தமிழகத்தை ஆழ்த்திக்கொண்டிருக்கும் அதே சமயம், தேர்தலுக்குள் தாக்குதலை இறுதிகட்டத்துக்குக் கொண்டுசென்றுவிடவேண்டும் என்னும் முனைப்புடன் இலங்கை அரசு முன்னேறிக்கொண்டிருக்கிறது.

May 8, 2009

சி.பி.எம் : அரசியலும் முரண்பாடுகளும்

டாடா நிறுவனம் அரசியல் கட்சிகளுக்காக என்றே நிதி ஒதுக்கீடு செய்து அனுப்பிய காசோலையை திருப்பி அனுப்பிய கட்சி மார்க்சிஸ்ட் கட்சி.

பக்கம் 74

பாதையில் இடறிக் காயப்படுத்தும் கல்லைப் போல நந்திகிராமம் பிரச்னை வந்தது. நந்தி கிராமம் என்ற வட்டாரத்தையே நக்சலைட்டுகள் ஆயுதங்களோடு வளைத்துக்கொள்ள, சிபிஎம் மீது உள்ள ஆத்திரம் காரணமாக நக்சலைட்டுகளோடு மற்ற சில கட்சிகள் ஒத்துழைத்ததை நாடு கண்டது. ஆயினும், காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்துகிற அளவுக்கு அந்தப் பிரச்னைகளைக் கையாள்வதில் தவறு நேர்ந்ததா என்பதை சிபிஎம் நேர்மையாக ஆய்வுசெய்துள்ளது.

பக்கம் 77

அ. குமரேசன் எழுதிய சி.பி.எம் (கட்சிகளின் கதை 6) புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள் இவை. வெளியீடு, மினிமாக்ஸ். இந்தியாவையே குலுக்கிய நந்திகிராம் விவகாரத்தைப் பாதையில் இடறிய கல்லாக குறுக்க முடிந்தது ஆச்சரியம்தான்.

டாடாவுக்கு காசோலையைத் திருப்பி அனுப்பிய கம்யூனிஸ்ட் கட்சியால் டாடா நிறுவனத்தை திருப்பி அனுப்ப முடியவில்லை. காசோலை பெறுவது கொள்கைக்கு முரணானது என்றால், மக்களின் எதிர்ப்பை ஒடுக்கி இறுதிவரை விடாப்பிடியாக டாடா அணியில் சிபிஎம் நின்றது எந்தக் கொள்கையின் அடிப்படையில்? சிபிஎம் நேர்மையாக ஆய்வு செய்துள்ளது என்கிறார் அ. குமரேசன். அந்த ஆய்வின் முடிவில் அவர்கள் என்ன கண்டுபிடித்தார்கள்? ஒரு வரி சுயவிமரிசனம்கூட புத்தகத்தில் காணப்படவில்லையே!

கொள்கை பற்றி புத்தகத்தில் வரும் சில குறிப்புகள் இவை.

இப்போது நாடு முழுவதற்குமான ஒரு மாற்று அணியை உருவாக்குவதற்கு சிபிஎம் முயன்று வருகிறது. பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு மாற்றான அந்த அணி தேர்தல் தொகுதிப் பங்கீடுகளுக்கான கூட்டணி அல்ல. கொள்கை உடன்பாடு அடிப்படையில் கட்டப்பட உள்ள அந்த அணி, இயக்கத்தின் இலக்கை நோக்கிச் செல்லும். மக்கள் ஜனநாயகம் என்ற இலக்கை நோக்கிப் பயணிப்பதில் சரியான துணைகளோடு தோள் சேர்வது ஒரு வரலாற்றுத் தேவை.

பக்கம் 78

இந்த முதலாளித்துவ--நிலப்பிரபுத்துவ அமைப்பில் தலைமைப் பாத்திரம் வகிப்பது ஏகபோக, பெருமுதலாளிகள். இந்த அமைப்புக்கேற்பவே சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. மக்களிடையே வறுமை, சாதிமதப் பகைமை, பிற்போக்குத்தனங்கள் போன்றவை வலுவாக இருப்பதற்கு இந்த வர்க்கக் கட்டுமானமே காரணம்.

இதை மாற்றிமைப்பதற்கான புரட்சியின் முதல் கட்டம்தான் மக்கள் ஜனநாயகம். அதை உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்கள்தான் நிலைநாட்டும். அப்படி நிலைநாட்டுவதற்காகவே ஒத்த கருத்துள்ள இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமை, பொதுவான உடன்பாடுகளுக்கு வரக்கூடிய ஜனநாயக சக்திகளின் கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த சிபிஎம் முயல்கிறது.

பக்கம் 69

அதிமுகவுடன் அணிசேர்வதன் மூலம் மக்கள் ஜனநாயகத்தைக் கொண்டுவரமுடியும் என்று சிபிஎம் நம்புகிறதா? இதுதான் மாற்று அணியா? ஜெயலலிதாவின் எந்த குறிப்பிட்ட கொள்கையோடு சிபிஎம் ஒத்துப்போகிறது? அதிமுகவுடனான சிபிஎம்மின் தற்போதைய கூட்டணியை, பொதுவான உடன்பாடுகளுக்கு வரக்கூடிய ஜனநாயக சக்திகளின் கூட்டுச் செயல்பாடு என்று அழைக்கலாமா?

சோவியத் யூனியன் குறித்த சிபிஎம்மின் பார்வையும் குழப்பத்தையே அளிக்கிறது. கோர்பச்சேவ் தலைமையிலான சோவியத் அரசின் செயல்பாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கைவிடும் அறிகுறிகள் தென்பட்டன என்று பக்கம் 52ல் குறிப்பிடப்பட்டுள்ளது. சோஷலிசத்தைப் போட்டுடைக்கும் பணி நிகிதா குருஷேவ் காலத்திலேயே தொடங்கிவிட்டது. குருஷேவ் ஆட்சிக்கு வந்தது 1958ல். குருஷேவ் தொடங்கிவைத்ததைதான் கோர்பச்சேவ் பூர்த்திசெய்தார். நிலைமை இவ்வாறிருக்க, சோவியத் ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கைவிடும் அறிகுறிகளை சிபிஎம் முதல் முதலாக கோர்பச்சேவிடம் கண்டுகொண்டது விநோதமாக இருக்கிறது. சீனாவை கம்யூனிஸ்ட் தேசமாக உருவகம் செய்திருப்பதும் ஏற்கக்கூடியதல்ல.

இந்த இடத்தில், நேபாளத்தில் இருந்து சில படிப்பினைகளை நாம் கற்றுக்கொள்ளவேண்டும். தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து மாவோயிஸ்ட் கட்சி போட்டியிட்டு, பெருவாரியாக வெற்றி பெற்று கடந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. பிரசந்தாவின் தலைமையில் கூட்டணி ஆட்சி. நிலச் சீர்திருத்தம் தொடங்கி எத்தனையோ விஷயங்களை சாதிக்கவேண்டும் என்னும் ஆவலில் அரசாங்க இயந்திரத்தை சுழலவிட்டார் பிரசாங்கம். இயந்திரத்தின் ஒவ்வொரு சக்கரத்தில் இருந்தும், சக்கரத்தின் ஒவ்வொரு பல்லில் இருந்தும் பிரச்னை வெடித்தது. தொட்டதற்கெல்லாம் எதிர்ப்பு. எடுத்ததற்கெல்லாம் மோதல். காபினெட் அஸெம்ப்ளி என்று ஒன்று உண்டு என்றாலும் அதை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை. வேறு வழியின்றி பிரசந்தா ராஜிநாமா செய்துவிட்டார்.

அரசாங்க இயந்திரத்தின் கோளாறு இது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பற்களைப் பழுதுசெய்துவிட்டால் இயந்திரம் ஜோராக சுழல ஆரம்பித்துவிடும் என்று எதிர்பார்க்கமுடியாது. அதனால்தான் பெரியார் கட்சி அரசியலை நம்பவில்லை. மூன்றாவது அணி, நான்காவது அணி, பத்தொன்பதாவது அணி என்று எத்தனை குழுக்கள் உதயமானாலும் தீர்வு கிடைக்கப்போவதில்லை. தற்போதைய அரசியல் கட்டமைப்பு அதற்கு அனுமதிக்காது.

ஆளுங்கட்சியுடன் கூட்டணி இருந்த சமயத்தில்கூட, 123 அணுசக்தி ஒப்பந்தத்தை உதட்டளவில் மட்டுமே சிபிஎம்மால் எதிர்க்கமுடிந்தது. சிபிஎம்மின் எதிர்ப்பை காங்கிரஸ் அசட்டை செய்தததால் வேறு வழியின்றி வெளியேறிவிட்டனர். அதிமுகவுக்கு வெற்றி கிடைத்து, காங்கிரஸுடன் அக்கட்சி இணைந்துகொண்டால் சிபிஎம் என்ன செய்யும்? அதிமுகவுடனான உறவைத் துண்டித்துக்கொள்ளுமா அல்லது பாஜகவை எதிர்க்கும் பொருட்டு மீண்டும் காங்கிரஸுடன் அணிசேருமா?

சந்தர்பங்களுக்கு ஏற்றாற்போல் வளைந்து, நெளிந்தால் மட்டுமே அரசியல் நடத்தமுடியும். மதச்சார்பின்மை, மக்கள் ஜனநாயகம், மனித முகம் கொண்ட உலகமயமாக்கல், மாற்று அரசியல் என்று பலவிதமான விளையாட்டுகளை மக்கள் பார்த்து சலித்துவிட்டனர்.